திங்கள், 19 ஜனவரி, 2026

சிரத்தாத்ரய விபாக யோகம் 17.16 - 17.17

||17.16|| மனதினால் செய்யப்படும் தவங்கள்:

मन:प्रसाद: सौम्यत्वं मौनमात्मविनिग्रह:

भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ।। १६ ।।

மந:ப்ரஸாத3: செளம்யத்வம் மெளநமாத்மவிநிக்3ரஹ:

பா4வஸம்சு1த்3தி4ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே ।। 16 ।।


मन:प्रसाद:  மந:ப்ரஸாத3:  மன அமைதி     सौम्यत्वं  செளம்யத்வம்  அன்புடைமை     

मौनम्  மெளநம்  மெளனம்     आत्म विनिग्रह:  ஆத்ம விநிக்3ரஹ:  மனவடக்கம்     

भाव संशुद्धि:  பா4 ஸம்சு1த்3தி4:  தூய நோக்கம்     इति एतत्   இதி ஏதத்  இது    

मानसम् तप:  மாநஸம் தப:  மானச தவம்      उच्यते  உச்யதே  என்று சொல்லப்படுகிறது.


மன அமைதி, அன்புடைமை, மனதில் மெளனம், மனவடக்கம், தூய நோக்கம் - இது மானச தவம் எனப்படுகிறது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மன அமைதி, மகிழ்ச்சி, மெளனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை -- இவை மனத் தவமெனப்படும்.

விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் மனதினால் செய்யப்படுகிற தவங்களைப் பட்டியலிடுகிறார்.


=> மன அமைதி:

மந:ப்ரஸாத3என்பது மன அமைதியை, மன மகிழ்ச்சியைக் குறிக்கிறது. சோர்வடையாமல் குழப்பமடையாமல் எந்தவொரு சூழ்நிலையிலும் மனவமைதியை இழக்காமல் இருத்தல் மனப் பிரசாதமாகும்

மன மகிழ்ச்சி என்கிற நோக்கில் இந்த சொல்லை புரிந்து கொள்ளும்போது, சில நேரங்களில் மக்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோற்றத்தில் காட்டலாம். ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது. எனவே மனதை மகிழ்ச்சியாக, உற்சாகமாக வைத்திருப்பது இங்கு ஒரு தவமாக ஆகிறது

எப்போதும் ஒரு பிரார்த்தனை மனப்பான்மையுடன் இருப்பதும், வருகின்ற சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதும், சரணடைதலும் இதற்கு துணை புரிகின்றது. ‘எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்என்கிற ஒரு நியதி இருக்கிறது. இது புரிந்துகொள்ளப்படும்போது அது நம்மை அமைதிப்படுத்துகிறது. ஏற்றுக் கொள்ளாமை மன அமைதியைக் கெடுத்து, சஞ்சலத்தில் தவிக்க வைக்கிறது. மேலும் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது போன்ற எண்ணங்கள் ஒருவனை நிம்மதியின்றி செய்துவிடும். ‘இனியொருவர் என்னை பற்றி தவறாக நினைத்தால், அது அவருடைய பிரச்சனை. இப்போது இருக்கும் நிலையில் நான் என்னை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், என்கிற மனப்பாங்குடன் இருத்தல் நல்லது.


=> மனதில் மென்மை:

செளம்யத்வம்எனில் மனதை மென்மையாக வைத்திருத்தலை, கருணையோடு அன்போடு நடந்துகொள்ளுதலைக் குறிக்கிறது. மேற்கூறப்பட்ட மனப்பிரசாதம் எனும் பான்மை ஒருவனுக்கு செளம்யத்துவத்தை தருகிறது. இது ஒருவகையான மனநிலையின் வெளிப்பாடு ஆகும். உதாரணமாக, ஒரு தந்தை தனது மகனைப் புருவங்களை உயர்த்தியவாறு உற்றுப் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வெளிப்புற அறிகுறியிலிருந்து, சிறுவன் தனது தந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்கிறான் - அவர் கோபமாக இருக்கிறார். பின்னர், ஒரு மகனாக அவன் தனது தந்தையை மகிழ்விக்க முயற்சிக்கிறான். அப்போது தந்தையிடமிருந்து ஒரு புன்னகை வருகிறது. அந்த புன்னகையிலிருந்து, தனது தந்தை இப்போது சரியாகிவிட்டார் என்று அவன் புரிந்து கொள்கிறான். முகபாவனையானது மனதில் உள்ளதை வெளிப்படுத்துகிறது. முகத்தில் பிரதிபலிக்கின்ற அந்த அன்பான மகிழ்வான மனநிலை, செளம்யத்துவம் என்று அழைக்கப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் இதுவும் மன மகிழ்ச்சியையே குறிக்கிறது. ‘முகத்தின் மகிழ்ச்சியிலிருந்து, மனநிலை ஊகிக்கப்படுகிறதுஎன்று சங்கரர் கூறுகிறார். மனவமைதி இருக்கும்போது, ​​முகத்தில் அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிகிறது, அதையே அவர்கள் செளம்யத்துவம் என்று அழைக்கிறார்கள். வாய், கண்கள், புருவங்கள், வார்த்தைகள், மற்றும் அவரின் முழு நடத்தையிலிருந்தும், அவர் மன மகிழ்வுடன் இருக்கிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. இதில் தவம் என்னவெனில், நாம் அதிருப்தியை அடையும்போது, மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன்மூலம் மகிழ்ச்சியான மனநிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும். மென்மையாக நடந்து கொள்ளுதலில் இருந்து விலகக் கூடாது. ‘சக்தியில்லாததால் அவர் வேறு வழியில்லாமல் என்னிடம் அவ்விதத்தில் நடந்து கொள்கிறார்என மற்றவரின் இயலாமையை புரிந்து அவர்களின்மீது கருணை கொள்ளவேண்டும். அது ஒரு மெல்லிய புன்முறுவலைத் தருகிறது. இது ஒரு நடத்தை மாற்றம் அல்ல, ஒருவனது சிந்தனைமுறையில் கொண்டுவர வேண்டிய மாற்றம்


=> மனதில் மெளனம்:

மௌநம்என்பது பேச்சில் உள்ள கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. ஆகையினால் இதை வாக்கு மயமான தவம் என ஒருவன் விவாதிக்கலாம், ஆனால் உண்மையில் இது ஒரு மன ஒழுக்கத்தைக் குறிக்கிறது. பொதுவாக மக்களிடம்பேசுவதற்கான மனஅழுத்தம்என்பது எப்போதும் இருக்கும். பழக்கத்தினால் அதை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். மனதில் எண்ணம் தோன்றியவுடன் அதை எந்தவித சிந்தனைக்கும் உட்படுத்தாமல் எதிரில் இருப்பவரிடம் பேச பழகியுள்ளோம். அவ்விதமான எண்ணங்கள் எழும்போது சரியான சிந்தனை மூலம் அதைப் பகிரும் அவசியத்தை நீக்கவேண்டும். இனியொருவரிடம் பேசுவதற்கான மனஅழுத்தம் இல்லாததே மௌனம் என்று அழைக்கப்படுகிறது

சரியானதை மட்டும் பேசுதலும், சில சமயங்களில் பேசாமல் இருத்தலும், மனம் மௌனமாக இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். எனவே இங்கு மெளனம் என்பது மனதிலுள்ள மெளனத்தை குறிக்கிறது

மௌநம்என்பதற்கு மூன்று விதமான விளக்கத்தை அளிக்கலாம்:

  (1) மனதினுள் கற்பனையாக யாரிடமாவது பேசிக் கொண்டே இல்லாமலிருத்தல்

  (2) முநே: பா4: மெளனம் - முனிவனுடைய மனநிலை மெளனம். இது மநநத்தைக் குறிக்கிறது. அதாவது, ஆத்ம விஷயங்களைச் சிந்தித்தும் ஆராய்ந்தும் கொண்டிருத்தல்.

  (3) த்3யாந பரத்வம் - தியானத்தில் அதிக நேரம் செலவிடுதல்.

இவ்விதத்தில் சீரிய எண்ணங்கள் மட்டுமே உள்ளத்தில் உதிக்க இடந்தருதலும், கெட்ட எண்ணங்களை வரவிடாது தடுத்தலும், பரம்பொருள் பற்றிய சிந்தனையில் இருத்தலும் மெளனமாகிறது. எனவே இது மன-ரீதியான தபஸ் ஆகிறது

=> மனக் கட்டுப்பாடு:

ஆத்ம விநிக்3ரஹஎன்பது மனதை கட்டுப்படுத்திப் பழகுதலைக் குறிக்கிறது. மனம் சம்பந்தமான தவம் பேசப்படுவதால், இங்குஆத்மாஎன்பது மனதைக் குறிக்கிறது. ‘ஆத்ம விநிக்3ரஹஎன்பது பொதுவாக எல்லாவற்றிலும் இருக்கின்ற கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. மனம் போன போக்கில் செல்லாமல், சரியான பயிற்சியின் மூலம் தனது சிந்தனை முறைகளில் ஒரு குறிப்பிட்ட தேர்ச்சியை ஒருவன் பெறுகிறான். இதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தல் இங்கு தவம் ஆகிறது. ஜபம் அல்லது மனப் பாராயணம் செய்யலாம். சஞ்சலத்தை கொடுக்கின்ற விஷயங்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளலாம். நமக்கு வெறுப்பை உண்டாகும்படி நடந்து கொள்பவர்களை மனதிலிருந்து முழுமையாக நீக்கிவிடுதல் நல்லது; ஏனெனில் திரும்பத் திரும்ப அதை சிந்திக்கும்போது அவர்களின் மீதான வெறுப்பு வலுப்படுகிறது. அடுத்ததாக, வாய்மொழியாக மற்றவரிடம் பகிர விரும்பாத ஒரு உணர்வை எழுத்தின் மூலம் தனக்குள் வெளிப்படுத்தித் தீர்க்கலாம். சில மன அழுத்தங்களிலிருந்து விடுபட உதவும் சிகிச்சை முறையாகவும்கூட இது அமைகிறது. ஒருவனின் அனைத்து உணர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும், அதைச் சாதிக்க அவன் செய்கிற அனைத்தும் ஆத்ம-விநிக்ரஹம் எனப்படுகிறது. மனதின் ஆரோக்கியத்திற்காக ஒருவனால் மேற்கொள்ளப்படும் சாதனம் இது


=> மனத் தூய்மை:

பா4 ஸம்சு1த்3தி4எனில் மனத்தூய்மையைக் குறிக்கிறது. மனதில் உண்டாகிற உணர்ச்சிபா4வம்ஆகும். மக்களுடன் பழகும்போது, வியவஹாரத்தில் ஈடுபடும்போது அது தூயதாக, சுத்தமான நோக்கத்துடன் கூடியதாக இருத்தல்பா4 ஸம்சு1த்3தி4ஆகிறது. ஒருவனது நோக்கம் என்பது செயலில் அல்ல, மனதின் மட்டதில் இருக்கிறது. அது தூயதாக இல்லாத பட்சத்தில், அதை பகுப்பாய்வு செய்து, அத்தகைய நோக்கம் வரக் காரணமாக இருந்த குறிப்பட்ட வகை எண்ணவோட்டத்தை அகற்றுதல் வேண்டும். ‘பா4 ஸம்சு1த்3தி4என்பதற்கு ஏமாற்றாத தன்மை(அமாயாவித்வ), என சங்கரர் விளக்கமளிகிறார். முற்றிலும் மாறுபட்ட எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, வெளியில் வேறு விதமான ஒன்றை சொல்வதும் செய்வதுமாக இருப்பவன் ஏமாற்றுக்காரன்(மாயாவீ) எனப்படுகிறான். இத்தகைய இயல்புமாயாவித்வஎனப்படுகிறது. இந்த மாயாவித்துவத்திலிருந்து விடுபட்டவனாக, மக்களுடனானத் தொடர்புகளில் முற்றிலும் எந்த வஞ்சகமும் இல்லாமல் இருப்பவனுக்குபா4 ஸம்சு1த்3தி4உள்ளது என்று அர்த்தம்.

இவைகளனைத்தும் மனப் பிரதானமான தவங்கள் ஆகின்றன.

அடுத்ததாக, உடல்-ரீதியான தவம்சா1ரீரம் தபஸ், வாக்கினால் செய்யப்படுவதுவாசிகம் தபஸ், மற்றும் மனதினால் செய்யப்படுவதுமாநஸம் தபஸ், எனும் இந்த மூன்று வகையான தவங்கள், இப்போது மேலும் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இவைகளை செய்பவரின் மனநிலையைப் பொறுத்து, அதாவது அது செய்யப்படும் விதம் மற்றும் அது செய்யப்படும் நோக்கத்தைப் பொறுத்து அது சாத்விக-தபஸ், ராஜஸ-தபஸ் அல்லது தாமஸ-தபஸ் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------

||17.17|| சாத்விக தவம்:

श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरै:

अफलाकाङ्क्षिभिर्युक्तै: सात्त्विकं परिचक्षते ।। १७ ।।  

ச்1ரத்34யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித4ம் நரை:

அப2லாகாங்க்ஷிபி4ர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே ।। 17 ।।

अफल आकाङ्क्षिभि:  அப2 ஆகாங்க்ஷிபி4:  பயனை விரும்பாதவர்களும்       

युक्तै:  யுக்தை:  யோகத்தில் உறுதிபெற்றவர்களுமான    

नरै:  நரை:  மனிதர்களால்      परया श्रद्धया  பரயா ச்1ரத்34யா  மேலான சிரத்தையுடன்     

तप्तं  தப்தம்  செய்யப்படும்     तत्  त्रिविधं तप:   தத் த்ரிவித4ம் தப:  இம்மூவித தவம்

सात्त्विकं  ஸாத்த்விகம்  சாத்விகமானதென்று     परिचक्षते  பரிசக்ஷதே  பகரப்படுகிறது.


பயனை விரும்பாதவர்களும், யோகத்தில் உறுதிபெற்றவர்களுமான மனிதர்களால் மேலான சிரத்தையுடன் செய்யப்படும் இம்மூவித தவம் சாத்விகமானதென்று பகரப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும்.

விளக்கம்:

குணத்தின் அடிப்படையில் தவம் மேலும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, சுலோகம் 17 முதல் 19 வரை விளக்கப்படுகிறது. இந்த சுலோகத்தில் சாத்விகம் தபஸ் வரையறுக்கப்படுகிறது.


=> சாத்விகம் தவத்தின் தன்மைகள்:

ச்1ரத்34யா பரயாஎனில் முழுமையான நம்பிக்கையுடன், மேலான சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும் தவத்தைக் குறிக்கிறது. அதாவது எந்த குறைவுமில்லாமல், இலக்கை அடைவதில் எவ்விதமான சந்தேகமுமில்லாமல் முழு சிரத்தையுடன் ஒழுக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு மேலான எனும் பொருளில் வந்துள்ளபரயாஎன்பது, சாத்விக சிரத்தையைக் குறிக்கிறது. சாத்விக சிரத்தை என்பது நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, சாஸ்திரத்தின் மீதும், குருவினுடைய வாக்கியத்தின் மீதும் உள்ள முழு நம்பிக்கையைக் குறிக்கிறது

காயிகம், வாசிகம் அல்லது மாநஸம் என்கிற இந்த மூன்று விதமான தபஸானது மனிதர்களால் கடைபிடிக்கப்படுகிறதுநரை: த்ரிவித4ம் தப:. எந்த வகையான மனிதர்கள் இதைச் செய்கிறார்கள்அப2 ஆகாங்க்ஷிபி4: பலனில் பற்றில்லாதவர்கள். பாதுகாப்பு, இன்பம் அல்லது புண்ணியம் போன்ற பலனுக்காக அவர்கள் அதைச் செய்யவில்லை. அத்தகைய எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல், மனத்தூய்மைக்காக மட்டுமே அதைச் செய்கிறார்கள். மனத்தூய்மைக்காகவென செய்யப்படுவது என்பது பலனை எதிர்ப்பார்ப்பதாக ஆகாது. ஏனெனில் காமிய பலன்களே பலன் எனச் சொல்லப்படும்; அதாவது இஹ-லோக மற்றும் பர-லோக இன்பம் காமிய பலன் ஆகும். இதுபோன்ற பலன்களை விரும்பிச் செய்யும்போது தவமானது அதன் புனிதத்தை இழக்கிறது. பலனை விரும்பாதிருப்பதும், செய்கிற தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களின் போக்கு ஆகும்

யுக்தை:எனில் மனம் பொருந்தியவனாக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் தவத்தில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. வெற்றியே வாய்த்திடினும், தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப் படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்கள் ஆகின்றார்கள். அவர்களது பெருமுயற்சியானது ஒருபோதும் தளர்ச்சியடைவதில்லை. உடல், வாய், மனம் எனும் முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்


=> சாத்விக தவத்தின் மேலும் சில தன்மைகள்:

(1) நமது தவம் நம்மை அழித்து விடக் கூடாது என உபநிஷத் கூறுகிறதுஅநாச1கேந தபஸா.

(2) தனக்கும் மற்றவர்களுக்கும் ஹிம்சை கொடுக்காத தவம் - ஸ்வ பர அநாச1கம் தப:.

---------------------------------------------------------------------------------------------