பன்னிரெண்டாம் அத்தியாயம்
பக்தி யோகம்
[भक्तियोग:]
முகவுரை:
=> பக்தி என்பது பாவனையா அல்லது செயலா?
பன்னிரண்டாவது அத்தியாயத்தின் முக்கியத் தலைப்பு பக்தி ஆகும். இதில்,
(1) பக்தியின் விளக்கம் மற்றும்
(2) பரா-பக்தனின் இலக்கணங்கள் விளக்கப்படுகின்றன.
பொதுவாக பக்தி என்பது ஒரு செயல் அல்ல; அது ஒரு பாவனை எனலாம். பக்தி(भक्ति) என்பது சேவை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ப4ஜ்(भज्) என்ற வினையடியிலிருந்து வருகிறது. இச்சொல் சாஸ்திரத்தில் வினைச்சொல்லாகவும் [மாம் ப4ஜஸ்வ], பெயர்ச்சொல்லாகவும் [பக்த:] பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது பக்தியை ஒருவன் எவ்விதம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொருத்து பக்தன் வரையறுக்கப்படுகிறான். எனவே பக்தி என்பது பாவனையா அல்லது செயலா எனில், எந்தவொரு பாவனையும் செயலாகத் தான் வெளிப்படும். நாம் ஒருவர் மீது கொண்டுள்ள மரியாதையை நாம் அவரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் வெளிப்படுத்த முடியும். அவ்விதம் தர்ம வடிவில் இருக்கும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல் பக்தி எனப்படும்.
=> பக்தர்களின் வகைகள்:
ஏழாம் அத்தியாயத்தில் பகவான் பக்தர்களை நான்காகப் பிரித்து விளக்கியுள்ளார். அதனடிப்படையில், இங்கு பக்தர்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
(1) ஷகாம பக்தன்: ஆசையுடன் கூடிய பக்தன் — காமேந ஸ: வர்ததே[कामेन स: वर्तते]. பகவானைத் தவிர, மற்ற விஷயங்களை விரும்புபவன் ஷகாம பக்தன் ஆகிறான். செல்வம், சுகம், போகம் வேண்டும் என்றும் துயரத்திலிருப்பவன் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கிறான். இவர்களை ‘ஆர்த’ மற்றும் ‘அர்த்தார்த்தீ’ என பகவான் குறிப்பிட்டார்.
(2) நிஷ்காம பக்தன்: ஈஷ்வரனை அடையத் தடையாக இருக்கின்ற கஷ்டம் நீங்க வேண்டும்; ஈஷ்வரனை அடையத் தேவையான காலத்தை சம்பாதித்துக் கொடுக்கும் பொருள் வேண்டும்; இறைவனை அடையத் தேவையான தகுதிகள்(அதிகாரித்வம்) வேண்டும் என இவனும் இறைவனைக் கேட்கலாம். ஆனால் அதில் இறைவனே பிரதானமாக இருக்கின்றார். இவன் ஜிக்ஞாஸு எனப்படுகிறான். ஞான வைராக்3ய சித்3த்4யர்த2ம் — பெரும்பாலும் ஒரு ஜிக்ஞாஸு வைராக்கியம், ஞானத்திற்கான அதிகாரித்துவமாக இருக்கின்ற மனத்தூய்மை மற்றும் ஞானம் இவைகளையே இறைவனிடம் வேண்டுகிறான். வேறு ஆசை வேண்டாம் - அந்ய காம: அபா4வ:[अन्य काम: अभाव:]. சாஸ்திரம் மற்றும் குருவின் துணையுடன் ஜிக்ஞாஸு பக்தி செய்யும்போது, அதாவது சிரவண, மநந, நிதித்யாசனத்தில் ஈடுபடும்போது அவன் ஞானி பக்தனாகிறான். அநந்ய பக்தனனான ஞானியும் நிஷ்காம பக்தன் என்றே அழைக்கப்படுகிறான்.
வேறொரு கோணத்திலும் பக்தர்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
(1) சகுண பக்தன்: மாயையுடன் கூடிய ஈஷ்வரனை வழிபடுபவன்.
(2) நிர்குண பக்தன்: குணங்களற்ற பரம்பொருளை வழிபடுபவன்.
இந்த இரு வகையையும் பகவான் இந்த அத்தியாயத்தின் முதல் ஐந்து சுலோகங்களில் விளக்க இருக்கிறார்.
=> பக்தியின் இலக்கணம்:
பக்தி என்கிற சொல்லானது பல படிகளில் உள்ள சாதனங்களைக் குறிப்பதால், அதை இன்னதென்று ஒரு இலக்கணத்தின்கீழ் வரையறுத்தல் இயலாது. உதாரணமாக, தவம் எனும் சாதனத்தை எடுத்துக் கொண்டால் அதன் பொதுவான(சாமான்ய) லக்ஷணம், ‘விரும்பி துயரத்தை எடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். துயரம் மனதை பக்குவப்படுத்தும் ஆதலால் இது செய்யப்படுகிறது. தவத்தின் விஷேச லக்ஷணம் என்பது அந்தந்த குறிப்பிட்ட தவங்களைக் குறிக்கும் வகையில் விரதம் அல்லது தியானம் அல்லது ஜபத்தைக் குறிக்கிறது. பொதுவாக, சாமான்ய லக்ஷணமானது விஷேச லக்ஷணத்தில் ஊடுருவி இருக்கும். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு இனி பக்தியின் சாமான்ய மற்றும் விஷேச லக்ஷணத்தை சிறிது விசாரம் செய்யலாம்.
-> பக்தியின் பொதுவான இலக்கணம்(சாமான்ய லக்ஷணம்):
1. ஈஷ்வரனிடமிருக்கும் அன்பு
2. ஈஷ்வரன் இருக்கின்றார் என்கிற நம்பிக்கை
3. வேறு இடத்தில் சரணமடையாத நிலை
4. ஈஷ்வரனிடம் வைக்கின்ற சிரத்தை
-> பக்தியின் விஷேச லக்ஷணம்:
இந்த அத்தியாயத்தில் பகவான் பக்தியின் விஷேச லக்ஷணங்களை ஐந்து படிநிலைகளாகக் கூறுகிறார். ஒவ்வொரு படிநிலைக்கான இலக்கணங்களை நாம் அங்கு விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக, அன்பை அளக்கும் அளவுகோலாகத் தியாகம் திகழ்கிறது. நாம் விரும்பும் ஒருவருக்காக நமது இந்திரிய சுகங்களை எவ்வளவு தியாகம் செய்கின்றோமோ அவ்வளவு அந்த நபர் நமக்கு பிரியமானவராக இருக்கிறார். உதாரணமாக ஒரு தாய் தனது குழந்தைக்காகச் செய்யும் தியாகங்கள் அளப்பரியவை. இங்கு பக்தியிலும் அதே அளவுகோல்தான் பயன்படுத்தப்படுகிறது. ஈஷ்வரனுக்காகவென ஒருவன் தனது புலனின்பங்களை எந்த அளவு தியாகம் செய்கின்றான் என்பதைப் பொறுத்து அவன் ஐந்து படிநிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கின்றான்.
=> பக்தி செலுத்துவதன் நன்மைகள்:
(1) மனோபலம்: ஈஷ்வரனை லக்ஷியமாகக் கொண்ட ஒருவனுக்கு அவன் மனதிலுள்ள வாசனைகளை, அழுக்குகளை நீக்கி மனத்தூய்மையை அதிகரிப்பது இன்றியமையாதது. அப்படிப்பட்ட சாதகனுக்கு ஒவ்வொரு படியிலும் தோல்வி நேரும். தோல்வியால் ஏற்படும் மனச்சோர்வை நீக்க, பக்தி தேவை. எல்லா குறையையும் தன்மீது ஏற்றுக் கொள்வது சாதகனுக்கு இருக்கவேண்டிய முதல் மனப்பான்மை ஆகும். அதாவது, ஒரு சூழ்நிலையோ அல்லது ஒரு சொல்லோ தன்னை துயரப்படுத்தினால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியது நான்தான் என்று அதை அவன் தன்மீது ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். என் துயரத்திற்கு என் மனதைத் தவிர வேறு எதுவும் காரணமல்ல. இவ்விதமாக சிந்தனையின் ஓட்டத்தை மாற்றும்போது தோல்வியும் மனச்சோர்வும் வருகிறது. அதிலிருந்து விடுபட பக்தி பெருந்துணை நிற்கிறது.
(2) யாரொருவனுக்கு தாயின், தந்தையின் மற்றும் குருவின் அன்பு கிடைத்துள்ளதோ அவன்தான் இந்த பர தத்துவத்தை அறியும் பக்குவம் கொண்டவன் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இதில் எந்தவொரு அன்பு இழக்கப்பட்டுள்ளதோ அது பக்தியின் மூலம் அடையப்படுகிறது — மாத்ருமாந் பித்ருமாந் ஆசார்யவாந் வேத[मातृमान् पितृमान् आचार्यवान् वेद]. தாயாக, தந்தையாக, குருவாக பகவானை வழிபடுவதால் ஒருவனது உணர்ச்சி ரீதியான ஆளுமை மேம்படுகிறது.
(3) ஸத்கு3ண வர்த3ந ஹேது:[सत्गुण वर्दन हेतु:] — நற்பண்புகள் வளர்வதற்கான காரணமாக இறைவனிடம் காட்டும் பக்தி அமைகிறது.
(4) தவறான குணத்திலிருந்து விலக பக்தி பயன்படுகிறது — து3ர்கு3ண வர்ஜந ஹேது:[दुर्गुण वर्जन हेतु:]. இறைவன்மீது செலுத்தும் பக்தியானது அதர்மத்தின் மீது பயத்தை உண்டுபண்ணும். இதனால் ஒருவன் அதர்ம காரியங்களைச் செய்வதிலிருந்து விலகுகிறான்.
(5) பக்தியின் வெளிப்பாடு என்பது மூன்று நிலைகளில் செயலாக வெளிப்படுகிறது. பூஜை முதலிய உடலினால் வெளிப்படும் செயல்(காயிகம்), கீர்த்தனை மற்றும் மந்திர உச்சாடனம் முதலிய வாக்கினால் செய்யும் செயல்(வாசிகம்), ஜபம் முதலிய மனதினால் செய்யப்படும் செயல்(மானஸம்). இந்த ஒவ்வொரு செயலும் புண்ணியம் என்கிற பலனைக் கொடுக்கும்.
இரண்டு வகையான பிராரப்தம்(கர்மவினை) பேசப்படுகிறது.
(i) ப்ரப3ல ப்ராரப்3த4ம் - இந்த கர்மவினையை மாற்றமுடியாது.
(ii) துர்ப3ல ப்ராரப்3த4ம் - இந்த கர்மவினையை பிராயசித்த கர்மங்களினால் மாற்ற முடியும்.
பக்தி-கர்மங்களிலிருந்து உண்டாகும் புண்ணியம், துர்பல பிராரப்தத்தை நீங்குகிறது. மேலும் பிரபல பிராரப்தத்தை எதிர்கொள்ளும் மனதைரியத்தைக் கொடுக்கிறது.
=> அர்ஜுனனின் கேள்வி:
அர்ஜுனனின் கேள்வியுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. கீதையில் அவனுடைய மற்ற எல்லா கேள்விகளைப் போலவே இதுவும் இருக்கின்றது. அவனுடைய மனது சந்யாசத்தை இச்சிக்கிறது, ஆனால் அவன் கடமைக்கு அழைக்கப்படுகிறான் என்பதில்தான் அவனுடைய மனப்போராட்டம் ஆரம்பிக்கிறது. பீஷ்மர், துரோணர் போன்ற தனது மரியாதைக்குரிய பெரியவர்களை இப்போரில் கொல்ல வேண்டும் என்பதால் ராஜ்ஜியத்தைப் பெறுவதைக் காட்டிலும் பிச்சை எடுத்து உண்பதே மேல் என அர்ஜுனன் இரண்டாவது அத்தியாயத்தில் கூறினான். தனக்கு எது நன்மை பயக்கக்கூடியதோ(சிரேயஸ்) அதைக் கூறுமாறு கேட்டுக் கொண்ட அர்ஜுனன், கிருஷ்ணரின் ஆத்ம போதனைக்கு பிறகும் கர்மம் அல்லது ஞானம் இரண்டில் எனக்கு எது சிறந்தது எனக் கூறுமாறு கேட்கிறான். அதற்கு பகவான் கர்மயோகம் மற்றும் ஞானயோகம் என்ற இரு வகையான வாழ்க்கை-முறை உள்ளதென போதித்து, அர்ஜுனனுக்கு கர்மயோகமே சிறந்தது எனக் கூறி முடிக்கிறார். பிறகு மீண்டும் ஐந்தாவது அத்தியாயத்தில் தனது முந்தைய கேள்வியையே சற்று வேறுவிதமான வார்த்தைகளை உபயோகித்து, சந்யாசமா அல்லது கர்ம-யோகமா? இரண்டில் எது சிறந்தது எனக் கேட்கிறான்.
=> இது மற்றவற்றிலிருந்து வேறுபட்டதா?
இங்கே இந்த பன்னிரண்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் அதே கேள்வியை சற்று வித்தியாசமான கோணத்தில் கேட்கிறான். நிர்குண-ப்ரம்மத்தை நாடுபவர்கள், அதாவது எந்த குணங்களுமற்ற ப்ரம்மமே ஆத்மாவாக இருக்கின்றது என்கிற அறிவை நாடுபவர்கள் அல்லது விஷ்வரூப வடிவில் குணங்களுடைய இறைவனை வழிபடுபவர்கள் என்ற இந்த இரண்டு குழுக்களில் யார் சிறந்தவர்கள் என்பதை இங்கு கேட்கிறான்.
ஒருவன் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் வகையில் கர்ம-யோகமா அல்லது சந்யாசமா எது சிறந்தது என முந்தைய அத்தியாயங்களில் கேட்டான். இப்பொழுது ஒருவனின் தியானத்தைக் குறிக்கும் வகையில் கேட்கிறான். பொதுவாக கர்ம-யோகிக்கு சகுண-ப்ரம்மனான ஈஷ்வரனும் சந்யாசிக்கு நிர்குண-ப்ரம்மமும் தியானப் பொருளாக உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------||12.1|| அர்ஜுனனின் சந்தேகம்:
अर्जुन उवाच
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमा: ।। १ ।।
அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப4க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே ।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக3வித்தமா: ।। 1 ।।
अर्जुन उवाच அர்ஜுன உவாச அர்ஜுனன் சொன்னது
एवं ஏவம் இவ்வாறு सततयुक्ता: ஸததயுக்தா: எப்பொழுதும் யோகத்தில் நிலைத்திருப்பவர்
ये भक्ता: யே ப4க்தா: எந்த பக்தர்கள் त्वां த்வாம் உங்களை
पर्युपासते பர்யுபாஸதே உபாசிக்கிறார்களோ ये च अपि யே ச அபி இன்னும் யார்
अव्यक्तं அவ்யக்தம் நிர்குணம் अक्षरम् அக்ஷரம் ப்ரம்மத்தை तेषां தேஷாம் அவர்களுள்
के கே யார் योगवित्तमा: யோக3வித்தமா: யோகத்தை நன்கு அறிந்தவர்கள்?
அர்ஜுனன் சொன்னது: இவ்வாறு எப்பொழுதும் யோகத்தில் உறுதிப்பாடுடன் உங்களை உபாசிக்கும் பக்தர்கள், மற்று நிர்குண ப்ரம்மத்தை உபாசிப்பவர்கள் ஆகிய இவர்களுள் யோகத்தை நன்கு அறிந்தவர்கள் யார்?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
விளக்கம்:
=> அர்ஜுனனின் கேள்வி:
விஷ்வரூபத்தை தரிசித்த அர்ஜுனன், தான் பார்த்ததை வைத்து இந்த கேள்வியைக் கேட்கிறான். விஷ்வரூப தரிசனம் அவனது பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்பதை அவனது கேள்வி நிரூபிக்கிறது. ஏனெனில் அவன் இன்னும் வேற்றுமைபடுத்துதலைத் தொடர்கிறான். உபாசனம் செய்யும் கர்மயோகி அல்லது ஞானி இவர்களில் யார் உயர்ந்தவர் எனபது அர்ஜுனனின் கேள்வி. கர்மயோகியானவன் விஷ்வரூபத்தை தனது தியானப் பொருளாகக் கொள்கிறான்; ஒரு சந்யாசி அக்ஷர-பர-ப்ரம்மத்தை நிதித்யாசனம் செய்கிறான். இதில் எது சிறந்தது? இந்த கேள்வியில் ஒரு நுண்மை உள்ளது. இந்த இருவரில் யார் உயர்ந்தவர் என்பதைவிட, மோக்ஷத்திற்கு நெருக்கமானவர் யார் என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.
‘ஏவம்’ எனில் இவ்விதம் என்பது பொருள். அதாவது சென்ற அத்தியாயத்தின் கடைசியில் கர்மயோகியை ‘மத்கர்மக்ருத்’ என பகவான் கூறினார். அதை இங்கு தொடர்புபடுத்தும் விதமாக ‘ஏவம்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஸததம்’ எனில் தொடர்ந்து; ‘யுக்த’ எனில் பொருந்திய மனதுடன் கூடியவன், உறுதியுடன் இருப்பவன். இவ்விதம் தொடர்ந்து யோகத்தில் நிலைத்திருப்பவர்கள்(ஸததயுக்தா:), முந்தைய சுலோகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, பகவானுக்காக அனைத்து செயல்களையும் செய்து, உறுதியுடன் கர்மயோக வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். சங்கரர் இங்கு பக்தர்களை, ‘அவர்களுக்கு வேறு புகலிடம் இல்லை — அநந்யசரணா:’ என அழைக்கிறார். அதாவது அர்தார்தீ பக்தர்கள், அவர்களது புகலிடமான பணம், புகழ், அதிகாரம் முதலியவற்றை அடைய உதவும் ஒரு சாதனமாகவே பகவானைக் கொள்கிறார்கள். ஆனால் மோக்ஷத்தை விரும்பும் ஜிக்ஞாஸு பக்தர்களுக்கு, அவர்களது ஒரே அடைக்கலம் ஈஷ்வரன். அவரை அடைவதே மோக்ஷத்தை அடைவதாகும். எனவே ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் கர்மத்தில் ஈடுபடுவதோடு, அனைத்தும் பகவானாகவே உள்ளார் என விஷ்வரூப தரிசனத்தில் காட்டப்பட்டுள்ளபடி அவரை தியானம் செய்கிறார்கள், பர்யுபாஸதே.
=> கேள்வியின் உட்பொருள்:
தியானம் செய்யும் கர்மயோகிகளை ஒரு குழுவிலும், ஆத்மாவிலிருந்து வேறாக இல்லாத ப்ரம்மத்தை பிந்தொடர்பவர்களை மற்றொரு குழுவிலும் வைத்து இவர்களில் யார் உயர்ந்தவர்கள்? எனக் கேட்கிறான். இது பின்வரும் உள்ளர்த்தங்களைக் கொண்டதாக இருக்கிறது:
1. சகுண பக்தி மற்றும் நிர்குண பக்தி இவைகளில் எது சுலபமானது?
2. எது மேலானது?
3. எது மோக்ஷத்திற்கு நேரடி சாதனம்?
4. இவர்களில் யார் மோக்ஷத்திற்கு நெருக்கமானவர்கள்?
=> சகுண-ப்ரம்மம் மற்றும் நிர்குண-ப்ரம்மம்:
அர்ஜுனன் ப்ரம்மத்தை, ‘அவ்யக்தம்’ மற்றும் ‘அக்ஷரம்’ என இரு அடைமொழிகளைக் கொண்டு குறிக்கிறான். ந க்ஷரதி இதி அக்ஷரம் — எது அழியாததோ அது அக்ஷரம்; அ1ச்நுதே இதி அக்ஷரம் — எது எல்லாவற்றையும் வியாபிக்கிறதோ அது அக்ஷரம். ‘அவ்யக்தம்’ எனில் வெளித்தோற்றத்திற்கு வராதது; குணங்களற்ற காரணத்தால் அனைத்து உபாதியிலிருந்தும் விடுபட்டது என்பது பொருள். கீதை முழுவதும் ப்ரம்ம இவ்விதமாகவே விவரிக்கப்பட்டது. ஆனால் பத்தாவது மற்றும் பதினொன்றாவது அத்தியாயங்களில் குணங்களுடன் கூடிய சகுண-ப்ரம்மம் விவரிக்கப்பட்டது. எனில் இரண்டு ப்ரம்மம் உள்ளனவா? எனில், இல்லை, ஒரேயொரு ப்ரம்ம தத்துவம் மட்டுமே உள்ளது. அது நிர்குணமானது; அது எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட தூய உணர்வு சொரூபம். ‘மாயா’ உபாதியின் காரணமாக அது குணங்களுடன் கூடிய சகுண-ப்ரம்மமாகிறது.
=> கேள்வியின் நுண்மை:
இங்கு கேள்வி என்னவென்றால், நிர்குண-ப்ரம்மத்தை நாடும் இந்த கர்ம-யோகிகளுக்கும், ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் தங்களது கர்மங்களைச் செய்து சகுண-ப்ரம்ம தியானத்தில் ஈடுபடும் கர்ம-யோகிகளுக்கும் இடையில், யார் சிறந்தவர்? இங்கு ‘தம’ எனும் உச்ச தரத்தைக் குறிக்கும் பின்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. அதாவது உண்மையில் யார் மிகவும் சிறந்தவர்கள்? இது மோக்ஷத்திற்கு யார் மிக அருகில் இருக்கிறார்கள் என அர்ஜுனன் தெரிந்து கொள்ள விரும்புவதைக் காட்டுகிறது.
ஞான மார்க்கத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளதால் கீதையானது ஒரு சந்யாசியை ஞானியாகவே பார்க்கிறது. மேலும் கிருஷ்ணர், தன்னிலிருந்து ஞானி வேறானவன் அல்ல, ஞாநி து ஆத்மைவ மே மதம், எனக் கூறினார். எனவே ஒரு ஞானியை கர்மயோகியுடன் ஒப்பிட முடியாது. இதனை சங்கரர் தனது பாஷ்யத்தில் பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்.
எவ்வாறாயினும், ப்ரம்ம தத்துவத்தைப் பற்றிய தெளிவான பார்வையையுடைய, மூன்றுவித ஆசைகளிலிருந்தும் விடுபட்ட இந்த அக்ஷர-ப்ரம்மத்தை நிதித்யாசனம் செய்து கொண்டிருப்பவர்கள், தனித்து விடப்படுவார்கள். எனவே, அவர்களைப் பற்றி இங்கு பேச வேண்டாம். ஏனெனில், ‘அவர்கள் நானே’ என பகவான் கூறுகிறார். அவர்களுக்கும் கர்மயோகிகளுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. எனவே உபாசனம் செய்யும் கர்ம-யோகிகளை, உபாசனத்தில் ஈடுபடாத கேவல-கர்ம-யோகிகளுடன் ஒப்பிடுவது நியாயமானது. கர்மம் என்பது கடமை மற்றும் தினசரி வழிபாட்டையும் மற்றும் உபாசனம் என்பது தியானத்தையும் குறிக்கிறது. ஈஷ்வரனை தர்ம-சொரூபமாகவும் கர்ம-பலத்தை கொடுப்பவராகவும் ஏற்றுக்கொண்டு, தங்களது அனைத்து கர்மங்களையும் ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் செய்பவர்கள் கர்மயோகிகள். இவர்களில் ஈஷ்வர தியானத்திலும் ஈடுபடுபவர்கள் இங்கு ‘யுக்ததமா’ என்று அழைக்கப்படுகிறார்கள். மற்றபடி, இதை சந்யாசிகளுடனான ஒப்பீடு எனக் கொள்ளலாகாது. ஏனெனில் அவர் அக்ஷர-ப்ரம்மத்திற்கு இணையான சிறப்புடையவர். எனவே மேன்மை குறித்த கேள்வி அங்கு எழாது; செல்லாது. இதைக் குறித்து பகவான் பின்னர் பேசுகிறார். அடுத்த சுலோகத்தில் பகவான் இரு வகையான கர்ம-யோகிகளைக் குறித்துப் பேசுகிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------