||16.16|| அசுர-இயல்புடையவர்களின் மனநிலை:
अनेकचित्तबिभ्रान्ता मोहजालसमावृता: ।
प्रसक्ता कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ।। १६ ।।
அநேகசித்தவி3ப்4ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: ।
ப்ரஸக்தா காமபோ4கே3ஷு பதந்தி நரகேऽசு1செள ।। 16 ।।
अनेक चित्त बिभ्रान्ता: அநேக சித்த வி3ப்4ராந்தா: பல சிந்தனைகளால் குழப்பமடைந்தவர்கள்
मोह जाल समावृता: மோஹ ஜால ஸமாவ்ருதா: மோஹ வலையில் மூடப்பெற்றவர்கள்
काम भोगेषु காம போ4கே3ஷு விரும்பியதை அனுபவிப்பதிலே
प्रसक्ता ப்ரஸக்தா பற்றுடையவர்கள் अशुचौ नरके அசு1செள நரகே துக்கமான நரகத்தில் पतन्ति பதந்தி வீழ்கின்றனர்.
பல எண்ணங்களினால் குழப்பமடைந்தவர்கள், மோஹ வலையில் மூடப்பெற்றவர்கள், விரும்பியதை அனுபவிப்பதிலே பற்றுடையவர்கள் துக்கமான நரகத்தில் வீழ்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் — இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
விளக்கம்:
அசுர-இயல்புடையவர்கள் குறித்த விசாரம் இங்கும் தொடர்கிறது.
=> குழப்பத்துடன் கூடியவர்கள்:
முன் சுலோகங்களின் விவரணைகளிலிருந்து, இந்த அசுர-குணங்களை உடையவர்களின் சிந்தனைப்பாங்கினை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவர்கள் கவலைகள், பதட்டங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், கோபங்கள் முதலிய பலவிதமான எண்ணங்களினால் குழப்பமடைந்துள்ளனர் — அநேக சித்த வி3ப்4ராந்தா:. இதனால் அவர்களின் எண்ணங்களினாலேயே அவர்கள் கட்டுண்டுள்ளனர். மேலும் பகுத்தறியும் திறன் இல்லாததால் அறியாமை எனும் வலையில் மூடப்பெற்றவர்களாய் இருக்கின்றனர் — மோஹ ஜால ஸமாவ்ருதா:. விரித்த வலையில் எப்படி ஒரு விலங்கு சிக்குகிறதோ, அவ்விதம் அறியாமையின் மயக்கத்தில் மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக இன்பத்தை அனுபவிப்பதிலேயே தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். போகத்திற்கு அடிமைபட்டவர்களாக இருக்கின்றனர். உண்மையில் சுதந்திரம் என்பது செய்ய விரும்புவதை செய்வதல்ல; செய்ய வேண்டியதை செய்வதற்கான சரியான மனநிலை. ஏனெனில் அதற்குத்தான் நம்மிடமிருந்தும் சரி மற்றவர்களிடமிருந்தும் சரி தடைகள் அதிகமாக வரும். நாம் பொதுவாக இந்திரியங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அதிலிருந்து கிடைக்கின்ற விடுதலையே உண்மையான சுதந்திரம் ஆகும்.
=> நரகத்தில் வீழ்கின்றனர்:
அசுர-குணமுடையவர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய விஷயங்களின் நுகர்வில் பற்றுடையவர்களாக இருப்பதால் அவர்கள் அதை அடைவதற்கான வழிமுறைகளில் நிறைய சமரசங்களைச் செய்கின்றனர். இதனால் அதிக பாபங்களை ஈட்டியவர்களாக துக்கமான நரகத்திற்குள் விழுகிறார்கள் — அசு1செள நரகே பதந்தி. இங்கு வீழ்தல் எனும் அர்த்தத்தைக் கொடுக்கும் ‘பதந்தி’ எனும் சொல், அது துன்பத்தை தரக்கூடிய இடம் என்பதை புரிந்துகொள்ள துணைபுரிகிறது. அதனாலேயே அங்கு யாரும் செல்ல விரும்புவதில்லை. ஆனால் அசுர-குணமுடையவர்கள் உதவியற்ற முறையில் பாழ் நரகில் வீழ்கின்றனர். சாஸ்திரத்தில் பல்வேறு வகையான நரகங்கள் பேசப்படுகின்றன. ஆனால் சொர்க்கத்தைப் போலவே, அவைகளும் தற்காலிகமானவையே ஆகும். வேதனையோ அல்லது இனிமையோ, அனுபவங்களைத் தருகின்ற எந்தவொரு விஷயமும் தற்காலிகமானதே. எனவே நித்திய நரகம் அல்லது சொர்க்கம் என எதுவுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
||16.17|| அசுரர்களின் யாகம் செய்யும் விதம் குறித்து கூறப்படுகிறது:
आत्मसम्भाविता: स्तब्धा धनमानमदान्विता: ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ।। १७ ।।
ஆத்மஸம்பா4விதா: ஸ்தப்3தா4 த4நமாநமதா3ந்விதா: ।
யஜந்தே நாமயக்ஞைஸ்தே த3ம்பே4நாவிதி4பூர்வகம் ।। 17 ।।
आत्म सम्भाविता: ஆத்ம ஸம்பா4விதா: தற்புகழ்ச்சியுடையவராய்
स्तब्धा: ஸ்தப்3தா4: வணங்காதவர்கள் धन मान मद अन्विता: த4ந மாந மத3 அந்விதா: செல்வச் செருக்கும் மதமுமுடையவர் दम्भेन த3ம்பே4ந ஆடம்பரத்துக்காக
नाम यज्ञै: நாம யக்ஞை: பெயரளவில் யாகம் என்று சொல்லப்படும் கிரியைகளால்
अविधि पूर्वकम् அவிதி4 பூர்வகம் விதி வழுவி ते தே அவர்கள் यजन्ते யஜந்தே யாகம் செய்கின்றனர்.
தற்புகழ்ச்சியுடையவராய், வணங்காதவராய், செல்வச் செருக்கும் மதமுமுடையார் பெயரளவில் யாகத்தை விதிவழுவி ஆடம்பரத்துக்காகச் செய்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
விளக்கம்:
அசுரர்களின் குணங்கள் மீண்டும் கூறப்பட்டு, அத்தகையவர்கள் செய்யும் நற்செயல்களும்கூட தங்களது பெருமையை நிலைநிறுத்தும் பொருட்டே செய்யப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
=> அசுர-குணங்கள்:
‘ஆத்ம ஸம்பா4விதா:’ எனில் தற்புகழ்ச்சியுடையவர்கள் என்பது பொருள். அவர்கள் அனைத்து உன்னதமான குணங்களுடனும் இருப்பவர்களாக தங்களைப் பற்றி பெருமை பேசிக் கொள்கின்றனர். அவர்களிடம் நற்பண்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், தெய்வீக நற்பண்புகளைக் கொண்டவர்களாக தங்களை தாங்களே அற்புதமானவர்கள் என்று அறிவிக்கின்றனர். மேலும் அவர்களின் தகுதிகளை மதிப்பிடத் தகுதியுள்ளவர்கள் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இருப்பதில்லை. மற்றவர்களிடமிருந்து மதிப்பையும் பாராட்டையும் கோரும் அதே நேரத்தில், அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ மற்ற யாரையும் வணங்க மறுக்கிறார்கள் — ஸ்தப்3தா4. பணிவு இல்லாததும், மற்றவர்கள் மீது மரியாதை இல்லாததும், அவர்களை வளைந்து கொடுக்காதவர்களாக ஆக்கி யாரையும் வணங்குவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, அவர்களுக்கு யார் மீதும் எதற்கும் மரியாதை இல்லை. அத்தகையவர்களின் முன் கடவுளே தோன்றினாலும், அவர்கள் அவரிடம் சரணடையவோ அல்லது தங்களது பக்தியை செலுத்தவோ மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களை ஆளும் ஈஷ்வரன் என்று கருதுகிறார்கள்.
=> பெயர் மாத்திரமான வேள்வி:
அவர்கள் யாரையும் மதிக்கவில்லை என்றாலும், எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். செல்வச் செருக்குடன் கூடியவர்களாக இருக்கின்றனர் — த4ந மாந மத3 அந்விதா:. நாம் ஏற்கனவே பார்த்தபடி, ‘நான் வணங்கப்பட வேண்டும்’ என்ற மனப்பான்மை ‘மாந’ ஆகும். தனது செல்வத்தால் உண்டான ஆணவம் ‘மத3’ ஆகும். இத்தகைய அசுரர்கள் யாகங்களும் செய்வதுண்டு. எவ்விதம் அதைச் செய்கிறார்கள்? பெயரளவில் மட்டுமே யாகம் செய்கிறார்கள் — நாம யக்ஞை: யஜந்தே, என்கிறார் பகவான். ஏன் அப்படி சொல்லப்படுகிறது? ஒரு வேள்விச்சடங்கானது செய்யப்படும்போது அது சிரத்தையுடன் கூடியதாகவும், மேலும் வேதங்களால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியும் இருத்தல் வேண்டும். ஆனால் அசுர-இயல்புடையவர்கள் செய்கிற யாகங்கள் நிபந்தனைகளின்படி செய்யப்படுவதில்லை — அவிதி4 பூர்வகம். எனில் ஏன் அவற்றைச் செய்கிறார்கள்? பாசாங்கிற்காக, த3ம்பே4ந. அவர்களின் நோக்கம் சுய-பெருமை, சுய-விளம்பரம் மற்றும் அனைத்து சடங்குகளையும் செய்பவன் என்று தன்னைக் காட்டிக் கொள்வது மட்டுமே ஆகும். இதில் ஹோமமும், ஏதாவது ஒன்று ஆகுதியாக வழங்குதலும் மற்றும் அன்னதானமும் இருப்பதால், இது ஒரு யாகச்சடங்கு என்று அழைக்கப்படுகிறது அவ்வளவே, ஆனால் வேதத்தால் குறிப்பிடப்பட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அது உண்மையில் வேள்வியாகக் கொள்ளமுடியாது. எல்லா விதிகளும் பின்பற்றப்படாவிட்டாலும், போதுமான அளவு சிரத்தை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் இங்கே, சிரத்தையும் இல்லை.
இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகம் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடன் கூடியவைகளாக இருக்கின்றன. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ-சம்பத்து-உடையவர்களின் இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக்கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.
---------------------------------------------------------------------------------------------
||16.18|| அசுர இயல்பு குறித்து மேலும் பேசுகிறார்:
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिता: ।
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयका: ।। १८ ।।
அஹங்காரம் ப3லம் த3ர்பம் காமம் க்ரோத4ம் ச ஸம்ச்1ரிதா: ।
மாமாத்மபரதே3ஹேஷு ப்ரத்3விஷந்தோऽப்4யஸுயகா: ।। 18 ।।
अहङ्कारं அஹங்காரம் அஹங்காரத்தை बलं ப3லம் பலத்தை
दर्पं த3ர்பம் தற்பெருமையை कामं காமம் காமத்தை
क्रोधं च க்ரோத4ம் ச குரோதத்தையும் संश्रिता: ஸம்ச்1ரிதா: பற்றியவர்கள்
आत्म पर देहेषु ஆத்ம பர தே3ஹேஷு தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலுமிருக்கிற
माम् மாம் என்னை(ஈஷ்வரனை) प्रद्विषन्त: ப்ரத்3விஷந்த: வெறுப்பவர்களாய்
अभ्यसूयका: அப்4யஸுயகா: அவமதிப்பவர்களாகிறார்கள்.
அஹங்காரம், பலம், இறுமாப்பு, காமம், குரோதம் — இவைகளையுடையவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலுமுள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.
விளக்கம்:
இந்த அசுர-குணமுடைய மக்கள் அனைவரும் கீழ்கண்ட விஷயங்களுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களாக இருக்கின்றனர் — ஸம்ச்1ரிதா.
1. அஹங்காரம்: வேதாந்தத்தில் இது பொதுவாக ஒருவனின் தனித்துவ உணர்வைக் குறிக்கிறது. ‘நான் செய்பவன்’ எனும் கர்த்ருத்வ உணர்வையும், மற்றும் ‘நான் அனுபவிப்பவன்’ எனும் போக்த்ருத்வ உணர்வையும் ஏற்றிவைத்தலே இந்த தனித்துவ தன்மைக்கு காரணம் ஆகும். எனவே, இந்த ஏற்றிவைத்தலின் அடிப்படையில் ஒருவன் தன்னை மகிழ்ச்சியானவன்(சுகி) அல்லது துயரமானவன்(துக்கி) என முடிவு செய்கிறான். ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்ட, அஹங்காரத்தில் வேரூன்றிய இந்த கருத்தே, நமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டே, நியாயமான அல்லது கேள்விக்குரிய நமது அனைத்து முயற்சிகளும் இயங்குகின்றன. ஆனால் இந்த சுலோகத்தில் பயன்படுத்தப்படும் ‘அஹங்காரம்’ எனும் சொல்லில், நிறைய அகநிலை சம்பந்தப்பட்டிருக்கிறது. தனித்துவம் இன்னும் நன்றாக வேரூன்றியதாக தடித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்களை மிகவும் மேன்மையானவர்கள் எனக் கருதுகின்றனர். இதனால் தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புகளை இருப்பதாக பாவித்தும் அஹங்கரிக்கின்றனர்.
2. வலிமை(ப3லம்): அவர்கள் உடல் மற்றும் மனதளவில் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர். தங்களிடத்து வாய்ந்த வலிமை முழுவதையும் அவர்கள் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். சங்கரர் இதை விருப்பு-வெறுப்புகளால் வலுவூட்டப்பட்ட பலம், இது மற்றவர்களை வெல்லப் பயன்படுகிறது என்று குறிப்பிடுகிறார்.
3. இறுமாப்பு(த3ர்பம்): மேலும் அவர்களிடம் கர்வம் காணப்படுகிறது. இதுவே அவர்களை சரியானது அல்லது முறையற்றது என்கிற எல்லைகளைக் கடக்கச் செய்கிறது.
4. காமம்-குரோதம்: இன்பத்தை கொடுக்கின்ற விஷயங்களில்(காமம்) அர்ப்பணிப்புடன் உறுதியாக இருப்பதால், அவைகள் நிறைவேறாதபோது அவர்களிடம் கோபமும்(க்ரோத4ம்) இயல்பாகவே இருக்கிறது. மேற்கூறிய சிறப்பு-வகையான அஹங்காரம் இருக்கும்போது, கர்வம், பேராசை மற்றும் குரோதம் போன்றவை தானாகவே அதனுடன் சேர்ந்து வருகிறது.
5. அவமதிப்பு: மேலும் அசுர குணங்கொண்டவர்கள், பெரும் கபடவாதிகளாக இருக்கின்றனர் — அப்4யஸுயகா:. நல்லொழுக்கங்கள் கொண்டவர்களை அல்லது தர்மத்தை கடைபிடிப்பவர்களை அவமதிக்கின்றனர். அத்தகையவர்களிடம் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து அதை பெரிதாக்க முயற்சிப்பார்கள். ஏனெனில் மற்றவர்களின் நல்லொழுக்கங்கள் அவர்களை சிறுமைபடுத்துவதாக உணர்வதால், அதை எதிர்கொள்ள இயலாமல், நற்குணமுடையவர்களிடம் என்ன குறைவு இருக்கிறது என்பதை தேடுகிறார்கள். குறிப்பாக ஆன்மீக தேடலில் இருப்பவர்கள் மற்றும் தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் குணங்கள், வாழ்க்கை முறை, ஒழுக்கங்கள் மற்றும் நன்மதிப்புகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே அவற்றை ஏதேனுமொரு வகையில் குறை கூறி அவமதிக்கின்றனர்.
அவர்கள் தங்கள் தேகத்திலும் பிறர் தேகத்திலும் இருக்கின்ற என்னை வெறுக்கிறார்கள் — ஆத்ம பர தே3ஹேஷு மாம் ப்ரத்3விஷந்த:, என்கிறார் பகவான். தாங்கள் செய்து கொண்டிருக்கும் எந்தவொரு விஷயமும் விரும்புவதை உண்மையில் பெற உதவாது என்பதையும், மேலும் தங்களது சொந்த மற்றும் பிற உடல்களில் ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக பரமேஷ்வரன் மட்டுமே வசிக்கிறார் என்பதையும் அசுர குணமுடையவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். யாரை அறிவதன் மூலம் தங்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படுமோ அந்த பரமேஷ்வரனை அவர்கள் வெறுக்கிறார்கள். இது பகவானின் உபதேசத்தை மதிக்காமலிருத்தலை, தர்மத்தை பின்பற்றாதிருத்தலைக் குறிக்கிறது. அவர்கள் பரமேஷ்வரனை இகழ்ந்து அவரின் உலக நியதிகளை மீறுகிறார்கள். திருடாமை, துன்புறுத்தாமை, ஏமாற்றாமை, இகழாமை போன்ற சில அடிப்படை தர்மத்தையும்கூட மீறுகிறார்கள்.
ஒருவன் தான் செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் பொதுவான அறிவின் மூலம் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த மனிதனாலும் உருவாக்கப்படாததாக இருப்பதாலும், ஆனால் அனைவராலும் இது இயல்பாகவே அறியப்படுவதாலும், இதை நாம் ஈஷ்வர நியதி என்று அழைக்கிறோம். இங்கே விவாதிக்கப்படும் மக்கள் இந்த உலகளாவிய நெறிமுறைகளை, எந்த குற்றவுணர்ச்சியுமின்றி எளிதாக மீறுகிறார்கள். எனில் நிச்சயமாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையும் மீறுகிறார்கள். இத்தகைய தர்ம-மீறல் ஈஷ்வரனின் மீதான வெறுப்பாகக் கருதப்படுகிறது. அதற்கு நேர்மாறாக, தர்மத்தைப் பின்பற்றுவது ஒரு வகையான ஈஷ்வர வழிபாடாக மாறுகிறது. ஈஷ்வரனை அங்கீகரிக்காவிட்டாலும், ஒழுங்குமுறைகளை அல்லது தர்ம நெறிகளை பின்பற்றும் அனைத்து மக்களும், ஈசனை வழிபடுபவர்கள் ஆகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------