||17.14|| உடலால் செய்யப்படும் தவங்கள்:
देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ।। १४ ।।
தே3வத்3விஜகு3ருப்ராஜ்ஞபூஜநம் செள1சமார்ஜவம் ।
ப்3ரஹ்மசர்யமஹிம்ஸா ச சா1ரீரம் தப உச்யதே ।। 14 ।।
देव द्विज गुरु प्राज्ञ पूजनं தே3வ த்3விஜ கு3ரு ப்ராக்ஞ பூஜநம் தேவர், பிராம்மணர், குருக்கள், ஞானிகள் ஆகிய இவர்களைப் பூஜிப்பதும் शौचम् செள1சம் சுத்தமும்
आर्जवम् ஆர்ஜவம் நேர்மையும் ब्रह्मचर्यम् ப்3ரஹ்மசர்யம் பிரம்மசரியமும்
अहिंसा च அஹிம்ஸா ச அஹிம்சையும் शारीरं तप சா1ரீரம் தப தேகத்தால் செய்யும் தவம் என்று उच्यते உச்யதே சொல்லப்படுகிறது.
தேவர், பிராம்மணர், குருக்கள், ஞானிகள் ஆகியவர்களைப் போற்றுவதும், தூய்மையும், நேர்மையும், பிரம்மசரியமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவம் எனப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை -- இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
விளக்கம்:
சுலோகம் பதினான்கில் துவங்கி பத்தொன்பது வரை தவங்கள் குறித்து பகவான் பேச இருக்கிறார். இதில் எதன் மூலமாக தவம் செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில், சுலோகம் 14 முதல் 16 வரை மூன்று வகையான தவங்களை வரையறுக்கிறார். அதாவது, உடல் ரீதியானது — சா1ரீரம் அல்லது காயிகம் தபஸ், வாக்கினால் செய்யப்படுவது — வாசிகம் தபஸ், மற்றும் மனதினால் செய்யப்படுவது — மாநஸம் தபஸ். இந்த தவங்கள் அனைத்தும் மனத்தூய்மைக்காகவும் மனமுதிர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது. உபயோகப்படுத்தப்படும் கருவி தூய்மையானதாக இருக்கும்போதே அதன் வழியாக பார்க்கப்படுகிற எந்தவொன்றும் தெளிவானதாகத் தெரியும். அவ்விதம் தன்னறிவுக்கானக் கருவிகளாகவுள்ள உடல், மனம் மற்றும் வாக்கு தூய்மைப்படுத்தப்படும்போது அறியப்படுகிற விஷயங்கள் தெளிவை அடைகின்றன.
=> தவம்:
‘தப:’ எனில் உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்கள் செய்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின்மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். உடல், மனம், வாக்கு ஆகிய மனிதனின் மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அவைகளை நமது கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, நாமாகத் துயரத்தை எடுத்துக் கொள்வது தவம். நமது அஹங்காரத்தை வளைக்கவும், துயரமான சூழ்நிலையின்போது அதற்காக பிறரை குறைகூறாமல் அதை சரியான விதத்தில் எடுத்து சமாளிக்கிற பக்குவத்தைக் கொடுக்கவும் இத்தகைய தவங்கள் துணைபுரிகின்றன. இந்த சுலோகத்தில் உடல் ரீதியான தவம் பேசப்படுகிறது.
=> வணங்குதல்:
முதலாவதாக கூறப்படுவது, ‘பூஜநம்’, பக்தி, வழிபாடு, வணங்குதல், மரியாதை அளித்தல் போன்றவை இதில் அடங்கும். யாரெல்லாம் வணங்கப்பட வேண்டுமென்பதில் முதலில் ‘தே3வ பூஜநம்’ கூறப்படுகிறது. பரப்ரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். ஏதேனுமொரு வடிவத்தில் தினமும் இறைவனை வழிபடுதலை இது குறிக்கிறது. எனவே ஒருநாளும் இதை செய்ய மறவாதபோது இது தவம் ஆகிறது. தவம் என்பது ஒரு உறுதியை எடுத்துக்கொண்டு, என்ன நடந்தாலும் தவறாது அதைச் செய்வதைக் குறிக்கிறது.
அடுத்ததாக சான்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் — த்3விஜ கு3ரு பூஜநம். கற்பிக்கும் எவரும் ஒரு குரு என்பதால், வாழ்க்கையில் மூன்று வகையான ஆசிரியர்கள் இருப்பதைக் காண்கிறோம். தாயும் தந்தையும் நமது முதல் ஆசிரியர்கள். பின்னர், பல்வேறு அறிவுத் துறைகளை நமக்குக் கற்பித்த அனைத்து ஆசிரியர்களும், மேலும் வாழ்க்கையின் முக்கியமான பாடங்களைக் கற்றுகொடுத்த சான்றோர்களும் இருக்கின்றனர். இறுதியாக, மந்திர ஜபம் அல்லது ப்ரம்ம உபதேசம் அளித்த ஆன்மீக குரு இருக்கிறார். அவர்கள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள் ஆவர். அவர்களை தவறாது வணங்கும்போது அது ஒரு தவமாக ஆகிறது.
‘ப்ராக்ஞ’ எனில் ஞானிகள் அல்லது அறிஞர்களைக் குறிக்கிறது. அவர்களை வணங்குதல், மற்றும் சந்தர்ப்பங்கள் அமையும்போது தேவையான சேவைகளைச் செய்தல் எனும் விதமாக நமது மதிப்பை அளிப்பது ‘ப்ராக்ஞ பூஜநம்’ ஆகும்.
இவ்விதமாக வழிபடுதல் மற்றும் வணங்குதல் ஒருவனுக்கு பணிவை, மேன்மையைக் கொடுக்கிறது.
=> தூய்மை:
‘செள1சம்’, தூய்மை என்பது மற்றொரு முக்கியமான ஒழுக்கத்தைக் குறிக்கிறது. இங்கு உடலை மையமாகக் கொண்ட தவங்கள் பேசப்படுவதால் இது உடல், ஆடை, இடம் உள்ளிட்ட வெளிப்புறத் தூய்மையைக் குறிக்கிறது. உள்-தூய்மையானது மன-ஒழுக்கத்தின் கீழ் வருகிற தவங்களின் பட்டியலில் பேசப்படும். வெளிப்புற சூழலையும் உடலையும் சுத்தமாக வைத்திருப்பது பொதுவாக சிறந்த பழக்கம் எனினும் குறிப்பாக ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு இது ஒரு உகந்த சூழ்நிலையை அளிக்கிறது. எனவே அதை ஒரு தவமாக உறுதியோடு கடைபிடிக்க வேண்டும்.
=> நேர்மை:
அடுத்ததாக, ‘ஆர்ஜவம்’ என்பது நேர்மையைக் குறிக்கிறது. மக்களைக் கையாளுவதில் இருக்கின்ற நேரடியான அணுகுமுறை, சொல்வதைச் செய்வது, அதாவது எண்ணம்-சொல்-செயலில் இருக்கின்ற நேர்கோடு இங்கு நேர்மை எனப்படுகிறது. உண்மைக்கானத் தேடலில் இருப்பவர்களுக்கு நேர்மை மிக முக்கியமானது. எனவே அனைத்து செயல்பாடுகளிலும், தொடர்புகளிலும் நேர்மையாக இருக்கவேண்டுமென்ற அர்ப்பணிப்புணர்வு இங்கு தவமாக ஆகிறது. எண்ணம்-சொல்-செயலின் நேர்கோடு எனும்போது நிச்சயமாக இது மனதையும் பேச்சையும் உள்ளடக்கியது என்றாலும், முதன்மையாக இது செயல் வடிவத்தில் வெளிப்படுவதால் இதை ‘சா1ரீரம் தபஸ்’ என கூறுகிறோம். எனவே செயலில் நேர்மை, அதாவது செய்ய வேண்டியதைச் செய்தல், மற்றும் செய்யக்கூடாததை அல்லது சாஸ்திரம் அனுமதிக்காததை செய்யாமலிருத்தல் ஆகியவைகளைக் குறிக்கிறது.
=> பிரம்மசரியம்:
உடலளவிலான ஒழுக்கம் பிரம்மசரியம் ஆகும். சரீர சம்பந்தமான சுகத்தை துறப்பதை இது குறிக்கிறது. போகத்துக்கு கருவியாக இருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அந்த இன்பங்கள் பிறகு துன்பங்களாகப் பரிணமிக்கின்றன. போகம் என்கிற குறையின்கண் சென்றழியாது, யோகம் எனும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாகும். உடலளவிலான ஒழுக்கத்தைக் குறிப்பதால் இது தமத்தின்(த3ம) ஒரு வடிவமாகும்.
=> அஹிம்சை:
தேகத்தால் மற்ற தேகங்களுக்கு துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை ஆகும். மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுக்காதிருத்தல் என்பதில் எந்தவொரு செயலும் செய்யப்படுவதில்லை, அப்படியிருக்கையில் அதை எப்படி ‘சா1ரீரம் தபஸ்’ எனக் கூற முடியும் என்கிற சந்தேகம் எழலாம். அது ஒரு செயலாக இல்லாவிட்டாலும், பிற உடலுக்கு வலியைக் கொடுத்தல் எனும் மனப்போக்கை கட்டுப்படுத்துவதால் இது தவமாக ஆகிறது. உதாரணமாக, என் அறையில் ஒரு பூச்சி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை; அதற்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் அதை நான் அமைதியாக எடுத்து வெளியே விடுகிறேன் எனில் அது அஹிம்சை. எந்த உயிரினத்திற்கும் காயம் ஏற்படுவதைத் தடுப்பதில் உடல் உறுப்புகள் ஈடுபட்டுள்ளதால் அது ‘சா1ரீரம் தபஸ்’.
=> மேலும் சில உடல்-ரீதியான தவங்கள்:
(1) திருடாமை - அஸ்தேயம்
(2) தேவைக்கு மேல் பொருளைச் சேர்க்காமலிருத்தல் - அபரிக்3ரஹ.
(3) யாத்திரை
(4) சோம்பல் இல்லாதிருத்தல் - ஆலஸ்யம்
(5) எளிமையாக வாழ்தல்
(6) உடற்பயிற்சி — ஆஸநம்
---------------------------------------------------------------------------------------------
||17.15|| வாக்கினால் செய்யப்படும் தவங்கள்:
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
सवाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ।। १५ ।।
அநுத்3வேக3கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ।
ஸ்வாத்4யாயாப்4யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே ।। 15 ।।
अनुद्वेगकरं அநுத்3வேக3கரம் துன்புறுத்தாததும் सत्यं ஸத்யம் வாய்மை
प्रिय हितं ப்ரிய ஹிதம் இனியதும் நலம் தருவதும்
यत् वाक्यं च யத் வாக்யம் ச எந்த வாக்கியமோ அதுவும்
सवाध्याय अभ्यसनं च एव ஸ்வாத்4யாய அப்4யஸநம் ஏவ வேதம் ஓதுதலும்
वाङ्मयं तप வாங்மயம் தப வாக்கு மயமான தவம் उच्यते உச்யதே என்று சொல்லப்படுகிறது.
துன்புறுத்தாத வாய்மையும், இனிமையும் நலனும் கூடிய வார்த்தை, மற்றும் வேதம் ஓதுதல் — இது வாக்கு மயமான தவம் என்று சொல்லப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சினத்தை விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி இவை வாக்குத் தவமெனப்படும்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் வாக்கினால் செய்யப்படுகிற தவங்களைக் கூறுகிறார்.
நாம் இனியொருவரிடம் பேசும்போது, பேசுவதற்கானக் காரணம் என்ன? ஒரு வாக்கியத்தை உபயோகிப்பதற்கானத் தேவை என்ன? நமது அறிவு அல்லது அனுபவம் போன்ற ஏதேனும் ஒன்றை தெரிவிக்க அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். எனவே அங்கு நிச்சயமாக ஒரு நோக்கம் இருக்கிறது, விவக்ஷா. கேட்கின்ற நபருக்கு அறிவாற்றலை, புரிதலை உருவாக்க ஒரு வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது என்பதாக சங்கரர் வாக்கியத்தை வரையறுக்கிறார். அப்படிப்பட்ட பேச்சு தபஸாக இருக்க வேண்டுமென்றால், அது சில பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
=> வாக்கு மயமான தவம்:
உடலினால் அடித்துத் துன்புறுத்துவதைவிட கடுஞ்சொல் கூறி ஒருவனை அதிகமாக துன்பப்படுத்திவிட முடியும். சாதகனுக்கு அது பொருந்தாது. எனவே பேசும்போது, மற்றொருவருக்கு எந்த வித வலியையும் ஏற்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது முக்கியம் — அநுத்3வேக3கரம். மேலும் நாம் பேசும்போது, என்ன சொல்கிறோம் மற்றும் அதை எப்படி சொல்கிறோம் போன்றவைகள் கேட்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடாது.
அடுத்ததாக, நாம் சொல்வது உண்மையாக இருத்தல் வேண்டும் — ஸத்யம். மேலும் அந்த உண்மை, கேட்பவருக்கு மகிழ்ச்சியை தருவதாக, மென்மையாக, பிரியமானதாக இருத்தல் வேண்டும் — ப்ரிய. இனியது மட்டுமல்லாமல், அவருக்கு அது நலம் தருவதாகவும் இருத்தல் வேண்டும் — ஹிதம். சங்கரர் தனது பாஷ்யத்தில் இந்த வார்த்தைகளை விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறார். அவர், இங்கு பயன்படுத்தப்படும் ‘ச’ எனும் சொல், ‘மற்றும்’ என்கிற பொருளில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விஷயங்களுக்கும் சம அந்தஸ்தைத் தருகின்றது, எனக் கூறுகிறார். அதாவது பேசும்போது இவைகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே அது வாக்கு மயமான தபஸ் ஆகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அது தபஸ் அல்ல.
ஒருகால் நமது பேச்சு இனிமையானதாக(ப்ரிய), துன்புறுத்தாததாக(அநுத்3வேக3கரம்) இருந்து ஆனால் அது உண்மையாக(ஸத்யம்) இல்லாமல் இருக்கலாம்; முகஸ்துதிக்காக பேசப்படலாம். அல்லது அப் பேச்சு பிரியமானதாக, சத்தியமாக இருந்து, அது அவனுக்கு நிச்சயமாக நன்மை பயக்காது இருக்கலாம்(ஹிதம்). உதாரணமாக, உள்ளூர் பந்தயத் திடலுக்கு இன்று அனுமதி இலவசம் என்கிற தகவலை ஒரு சூதாட்ட ஆர்வலனிடம் சொல்லும்போது, அது உண்மையாக இருந்தாலும், அதில் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்தாலும், அந்த பேச்சு அவனுக்கு நன்மையைச் செய்யாது. இந்த வகையான பேச்சுக்கள் தபஸ் ஆகாது.
=> வேதம் ஓதுதல்:
மேலும் ‘ஸ்வாத்4யாய அப்4யஸநம்’ வாக்கினால் செய்யப்படும் தவம் ஆகின்றது. வேதம் ஓதுதல், இறையருளைப் போற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்தல், மந்திரங்களை ஓதுதல், தத்துவ நூல்களைப் படித்தல் அனைத்தும் இதில் அடங்கும். பரம்பொருளை சாக்ஷாத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள வாக்கியங்கள் வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமெனக் கூறுவது இன்னும் பொருத்தமுடையதாகிறது. இத்தகைய வேத வேதாந்தங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவைகளில் எப்போதும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. காலப்போக்கில் அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது.
இவ்விதம் இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபஸ் ஆகிறது.
=> மேலும் சில வாக்கு-ரீதியான தவங்கள்:
(1) அளவாகப் பேசுதல்
(2) வாதத்தை தவிர்த்தல்
(3) மெளனம்
நமது ஆன்மீக வளர்ச்சியின் சிறந்த அளவுகோலாக அமைவது பேச்சு ஆகும். இனி மனதினால் செய்யப்படும் தவங்கள் என்னென்ன எனக் காணலாம்.
---------------------------------------------------------------------------------------------