||16.13|| அசுர இயல்புடையவர்களின் தனித்துவமான சிந்தனை முறை:
इदमद्य मया लब्धमिमं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ।। १३ ।।
இத3மத்3ய மயா லப்3த4மிமம் ப்ராப்ஸ்யே மநோரத2ம் ।
இத3மஸ்தீத3மபி மே ப4விஷ்யதி புநர்த4நம் ।। 13 ।।
अद्य அத்3ய இன்று मया மயா என்னால் इदम् लब्धम् இத3ம் லப்3த4ம் இது அடையப்பட்டது इमं मनोरथम् இமம் மநோரத2ம் இந்த விருப்பத்தை प्राप्स्ये ப்ராப்ஸ்யே பெற்றிடுவேன்
इदम् अस्ति இத3ம் அஸ்தி இது இருக்கிறது मे மே எனக்கு पुन: புந: மேலும்
इदम् अपि धनम् இத3ம் அபி த4நம் இந்த செல்வமும் भविष्यति ப4விஷ்யதி வந்து சேரும்.
இன்று இது என்னால் அடையப்பட்டது; இவ்விருப்பத்தை நிறைவேற்றுவேன். இது இருக்கிறது; மேலும் எனக்கு இச்செல்வம் வந்து சேரும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
விளக்கம்:
அசுர இயல்புடையவர்கள் தனித்துவமான சிந்தனை முறைகளை உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கிடையில் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை பகவான் பதிமூன்றாம் சுலோகத்திலிருந்து பதினைந்தாம் சுலோகம் வரை கூறுகிறார்.
=> சிந்தனை முறை:
எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட கணக்கீட்டு மனநிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர். தங்களிடம் இருக்கின்ற அசையும் மற்றும் அசையாத, பணம் மற்றும் சொத்துக்கள் எவ்வளவு என்பதை அறிந்தவர்களாக, ஒவ்வொரு நாளும் அவர்கள் ஈட்டியதை கணக்கிடுகின்றனர் — அத்3ய மயா இத3ம் லப்3த4ம். பிறகு தங்களது மனஆசையை(மநோரத2ம்) நிறைவேற்றும்பொருட்டு செய்யப்பட வேண்டிய விஷயங்களுக்கு இன்னும் எவ்வளவு தேவை என அளவிட்டுப் பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் ஒரு தினசரி திட்டம், ஒரு வாராந்திர திட்டம், ஒரு மாதாந்திர திட்டம், ஒரு வருடாந்திர திட்டம் என்பதை வகுக்கின்றனர். பின்னர், என்னிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது(இத3ம் அஸ்தி) என்றும், இனி தனது திட்டங்களின்படி மேலும் எவ்வளவு இருக்கும் என்பதையும் கணக்கிட்டு, இன்னும் எனக்கு இந்த செல்வம் வந்து சேரும் (மே புந: இத3ம் அபி த4நம் ப4விஷ்யதி) என்றும் கூறுகின்றனர்.
இந்த சுலோகத்தில், இன்று புழக்கத்திலுள்ள கார்பரேட் முதலாளிகளின் தத்துவம் மிக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செல்வத்தை குவிப்பது மட்டுமே அவர்களின் முழு நோக்கமாகும். தங்களது தற்போதைய சொத்துக்களின் மீது ஒரு கண் வைத்தவர்களாக, பெருநிறுவன அதிபர்கள் மேலும் லாபம் ஈட்ட திட்டமிட்டு, மிகப்பெரிய பங்குகளைக் கொண்ட பெரிய நிறுவனங்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தச் செல்வத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல, ஏனென்றால் சந்தையில் வேறு சில அசுரர்களுடன் அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. இயற்கையாகவே இந்த வழியில், அவர்கள் சிலரை அழிக்க நேரிடும், ஆனால் அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையல்ல. அவர்களின் குறிக்கோள் மட்டுமே அவர்களுக்கு முதன்மையானதாக ஆகிறது.
---------------------------------------------------------------------------------------------
||16.14|| மேலும் அவர்களின் பேச்சு இவ்விதம் இருக்கிறது:
असौ मया हत: शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी ।। १४ ।।
அசெள மயா ஹத: ச1த்ருர்ஹநிஷ்யே சாபராநபி ।
ஈச்1வரோऽஹமஹம் போ4கி3 ஸித்3தோ4ऽஹம் ப3லவாந் ஸுகீ2 ।। 14 ।।
असौ शत्रु: அசெள ச1த்ரு: இந்த பகைவன் मया மயா என்னால்
हत: ஹத: கொல்லப்பட்டான் अपरान् अपि அபராந் அபி மற்றவர்களையும்
हनिष्ये च ஹநிஷ்யே ச கொல்லுவேன் अहम् ईश्वर: அஹம் ஈச்1வர: நான் ஆளுபவன்
अहं भोगी அஹம் போ4கி3 நான் போகத்தை அனுபவிப்பவன்
अहं सिद्ध: அஹம் ஸித்3த4: நான் காரியசித்தி பெற்றவன்
बलवान् ப3லவாந் வலிமையுடையவன் सुखी ஸுகீ2 இன்பமாகவே இருப்பவன்.
இந்த பகைவன் என்னால் கொல்லப்பட்டான்; மற்றவர்களையும் கொல்லுவேன். நான் ஆளுபவன்; நான் போகத்தை அனுபவிப்பவன். காரியசித்தி பெற்றவன்; வலிமையுடையவன்; இன்பமாகவே இருப்பவன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
“இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
விளக்கம்:
அசுர இயல்புடையவர்களின் பேச்சுக்கள் மற்றும் சிந்தனை முறை என்னவாக இருக்கிறது என மேலும் கூறுகிறார் பகவான்.
‘எனக்குப் போட்டியாக என் வழியில் நின்ற இந்த எதிரியை நான் ஒழித்துவிட்டேன்’ என்று பெருமையாகக் கூறி, தன்னைப் போன்ற பிறருடன் சேர்ந்து அந்த அழிவைக் கொண்டாடுகின்றனர். பின்னர், இவ்விதம் போட்டியாக இருக்கின்ற மற்றவர்களுக்கும் இதே நிலைதான் எனும் விதமாக, ‘நான் அவர்களையும் அழிப்பேன் - ஹநிஷ்யே அபராந் அபி’ என்று அவர்கள் அறிவிக்கின்றனர். இவ்வாறு அழிக்கத் திட்டமிடும் மற்றவர்களை பரிதாபகரமான மக்கள்(வராக) என்று சங்கரர் அழைக்கிறார். அவர்கள் மக்களின் பரிதாப நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தற்கால கடன்காரர்களைப் போன்றவர்கள். செல்வத்தை குவிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருப்பதால், ஏழை மக்கள் என்றுகூட பரிவு காட்டாமல் அவர்களிடமிருந்தும் உழைப்பு மற்றும் பணத்தை உறிஞ்சுகின்றனர். இம்மாதிரியான மனநிலை கொண்டவர்கள், தங்களுக்குச் சமமான போட்டியாளர்களை மட்டுமல்ல, அவர்களுடன் போட்டியிடத் தகுதியற்று இருக்கும் ஏழைகளையும் அழிக்கத் தயாராக இருக்கின்றனர்.
=> நானே ஆள்பவன்:
தங்களுக்கு நிகரானவன் யாருமில்லை என்பது அசுர குணமுடையவர்களின் கருத்தாக இருக்கிறது. பிரஹலாதனின் தந்தை ஹிரண்யகசிபு தனது மகனிடம், ‘நான்தான் ஈஷ்வரன், என்னைத் தவிர வேறு கடவுளில்லை’ எனக் கூறி இறையின் நாமத்தை உச்சரித்த தனது மகனை தண்டித்தான். இங்கு விவாதிக்கப்படுபவர்களின் சிந்தனையும் இந்த மனநிலைக்கு ஒத்ததாகவே இருக்கிறது. செய்த வேலைகளுக்கு ஏற்ப கூலியை கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவர்களும் தங்களை ஆளுபவர்களாக எண்ணி, அனைத்து மக்களுக்கும் ‘நான் இறைவன் — அஹம் ஈச்1வர:’ என்றும், அனைவரும் அவர்களைப் போற்ற வேண்டும் என்றும் நினைக்கின்றனர். மேலும், அனைத்து இன்பங்களும் தங்களது காலடியில் இருப்பதாகக் கருதுவதால், ‘அஹம் போ4கி3’ என்கின்றனர். வாழ்க்கையில் ஒருவன் அடைய வேண்டியதையெல்லாம் அடைந்தவனாகத் தங்களைப் பார்ப்பதால், ‘அஹம் ஸித்3த4’, வெற்றிகரமானவன், எனக் கூறிக் கொள்கின்றனர்.
=> நான் வலிமையுடையவன்:
ஒருவனுக்கு இவையனைத்தும் இருந்தும் ஒருகால் உடல் ரீதியான நோய்கள் இருந்தால் இவற்றில் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆகவே அனைத்து புலன்களும் உடலியல் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும் அவர்கள் தங்களை ‘இன்பமாகவே இருப்பவன் — ஸுகீ2’ எனக் கூறிக்கொள்கின்றனர். மேலும் ஒருகால் இவையனைத்தும் இருந்தும் அதிகாரமும் செல்வாக்கும் இல்லாமல்போகும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கத்தால் துன்புறுத்தப்படுவார்கள். ஏனெனில் சட்ட விரோதமான முறையில் அவர்கள் பொருளைக் குவிக்கின்றனர். இதனால் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளை அவர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்வதால், தங்களை சக்தி வாய்ந்தவராக அறிவிக்கின்றனர். நான் வலிவுடையவன்(ப3லவாந்) என பெருமை பேசிக் கொள்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------
||16.15|| அவர்களின் பெருமிதம் மேலும் தொடர்கிறது:
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्ये इत्यज्ञानविमोहिता: ।। १५ ।।
ஆட்4யோऽபி4ஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்3ருசோ1 மயா ।
யக்ஷ்யே தா3ஸ்யாமி மோதி3ஷ்யே இத்யஜ்ஞாநவிமோஹிதா: ।। 15 ।।
आढ्य: अस्मि ஆட்4ய: அஸ்மி செல்வமுடையவன் अभिजनवान् அபி4ஜநவாந் உயர்குலத்தவன் मया सदृश: மயா ஸத்3ருச1 எனக்கு நிகரானவன் क: अन्य: अस्ति க: அந்ய: அஸ்தி அன்னியன் யார் இருக்கிறான் यक्ष्ये யக்ஷ்யே யாகம் செய்வேன் दास्यामि தா3ஸ்யாமி தானம் கொடுப்பேன் मोदिष्ये மோதி3ஷ்யே மகிழ்வடைவேன் इति இதி இப்படி
अज्ञान विमोहिता: அஜ்ஞாந விமோஹிதா: அக்ஞானத்தில் மயங்கினவர்கள் …
செல்வம்படைத்து உயர்குலத்தவனாய் இருக்கிறேன்; எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான்; யாகம் செய்வேன், தானம் கொடுப்பேன், மகிழ்வடைவேன் என்று அக்ஞானத்தில் மயங்கினவர்கள்;
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
“நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
விளக்கம்:
அசுர-இயல்புடையவர்களின் பெருமிதப் பேச்சை மேலும் தொடர்கிறார்.
=> நான் மேலானவன்:
‘ஆட்4ய’ எனில் செல்வமுடையவன் என்று பொருள். அசுர-இயல்புடையவர்கள் ஏதேனுமொரு விதத்தில் பணத்தை ஈட்டியுள்ளதால், தங்களை பாராட்டுக்குரியவர்கள் என நினைக்கின்றனர்.
மேலும், அது உண்மையோ இல்லையோ, ‘மேலான குடும்பத்தில் பிறந்துள்ளேன் — அபி4ஜநவாந்’ என பெருமை பேசிக் கொள்கின்றனர். எப்படிப்பட்ட குடும்பம் என்பதற்கு சங்கரர், ‘ஏழு தலைமுறைகளாக மிகவும் நன்கு அறிந்த சான்றோர்களைக் கொண்ட குடும்பம் — சப்த புருஷம் ச்1ரோத்ரியத்வாதி3 சம்பந்ந:’, என்று விளக்கமளிக்கிறார். அது உண்மையாக இருந்தாலும், அசுர குணமுடைய இவர்களுக்கு அது என்ன நன்மையைச் செய்தது? பொதுவாக இந்தியாவிலுள்ள அனைவரும் ஒரு முனிவரின் வம்சாவளியில், அதாவது கோத்திரத்தில் பிறந்ததாகக் கூறுவார்கள். ஆனால் ஒருவன் தனது நடத்தையின் அடிப்படையில் ஒரு அசுரனாக இருந்தால், அவனது குடும்பப் பின்னணி என்பது அங்கு அர்த்தமற்றுப் போகிறது. தங்களை மேன்மையானவர்கள் என காட்டிக் கொள்வதற்காகவே அவர்கள் அத்தகைய கூற்றுக்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே குடும்பப் பின்னணியின் அடிப்படையில்கூட, என்னை விட மேலானவன் இங்கு யாருமில்லை என அவர்கள் பெருமையாக நினைப்பதால், ‘எனக்கு நிகரானவன் வேறு எவன் இருக்கிறான் — க: அந்ய: அஸ்தி’ என்று வெளிப்படையாக கூறிக் கொள்கின்றனர்.
=> நான் யாகம் செய்வேன்:
மேலும், ‘நான் யாகங்களைச் செய்வேன்' என்று பெருமை பேசுகின்றனர். கண்டிப்பாக இது உன்னதமான எந்தவொரு நோக்கத்திற்காகவும் அல்ல, மாறாக சில எதிரிகளை அழிப்பதற்காகவோ அல்லது குறைந்தபட்சம் சில புகழைப் பெறுவதற்காகவோ செய்யப்படுகிறது. அவர்களின் மற்ற எல்லா செயல்களையும் போல இதுவும் தங்களது சொந்த பெருமைகளை காட்டிக் கொள்வதற்காக மட்டுமே செய்யப்படுகிறது. அவர்கள் தனித்து நிற்கவும் மக்களை வெல்லவும் விரும்புகின்றனர் என்பதால், அந்த நோக்கத்திற்காகச் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ராவணன் மற்றவர்களை அழிப்பதற்காக மட்டுமே பெரும் தவங்களைச் செய்தான். அவன் சாமவேதத்தை ஓதும் ஒரு பிராமணன், ஆனால் அழிக்கும் சக்தியைப் பெறுவதற்காக மட்டுமே அவன் எல்லாவற்றையும் செய்ததால், அவன் ஒரு ராக்ஷஸனாகப் பார்க்கப்படுகிறான்.
=> நான் தானம் கொடுப்பேன்:
நான் தானம் கொடுப்பவன் எனப் பெருமை பேசிக் கொள்கின்றனர். அது தர்ம காரியத்திற்காகச் செய்யப்படுகிற தானம் கிடையாது, மாறாக தன்னை புகழ்பவர்களுக்கும், இன்பங்களுக்காக செய்யப்படுகிற காரியங்களுக்கும் பொருளைக் கொடுத்து தங்களது சொந்த பெருமையை நிலைநாட்டுகின்றனர். எப்படி வேண்டுமானாலும் நான் இன்புற்று இருப்பேன்(மோதி3ஷ்யே) எனக் கூறி, பிரம்மாண்ட விருந்துகள் மற்றும் அனைத்து விதமான ஆடம்பர வசதிகளையும் தங்களது கட்டளைக்குக் கீழ் வைத்துக் கொள்கின்றனர். இவ்விதத்தில் அவர்கள் பகுத்தறியும் திறனற்று அக்ஞானத்தினால் மோஹத்தில் இருக்கின்றனர் — அஜ்ஞாந விமோஹிதா:. அவர்கள் தங்களைப் பற்றியும், தங்களது வாழ்க்கையின் சாதனைகளைப் பற்றியும் கொண்டுள்ள கருத்து என்பது அவர்களின் மதிமயக்கத்தினால் ஏற்பட்ட குழப்பமான மதிப்பீடுகளாலும் அதிலிருந்து உண்டான தவறான அணுகுமுறைகளாலும் ஏற்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------