||17.21|| ராஜஸ தானம்:
यत्तु प्रत्युपकारार्थं फलमुद्धिश्य वा पुन: ।
दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम् ।। २१ ।।
யத்து ப்ரத்யுபகாரார்த2ம் ப2லமுத்3தி4ச்1ய வா புந: ।
தீ3யதே ச பரிக்லிஷ்டம் தத்3தா3நம் ராஜஸம் ஸ்ம்ருதம் ।। 21 ।।
तु து மற்று यत् யத் எது प्रत्युपकारार्थं ப்ரத்யுபகாரார்த2ம் பிரதியுபகாரத்தை எதிர்ப்பார்த்து फलम् च ப2லம் ச பலனையும் उद्धिश्य वा உத்3தி4ச்1ய வா உத்தேசித்து पुन: புந: மேலும் परिक्लिष्टं பரிக்லிஷ்டம் வருத்தத்தோடு दीयते தீ3யதே தரப்படுகிறதோ तत् दानं தத் தா3நம் அந்த தானமானது राजसं ராஜஸம் ராஜஸமென்று स्मृतम् ஸ்ம்ருதம் கருதப்படுகிறது.
கைம்மாறு கருதியோ, பலனை உத்தேசித்தோ வருத்தத்தோடு வழங்கப்படும் தானம் ராஜஸமென்று எண்ணப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச மென்பர்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் ராஜஸ தானத்தை வரையறுக்கிறார்.
=> எதிர்பார்ப்புடன் கொடுத்தல்:
பிரதிபலன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் கொடுக்கப்படுவது ராஜஸ-தானம் ஆகிறது — ப்ரத்யுபகாரார்த2ம். இங்கு தானம் என்பது தேவைப்படுகிறபோது, அதாவது சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட போதிலும், பெறுபவரை கடமைப்பட்டவனாக உணர வைப்பதற்காகவும், தனக்குப் பிரதிபலன் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடனும் அவன் அதைச் செய்கிறான். இதுவும் கொடுப்பதுதான் என்றாலும், கைம்மாறு கருதி செய்யப்படுவதால் இது தானம் என்பதை விட முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பலனை கருத்தில் கொண்டு கொடுக்கின்றான் — ப2லம் உத்3தி4ச்1ய. பிரதியுபகாரத்தை எதிர்ப்பார்த்து கொடுக்கிறான் என்று ஏற்கனவே கூறப்பட்டும், பிறகு ஏன் பலனை உத்தேசித்து என மீண்டும் தனியாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? இது அவனது நீண்டகால திட்டத்தைக் காட்டுகிறது. தானம் செய்யப்படும்போது அதிருஷ்ட-பலன் எனக் கூறப்படுகிற கண்ணுக்குத் தெரியாத பலனாக புண்ணியம் கிடைக்கிறது. அது இந்த வாழ்க்கையிலோ அல்லது அடுத்த வாழ்க்கையிலோ ஒருவனுக்கு கை கொடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அதை கருத்தில் கொண்டு செய்யப்படுகிற தானமும் ராஜஸ தானம் என்றே கூறப்படுகிறது.
=> வருத்தத்துடன் கொடுத்தல்:
மேலும் வேதனையோடு தரப்படுகிற தானம் — பரிக்லிஷ்டம் தீ3யதே, ராஜஸம் ஆகும். இத்தகைய தானத்தில், ஏதாவது கொடுக்கும் போதெல்லாம் ஒருவித இழப்புணர்வு இருக்கும். உண்மையில் அவன் கொடுக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் தன்னை யாரும் கஞ்சன் என்று அழைக்கக்கூடாது எனும் காரணத்திற்காகவும், தனது பெயர் மற்றும் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அதைச் செய்கிறான். எனவே கொடுப்பதில் வலியும் வேதனையும் இருப்பின், அது ரஜோகுணத்திலிருந்து பிறக்கிறது என்பது மிகத் தெளிவாகிறது.
தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்ற கோட்பாட்டை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதாவது அவ்வளவு அடக்கத்துடனும், பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் ரஜோகுணமுடையவனது மனப்பான்மை இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது. ராஜஸ இயல்புடையவனுக்கு தனது பொருளைப் பிறருக்குக் கொடுப்பதில் விருப்பமிருப்பதில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் செய்கிறான். மேலும் தான் ஒரு மடங்கு கொடுத்ததற்குப் பலனாக தெய்வம் தனக்கு பத்து மடங்கு திருப்பித் தர வேண்டுமென விரும்புகிறான். இத்தகைய தானம், கொடுப்பவன் மற்றும் பெறுபவன் இருவருக்கும் துன்பத்தையே விளைவிக்கிறது.
மேலும் ஒரு பொது நிறுவனத்திற்கோ அல்லது கோவில்களுக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைப்பற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென விரும்புகிறான். தனது பெயரை முன்னணியில் பகட்டுடன் பொறித்து, அதை பொது இடங்களில் வைத்து அதற்கான பாராட்டைத் தேடிக் கொள்கிறான்.
இவையனைத்தும் ரஜோ குணத்தின் வெளிப்பாடாகும்.
---------------------------------------------------------------------------------------------
||17.22|| தாமஸமான தானம்:
अदेशकाले यद्दानमपात्रेभ्यश्च दीयते ।
असत्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् ।। २२ ।।
அதே3ச1காலே யத்3தா3நமபாத்ரேப்4யச்1ச தீ3யதே ।
அஸத்க்ருதமவக்ஞாதம் தத்தாமஸமுதா3ஹ்ருதம் ।। 22 ।।
अदेश काले அதே3ச1 காலே தகாத இடத்திலும் காலத்திலும்
अपात्रेभ्य: च அபாத்ரேப்4ய: ச தகுதியற்ற மனிதர்களுக்கும்
असत्कृतम् அஸத்க்ருதம் மதிப்பின்றி अवज्ञातं அவக்ஞாதம் இகழ்ச்சியுடன்
यत् दानम् दीयते யத் தா3நம் தீ3யதே எத்தானம் தரப்படுகிறதோ तत् தத் அது
तामसम् தாமஸம் தாமஸமென்று उदाहृतम् உதா3ஹ்ருதம் உரைக்கப்படுகிறது.
தகாத இடத்திலும், காலத்திலும் தகுதியற்றவர்களுக்கு மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுகிற தானம் எதுவோ அது தாமஸம் எனப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச மெனப்படும்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் தாமஸமான தானத்தை விவரிக்கிறார்.
=> தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல்:
தவறான நேரத்தில் தவறான இடத்தில் கொடுக்கப்படுவது தாமஸ-தானம் ஆகிறது — அதே3ச1 காலே. தகாத இடம் என்பதற்கு சங்கரர் சுத்தமாக இல்லாத இடம் என்று விளக்கமளிக்கிறார். செய்கிற உதவி மிகவும் தாமதமாகும்போது அது தகாத காலம் ஆகிறது.
மேலும் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிற தானமும் தாமஸம் ஆகிறது — அபாத்ரேப்4ய:. ஒழுக்கமற்றவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள், அடக்கமற்றவர்கள் போன்றோர் இங்கு தகுதியற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. பணத்தை கையாளத் தெரியாத ஒருவனுக்கு உதவி கொடுக்கப்படும்போது, அதை அவன் வீணடிப்பது மட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும் உதவியைக் கோருகிறான். அத்தகைய நபர்களுக்கு நாம் கொடுக்கத் தொடங்கினால், எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்துவிட்டு பின் நான்காவது முறையில் நாம் மறுக்கும்போது நம்மை அவர்கள் கெட்டவர்களாகச் சித்தரிப்பார்கள். நம்மை அவமதிப்பது மட்டுமல்லாமல், நமது உறவை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
எனவே ஒரு திருடனுக்கோ, குடிகாரனுக்கோ, சூதாட்டக்காரனுக்கோ, அல்லது உதவியை சரியாகப் பயன்படுத்தாதவனுக்கோ கொடுப்பது தானம் ஆகாது. இவ்விதம் தாமஸமாகக் கொடுக்கப்படும் உதவி அவர்களை சோம்பேறியாக்கும். நம் உதவியின் மதிப்பு அவர்களுக்கு தெரியாமல் போகும். நாம் கொடுக்கின்ற பொருள் பயனில்லாமல் போகும்.
=> இகழ்ந்து கொடுத்தல்:
பெறுபவரை மதிக்காமல் அளிக்கின்ற தானம் தாமஸமாகக் கருதப்படுகிறது — அஸத்க்ருதம். உதாரணமாக ஒரு சரியான நபருக்கு, சரியான இடம் மற்றும் தகுந்த காலத்தில் உதவி கொடுக்கப்பட்டும், அதை எறிதல் போன்ற விதத்தில் முறையற்று, மதிப்பின்றி கொடுக்கும்போது அது தாமஸ-தானம் ஆகிறது.
முகமலர்ச்சியோடு கூடிய வரவேற்பும் உபசாரமும் இல்லாமல் போவது மட்டுமல்லாமல், புன்மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவருக்கு மன வருத்தத்தை உண்டாக்கி கொடுக்கப்படுகின்ற உதவி தாமஸ தானமாகிறது. ‘அவக்ஞாதம்’ எனில் உதவி கேட்டதற்காக அந்த நபரை வெட்கப்பட வைப்பதாகும். உதவி செய்யப்பட்ட போதிலும், ஒரு அரை மணி நேரம் அந்த நபரை விமர்சித்து அவமானப்படுத்தி, அவமரியாதையுடன் கொடுப்பது இங்கு அவக்ஞாதம்-தானம்.
மேலும் ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க அதிகாரிகளின் வற்புறுத்தலுக்காக இணங்கிக் கொடுப்பதும் தாமஸமானது ஆகும். ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அது என்பதால் தமோகுணத்தை சேர்ந்ததாகிறது.
செய்கின்ற யக்ஞ, தான, தப கர்மங்களில் குறைகள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு விடையாக பகவான் அடுத்த சுலோகத்தை அளிக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------
||17.23|| செய்கிற செயலை சாத்விகமாக மாற்றும் உபாயம்:
ओं तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविध: स्मृत: ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिता: पुरा ।। २३ ।।
ஓம் தத்ஸதி3தி நிர்தே3சோ1 ப்3ரஹ்மணஸ்த்ரிவித4: ஸ்ம்ருத: ।
ப்3ராஹ்மணாஸ்தேந வேதா3ச்1ச யக்ஞாச்1ச விஹிதா: புரா ।। 23 ।।
ओं तत् सत् इति ஓம் தத் ஸத் இதி ஓம் தத் ஸத் என்று ब्रह्मण: ப்3ரஹ்மண: ப்ரம்மத்தினுடைய त्रिविध: निर्देश: த்ரிவித4: நிர்தே3ச1: மூவித பெயர் स्मृत: ஸ்ம்ருத: கூறப்பட்டுள்ளது
तेन தேந அதனால் ब्राह्मणा: ப்3ராஹ்மணா: பிராமணர்களும்
वेदा: च வேதா3: ச வேதங்களும் यज्ञा: च யக்ஞா: ச யாகங்களும்
पुरा புரா பண்டைய காலத்தில் विहिता: விஹிதா: வகுக்கப்பட்டன.
“ஓம் தத் ஸத்” என்று ப்ரம்மம் மூவிதமாய் மொழியப்பட்டுள்ளது. அதினின்று சிருஷ்டியின் துவக்கத்தில் வேதியர், வேதம், வேள்வி வெளிப்படுத்தப்பட்டது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
'ஓம் தத் ஸத்' என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால், முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
விளக்கம்:
=> குறைகளை நிறையாக்குதல்:
இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன், சாஸ்திர விதியைப் பின்பற்றாமல், ஆனால் சிரத்தையுடன் பூஜிக்கும் ஒருவனது கர்மம் எப்படிப்பட்டது, சாத்விகமா, ராஜஸமா அல்லது தாமஸமா? என்கிற கேள்வியைக் கேட்டான். இப்போது கிருஷ்ணர் அதற்கான பதிலை அளிக்கிறார்.
ஒரு செயல் சாத்விகமானது என்பதை நிர்ணயிப்பதில் அந்த கர்மமும் அதற்கான பாவனையும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. அறியாமை, அவசரம், அல்லது கவனச்சிதறல் போன்ற காரணங்களால் சில சமயங்களில் கர்மங்கள் ராஜஸமாகவோ அல்லது தாமஸமாகவோ ஆகிவிடலாம். எனவே ஒரு செயலை சாத்விகமானதாக மாற்ற, ‘ஓம் தத் ஸத்’ என பகவானின் நாமத்தை கூறுதல் இங்கு உபாயமாக தரப்படுகிறது. பூஜை, சடங்கு முதலிய விஷயங்களில் முழுமையான சிரத்தையிருந்தும் சில அறியாத தவறுகளால் அது குறையுள்ளதாக மாறிவிடுகிறது. அப்போது, ஆரம்பத்திலும் முடிவிலும் ‘ஓம் தத் ஸத்’ எனக் கூறி கர்மத்தை செய்யும்போது, அவர் சாஸ்திர விதியை முழுமையாகப் பின்பற்றாவிட்டாலும், அச்செயல் சாத்விகமானதாக மாறுவதற்கு அது போதுமானது என கிருஷ்ணர் கூறுகிறார். இவ்விதத்தில் குறைகளையுடைய அச்செயல் நிறைகளை உடையதாக, பயனுள்ளதாக மாற்றப்படுகிறது.
=> ப்ரம்மத்தின் பெயர்:
ஒரு பொருளை வெளிப்படுத்துகிற எந்தவொரு அர்த்தமுள்ள சொல்லும் ‘நிர்தே3ச1’ என்றழைக்கப்படுகிறது. ஒரு பொருளைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் அதை வெளிப்படுத்துகிற காரணத்தினாலும் எந்தவொன்றின் பெயரும் ‘நிர்தே3ச1’ ஆகிறது. இங்கு மூன்று சொற்களை(த்ரிவித4:) உடைய வெளிப்பாடான ‘ஓம் தத் ஸத்’ என்பது ப்ரம்மத்தை குறிக்கின்றது என கூறப்படுகிறது — ப்3ரஹ்மண: நிர்தே3ச1: ஸ்ம்ருத:. யாரால் கூறப்படுகிறது எனில், வேதாந்த சாஸ்திரத்தினாலும் வேதாந்தத்தை அறிந்தவர்களாலும் இவ்விதம் மொழியப்படுகிறது.
(1) ஓம் = ப்ரம்மம். தைத்திரீய உபநிஷத்தில் ‘ஓம் இதி ப்3ரஹ்ம’ என்றும், மாண்டூக்யோபநிஷத்தில் ‘ஓம் இதி ஏதத் அக்ஷரம் இத3ம் ஸர்வம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. ‘ஓம்’ என்பது பிரணவம் என்றழைக்கப்படுகிறது. பிரணவம் எனில் சிறந்த பெயர் என்பது பொருள். இலக்கணத்தின்படி, ஓம் என்பதன் வேர்ச்சொல் ‘அவ’ ஆகும். அவதி இதி ஓம் — காப்பாற்றுவது ஓம்.
(2) தத் = ப்ரம்மம். சாந்தோக்ய உபநிஷத்தில் ‘தத் தவம் அஸி’ என்ற வாக்கியத்தில் ‘தத்’ எனும் சொல் ப்ரம்மத்தை குறிக்கிறது. ‘தத்’ எனில் ‘அது’ என்று அர்த்தம். ஞானிகள் ‘அது’ என்ற சொல்லின் மூலம் ப்ரம்மத்தை குறிக்கிறார்கள். பெரிய பொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்கிற பதத்தால் வேதம் அதை அழைக்கிறது.
(3) ஸத் = ப்ரம்மம். சாந்தோக்ய உபநிஷத்தில் ‘ஸத்’ எனும் சொல் ப்ரம்மத்தை படைப்புக்குக் காரணமாகக் குறிக்கிறது — ஸத் ஏவ சோம்ய இத3ம் அக்3ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்3விதீயம். எது சத்தியமாயுள்ளாதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் செயலால் அடிபடாதிருப்பது ப்ரம்மம். எனவே அது ஸத் எனும் பெயர் பெறுகிறது. ‘ஸத்’ என்பதன் பொருள் ‘இருத்தல்’ என்பதாகும்.
எனவே இம்மூன்று சொற்களும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் ப்ரம்மத்தை வெளிப்படுத்துகின்றன.
=> சிருஷ்டியின் தோற்றம்:
இம்மூன்று சொற்களின் வெளிப்பாட்டிலிருந்து பிராமணர்களும், வேதங்களும், யாகங்களும் சிருஷ்டியின் துவக்கத்தில் படைக்கப்பட்டன — தேந ப்3ராஹ்மணா: வேதா3: யக்ஞா: ச விஹிதா: புரா. ‘ப்3ராஹ்மண’ என்பது வர்ணத்தைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அப்போது அந்த சொல் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வகை மக்களையும் குறிப்பதாக இங்கு ஆகிறது. அல்லது அது ‘வேதா3:’ என்கிற சொல்லுக்கு பெயரடையாக இருக்கலாம். அதாவது, ‘ப்3ராஹ்மண’ என்று அழைக்கப்படுகிற வேதம் என்பது பொருள். இதில் நான்கு வேதங்களும் அடங்கும். அவையனைத்தும் ஓம் என்று தொடங்குகின்றன.
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்னிஹோத்ரம் முதலிய சடங்குகளும், மற்றும் இறைவனை வழிபடுகிற பூஜை போன்ற எந்தவொரு செயலும் இங்கு யக்ஞம் எனப்படுகிறது.
பிராமணர்கள், வேதங்கள் மற்றும் யக்ஞங்கள் அனைத்தும் ‘ஓம் தத் ஸத்’ என்று சொல்வதன் மூலம் உருவாக்கப்பட்டன. இதை உச்சாடனம் செய்தே பிரம்மதேவர் அனைத்தையும் படைத்தார். சிருஷ்டியின் ஆரம்பத்தில் (புரா) இந்த வார்த்தைகள் பிரம்மதேவரிடமிருந்து வெளிவந்து இவைகளனைத்தும் படைக்கப்பட்டதால் இவை முக்கியமான சொற்களாக மாறிவிட்டன. எனவே அவற்றைச் சொல்வதன் மூலம் எந்தவொரு குறையுள்ள செயலையும் நடுநிலையாக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தியை நாம் உருவாக்குகிறோம். ஆனால் ‘ஓம் தத் ஸத்’ என்பது சிரத்தையுடன் சொல்லப்பட வேண்டும், இல்லையெனில் அது அர்த்தமற்றதாக ஆகிறது. இறைவனின் நாமமே நமது அஹங்காரத்தை அடக்கி வைக்கும்; மனதை தூய்மைப்படுத்தும்.
இனி இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பகவான் தனித்தனியாக கையாளப் போகிறார். இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று விளக்க இருக்கிறார். முதலில், அவர் ‘ஓம்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்கிறார்.
---------------------------------------------------------------------------------------------