திங்கள், 30 செப்டம்பர், 2024

பக்தி யோகம் 12.4 - 12.5

||12.4|| நிர்குண பக்தனின் சொரூபம் மற்றும் நிர்குண பக்தியின் பலன்:

संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धय:

ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता: ।। ।।

ஸந்நியம்யேந்த்3ரியக்3ராமம் ஸர்வத்ர ஸமபு3த்34:  

தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ4தஹிதே ரதா: ।। 4 ।।


सर्वत्र  ஸர்வத்ர  எங்கும்    समबुद्धय:  ஸமபு3த்34:  சமபுத்தியுள்ளவர்களாய்     

इन्द्रियग्रामं  இந்த்3ரியக்3ராமம்  இந்திரியக் கூட்டத்தை     संनियम्य  ஸந்நியம்ய  நன்கு அடக்கி     

सर्व भूत हिते रता:  ஸர்வ பூ4 ஹிதே ரதா:  எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ளவர்கள்    

ते  தே  அவர்கள்    माम् एव  மாம் ஏவ  என்னையே    प्राप्नुवन्ति  ப்ராப்நுவந்தி  வந்தடைகிறார்கள்.


இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கி எங்கும் சமபுத்தியுள்ளவர்களாய் எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.


விளக்கம்:

நிர்குண-ப்ரம்ம உபாசனைக்கு தகுதியுடையவர்கள் யார் என்றும் அவர்கள் அடையும் பலன் என்ன என்றும் பகவான் இங்கு விளக்கமளிக்கிறார்


=> புலனடக்கம்:

அக்ஷர-ப்ரம்மத்தை நாடுதல் என்பது நிதித்யாசனத்தை உள்ளடக்கியது என்பதால் அதற்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவைப்படுகிறது. ஆகவே அவன் இந்திரியக் கூட்டங்களை நன்கு அடக்கியவனாக இருக்கவேண்டும்ஸந்நியம்ய இந்த்3ரியக்3ராமம். புலன்களை தனது கருவியாகக் கொண்டவனாக இருக்கவேண்டும். குதிரையைப் போல புலன்களுக்கும் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட சுபாவம் உள்ளது. பயிற்சியின் மூலமே அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இங்குஇந்த்3ரியக்3ராமம்என்பது ஞானேந்திரியங்கள் என்றழைக்கப்படும் புலனுறுப்புகள், கர்மேந்திரியங்கள் என்றழைக்கப்படும் செயல் உறுப்புகள் மற்றும் மனம் இவைகளனைத்தையும் குறிக்கின்றது. எனவேஸந்நியம்யஎன்பது, சாஸ்திரத்தில்1_शमஎனக் கூறப்படும் இந்திரிய ஒழுக்கம் மட்டுமல்லாது3_दमஎனப்படும் மனக் கட்டுப்பாட்டையும் குறிக்கின்றது. இப்படிப்பட்ட ஒழுக்கங்களை அடைய ஒருவன் நெறிமுறைகளுடன் கூடிய திருப்திகரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும்; நற்பண்புகளை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது அவனுக்கு அடுத்ததான, சமபுத்தியுடன் இருத்தல் என்கிற தகுதியைத் தருகிறது


=> சமபுத்தி:

ஸர்வத்ரஎனில் எல்லா இடங்களிலும் அல்லது எல்லா நேரங்களிலும் என்பது பொருள். ‘ஸமபு3த்34:என்பது சமமான புத்தியுடையவர்கள்; சமநோக்குடன் இருப்பவர்கள். இன்பம் தருபவைகள், துன்பம் தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே மனப்பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். பொதுவாக, வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு, மனம் வெவ்வேறு வகையான எதிர்வினைகளைத் தருகிறது. மாறுவது மனதின் இயல்பு ஆகும். எனவே எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் மனநிலைகள் போன்றவை தொடர்ந்து ஓட்டத்திலேயே உள்ளன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை ஒருவனை வருத்தப்படுத்துகிறது, மற்றொன்று உற்சாகப்படுத்துகிறது, மற்றொன்று மனச்சோர்வடையச் செய்கிறது அல்லது கோபப்படுத்துகிறது. இது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் கர்ம-யோக வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் மனதின் இந்த மாறுபாடுகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல. அவர்கள் சம-புத்தியுடையவர்களாக எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு மனிதர்களிடமும், எந்தவகையான அனுபவங்களின்போதும் தங்களது அமைதியைப் பேணுகிறார்கள். ஈஷ்வரார்ப்பண-புத்தி மற்றும் பிரசாத-புத்தியுடன் கூடிய கர்மயோக வாழ்க்கையினால் தனது விருப்பு-வெறுப்புகளை நடுநிலைப்படுத்தி இவர்கள் இந்த சம-புத்தியை அடைகிறார்கள். சம-புத்தியை சாத்தியப்படுத்துபவைகள்:

1. அதிஷ்டான விவேகம்விதவிதமாக தெரிந்து கொண்டிருப்பவைகளின் அதிஷ்டானத்தை பற்றிய அறிவு

2. நாமரூப வைராக்கியம்அதிஷ்டானம் தெரிந்தபோதிலும் நாமரூபத்தில் பற்று இருந்தால் சம-புத்தி சாத்தியமாகாது. உதாரணமாக நகைகளின் அதிஷ்டானம் தங்கம் எனத் தெரிந்தும், அதனுடைய வடிவங்களில் விருப்பம் இருக்கும்போது சம-புத்தி அமைவதில்லை. புதிது புதிதாக வடிவமைப்பு மாற மாற அதை அடைய விருப்பம் மேலெழுவதால் சமநிலையில் இருக்க முடியாமலாகிறது. எனவே நாமரூபத்தின் மீது வைராக்கியம் அவசியமாகிறது


=> அனைத்துயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ளவர்கள்:

அவர்கள் எல்லா ஜீவராசிகளுடைய நலனில் மகிழ்ந்திருப்பவர்களாக உள்ளனர்ஸர்வபூ4 ஹிதே ரதா:. இதற்கென ஒரு தனி மனமுதிர்ச்சி தேவை. பொதுவாக மக்கள் மற்றவர்களின் மகிழ்ச்சியில் தாங்கள் மகிழ மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்கள் திருப்தியடைவதை பார்க்கும்போது தாங்கள் அனுபவித்ததை விட அதிக திருப்தியடைகிறார்கள். நேரடியாக ஒருவனுக்கு உதவி செய்ய இயலவில்லை எனினும் தங்களால் இயன்றதை செய்வதற்காக எப்பொழுதும் தயாராக இருப்பார்கள்; குறைந்த பட்சம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். இவ்வித பிரார்த்தனைகள் ஒருவனைஸர்வபூ4 ஹிதே ரதா:ஆக்குகிறது. இப்படிப்பட்ட மனமுதிர்ச்சியும் இரக்கமும் உடைய வாழ்க்கையை வாழ்பவர்கள், நிதித்யாசகனுக்கு தேவையான மனதை அடைகிறார்கள்

இந்த குணாதிசயங்களுடன் நிர்குண-ப்ரம்மத்தை நாடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி, என பகவான் கூறுகின்றார். இங்கு முக்கியதுவத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்ஏவஎனும் சொல்லை மூன்று விதமாக உபயோகித்து பொருள்விளக்கம் பெறலாம்:

1. தே ஏவ மாம் ப்ராப்நுவந்திஅத்தகையவர்கள்தான் என்னை அடைகிறார்கள். அதாவது கர்ம-யோக வாழ்க்கையை மேற்கொண்டு, ஞானத்தை அடைய போதுமான அளவு மனத்தூய்மையுடன்(அந்த-கரண-சுத்தி) இத்தகைய குணங்களை உடையவர்கள்தான் எந்தவித தடையுமின்றி என்னை அடைய முடியும்; மற்றவர்களால் அது இயலாது

2. தே மாம் ஏவ ப்ராப்நுவந்திஅக்ஷர-ப்ரம்மதை தியானிப்பதன் மூலம் அவர்கள் அக்ஷர-ப்ரம்மான என்னையே அடைகிறார்கள்.

3. ப்ராப்நுவந்தி ஏவஇப்படிப்பட்டவர்கள் என்னை அடையத்தான் செய்வார்கள். அதாவது கண்டிப்பாக அடைந்தே தீருவர்; வேறுவிதமாக நடப்பதற்கு வாய்ப்பில்லை.

நிர்குண-ப்ரம்மத்தை அடைய இந்த குணங்களை ஒருவன் பெற வேண்டும் என்று பகவான் கூறுவதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இந்திரிய-மன ஒழுக்கம், எங்கும் சம-புத்தி, எல்லா உயிர்களின் மகிழ்ச்சியிலும் மகிழ்ந்திருப்பவன் முந்தய சுலோகத்தில் விவரிக்கப்பட்ட எங்கும் வியாபித்திருக்கும், அழியாத, மாறாத, நிலைத்த பரப்ரம்மத்தை அடைகிறான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித்தனி உருவத்தையுடையது போலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால் ஓசை சிறிது நேரம்வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாததுபோலத் தோன்றுகிறது. மணியின் ஓசையைப்போலக் கடவுள் உருவனுள்ளவனாயும் உருவமில்லாதவனாயும் இருக்கிறான்.

---------------------------------------------------------------------------------------------

||12.5|| நிர்குண-தியானம் கடினம்:

क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम्

अव्यक्ता हि गतिर्दु:खं देहवद्भिरवाप्यते ।। ।।

க்லேசோ1ऽதி4கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்

அவ்யக்தா ஹி 3திர்து3:2ம் தே3ஹவத்3பி4ரவாப்யதே ।। 5 ।।


अव्यक्त आसक्त चेतसाम्  அவ்யக்த ஆஸக்த சேதஸாம்  நிர்குண ப்ரம்மத்தில் சித்தத்தை வைத்த   तेषाम्  தேஷாம்  அவர்களுக்கு    क्लेश:  க்லேச1:  கடினமானது    अधिकतर:  அதி4கதர:  மிக அதிக   हि  ஹி  ஏனென்றால்     देहवद्भि:  தே3ஹவத்3பி4:  தேகத்தில் அபிமானமுடையவர்களால்   

अव्यक्ता गति:  அவ்யக்தா 3தி:  நிர்குண ப்ரம்ம நிஷ்டை     र्दु:खं  து3:2ம்  கஷ்டப்பட்டு    

अवाप्यते  அவாப்யதே  அடையப்படுகிறது.


நிர்குண ப்ரம்மத்தில் சித்தம் வைப்பவர்களுக்கு கடினங்கள் மிக அதிகம். ஏனென்றால் தேகத்தில் அபிமானம் உடையவர்களுக்கு நிர்குண ப்ரம்ம நிஷ்டையடைதல் மிகவும் துன்பமானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆனால், ‘அவ்யக்தத்தில்மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர்அவ்யக்தநெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.


விளக்கம்:

நிர்குண-தியானம் மிகவும் கடினமானது என்பதை கிருஷ்ணர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். இது மறைமுகமாக ஞான யோகம் என்பது மிகவும் கடினமானது என்பதைக் குறிக்கிறது. ஏனெனில் நிர்குண-தியானம் என்பது ஞான யோகத்தின் ஒரு பகுதி மட்டுமே. சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது ஞான யோகம். இதில் நிதித்யாசனம் என்பது நிர்குண-தியானம் எனப்படும்


=> நிர்குண-பக்தி கடினமானது:

கர்மத்தைக் காட்டிலும் சகுண-பக்தி கடினமானது. சகுண-பக்தியைக் காட்டிலும் நிர்குண-பக்தி இன்னும் அதிக கடினமானது. தேவையான தகுதியுடன்தான் இந்த படிநிலைக்கு வரமுடியும். சரியான தகுதிகள் இல்லையெனில் அது மிகவும் கடினமானதாக, துக்கத்தை அளிக்கக் கூடியதாக ஆகிறது. இதற்கான அதிகாரித்துவத்தை அடைய அதிக முயற்சி தேவைப்படுகிறது. ஏனெனில்,

   (1) விஷயஸ்ய சூக்ஷமத்வாத்(विषयस्य सूक्ष्मत्वात्) — விஷயம் மிக மிக நுண்மையானது.

   (2) கரணஸ்ய ஸ்தூலத்வாத்(करणस्य स्तूलत्वात्) — இதை கிரஹிக்க பயன்படுத்தப்படும் கருவியாக இருக்கின்ற மனம், விஷயத்துடன் ஒப்பிடும்போது மிக ஸ்தூலமாக இருக்கின்றது.

   (3) ப்ரதிபந்தம்(प्रतिबन्ध) — தடைகள் அதிகமாக இருக்கின்றது.

இவைகள்தான் நாம் நிர்குண-பக்தி கடினமானதாக உணர காரணமாகிறது


=> அவ்யக்த-ப்ரம்ம-தியானம்:

வெளித்தோற்றத்திற்கு வராத, ஒரு பொருளாகக் கிரஹிக்க இயலாத அவ்யக்தமான இந்த தத்துவத்தில் சித்தத்தை வைத்தவர்கள்அவ்யக்த ஆஸக்த சேதஸாம்என்றழைக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் அடைய விரும்பும் முடிவு(3தி) என்பதும் வெளித்தோற்றத்திற்கு வராத நிர்குண-ப்ரம்மமாக இருக்கிறதுஅவ்யக்தா 3தி:. ஆத்ம சொரூபமான இதுவே அர்ஜுனனின் கேள்வியிலும் குறிப்பிடப்பட்டிருந்தது, அவ்யக்தம் பர்யுபாஸதே. ஆகையினால் இங்கு பகவான் கிருஷ்ணர், ‘அவ்யக்தம்எனும் அந்த வார்த்தையை உபயோகித்தே கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவ்யக்தம் எனும் இந்த இறுதி நிலையை அடைதல் என்பது மிகவும் கடினமானது.

அவர்களுக்கு இன்னும் அதிக கடினமானதுக்லேச1: அதி4கதர: தேஷாம். இன்னும் கடினமானது எனக் கூறப்படும்போது, ஏற்கனவே கடந்து வந்ததும் கடினம்தான் என்பது மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டு, இது அதையும்விட கடினமானது என்பதைக் குறிக்கிறது. எனில், முதலில் எது கடினமாக இருந்தது? கர்ம-யோகிகளின் சகுண-ப்ரம்ம தியானமும் கடினம் உடையதே. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் வலிமிகுந்த முயற்சி இதில் அடங்கும். ஒரு கர்ம-யோகியாக அவன் விரும்பும் விஷயங்களை எல்லா நேரத்திலும் செய்துவிட முடியாது. தனக்கு விருப்பமானது தர்மத்திற்கு எதிரானதாக இருக்கின்ற பட்சத்தில் அவன் அந்த விருப்பத்தை விட்டுக் கொடுத்தேயாக வேண்டும். இதனால் மனதுக்கு துன்பம்(க்லேச1) ஏற்படும். இத்தகைய மன உளைச்சல் உடல் உபாதைகளையும் உண்டாக்கும்.

  இனி, சகுண-ப்ரம்ம உபாசனையை மேற்கொள்ளும் கர்ம-யோகியை எடுத்துக் கொண்டால், தியானப் பொருளில் மனதை ஒருநிலைப்படுத்துவது என்பது கடினமான செயல்முறை ஆகும். முதலில் மனம் அங்கு நிற்காது; அதை அங்கு நிற்கவைப்பது க்லேச1. தோல்விகளின்போது தளராமல், மனோதிடத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்து மன ஒருமுகப்பாட்டை வலுப்படுத்துதல் என்பதும் கடினமானதே

இப்படி இருக்கையில் அடுத்த படிநிலையான நிர்குண-ப்ரம்ம தியானத்தில் இருப்பவர்களுக்கு கடினங்கள் இன்னும் அதிகமானதுக்லேச1: அதி4கதர:, என்கிறார். இங்கு பகவான் ஒப்பீடுகளில் அதிகபட்சத்தைக் குறிக்கின்றதரஎனும் பின்னொட்டைப் பயன்படுத்துகிறார்


=> இக்கடினத்திற்கான காரணம்:

தே3ஹவத்3பி4: து3:2ம் அவாப்யதே, தேகத்தின் மீது அபிமானம் உடையவர்களுக்கு இது பெரிய துன்பத்தைத் தருகிறது. இது அவர்களின் ஆத்ம-அனாத்ம-விவேகம் முழுமையடையாததைக் காட்டுகிறது. விவேகமில்லாத ஒருவனால் நிதித்யாசனத்தில் ஈடுபடமுடியாது. ‘தே3ஹவத்3எனில் தேகம் உடையவர்களுக்கு என்பது பொருள். ஆனால் அனைவருக்கும் தேகம் உள்ளதே; ஆகவே இது தேகத்தின் மீது அபிமானத்தை உடையவர்களைக் குறிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு அக்ஷர-ப்ரம்மத்தின் மீதான தியானம் கிட்டதட்ட சாத்தியமற்றது. இங்கு தியானம் என்பது சிரவண, மனனத்திற்கு பின் செய்கிற நிதித்யாசனத்தைக் குறிக்கிறது. எந்த அளவு சரீரப் பற்று ஒருவனுக்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவு இந்த ஞான-யோகப் பாதை கடினமாக மாறுகிறது. எனவே உடல்மீதான தனது அடையாளத்தை கைவிட வேண்டியிருப்பதால் இந்த படிநிலை மற்றதைக் காட்டிலும் மிக கடினமானது

=> உடல் அபிமானம்:

இது ஏன் கடினம்? உடலால் அடையாளப்படுத்தபட்டவர்களால் அடையப்பட வேண்டியதாக இருப்பதால் இது கடினம். இதிலிருந்து, இது இங்கே இப்போதே அடையப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஒருவன் இப்போதே ப்ரம்மமாகவே இருக்கிறான்; ஆனால் அவனது தேக அபிமானம், தனது அடையாளத்தை தவறான இடத்தில் வைத்ததன் விளைவு, இந்த ஜீவத்துவம் ஆகும். உண்மையில் இங்கு அடையப்பட வேண்டிய முடிவு என எதுவுமில்லை. எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைவது போன்ற எதையாவது சாதிக்க வேண்டுமெனில், அங்கு சரியான உபகரணங்களுடன் முயற்சியும் செயலும் தேவைப்படுகிறது. ஆனால் இங்கே, சுயமே ப்ரம்மம் என்பதால் அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. எதையாவது செய்து அடைய இங்கு எதுவுமில்லை. இது வெறுமனே தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று அவ்வளவே. ஆனால் இதில் சிரமம் எங்குள்ளதெனில், இந்த தேஹ-ஆத்ம-அபிமானத்தில், தன்னை இந்த ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ளது. இவ்வாறு உடலோடு தன்னை அடையாளப்படுத்தி, தன்னை ஒரு மனிதனாக அறிவதனால், உச்சபட்சமான அச்சத்தைக் கொடுக்கிற மரண பயத்தை அடைகிறான். ஆனால்நான் இந்த உடல் அல்ல, நான் ப்ரம்மமாக இருக்கிறேன்என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே, தேஹாபிமானம் இல்லாத போது மட்டுமே, மரண பயத்திலிருந்து ஒருவன் விடுவிக்கப்படுகிறான். ஞானயோகத்தினால் பெறப்படும் இந்த அறிவு அவனது அனைத்து சம்சாரங்களையும் நீக்கிவிடுகிறது.

மனம் எனும் கருவியின் மூலமாகப் பார்க்கப்படும் இந்த உலகம், ஒருவனுக்கு எவ்வளவு தூரம் தனது உடலில் அபிமானமுள்ளது என்பதை பொறுத்ததாக அமைகிறது. ஒரு கோணத்தில் சரீரத்தை ஐந்தாக பிரிக்கலாம்; அதற்கு பஞ்சகோஷம் என்று பெயர் என நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த பஞ்சகோஷத்தில் ஒருவன் எந்த நிலையில் அபிமானம் வைத்திருக்கிறான் என்பதை அவன் இவ்வுலகில் எதன்மீது அதிக ஆர்வத்துடன் இருக்கின்றான்; உலகை அவன் எதைப் பிரதானமாகக் கொண்டு பார்க்கின்றான் என்பதைக் கொண்டு அறியலாம். உதாரணமாக, ஆடை அலங்காரத்தில் ஆர்வமுள்ளவன் அன்னமய கோஷமான ஸ்தூல சரீரத்திலும், உணவு மீது பிரியமுள்ளவன் பிராணமய கோஷத்திலும் மற்றும் அமைதியான இடத்தை விரும்புபவன் மனோமய கோஷத்திலும் அபிமானமுடையவனாக இருக்கின்றான். நிர்குண-ப்ரம்ம என்பது அசரீரம்; சரீரமற்றது. அதை கிரஹிக்க தேஹ அபிமானத்தை துறந்திருந்தால்தான் முடியும். ஒரு கோஷத்திலிருக்கும் அபிமானத்தை துறந்து அடுத்த கோஷத்திற்கு செல்லுதல் என்பது மிக மிக கடினம். ஒவ்வொரு கோஷத்தின் மீதான அபிமானத்தை விடும் பயணமே ஆன்மீகம். எதை ஒருவன் தான் என கிரஹித்துள்ளானோ அதன் அடிப்படையில்தான் அவனது பக்தியுள்ளது.

தேஹாத்ம-புத்தியை விடுவதென்பது எளிதான விஷயம் அல்ல. அதற்கான தகுதிகள் படிப்படியாகத்தான் அடையப்பட வேண்டும். அதை பகவான் அடுத்தடுத்த சுலோகங்களில் பக்தியின் படிநிலைகளாக விளக்கிக் காட்டுகிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஞானயோகிநானேப்ரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான்.

---------------------------------------------------------------------------------------------