||16.11|| தீய குணமுடையவர்களின் மனம் எப்படிப்பட்டதாக இருக்கிறது:
चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिता: ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिता: ।। ११ ।।
சிந்தாமபரிமேயாம் ச ப்ரளயாந்தாமுபாச்1ரிதா: ।
காமோபபோ4க3பரமா ஏதாவதி3தி நிச்1சிதா: ।। 11 ।।
प्रलय अन्ताम् च ப்ரளய அந்தாம் ச சாகும்வரையில் अपारिमेयां அபரிமேயாம் அளவுகடந்த चिन्ताम् சிந்தாம் கவலையை उपाश्रिता: உபாச்1ரிதா: அடைந்தவர்களாய்
काम उपभोग परमा: காம உபபோ4க3 பரமா: காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி एतावत् इति ஏதாவத் இதி இவ்வளவு தான் என்று
निश्चिता: நிச்1சிதா: தீர்மானம் செய்தவர்களாய், …
சாகும்வரையில் அளவுகடந்த கவலையை உடையவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாகக் கருதி, மற்றொன்றுமில்லை என்று தீர்மானம் செய்தவர்களாய், …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராய்,
விளக்கம்:
அசுர இயல்புடையவர்களின் மனம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பகவான் இந்த சுலோகத்தில் வர்ணிக்கிறார்.
அளவுகடந்த கவலைகளை உடையவர்களாக இருக்கின்றனர் — அபரிமேயாம் சிந்தாம். அவர்களின் கவலைகளுக்கு எல்லையே இல்லாமல், மரணம் வரையிலும் துயரம் நிறைந்தவர்களாய் காணப்படுகின்றனர். வயதான காலத்திலாவது விவகாரங்களை குழந்தைகளிடம் விட்டுவிட்டு நிம்மதியாக வாழலாம் என சிலர் நினைப்பர். ஆனால் அவர்களோ இறக்கும்வரை(ப்ரளயாந்தாம்), தங்கள் உடமைகள், செல்வம், குழந்தைகளின் எதிர்காலம் என பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு துயரத்துடன் காலத்தைக் கழிக்கின்றனர். இவ்வளவு கவலைகளுக்கும் மத்தியில், புலன்களின் இன்பத்தையே மேலான இலக்காக உடையவர்களாக வாழ்க்கையை நடத்துகின்றனர் — காம உபபோ4க3 பரமா:. தங்களது ஆசைகளை பூர்த்தி செய்வது மட்டுமே முதன்மையானது, அதைத் தவிர வேறெதுவும் இல்லை. அதாவது அவர்களுக்கு தர்மம் இல்லை, மோக்ஷம் இல்லை, விவேகம் இல்லை, இன்பம் ஒன்று மட்டுமே உண்மையில் இருக்கின்றது. அவர்களை திருப்திபடுத்துமளவு பொருட்கள் கிடைக்கும்வரை மட்டுமே அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இவ்விதம் இன்பம் மட்டுமே வாழ்க்கை என்கிற தத்துவத்தை நிச்சயித்தவர்களாக வாழ்க்கையை கழிக்கின்றனர் — ஏதாவத் இதி நிச்1சிதா:.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லெளகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.
அதைப்போல அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லெளகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது அவனை விட்டுச் சென்றுவிடுகிறாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான்! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான்; பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறுகணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும் ஈடுபடுகிறாள்! பொருள்களை இழந்துவிட்டு குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருடமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை! என்ன ஆச்சரியம்!
---------------------------------------------------------------------------------------------
||16.12|| அசுர இயல்புடையவர்களின் மனநிலை குறித்து மேலும் தொடர்கிறார்:
आशापाशशतैर्बद्धा: कामक्रोधपरायणा: ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ।। १२ ।।
ஆசா1பாச1ச1தைர்ப3த்3தா4: காமக்ரோத4பராயணா: ।
ஈஹந்தே காமபோ4கா3ர்த2மந்யாயேநார்த2ஸஞ்சயாந் ।। 12 ।।
आशा पाश शतै: ஆசா1 பாச1 ச1தை: நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால்
बद्धा: ப3த்3தா4: கட்டுண்டவர்களாய்
काम क्रोध परायणा: காம க்ரோத4 பராயணா: காமக் குரோதங்களின் வசப்பட்டவர்களாய்
काम भोगार्थम् காம போ4கா3ர்த2ம் ஆசைப்பட்டதை அனுபவிக்கும்பொருட்டு
अन्यायेन அந்யாயேந நியாயமற்ற வழியில்
अर्थ सञ्चयान् அர்த2 ஸஞ்சயாந் பொருள் குவியல்களை
ईहन्ते ஈஹந்தே தேட முயல்கின்றனர்.
நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் கட்டுண்டவர்களாய், காமக் குரோதங்களின் வசப்பட்டவர்களாய், ஆசைப்பட்டதை அனுபவிக்கும்பொருட்டு நியாயமற்ற வழியில் செல்வக் குவியல்களை தேட முயல்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.
விளக்கம்:
அசுர இயல்புடையவர்களின் மனநிலை குறித்து இங்கு பகவான் மேலும் தொடர்கிறார். அவர்கள் பேராசையினால் கட்டுண்டவர்களாக இருக்கின்றனர் — ஆசா1 ப3த்3தா4:. திடீரென்று ஏதாவது நடந்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ‘ஆசா1’ எனப்படுகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகள் ஓரிரண்டுதான் எனில் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் அவர்களுக்கோ நூற்றுக்கணக்கான ஆசைகள் இருப்பதனால், ஒன்று நிறைவேறியவுடன், இனியொன்று எழுகிறது. எனவே அவர்கள் அவற்றினால் பிணைக்கப்பட்டவர்களாக ஆகின்றனர். இதனால் அவர்கள் ஆசைக்கும் கோபத்திற்கும் பலியாகி விடுகிறார்கள் — காம க்ரோத4 பராயணா:. காமமும் குரோதமும் அனைவரிடமும் உள்ளது என்றாலும் இந்த மக்களுக்கு அவை மிக முக்கியமானவை. பொதுவாக நாம் கோபத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்களுக்கோ கோபம் ஒரு மதிப்புமிக்க பண்பாக உள்ளது. மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தாங்கள் விரும்பியதைப் பெறுவதற்கும் அதை ஒரு வழிமுறையாக அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மனப்பான்மையின் காரணமாக அவர்களின் சிந்தனையும், அதிலிருந்து தோன்றுகிற செயல்பாடுகளும் காமம் மற்றும் குரோதத்தையே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது; அதாவது தர்மம் மற்றும் அதர்மம், அல்லது நித்திய மற்றும் அநித்தியத்தில் துளியும் கவனம் இல்லை. இந்த விஷயங்கள் அவர்களுக்குப் புலப்படுவதே இல்லை. இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
=> தர்மத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்கள்:
ஆசைப்பட்டவைகளை அனுபவிக்கும்பொருட்டு, பொருள் குவியல்களைத் தேடுகின்றனர் — காம போ4கா3ர்த2ம் அர்த2 ஸஞ்சயாந் ஈஹந்தே. எப்படி? நியாயமற்ற வழிகளின் மூலம் — அந்யாயேந. சாஸ்திரம் அல்லது சமூகத்தினால் அனுமதிக்கப்படாத, சட்டவிரோதமான வழிகளில் அவர்கள் செல்வங்களைக் குவிக்கின்றனர். மற்றவர்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது, இனியொருவரின் சொத்தை ஆக்கிரமிப்பது போன்றவைகள் என சங்கரர் உதாரணத்தை அளிக்கின்றார். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு ஈட்டப்படுகிற செல்வம் என்பது அடிப்படைத் தேவைகளை மீறி, முற்றிலும் சுயநலம் மற்றும் பேராசையின் காரணமாக என மாறிவிடுகிறது. மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மேலும் மேலும் என தன்னை செல்வந்தனாகக் காட்டிக்கொள்ள விரும்புவதால் தர்மத்திற்கு முரணான செயலின் மூலம் இந்த சொத்துக்குவிப்பைச் செய்ய முயலுகின்றனர்.
செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மனிதர்கள் இருவகுப்பினர் — மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்[மனுஷ்யர்]. அறிவு விளங்கப்பெற்றவர் [மன்-ஹுஷ்யர்]. ஈஷ்வரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.
---------------------------------------------------------------------------------------------