செவ்வாய், 25 நவம்பர், 2025

தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் 16.19 - 16.21

||16.19|| அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சி:

तानहं द्विषत: क्रूरान् संसारेषु नराधमान्

क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ।। १९ ।।

தாநஹம் த்3விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராத4மாந்

க்ஷிபாம்யஜஸ்ரமசு1பா4நாஸுரீஷ்வேவ யோநிஷு ।। 19 ।।


तान् द्विषत:  தாந் த்3விஷத:  துவேஷமுடையவர்களை      क्रूरान्  க்ரூராந்  கொடியவர்களை     

नर अधमान्  நர அத4மாந்  கடையவர்களை     अशुभान्  அசு1பா4ந்  இழிந்தோரை      

संसारेषु  ஸம்ஸாரேஷு  பிறந்து இறந்து உழலும் உலகில்     

आसुरीषु योनिषु एव  ஆஸுரீஷு யோநிஷு ஏவ  அசுர வம்சத்திலேயே     

अजस्रम्  அஜஸ்ரம்  எப்பொழுதும்     अहं क्षिपामि  அஹம் க்ஷிபாமி  நான் தள்ளுகிறேன்.


துவேஷமுடையவர்களை, கொடியவர்களை, கடையவர்களை, இழிந்தோரை, பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப் பிறவியிலேயே திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙனம் பகைக்கும் கொடியோரை —  உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்


விளக்கம்:

இத்தகைய அசுர-இயல்புடையவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது, அல்லது எவ்விதம் அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர் என்பதை பகவான் பத்தொன்பது மற்றும் இருபது ஆகிய இரு சுலோகங்களில் பகர்கிறார்


=> அசுரனது வீழ்ச்சி:

சுலோகம் ஏழிலிருந்து விரிவாகக் கூறப்பட்ட இந்த அசுர-குணமுடையவர்களை ஈஷ்வரன் என்ன செய்கிறார்? தர்மத்திற்கு எதிரான வாழ்க்கையை வாழ்ந்து, தர்ம வாழ்க்கையைப் பின்பற்றும் மக்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் இந்த மக்கள் அனைவரையும், ஈஷ்வரன் சம்சார வாழ்க்கைக்கு அனுப்புகிறார். இதிலிருந்து அவர்கள் எவ்விதம் பகவானை வெறுக்கிறார்களோ அவ்விதமே பகவானும் அவர்களை வெறுக்கிறார் என எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அளிக்கப்படும் இந்த பலன் என்பது அவர்களாலேயே முழுமையாக ஈட்டப்பட்டுள்ளது. அவர்களுடைய குணத்தினாலும், அதனால் அவர்கள் செய்த கர்மத்தாலும் இந்த விளைவு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஈஷ்வரனின் நியதியை மீறுகின்ற இந்த மக்கள், அனைவரையும் வெறுப்பவர்களாக இருக்கின்றனர்த்3விஷத. அதிலும் குறிப்பாக தர்மத்தை பின்பற்றுபவர்களை, சன்மார்க்கத்தில் இருப்பவர்களை மிக வெறுக்கிறார்கள். மேலும் அவர்கள் கொடூரமானவர்களாக இருக்கின்றனர்க்ரூர. பண்பாடற்றவர்களாக, அன்பு கருணை இல்லாது பிறரை ஹிம்சை செய்பவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் மனிதர்களில் மிகக் கீழானவர்களாக ஆகின்றனர்நராத4. ஏனென்றால் அவர்கள் எது சரி-எது தவறு என பகுத்தறியும் திறனை, தங்களது விவேகத்தை பயன்படுத்துவதில்லை

அத்தகையவர்கள் அசுர கருப்பைகளில் மட்டுமே பிறப்பார்கள்ஆஸுரீஷு யோநிஷு ஏவ, என்கிறார் பகவான். இங்குஅஜஸ்ரம்எனும் சொல், மீண்டும் மீண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது இப்படிப்பட்ட பல பிறவிகளை எடுக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் நிறைய கர்மாக்களைச் சேகரித்திருப்பதால், அனைத்தையும் அவர்களால் ஒரே பிறவியில் நிறைவேற்ற முடியாது. எனவே திரும்ப திரும்ப அசுர வம்சத்திலேயே பிறக்கிறார்கள். இங்குஅசுர கருப்பைஎனில், அசுர-இயல்புடையவர்களின் கர்பத்தில் அத்தகைய சூழ்நிலையில் பிறப்பிக்கிறேன் அல்லது மிருக ஜென்மத்தை கொடுக்கிறேன் என்பது பொருள்

ஏனென்றால், அவர்கள் மனிதப் பிறவியில் மற்றவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்து, கழுதைகளைப் போல உதைத்து, தேள்களைப் போலக் கொட்டி, பல்வேறு விலங்குகளைப் போல வெறித்தனமாக அலைந்துள்ளனர், கொடூரர்களாக வாழ்ந்துள்ளனர். எனவே அத்தகைய குரூரத்தை தீர்த்துக்கொள்ளத் தேவையான வடிவத்தில் வாழ அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் பயத்திற்கான விஷயமாக மாறுவார்கள். விஷமும் இரக்கமற்றதுமான பாம்பைப் போல, இயல்பினால் நேரடியாகப் பயமுறுத்தும் எதுவும் அசுர யோனி ஆகும். சிந்திக்கவும் தேர்ந்தெடுக்கவும் திறன் கொண்ட ஒரு மனிதனாக, ஒருவன் தனது மனசாட்சிப்படி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். அதற்கு பதிலாக, அனைவருக்கும் பயத்தை கொடுப்பவனாக கொடூரமானவனாக நடந்துகொள்ளும்போது, தனது சட்டத்திலிருந்து எப்போதும் வலுவாத கர்ம-நியதி, அடுத்த முறை அவனை ஒரு அசுர கருப்பையில் வைக்கிறது. எனவேதான் பகவான், ‘அசுரப் பிறவியிலேயே திரும்பத் திரும்ப நான் அவர்களைத் தள்ளுகிறேன்’, எனக் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------

||16.20|| அசுர-கருக்களில் பிறந்து கீழான கதியை அடைகிறார்கள்:

आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि

मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ।। २० ।।

ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா4 ஜந்மநி ஜந்மநி

மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத4மாம் 3திம் ।। 20 ।।


कौन्तेय  கெளந்தேய  குந்தியின் மகனே      मूढा:  மூடா4:  மூடர்கள்    

जन्मनि जन्मनि  ஜந்மநி ஜந்மநி  பல பிறவிகளில்     आसुरीं योनिम्  ஆஸுரீம் யோநிம்  அசுர கருப்பைகளை    आपन्ना:  ஆபந்நா:  அடைந்து     माम्  மாம்  என்னை     

अप्राप्य एव  அப்ராப்ய ஏவ  அடையாமலேயே       तत: अधमां  தத: அத4மாம்  அதனிலும் கீழான      गतिम्  3திம்  கதியை      यान्ति  யாந்தி  அடைகிறார்கள்


குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுர கருக்களில் தோன்றி என்னையடையாமல் இன்னும் கீழான கதியையே அடைகிறார்கள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே


விளக்கம்:

=> கீழான ஜென்மத்தை அடைகிறார்கள்:

கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிக கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். அசுர-குணமுடையவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில்கூட பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை. அத்தகையவர்கள் அசுரர்களின் கருப்பையில் ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். ஏனென்றால் ஒரு பிறப்பில் தீர்த்துவிட முடியாதவளவு பாபத்தை சேகரித்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் கீழான விஷயங்களை அனுபவிப்பதற்காக விலங்குகளாகவோ அல்லது தமோ-குணம் அதிகமாக இருக்கும் வேறு ஏதேனுமொரு வடிவிலோ பிறக்கிறார்கள். அத்தகைய வடிவங்களில், விவேகம் இல்லை, பகுத்தறியும் திறன் இருப்பதில்லை. புலி தன்னை கொடூரமானதாக நினைப்பதுவுமில்லை, அல்லது அக்கொடூர குணத்தை மாற்ற விரும்புவதுமில்லை. ஏனெனில் அதற்கு அந்த உரிமை அளிக்கப்படவில்லை. இந்த வகையான பகுத்தறியும் திறன் என்பது மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்புரிமை. அதை அவர்கள் தங்களது மனிதப் பிறவிகளில் பயன்படுத்தவில்லை ஆகையினால் அவர்கள் விவேகம் இல்லாத கீழான மற்றும் மேலும் கீழான கருப்பைகளுக்குச் சென்று கொண்டே இருக்கிறார்கள். மலையுச்சியிலிருந்து கீழே உருண்டு வருகிற கல், பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.


=> கீழான கதி:

  அவர்கள் செய்த தவறுகளின் அனைத்து விளைவுகளும் தீர்ந்துபோகும் வரை இது சிறிது காலம் நீடிக்கிறது. மேலும் மனிதப் பிறப்பில் அவர்களின் நடத்தை காரணமாக, ஈஷ்வரனை அவர்கள் அடைய முடியாது என்பதில் எந்த ஐயமும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஈஷ்வரனை அடையவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சங்கரர் கூறுகிறார். ஈஷ்வரன் இத்தகைய மக்களுக்கு எட்டாதவராக ஆகிறார். முதலில், அவர்கள் ஈஷ்வர நியதியை அல்லது தர்மத்தைப் பின்பற்றத் தொடங்க வேண்டும். ஆனால் அவர்களோ அதற்கு பதிலாக இந்த கட்டத்தில் வேறு வழிகளில் தொலைந்து போகிறார்கள். எனவே அத்தகைய போக்குகளில் வெறுப்பை அல்லது வைராக்கியத்தை உருவாக்கும் பொருட்டு, அவர்கள் இன்னும் மோசமான முடிவுக்குச் செல்கிறார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார், தத: அத4மாம் 3திம் யாந்தி. ஆகையினால் மனித ஜென்மத்தையும், காலத்தையும் சரியாகப் பயன்படுத்து என்கிறார். இந்த பிறவியிலேயே உண்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமுண்டு; இல்லையெனில் அதனால் உண்டாகும் இழப்பு மிகப் பெரியது

அடுத்த சுலோகத்தில், இத்தகைய கீழ்மைக்கு மூலக்காரணமாக பகவான் மூன்று முக்கிய குணங்களை சுட்டிக்காட்டி, அதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறார்.

---------------------------------------------------------------------------------------------

||16.21|| இத்தகைய கீழ்மைக்கு மூலக்காரணம் யாது?

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन:

काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ।। २१ ।।   

த்ரிவித4ம் நரகஸ்யேத3ம் த்3வாரம் நாச1நமாத்மந:

காம: க்ரோத4ஸ்ததா2 லோப4ஸ்தஸ்மாதே3தத்த்ரயம் த்யஜேத் ।। 21 ।।


त्रिविधं  த்ரிவித4ம்  மூன்றுவிதமான     नरकस्य  நரகஸ்ய  நரகத்தின்       

इदं द्वारं  இத3ம் த்3வாரம்  இந்த வாயில்     आत्मन: नाशनम्  ஆத்மந: நாச1நம்  தனக்கு(ஜீவாத்மாவுக்கு) நாசத்தை உண்டுபண்ணுவது     काम:  காம:  காமம்     

क्रोध:  க்ரோத4:  குரோதம்    तथा लोभ:  ததா2 லோப4:  அங்ஙனமே லோபம்     तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்     एतत् त्रयं   ஏதத் த்ரயம்  இந்த மூன்றையும்     त्यजेत्  த்யஜேத்  விட்டுவிடு.


காமம், குரோதம், லோபம் ஆகிய மூவித வாயிலையுடையது நரகம். இவை ஜீவனைக் கெடுக்கும் தன்மையன. ஆகையினால் இம்மூன்றையும் விட்டுவிடுக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:— (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக


விளக்கம்:

இந்த அத்தியாயத்தில் சுலோகம் ஏழிலிருந்து நாம் பார்த்து வருகிற அசுர-குண விளக்கத்திற்கான முடிவுரையாக இந்த சுலோகம் அமைகிறது. கூறப்பட்டவைகள் அனைத்தும் அசுரனுடைய இயல்பின் பொதுவான அம்சங்கள் எனினும், அவர்களின் வெளிப்படையான நடத்தையில் அக்குணங்களில் பல வேறுபாடுகளைக் காணலாம். அதாவது, ஒருவன் கொடூரமானவனாக இருக்கலாம், மற்றொருவன் அதிகம் துன்பத்தை தருபவனாக, இனியொருவன் மிக பேராசை உடையவனாக என அளவில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை இங்கு பகவான் கோடிட்டுக் காட்டுகிறார்.


=> நரகத்தின் வாயில்

துக்க அனுபவத்தை கொடுக்கின்ற எதுவும் நரகம் ஆகிறது. இங்கு குறிப்பிடப்படும் இந்த மூன்று கதவுகளில்(த்3வாரம்), எதன் வழியாகவும் ஒருவன் அத்தகைய நரகத்திற்குள் நுழையலாம். இவை மூன்றும் ஒருவனை அழிப்பவைகளாக இருக்கின்றனஆத்மந: நாச1நம். இந்த வாயிலில் நுழைந்தவுடன் நீங்கள் அழிந்து போவதைக் காண்பீர்கள் என்கிறார் சங்கரர். அதாவது, இது ஒரு வலைப்பொறிக்குள் நுழைவது போன்றது; ஒருவனை உடனடியாக விழுங்கிவிடும். ஒரு விலங்கு தனக்கு பிடித்தமானதைப் பார்த்து அதற்கென விரிக்கப்பட்ட வலையில் சிக்குவதைப் போல, ஒரு மனிதன் இந்த மூன்று விஷயங்களால் பிடிக்கப்பட்டு அழிகிறான். இதனால் அவனது மனம் மிகவும் கலக்கமடைந்து, மோக்ஷம் மட்டுமல்ல இனி அவன் எந்த இலக்கை அடைவதற்கும் தகுதியற்றவனாக ஆகிறான் என்பதை இந்தஅழிக்கப்படுகிறான்எனும் சொல் குறிக்கிறது. அவன் பெற நினைத்த எளிய சுகம்கூட இந்த மூன்றின் காரணமாக இழக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது


=> அத்தகைய மூன்று வாயில்கள் எவை:

அவை காமம், குரோதம் மற்றும் லோபம் ஆகும். ஒன்றின் மீதுள்ள பிணைக்கின்ற ஆசை அல்லது ஏக்கம்காம, ஒருவனை வலைப்பொறியில் சிக்க வைக்கிறது. இந்த ஆசை என்பது தர்மத்திற்கு முரணான ஆசையை, மற்றும் அதர்மமான வழியில் செல்வது பற்றிய எந்த குற்றவுணர்ச்சியுமின்றி எப்படியேனும் நிறைவேற்றத் தூண்டுகின்ற ஆசையைக் குறிக்கிறது. இத்தகைய ஆசை இருக்கின்ற இடத்தில் கண்டிப்பாக கோபமும்(க்ரோத4), பேராசையும்(லோப4) பின்தொடர்கின்றன. ஆசை தடைபடும்போது குரோதமும், ஆசை நிறைவேறும்போது இன்னும் அதிகம் வேண்டுமென்ற லோபமும் இயல்பாக வந்தமைகின்றன. போகப் பொருட்களை யாருக்கும் பகிராது தனக்கென்று வைத்துக் கொள்ளுதலும் லோபம் எனப்படும்

இவைகளில் ஆசையை ஒருவனால் நிர்வகிக்க முடிந்தால், கோபமும் பேராசையும் தானாகவே கட்டுக்குள் வரும். அல்லது ஒருகால் ஒருவனால் கோபத்தை கட்டுக்குள் வைக்கமுடிந்தால், அவனால் ஆசையைத் திறம்பட சமாளிக்க முடியும். இங்கு பேராசை கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் பேராசை இருக்கும்போது ​​கோபம் என்பது தவிர்க்க முடியாததாகிறது. பேராசையை கட்டுக்குள் வைக்கும்போது, கோபத்தையும் பின்னர் ஒரு கட்டத்தில் ஆசையையும்கூட கட்டுக்குள் வைக்கலாம். பேராசை எங்கிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். தனக்கு தேவையில்லாததுதான், அது இல்லாமலும் தன்னால் எளிதாக சமாளித்துவிட முடியும் என்றாலும், எப்படியும் அதை அடையவேண்டுமென விரும்பினால் அது பேராசை. ஒரு ஆசையை நிறைவேற்ற அதர்மத்தின் வழியில் சென்றால், அந்த ஆசையே பேராசையாக மாறும்.


=> துறந்துவிடு:

ஆசை, கோபம், பேராசை ஆகிய இம்மூன்றும் துன்பம் மிகுந்த அனுபவங்களுக்கான நுழைவாயில்கள் என்பதால் அவைகள் சுய-அழிவிற்கான காரணங்கள் ஆகின்றனஆத்மந: நாச1நம். அறிவுத்திறம் கொண்ட எவரும் தான் அழிக்கப்படுவதை விரும்புவதில்லை, ஆகையினால் இந்த மூன்றையும் விட்டுவிட வேண்டும்தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத், என்கிறார் கிருஷ்ணர். இவை மூன்றையும் ஒருவனால் துறக்கமுடிந்தால், மீதமுள்ள அசூரி-சம்பத் அனைத்தையும் அதுவே கவனித்துக் கொள்ளும். ஆசுரி-சம்பத்தின் இயல்புகள் இங்கே மிகவும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் அதிகமானதாக ஒருவனுக்குத் தோன்றலாம் என்பதால் கிருஷ்ணர் முழு விஷயத்தையும் காமம், குரோதம் மற்றும் லோபம் என மூன்றாகச் சுருக்குகிறார். இவைகள் ஆராயப்படும்போது இந்த மூன்றையும்கூடகாமம்என குறைக்கலாம். ஏனெனில் பகுப்பாய்வு செய்யும்போது ஆசையே அனைத்து அனர்த்தங்களுக்கும் மூலகாரணமாக ஆகிறது.


=> இம்மூன்றையும் துறப்பது எப்படி?

ஆசையை தர்மத்திற்கு முரணான ஆசை, அளவுக்கு மீறிய ஆசை மற்றும் பிணைப்பை உண்டாக்கும் ஆசை எனும் நிலையிலிருந்து, தர்மமான ஆசை, அளவான ஆசை மற்றும் பிணைப்பை ஏற்படுத்தாத ஆசை என்கிற நிலைக்கு கொண்டுவர வேண்டும். கண்டிப்பாக நிறைவேறியே தீர வேண்டுமென்ற எண்ணமில்லாமலும், ஆசை தடைபடும்போது அது குரோதமாக மாறமலும், மேலும் ஆசை நிறைவேறும்போது அது லோபமாக மாறாமலும் இருப்பது பிணைப்பை ஏற்படுத்தாத ஆசை ஆகும். அதுமட்டுமல்லாமல் ஏற்றுக் கொள்ளுதல், மன்னித்தல் மற்றும் பொறுமை ஆகிய மனப்பான்மையை வளர்ப்பதன் மூலமும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.  

இக்காலத்தில் காமம், குரோதம் மற்றும் லோபம் மூன்றும் விடமுடியாதளவு ஒருவனுக்குள் ஊறிப்போயிருக்கிறது; அவனாகவே மாறியிருக்கிறது. எனவே அவற்றை துறக்க, பிரார்த்தனைகள், சில ஒழுக்கங்களை கவனமாகக் கடைபிடித்தல் மற்றும் விசாரணை போன்றவைகள் தேவைப்படுகிறது. அறிவாற்றலின் துணைகொண்டு, நாம் சில முன்னுரிமைகளை மாற்ற முடியும்; அவ்விதம் செய்யும்போது பெரியதாகத் தெரிகிற சில விஷயங்கள், அதற்குண்டான பொருத்தமான விகிதத்தை மட்டுமே நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கின்றன. உண்மையில் இப்படித்தான் நாம் வளர்கிறோம். ஒரு குழந்தையாக, தனது பலூன் வெடிக்கும்போது அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது, ஆனால் வளர்ந்த ஒருவனுக்கு அது துயரத்தை தருவதில்லை; ஏனென்றால் பலூன்கள் விஷயத்தில் அவன் முதிர்ச்சியை அடைந்துவிட்டான். இப்போது, பங்குச்சந்தை வீழ்ச்சியடையும்போது, ​​அது ஒருவனுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதன் ஏற்ற இறக்கங்களினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் அல்லது மாரடைப்பு ஏற்படுபவர்களைகூட நாம் காண்கிறோம். இதிலிருந்து நமது பிரச்சினை ஆசைதான் என்பது மிகவும் தெளிவாகிறது. சரியான விசாரணையின் மூலமாக நாம் நிச்சயமாக அதிலிருந்து வளர்ந்து முதிர்ந்து வெளிவரமுடியும், ஏனெனில் அப்படித்தான் நாம் பல விஷயங்களிலிருந்து முதிர்ச்சியை அடைந்துள்ளோம். நாம் ஏற்கனவே பார்த்தபடி, பிரசாத-புத்தி மூலம் காமம் என்றழைக்கப்படும் நமது விருப்பு-வெறுப்புகளை நடுநிலையாக்கலாம். அவ்விதம் செய்யும்போது குரோதமும் லோபமும் தானாகவே கவனித்துக் கொள்ளப்படுகின்றன, ஏனெனில் காமம் இல்லாதபோது அவைகள் எழுவதில்லை.

---------------------------------------------------------------------------------------------