ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

பக்தி யோகம் 12.2 - 12.3

||12.2|| பகவானின் பதில்:

श्रीभगवानुवाच।

मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते

श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मता: ।। ।।

ஸ்ரீப43வாநுவாச 

மய்யாவேச்1 மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே  

ச்1ரத்34யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: ।। 2 ।।


श्रीभगवान् उवाच   ஸ்ரீப43வான் உவாச   ஶ்ரீ பகவான் சொன்னது

मयि  மயி  என்னிடத்து     मन: आवेश्य  மந: ஆவேச்1  மனதை வைத்து       

नित्ययुक्ता:  நித்யயுக்தா:  யோகத்தில் நிலைத்தவனாய்    

श्रद्धया परया  ச்1ரத்34யா பரயா  மேலான சிரத்தையுடன்    उपेता:  உபேதா:  கூடியவனாய்    

ये  யே  யார்   मां  மாம்  என்னை    उपासते  உபாஸதே  உபாசிக்கிறார்களோ     ते  தே  அவர்கள்    युक्ततमा:  யுக்ததமா:  யோகத்தில் மேம்பட்டவர்கள் என்று     

मे मता:  மே மதா:  என்னால் கருதப்படுகிறார்கள்.


ஶ்ரீ பகவான் சொன்னது: என்னிடத்து மனதை வைத்து யோகத்தில் நிலைத்தவராய், பெருஞ்சிரத்தையுடையவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.


விளக்கம்:

=> யோகத்தில் மேம்பட்டவர்கள்:

சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டதுபோல, பரமேஷ்வரனிடம் மனதை அர்ப்பணித்து வழிபடுபவர்கள் கர்மயோகிகள் ஆவர். ‘அவர்கள், அனைத்து யோகிகள் மற்றும் தேவதைகளின் தலைவரான, அனைத்தையும் அறிந்தவரான(ஸர்வஜ்ஞ), மற்றும் ராக-த்வேஷங்கள் முதலியவற்றால் யாருடைய கண்களானது குருடாக்கப்படவில்லையோ அந்த ஈஷ்வரனின் பக்தர்கள் ஆவர்என்கிறார் சங்கரர். விமுக்த-ராகா3தி3-க்லேஷ-திமிரத்ருஷ்டி என்கிறார். ‘திமிரத்ருஷ்டிஎனில் கண்புரையால் மறைக்கப்பட்ட கண்பார்வை. கண்களது குருட்டுத்தன்மையைப் போலல்லாமல், இந்த கண்புரையை அகற்றுவதன் மூலம் பார்வைக்குறையை சரிசெய்ய முடியும். பகவான் திமிரதிருஷ்டி இல்லாதவர் என இங்கு சங்கரரால் விவரிக்கப்படுகிறார். அவர் நம் அனைவரையும்போல அல்ல என்பதை மட்டும் சொல்லும் பொருட்டு இந்த விவரணையை உபயோகித்துள்ளார். ஐந்து வகையான துன்பங்கள் பேசப்படுகின்றது: (1) அவித்யா - அறியாமை; (2) அஸ்மிதா - அகங்காரம்; (3) ராக3 - விருப்பு; (4) த்3வேஷ - வெறுப்பு; (5) அபி4நிவேச1 - பற்று. பகவான் இந்த வகையான துன்பங்கள் அற்றவர் என இங்கு கூற விரும்புகிறார் சங்கரர். இப்படிப்பட்ட ஈஷ்வரனை உபாசகர்கள் தியானிக்கின்றனர், உபாஸதே.  

கர்மயோகிகள் என்பதால் அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் கூடியவர்களாய் தியானிக்கின்றனர் - பரயா ச்1ரத்34யா உபேதா:. சிரத்தை என்பது இங்கு சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கையைக் குறிக்கிறது. புரிந்துகொண்டாலும் புரியாவிட்டாலும் அவர்களின் அர்ப்பணிப்பு உறுதியானதாக இருக்கிறது. சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், புரியாத பட்சத்திலும் தயங்காமல் அதன் உண்மைத்தன்மையைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் காரணமாக சில சமயங்களில் சில விஷயங்கள் முழுமையாகப் புரியவில்லையெனினும், அவர்களது கர்மகளைச் சரியாக செய்ய முடிகிறது. விஷ்வரூபமாக இருக்கும் என்னிடத்தில் மனதை பொருந்தியவர்களாய், எப்பொழுதும் மாறாத பக்தியுடன் அனைத்து கர்மங்களையும் செய்தவர்களாய், அசைக்க முடியாத நம்பிக்கையுடன் என்னை உபாசிப்பவர்கள் யோகத்தில் மிக உயர்ந்தவர்கள் என்பது என் கருத்து, என்கிறார் பகவான். அவர்கள் மோக்ஷத்திற்கு அருகில் உள்ளனர்


=> பகவானது பதிலின் உள்ளர்த்தம்:

உண்மையில் சென்ற சுலோகத்தில் கேட்கப்பட்ட அர்ஜுனனின் கேள்வியே தவறானது. முற்றிலும் சுயாதீனமான இரண்டு தேர்வுகள் இருந்தால் மட்டுமே அதை நாம் வேறுபடுத்த முடியும். படிநிலைகளை ஒப்பிட்டு எது சிறந்தது எனக் கூற முடியாது. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய அதன் அனைத்து படிநிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து செல்ல வேண்டும். சிறந்தது என ஒன்றைத் தேர்ந்தெடுத்து நேரடியாக அதைப் பின்பற்றி விடமுடியாது. அந்த குறிப்பிட்ட நிலைக்கான தகுதியை அடைய உதவும் மற்ற படிகளைக் கடந்தவனாலேயே இலக்கை எட்ட முடியும்.

ஆகையினால் அவ்யக்தமான அக்ஷர ப்ரம்மத்தை வழிபடுபவர்கள் பகவானிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்றாலும்கூட, அர்ஜுனன் அவர்களைப் பின்பற்றுவதை பகவான் விரும்பவில்லை. எனவே, அர்ஜுனனுக்கு எது சிறந்ததோ அதை அவன் பின்பற்ற வேண்டுமென்ற நோக்குடன், இங்கு கர்மயோகிகளைத் தனக்கு அருகில் இருப்பவர்களாக பகவான் முன்வைக்கிறார். ஆகையினால் சகுண பக்தன் உயர்ந்தவன் என முதலில் கூறி, பின்னர் நிர்குண பக்தன் என்னை அடைகிறான் எனக் கூறுகிறார்.

  சரியான தகுதியை அடையும் வரை சகுண பக்தியை விடக்கூடாது. சகுண பக்தியிலேயே நின்றுவிடவும் கூடாது. அதனைச் சரியாகக் கையாண்டு அதன் பலனாக அடுத்தடுத்த படிகளுக்கு வரவேண்டும். பகவான் இங்கு நான்கு படிநிலைகளைக் கொண்ட சகுண பக்தி மற்றும் இறுதிப் படிநிலையான நிர்குண பக்தி என மொத்தம் ஐந்து படிநிலைகளை விவரிக்கிறார். இதில் நான்காவது படிநிலையாக விஷ்வரூப பக்தியைக் குறிப்பிடுகிறார்

ஷேக்ஸ்பியரின் அசல் நாடகங்கள் அல்லது குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஷேக்ஸ்பியரின் கதைகள் இரண்டில் எதைப் படிக்க வேண்டும் என்று பத்து வயது சிறுவன் கேட்கிறான் என வைத்துக் கொள்வோம். குழந்தைக்கு ஏற்றது என்பதால் குழந்தைகளுக்கான புத்தகத்தை தான் நாம் பரிந்துரைப்போம். சிறுவன் அதைப் படித்து புரிந்துகொண்டு ஏதாவது கற்றுக்கொள்வான். அதுவேதான் இங்கேயும் காரணமாக உள்ளது. தனக்கு எது சிறந்தது என அர்ஜுனன் கேட்பதே அவனுக்கு முதலில் கர்மயோகம் தேவைப்படுகிறது என்பதை குறிப்பதாக அமைகிறது. எனவே அவன் அதை பின்பற்ற வேண்டுமென்ற நோக்கில், அவனுக்குரிய பதிலாக உபாசனையுடன் கூடிய கர்ம-யோகிகளே சிறந்தவர்கள்(யுக்ததமா:) என்கிறார் பகவான். எனில் நிர்குண பக்தர்கள் குறித்த பகவானின் கருத்து என்ன? என்பது அடுத்த சுலோகத்தில் வருகிறது.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கடவுளை அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை. மற்றாக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே. அவனைரூபிஎனத் தியானிப்பதும் சரியானதே. ஆனால் அவனை நீ காணும் வரையில் உனது பிரத்தியேகமான கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||12.3|| நிர்குண ப்ரம்ம சொரூபம்:

ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते।

सर्वत्रगमचिन्त्यं कूटस्थमचलं ध्रुवम् ।। ।।

யே த்வக்ஷரமநிர்தே3ச்1யமவ்யக்தம் பர்யுபாஸதே

ஸர்வத்ரக3மசிந்த்யம் கூடஸ்த2மசலம் த்4ருவம் ।। 3 ।।


तु  து  ஆனால்    ये  யே  யார்    अक्षरम्  அக்ஷரம்  அழியாததும்    

अनिर्देश्यम्  அநிர்தே3ச்1யம்  சொல்லால் விளக்கமுடியாததும்    

अव्यक्तं  அவ்யக்தம்  தோற்றத்திற்கு அப்பாற்பட்டதும்     

सर्वत्रगम्   ஸர்வத்ரக3ம்  எங்கும் வியாபித்தும்    अचिन्त्यं   அசிந்த்யம்   சிந்தைக்கெட்டாததும்     

कूटस्थम्  கூடஸ்த2ம்  மாறாததும்     अचलं  அசலம்  நகராததும்    

ध्रुवम्  த்4ருவம்  நிலைத்ததும்(ஆகிய ப்ரம்மத்தை)   पर्युपासते  பர்யுபாஸதே  உபாசிக்கிறார்களோ         


ஆனால் யார் அழிவற்றதும், சொல்லுக்கடங்காததும், தோற்றத்திற்கு அப்பாற்பட்டதும், மனதுக்கெட்டாததும், எங்கும் நிறைந்ததும், மாறாததும், நகராததும், நிலைத்ததும், அழியாததும் ஆகிய ப்ரம்மத்தை நன்கு உபாசிக்கிறார்களோ, …


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ


விளக்கம்:

சுலோகம் மூன்று மற்றும் நான்கில், பகவான் நிர்குண ப்ரம்மத்தை உபாசிப்பவர்கள், அதாவது நிர்குண-பக்தர்கள் தன்னையே வந்தடைவதாகக் கூறுகிறார்.


=> யார் நிர்குண-பக்தர்கள்?

சாதன சதுஷ்டய சம்பத்தியுடன் கூடியவர்கள், வேதாந்தத்தைக் கேட்டால் புரிந்து கொள்ளும் தகுதியுடையவரகள், இறுதி இலக்கை(ஸாத்4) நிச்சயம் செய்த முமுக்ஷுக்கள் நிர்குண பக்தர்கள் ஆவர். இவர்கள் சாத்யத்தை அறிந்த பின் அதற்குண்டான சாதனத்தை அடைய விருப்பம் கொள்கிறார்கள் - ஞாதும் இச்சு:(ज्ञातुम् इच्छु:). இங்கு சாத்யம்ப்ரம்மஎன்பதால், ப்ரம்மத்தை அடைதல் என்பது உண்மையில் ப்ரம்மத்தைப் பற்றிய அறிவை அடைதலைக் குறிக்கின்றது. எனவே ப்ரம்ம-ஞானத்தை அடைய ஆசைப்படுகிறார்கள். இவர்களே ஜிக்ஞாசுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்

இந்த ஜிக்ஞாசுக்கள், ஞானத்தைக் கொடுக்கும் கருவி(ப்ரமாணம்) வேதாந்தம் என்பதை அறிந்து, குருவை நாடிச் சென்று சிரவணத்தில் ஈடுபடுகிறார்கள். பின்னர் மநநத்தின் மூலம் சந்தேகத்தை கலைந்து, நிதித்யாசனத்தின் மூலம் ப்ரம்மத்தில் நிலை கொள்கிறார்கள். எனவே சிரவண, மநந மற்றும் நிதித்யாசனத்தில் உள்ளவன் நிர்குண பக்தன் ஆகின்றான்.

=> பகவானது பதிலின் நுண்மை:

அர்ஜுனனது கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பகவான் மிகவும் சாமர்த்தியமாகப் பதிலளிக்கிறார். சந்யாசம் என்பது ஒருவனின் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய விஷயம் அல்ல; அது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதை கூறும்விதமாக சொல்லாடுகிறார். ப்ரம்மத்தை நாடுபவர்கள் என்னையே வந்தடைகிறார்கள். அவர்கள் நானே ஏனெனில் அக்ஷரமும் நான், அவ்யக்தமும் நான், அநிர்தேச்யமும் நான். இந்த வார்த்தைகளின் பொருளை அவர்கள் கண்டுபிடிக்கின்ற போது நான் அவர்களிடமிருந்து வேறானவன் அல்ல என்பதையும் கண்டறிகிறார்கள்

மோக்ஷத்தின் பொருட்டு சகுண-ப்ரம்மத்தை உபாசிக்கும் கர்ம-யோகிகள் அல்லது நிர்குண-பரப்ரம்மத்தை பின்தொடரும் சந்யாசிகள் இவர்களில் யார் சிறந்தவர்கள்? யார் மோக்ஷத்திற்கு அருகிலிருப்பவர்கள்? என்பது அர்ஜுனனின் கேள்வியாக இருந்தது. சகுண-ப்ரம்ம தியானம் செய்கிற கர்ம-யோகிகள் சிறந்தவர்கள்(யோகவித்தமா:) என சென்ற சுலோகத்தில் பகவான் கூறினார். அதே நேரத்தில், சந்யாசிகளை இவ்விதம் ஒப்பிட முடியாது என்பதை இங்கு காட்டுகிறார். அக்ஷர-ப்ரம்ம-உபாசனை செய்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல; மற்றவர்கள் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றை இவர்கள் சாதித்துவிட்டனர்

கர்மத்தில் ஈடுபடுபவர்களை பலவகையாகப் பிரிக்கலாம். சிலர் கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களாக நாஸ்திகர்களாக உள்ளனர். அவர்களும் கர்மம் செய்கின்றனர். அவர்களில் நெறிமுறைகளுக்கு கட்டுபடாத நாஸ்திகர்களைக் காட்டிலும் நெறிமுறைகளுடன் கூடிய நாஸ்திகர்கள் சிறந்தவர்கள் எனலாம். அடுத்ததாக இறை நம்பிக்கையுடைய ஆஸ்திகர்களும் செயல்களைச் செய்கிறார்கள். இறை நம்பிக்கைக்கு ஒரு குறிப்பிட்டவளவு முதிர்ச்சி தேவைப்படுவதால், நாஸ்திகர்களைக் காட்டிலும் ஆஸ்திகர்கள் சிறந்தவர்கள் ஆகிறார்கள். இனி ஆஸ்திகர்களில், துன்பத்தின்போது மட்டும் அதை நீக்கக் கோரி கடவுளிடம் செல்லும் ஆஸ்திகர்களை விட, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பொருட்டு அதை அடையவேண்டி இறைவனை பிரார்த்திக்கும் ஆஸ்திகர்கள் மேலானவர்கள் எனலாம். இனி இவர்களைக் காட்டிலும் மோக்ஷத்தை விரும்பும் கர்ம-யோகிகள் சிறந்தவர்கள் எனலாம். இப்போது இந்த கர்ம-யோகிகளுள், கர்ம-யோக வாழ்க்கையுடன் சகுண-ப்ரம்ம உபாசனையை மேற்கொள்ளும் உபாசகர்கள் மிகவும் சிறந்தவர்கள்(யோகவித்தமா:) ஆகிறார்கள். இதுவே கிருஷ்ணர் அளித்த பதிலின் உட்பொருள் ஆகும். அதாவது, நிர்குண-ப்ரம்மத்தை நிதித்யாசனம் செய்யும் ஞானி இத்தகைய ஒப்பீடுகளில் அடங்கப்பெறாதவன்.

பகவான் சந்யாசிகளை ஞானி என்றே எடுத்துக் கொள்கிறார். இந்த சுலோகத்தில் பயன்படுத்தப்படும்துஎனும் சொல், மற்ற அனைவரிடமிருந்தும் நிர்குண-ப்ரம்ம உபாசகர்களை அல்லது நிதித்யாசகர்களை(பர்யுபாஸதே) வேறுபடுத்திக் காட்டுகிறது


=> நிர்குண-ப்ரம்மம் எத்தகையது?

* அவ்யக்தம் - தோற்றத்திற்கு அப்பாற்பட்டது. உலகமோ தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாக வெளித்தோற்றத்திற்கு வராததாகவும் உலகம் இருக்கிறது. ஆனால் பரப்ரம்மத்திடம் இத்தகைய மாறுதல்கள் ஒன்றும் கிடையாது. அது அதீதத்தில், அனைத்தையும் கடந்த மேலான நிலையில் இருந்தபடி இருக்கிறது. ஆதலால் அது அவ்யக்தம். மேலும் இந்திரியங்களினால் அறிய முடியாதது அவ்யக்தம் ஆகிறது. அகரண கோ3சரம் (अकरण गोचरम्) என்கிறார் சங்கரர். ஒரு பொருளாக இதை புலன்களால் அறியமுடியாது என்பது பொருள். எனில் ப்ரம்ம அறியப்பட முடியாததா? எனில் இல்லை. ஒரு பொருள் என்பது நம்மிடமிருந்து வேறானது; எனவே அதை புலனுறுப்புகளின் துணைக் கொண்டு அறிந்து கொள்கிறோம். ஆனால் தன்னிலிருந்து வேறாக இல்லாதநான்என்பது ஒரு பொருள் அல்ல. அந்த ஆத்மாவான ப்ரம்ம அவ்யக்தம்.


* அக்ஷரம்அழியாதது; மாறாதது. இது ஒருபோதும் மாற்றத்திற்கு உட்பட்டது அல்ல. அர்ஜுனன் தனது கேள்வியில் பயன்படுத்திய அதே வார்த்தைகளை பகவான் இங்கு மீண்டும் கூறுகிறார், அக்ஷரம் மற்றும் அவ்யக்தம்


       *  அநிர்தே3ச்1யம்சொல்லால் விளக்கமுடியாதது. சப்தத்தினால் சுட்டிக்காட்டப்படுவதுநிர்தே3ச்1யம்ஆகும். சப்தத்தினால் விளக்கப்படமுடியாதது - 1ப்த அகோ3சரம் (शब्द अगोचरम्), அநிர்தே3ச்1யம் எனப்படுகிறது. ஏதேனுமொரு குணமிருந்தால் தான் அதைக் கொண்டு சுட்டிக் காட்ட முடியும். ப்ரம்ம நிர்குணமானது

ப்ரம்ம சப்தத்தினால் விளக்க முடியாது எனக் கூறப்படுகிறது. ஆனால் நாம் சப்த-பிரமாணமான சாஸ்திரத்தின் துணைக் கொண்டு ப்ரம்மத்தை அறிகிறோம் என்றுதானே கூறுகிறோம் என்கிற சந்தேகம் எழலாம். உண்மையில் ப்ரம்மமானது சாஸ்திரத்தின் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது என்றாலும்கூட, அது நேரடி அர்த்தமாக இல்லாமல் மறைமுகப் பொருளாகவே விளக்கப்படுகிறது. மறைமுகமான பொருள் எனச் சொன்னவுடன், அது நேரடியாகத் தெரியாமல் மறைமுகமாக மட்டுமே இருக்க முடியும் என்று ஒருவன் நினைக்கலாம். ஆனால் ஒரு சொல்லின் மறைமுகமான பொருளும்கூட நேரடியான அறிவை அளிக்கும். உதாரணமாகவெள்ளை ஓடுகிறதுஎன்ற வாக்கியத்தை ஒருவன் கூறும்போது, குதிரை லாயத்தில் நின்று அதைக் கேட்கும் ஒருவன் வெள்ளைக் குதிரை ஓடுகிறது எனப் புரிந்து கொள்கிறான். அந்த குறிப்பிட்ட சூழலில் வெள்ளை என்பது வெள்ளைக் குதிரையைக் குறிக்கிறது. இவ்விதமாக மறைமுகமாகச் சொல்லப்படுவதும் நேரடி அறிவைக் கொடுக்கும். எனவேஅநிர்தே3ச்1யம்எனக் கூறப்படுவதை, ‘அது ஒரு வார்த்தையின் நேரடி அர்த்தமாக(சப்த-வாச்ய) அல்லாமல், அவ்வார்த்தையின் மறைமுகமான பொருளாக(சப்த-லக்ஷ்ய) புரிந்து கொள்ளப்படுவது ஆகிறதுஎனக் கொள்ளலாம்


* ஸர்வத்ரக3ம்எல்லா இடத்திற்கும் செல்வதுஸர்வத்ர 3ச்சதி இதி ஸர்வத்ரக3ம். எங்கும் வியாபித்து இருப்பது என்பது இதன் பொருள்; அங்கு இங்கு என்று சொல்ல இடந்தராது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள். இடமே அதனுள் ஒடுங்கியுள்ளது எனலாம். ஆகாசத்தைப் போல எங்கும் வியாபித்திருப்பதாக சங்கரர் கூறுகிறார்வ்யோமவத் வ்யாபி. உண்மையில், இந்த சிருஷ்டியிலுள்ள அனைத்தும் ஆகாசத்தினால் வியாபிக்கப்பட்டுள்ளது என்றாலும் தூய பிரக்ஞையை அது வியாபிப்பதில்லை. ஆத்மாவாக விளங்கும் இந்த தூய சைத்தன்ய-அறிவில்தான் ஆகாசமே உள்ளது. ஆத்மாவே ப்ரம்மம். எவ்விதம் உபாதான-காரணமான களிமண், காரியமான பானை முழுவதையும் வியாபித்துள்ளதோ அவ்விதம் மூலக்காரணமான ப்ரம்மம், இடம் மற்றும் காலம் உட்பட காரியமான இந்த முழு படைப்பையும் வியாபித்துள்ளது.    


* அசிந்த்யம் சிந்தனைக்கு எட்டாதது. எல்லாப் பொருட்களின் இருப்பும் ப்ரம்மத்திடமிருந்து வருவதால், ப்ரம்மத்தை ஒரு பொருளாகப் பார்க்க முடியாது; அனைத்து எண்ணங்களின் ஆதாரமாக ப்ரம்ம விளங்குவதால், ப்ரம்மத்தை ஒரு எண்ணத்தின் துணைக் கொண்டு அறிய முடியாது. இன்பம், துன்பம், பொய், அன்பு, வெறுப்பு முதலியவைகளை புலனுறுப்புகளால் நேரடியாகப் பார்க்க முடியவில்லையெனினும் மனதானது அதை எண்ணவும் உணரவும் செய்யும். ஆனால் அம்மனது ப்ரம்மத்தை உணரவல்லதன்றுஅந்தகரண அகோச3ரம்

ப்ரம்மத்தை புலனுறுப்புகளாலோ அல்லது மனதினாலோ அறியமுடியாது எனில் எப்படி ஒருவன் ப்ரம்மத்தை அறிந்து கொள்வது? அறியப்படும் எந்தவொன்றும் எண்ணவடிவில் உள்ளது. நான் பானையை அறிகிறேன் என்பது உண்மையில் நான் பானை எண்ணத்தை அறிகிறேன் என்பதே ஆகும். ஒரு பொருளானது எண்ணமாகவில்லையெனில் எந்தவொரு அறிவும் சாத்தியமில்லை. ப்ரம்மத்தைப் பற்றிய அறிவு முக்தி தரும், ஆனால் ப்ரம்மத்தை அறிய முடியாது எனில், அந்த அறிவை ஒருவன் எவ்வாறு தொடர முடியும்? பின் அவன் எதற்காக வேதாந்தம் பயில வேண்டும்?

அசிந்த்யம்எனில்அது சிந்தனைக்குரிய பொருள் அல்லஎன்பதைச் சரியான விதத்தில் புரிந்துகொள்வது அவசியம். ப்ரம்மம் என்பது ஆத்மாவாக, ஒருவனின் சுயமாகவே இருப்பதால், அதுவே எண்ணம் ஏற்பட காரணமான சொரூபமாக ஆகிறது. ‘நான்என்பது சிந்தித்து அறியப்பட வேண்டிய ஒரு பொருள் அல்ல; அது சுயமாக பிரகாசித்துக் கொண்டிருப்பது. சுயத்தை அறிய எந்தவொரு கருவியும் தேவையில்லை. ‘நான்என்பதைப் பற்றிய தவறான புரிதலை நீக்குவது மட்டுமே செய்யப்பட வேண்டியது. வேறொன்று தவறாக ஆத்மாவாக பார்க்கப்படுகிறது; அது நீக்கப்படும்போது ஆத்மா தானாகவே விளங்குகிறது. அது எண்ணத்திற்குரிய ஒரு பொருளாக அறியப்படுவதில்லை

ஆனால்நான் ப்ரம்மமாக இருக்கிறேன் - அஹம் ப்ரம்மாஸ்மிஎன்கிற ஒரு குறிப்பிட்ட எண்ணம்(வ்ருத்தி) இந்த அறிவை உருவாக்குகிறது. இது ஆத்மாவின் வடிவத்தையே எடுத்துக் கொள்வதால் இங்கு எழுவாய்-செயப்படுபொருள் எனும் சம்பந்தம் இல்லாமல் போகிறது. எந்தவொரு அறிவிலும், அறிபவன்(எழுவாய்) மற்றும் அறியப்படும் பொருள்(செயப்படுபொருள்) என்கிற பிரிவு உள்ளது. ஆனால் இந்த வ்ருத்தியில் அந்த பிரிவு இல்லை. இங்கு அறியப்படும் பொருள் என்பது செயப்படுபொருள் அல்ல; அது அறிபவனாகவே உள்ளது. ஆனால் அறிபவனைப் பற்றிய அறியாமையை அகற்ற இந்த வ்ருத்தி அவசியம். இந்த வ்ருத்தி சாஸ்திரத்தின் உதவியுடன் உருவாகிறது. எனவே மனதில் உண்டாகும் இந்த வ்ருத்தியானது ஆத்மாவைப் பற்றிய அறியாமையை நீக்கி மோக்ஷத்தை அளிப்பதால் ஆத்ம-ஞானத்திற்கான பிரமாணமாக வேதாந்தம் விளங்குகிறது.  


* கூடஸ்த2ம்மாறாதது. இதற்கு இரு வகையான பொருள்விளக்கம் சாத்தியம்.

1. சங்கரர் இச்சொல்லுக்கு பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிற ஒரு பொருளைக் கொடுக்கிறார். உள்ளே தோஷத்தை வைத்துக் கொண்டு, வெளியில் நன்றாக இருப்பதைப் போல காட்டிக் கொள்வதுகூட(कूट)’ எனப்படும். வெளிப்புறத்தில் கவர்ச்சிகரமாகத் தோன்றினாலும், நன்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை அதை பொய்யாக்கிவிடும். இங்குகூட:என்பது உலகைக் குறிக்கிறது. உண்மையில் இருப்பு(ஸத்தா) இல்லாத இவ்வுலகம், அது உண்மையிலேயே இருப்பதை போல காட்டிக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட இந்த பொய்யான உலகிற்கு அதிஷ்டானமாக விளங்குவது ப்ரம்ம என்பதால் அதுகூடஸ்த2ம்’ — கூடே ஜகதி அதிஷ்டானதயா திஷ்டதி.

2. இனியொரு பொருள், கூடே திஷ்டதி இதி கூடஸ்த2ம். இங்குகூட(कूट)’ எனும் சொல் மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. மாயை அல்லது பிரபஞ்சம் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. மாறுபடும் இந்த பிரபஞ்சத்திற்கு ப்ரம்ம இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால் இதற்கு கூடஸ்தன் என்று பெயர். கொல்லன் சூடாக்கப்பட்ட இரும்புத் துண்டுகளை வெவ்வேறு வடிவங்களுக்கு மாற்றும்போதும் அடித்தளத்தில் ஆதாரமாக விளங்கும் இரும்புத்தொகுதி அப்படியே இருக்கிறது. சுத்தியலின் அவ்வளவு அடியிலும் இது தெரியும்படி மாறாமல், அனைத்து மாற்றங்களையும் தன்மீது நடக்க அனுமதிக்கிறது. அதுபோல இந்த கூடஸ்த-ஆத்மா தான் மாறாமல் அனைத்து மாற்றத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது


* அசலம்நகராதது; அசையாதது, சலதி இதி அசல:. அது உருவமற்றது ஆகையினால் நகராதது. ப்ரம்மத்திற்கு வேறான இடம் என எதுவுமில்லாததால் அது செல்ல இடமேதுமில்லை. எனவே ப்ரம்மத்தில் சலனம் இல்லை


* த்4ருவம்நிலைத்தது. இது மாறாதது, கூடஸ்தன் எனப் பார்த்தோம். எனில் இயற்கையாகவே இது மாறாத நித்தியத் தன்மையுடன் இருக்கவேண்டும். சுத்த-சைத்தன்யமாகிய அது கால தேச வர்த்தமானத்தால் அடிபடாதிருப்பதால் அது அழியாததாக(அக்ஷரம்), நிலைபேறு உடையதாக இருக்கிறது. பூமி, ஆறு போன்றவைகளை மாறுகின்ற நித்யம் எனலாம்; ஆனால் ப்ரம்ம கூடஸ்த நித்யம்.

இப்படிப்பட்டதான நிர்குண ப்ரம்மத்தை உபாசிக்கத் தகுதியுடையவர்கள் யார், அவர்கள் அடையும் பலன் என்ன என்பதை அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------