ஞாயிறு, 6 அக்டோபர், 2024

பக்தி யோகம் 12.6 - 12.7

||12.6|| நான்காவது படிநிலையைப் பற்றிப் பேசுகிறார்:

ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परा:

अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ।। ।।

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:  

அநந்யேநைவ யோகே3 மாம் த்4யாயந்த உபாஸதே ।। 6 ।।


तु  து  ஆனால்     ये  யே  யார்    सर्वाणि कर्माणि  ஸர்வாணி கர்மாணி   எல்லா கர்மங்களையும்    

मयि  மயி  என்னிடத்து   सन्न्य स्य  ஸந்ந்யஸ்ய  அர்ப்பித்து    मत्परा:  மத்பரா:  என்னையே பரமாகக் கொண்டு    अनन्येन योगेन  அநந்யேந யோகே3  வேறு எதையும் அணுகாத யோகத்தால்      

मां एव  மாம் ஏவ  என்னையே    ध्यायन्त:  த்4யாயந்த:  தியானிப்பவர்களாய்     

उपासते  உபாஸதே  உபாசிக்கிறார்கள்.


ஆனால் யார் வினையனைத்தையும் எனக்கு அர்ப்பித்து, என்னையே பரமாகக் கொண்டு, சிதைவுறா யோகத்தால் என்னைத் தியானித்து உபாசிக்கிறார்களோ

 

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?


விளக்கம்:

=> நான்காவது படிநிலை:

ஆறு மற்றும் ஏழாவது சுலோகத்தில் பகவான் ஒரு படி கீழிறங்கி நான்காவது படிநிலையான விஷ்வரூப பக்தியின் சொரூபத்தையும், அதன் பலனையும் விளக்கியருள்கிறார்

சுலோகம் மூன்று மற்றும் நான்கில், ஐந்தாவது மற்றும் இறுதிப்படிநிலையான ஞானயோகத்தை பற்றி விளக்கிக் கூறி, சரியான தகுதியை அடையாதவர்களுக்கு அது மிகவும் கடினமானது எனக் கூறினார். எனில் இயல்பாக அடுத்த கேள்வி என்பது ஞானயோகத்திற்கு ஒருவன் தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பதாகவே இருக்கும். எனவே நிர்குண-ப்ரம்ம தியானம் மிகவும் கடினமாக இருப்பதாக ஒருவன் உணர்ந்தால் அவன் அடுத்த படியான நான்காவது படிநிலைக்குச் செல்லவேண்டும், என்கிறார் பகவான். நான்காவது கடினமாக இருந்தால் அடுத்த கீழ்படியான மூன்றாவதற்கு செல்லவேண்டும். இவ்விதம் ஒவ்வொரு படியாக குறைத்துக் கொண்டே செல்கிறார். அந்த வரிசையில் இந்த சுலோகம் நான்காவது படிநிலையை, சகுண-ப்ரம்ம தியானத்தைப் பற்றி விளக்குகிறது.   


=> விஷ்வரூப-உபாசனை:

நிர்குண-ஈஷ்வர-உபாசனை சிரமமாக இருக்கும்பட்சத்தில் சகுண-ப்ரம்ம-உபாசனையை இங்கு பரிந்துரைக்கிறார். சகுண-ப்ரம்ம உபாசனை என்பது ஈஷ்வரனை குணங்களுடன் கூடியவராக, பதினொன்றாவது அத்தியாயத்தில் பார்த்ததைப் போல முழு பிரபஞ்சத்தையும் தனது உடலாகக் கொண்ட விஷ்வரூபியாக, விராட்-ஈஷ்வரனாக வழிபடுதலைக் குறிக்கிறது

எனவே கிருஷ்ணர், ‘துஎனும் சொல்லின்மூலம் கர்மயோகிகளை அக்ஷர-ப்ரம்ம-உபாசகர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். இந்த சகுண-ப்ரம்ம உபாசகர்களை, அனைத்து கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்தவர்கள்ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய, என்கிறார். பஜனை, பூஜை, ஜபம் உள்ளிட்ட மதம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் லெளகிகமான தினசரி கடமைகள் உள்ளிட்ட உலகியல் செயல்பாடுகள் என எதுவாக இருப்பினும் அவர்கள் அனைத்தையும் ஈஷ்வரனுக்கு சமர்பிக்கிறார்கள். இங்குஸந்ந்யஸ்யஎனும் சொல் கர்மங்கள் அனைத்தையும் துறக்கும் சந்யாசத்தை குறிக்கும் சொல் அல்ல. அது கர்மங்களை அர்பித்தலை, சமர்ப்பணம் செய்தலைக் குறிக்கின்றது.  


=> அர்ப்பண மனப்பான்மை:

செயலை பகவானுக்கு அர்ப்பணம் செய்வது எவ்வாறு? நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, தனிப்பட்ட விருப்பு-வெறுப்பின் பிடியில் சிக்காமல், தர்ம மற்றும் அதர்மத்தின் அடிப்படையில் சரி மற்றும் தவறை நிர்ணயம் செய்து செயலாற்றுவதைக் குறிக்கிறது. ஒருவனால் செய்யப்படும் எந்தவொரு செயலும் உலகிற்குச் செல்கிறது. அது உலக நியதிகளின்படி செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ற முடிவு கிடைக்கப் பெறுகிறது. எந்தவொரு செயலின் பலனும் கர்மநியதியின் படியே வந்தமைகிறது. இனி, அர்ப்பணிப்பு என்பது இதில் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையைக் குறிக்கின்றது. கர்மம் என்பது முடிக்கப்படும் வரையில்தான் எனது கட்டுப்பாட்டில் உள்ளதுகர்மண்யேவாதிகாரஸ்தே. செயல் செய்து முடிக்கப்பட்டவுடன் அது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக ஆகிறது. இந்த பிரபஞ்சம் என்பது ஈஷ்வரனைத் தவிர வேறில்லை, விஷ்வரூப-ஈஷ்வர:. உலகின் எந்தவொரு நியதியும் ஈஷ்வரனாகவே இருப்பதால், செய்யப்பட்ட எல்லாச் செயல்களுக்கும் பொருத்தமான மற்றும் நியாயமான முடிவு இந்த கர்மநியதிகளின்படி வரப்போகிறது. கர்மபலன் என்னவாக இருந்தாலும் அது ஈஷ்வரனால் அளிக்கப்படுவது ஆகும். எனவே பிரசாத-புத்தியுடன் எந்தவித முணுமுணுப்பும் தயக்கமும் சலிப்பும் இன்றி மனமுவந்து விளைவை ஏற்றுக் கொள்கிறேன் எனும் உள் ஏற்புத்தன்மை, அர்ப்பணிப்பு எனப்படும்.   


=> லக்ஷியம்:

மத்பரா:’, என்னையே குறிக்கோளாக, முடிவாகக் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை குறிக்கோளாகத் தீர்மானிக்கும்போது வாழ்க்கையில் செய்யும் எந்தவொன்றும் அதனுடன் இணைக்கப்பட்டதாகவே இருக்கும். இங்கு மோக்ஷ சொரூபமான ஈஷ்வரனை பரமாகக் கொண்டதனால், அனைத்து கர்மங்களும் மோக்ஷத்திற்கான பாதையுடன் இணைக்கப்பட்டதாகவே உள்ளன. எனவே நான்காவது படியான இந்த விஷ்வரூப-உபாசனை வரை வந்ததோடு மட்டும் நின்றுவிடாமல், அடுத்த மற்றும் இறுதிப் படியான நிர்குண-ஈஷ்வர-ஞானம் என்கிற படிநிலையை அடைய வேண்டும் என்ற தங்களது இலக்கை அவர்கள் ஒருபோதும் இழக்காதவர்களாக இருக்கின்றனர்.


=> அன்னியது எதையும் அணுகாத யோகம்:

அவர்கள், எல்லாவற்றிற்கும் காரணமானவனும், இந்த முழு உலகத்தையே வடிவமாகக் கொண்டவனுமான என்னையே தியானிக்கிறார்கள்மாம் ஏவ த்4யாயந்த: உபாஸதே. ஈஷ்வரார்ப்பண மற்றும் பிரசாத-புத்தியுடன் அனைத்துச் செயலிலும் ஈடுபடும் இந்த கர்மயோகிகள், சகுண-ப்ரம்ம தியானத்தில் ஈடுபடுகிறார்கள். எப்படி?

அநந்யேந யோகே3பரமேஷ்வரனைத் தவிர வேறெதுவும் இல்லாத, வேறு இடத்திலோ அல்லது வேறு வடிவத்திலோ(ஆலம்பனம்) செல்லாத மனதுடன் தியானிக்கிறார்கள். விஷ்வரூபத்தை தவிர அவர்களது மனம் அன்னியது எதையும் அணுகுவதில்லை. ‘அனைத்தும் அவரது சொரூபம்; ஆலம்பனமும் கூட அவரிடமிருந்து வேறாக இல்லைஎன்ற எண்ணத்துடன்தான் அவர்கள் அன்றாட பூஜைகளையும் செய்கின்றனர். அவர்கள் ஒருபோதும் திசைதிருப்பப்படுவதில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் நாம் இலக்கைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கலாம். ஆனால் உலக நடவடிக்கைகளில் இறங்கும்போது, பொறுப்புகள் அதிகரிக்கும்; உறவுகள் அதிகரிக்கும். இதனால் நாம் எந்த நோக்கத்திற்காக வந்தோம் என்பதை மறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே இலக்கின்மீதான இந்த மறதியும் கவனச்சிதறலும் சாத்தியம். ஆனால் இந்த விஷ்வரூப-உபாசகர்கள்என்னை அடையும் இலக்கை எப்பொழுதும் மறக்காதவர்களாக தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு என்னை அடைகின்றனர்என்பதைஅநந்யேந யோகே3ம்என்கிற சொல்லைக் கொண்டு கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்

இப்படிப்பட்ட சகுண-ப்ரம்ம உபாசகர்கள் அடையும் பலனை அடுத்த சுலோகத்தில் விரித்துரைக்கிறார்.

---------------------------------------------------------------------------------------------

||12.7|| விஷ்வரூப பக்தியின் பலன்:

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्

भवामि चिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ।। ।।

தேஷாமஹம் ஸமுத்34ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக3ராத்

4வாமி நசிராத்பார்த2 மய்யாவேசி1தசேதஸாம் ।। 7 ।।


 पार्थ  பார்த2 பார்த்தா    मयि  மயி  என்னிடத்து    

आवेशित चेतसाम्  ஆவேசி1 சேதஸாம்  செலுத்திய மனதையுடைய    

तेषाम्  தேஷாம்  அவர்களுடைய     मृत्यु संसार सागरात्   ம்ருத்யு ஸம்ஸார ஸாக3ராத்   மரணத்தோடு கூடிய சம்சாரம் எனும் கடலிலிருந்து    नचिरात्  நசிராத்  விரைவில்     

समुद्धर्ता  ஸமுத்34ர்தா  கரையேற்றுபவனாக   अहं  அஹம்  நான்     भवामि  4வாமி   ஆகிறேன்.


பார்த்தா, சித்தத்தை என்னிடத்து வைத்த அவர்களை, நான் மரண சம்சார சாகரத்திலிருந்து விரைவில் கரையேற்றுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.


விளக்கம்:

விஷ்வ ரூபத்தையுடைய ஈஷ்வரனைத் தவிர வேறு ஒன்றையும் பற்றுகோடாகக் கொள்ளாமல் அவரையே சார்ந்து யார் அவருக்கென்றே பணி செய்யும் பான்மை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள சம்சாரப் பெருங்கடலிலிருந்து விரைவில் கரையேற்றப்படுகிறார்கள்.


=> கரையேற்றுபவர்:

சென்ற சுலோகத்தில் பார்க்கப்பட்ட குணங்களையுடைய விஷ்வரூப-உபாசகர்களுக்கு, ‘நான் அவர்களைத் தூக்கிவிடுபவனாக ஆவேன்’, தேஷாம் அஹம் ஸமுத்34ர்தா 4வாமி, என்கிறார் பகவான். எதிலிருந்து தூக்கிவிடுகிறார்? மரணத்துடன் கூடிய சம்சாரம் எனும் பெருங்கடலிலிருந்து, ம்ருத்யு-ஸம்ஸார-ஸாக3ராத். இது ஒரு கூட்டுச் சொல்லாகும். இதில்யுக்தஎனும் சொல்லானது, ‘மத்4யம-பத3-லோப-சமாஸாஎனும் சமஸ்கிருத இலக்கண விதிப்படி விடப்பட்டுள்ளது. எனவேம்ருத்யு-யுக்த-ஸம்ஸார-ஸாக3ராத்என்பதே முழுமையான கூட்டுச் சொல்லாகும். மரணத்துடன் கூடிய அல்லது மரணம் நிறைந்த சம்சாரம் எனும் கடலிலிருந்து நான் மீட்கின்றேன் என்கிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் கீதையில்அஹம்_நான்பயன்படுத்தும்போது அது அவர் தன்னை ஈஷ்வரனாக வைத்துப் பேசுகிறார் என அர்த்தம்; தேவகியின் மகனான வரலாற்று கிருஷ்ணனாக அல்ல. வரலாற்று ரீதியாக அவர் இருந்தாரா இல்லையா என்பது இங்கு முக்கியமல்ல. அனைத்து வடிவமும் ஈஷ்வரனின் வடிவமே என்கிற அவரது உபதேசத்தை புரிந்து கொள்ளுதலே இங்கு முக்கியமாகிறது.  

இந்த வாழ்க்கையை சம்சாரப் பெருங்கடல் என்கிறார் பகவான். இந்த துயரக்கடலில் பல பிரச்சனைகள் இருப்பினும் மிக மோசமான துயரமாக விளங்குவது மரணம் ஆகும். செய்யவேண்டிய பல பிடித்தமான செயல்கள் பாக்கி இருப்பதால், இந்த மரணபயம் ஒருவனை உள்ளதுக்குள்ளேயே வாட்டி வதைக்கிறது. ஆனால் ஈஷ்வரனையே குறிக்கோளாகக் கொண்ட சகுண-ப்ரம்ம உபாசகர்களை இந்த கடலிலிருந்து நான் தூக்கிவிடுகிறேன் என்கிறார்


=> எவ்வளவு காலமாகும்?

நசிராத்என்கிறார். விரைவில், அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் என்பது இதன் பொருள். இங்கு குறிக்கப்படும் காலம், அந்த குறிப்பிட்ட நபரைப் பொறுத்தது. எவனொருவனும் ஏற்கனவே முக்த புருஷனாக இருப்பதனால், இங்கு நிலையான கால அட்டவணை என எதுவுமில்லை. ஏதேனும் ஒன்றை தயாரிக்க வேண்டுமெனில், அதற்கு ஒரு கால அட்டவணைக் கொடுக்கலாம்; ஆனால் இங்கு சுயம் என்பது ஏற்கனவே விடுதலையுடன் கூடியிருப்பதால், அதை தெரிந்த கொள்ள ஏதுவான மனமுதிர்ச்சியே இங்கு கேள்விக்குரியதாகிறது. ‘நசிராத்எனும் சொல் குறிப்பிட்ட காலவரையை கொடுக்கவில்லையெனினும், அதிக நேரம் எடுக்காது விரைவில் என்பதை குறிக்கிறது. கர்மயோகம் மற்றும் ஈஷ்வர-உபாசனை வரை வந்த ஒருவனை, அறிந்து கொள்வதிலிருந்து எது தடுக்க முடியும்?


=> மற்றுமொரு லக்ஷணம்:

அத்தகையவர் யார் என்பதை பகவான் மீண்டுமொரு லக்ஷணத்தைக் கொண்டு குறிப்பிடுகிறார்மயி ஆவேசி1 சேதஸாம். யாருடைய மனமானது பரமேஷ்வரனாகிய என்னிடத்தில் லயித்திருக்கிறதோ, என்கிறார். அதாவது, உலகை ஈஷ்வரனாகப் பார்க்கும் திருடமான மனதை உடையவர்கள்; அறிவு மனதிற்குள் சென்றவர்கள். நம்மால் அடையப்படும் அறிவு பெரும்பாலும் ஒரு கருத்தாக அல்லது ஒரு யோசனையாக மேலோட்டமாக நம்மிடம் இருக்கும். அது மனதிற்குள் செல்லும்போதே மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, இவர்கள் பரமேஷ்வரனிடம் மட்டுமே அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள். இவர்களின் மனம் தியானத்தில் மட்டுமல்ல, அன்றாட நடவடிக்கைகளின்போதும் பரமேஷ்வரனிடம் லயித்துக் காணப்படுகிறது. சென்ற சுலோகத்தில் ஆரம்பித்து, மொத்தம் நான்கு லக்ஷணங்களை இந்த சகுண-ப்ரம்ம உபாசகனுக்கு பகவான் கொடுத்திருக்கிறார்:

  (1) அனைத்து செயல்களையும் பகவானிடம் அர்ப்பித்தவர்கள்

  (2) பகவானையே லக்ஷியமாகக் கொண்டவர்கள்

  (3) அன்னியது எதையும் அணுகாத யோகத்தை உடையவர்கள்

  (4) பகவானிடம் லயித்த மனதை உடையவர்கள்.

  இதனால் பக்தி-படியின் நான்காவது நிலையிலுள்ள அவர்களை, ‘நான் சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றுகிறேன்என்கிறார். கரையேற்றுதல் என்பது விடுதலையளித்தலை, முக்தியைக் குறிக்கிறது


=> எப்படி காப்பாற்றுவார்?

பகவான் அவர்களை எப்படிக் காப்பாற்றுவார்? நான்காவது படிநிலையில் இருப்பவர்களுக்கு நேராக இறைவன் மோக்ஷத்தைக் கொடுப்பாரா? எனில், அது சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மோக்ஷத்திற்கான ஒரே சாதனம் ஞானம் மட்டுமே என ஏற்கனவே பல முறை பார்த்துள்ளோம். மற்றும் ஞானத்திற்கு, அதற்கான தகுதி(ஞான-யோக்யதா) தேவை. ஆகையால் நான் அவர்களை மீட்பேன் என பகவான் கூறும்போது அதன் அர்த்தம் என்னவென்றால், ஐந்தாவது படிநிலைக்கு உயரத் தேவையான தகுதி மற்றும் சூழ்நிலையை நான் அவர்களுக்கு உருவாக்குவேன் என்பதாகும். ஆகவே அர்ஜுனா தற்போதைக்கு ஞானயோகத்தை மறந்து, விஷ்வ-ரூப உபாசகனாக முழுமையாக ஆவாயாக எனக் கூறி அதற்கான சில அறிவுரையை அடுத்த சுலோகத்தில் தொகுக்கிறார்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரானுபத்துக்கும் அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈஷ்வர தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.

---------------------------------------------------------------------------------------------