||11.47|| அர்ஜுனனுக்கு கிட்டிய பிரத்யேக வாய்ப்பு:
श्री भगवानुवाच
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ।। ४७ ।।
ஸ்ரீப4க3வாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத3ம்
ரூபம் பரம் த3ர்சி1தமாத்மயோகா3த் ।
தேஜோமயம் விச்1வமநந்தமாத்3யம்
யந்மே த்வத3ந்யேந ந த்3ருஷ்டபூர்வம் ।। 47 ।।
अर्जुन அர்ஜுந அர்ஜுனா प्रसन्नेन मया ப்ரஸந்நேந மயா அருள் கனிந்த என்னால்
आत्मयोगात् ஆத்மயோகா3த் எனது யோக சக்தியால் तव தவ உனக்கு इदं இத3ம் இந்த
तेजोमयं தேஜோமயம் ஒளி நிறைந்ததும் अनन्तं அனந்தம் முடிவில்லாததும்
आद्यं ஆத்3யம் முழுமுதலானதும் मे மே என்னுடைய परं பரம் மேலான
विश्वम् रूपं விச்1வம் ரூபம் விஷ்வரூபம் दर्शितं த3ர்சி1தம் காண்பிக்கப்பட்டது यत् யத் எது त्वद् अन्येन த்வத்3 அந்யேந உன்னைத் தவிர அன்னியரால் न दृष्ट पूर्वम् ந த்3ருஷ்ட பூர்வம் முன்பு காணப்படவில்லை.
அர்ஜுனா, அருள் நிறைந்த என்னால் யோகசக்தியைக் கொண்டு இந்த ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலாம் விஷ்வரூபம் உனக்குக் காண்பிக்கப்பட்டது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.
விளக்கம்:
இந்த விஷ்வரூபம் பகவானின் மாயா சக்தியால் அர்ஜுனனுக்கு காட்டப்பட்டது. இது ஒளிமயமானதும்(தேஜோமயம்), முடிவில்லாததும்(அனந்தம்), முழுமுதலானதுமாக(ஆத்3யம்) உள்ளது. ‘ஆத்3ய’ என்பது மூல வடிவான இதற்குள் மற்ற எல்லா வடிவங்களும் அடங்குகின்றன என்பதைக் குறிக்கின்றது. முதலில் பிரபஞ்சம் தோன்றி அதற்குள் இன்னும் பல வடிவங்கள் தொடர்ந்து பிறப்பதைப் போல, இது அனைத்தையும் உள்ளடக்கியதும், முழு முதலானதுமான ரூபமாகவுள்ளது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு பார்த்ததில்லை — த்வத்3 அந்யேந ந த்3ருஷ்ட பூர்வம், என்கிறார் பகவான். எனில் அர்ஜுனன் இதை எப்படி பார்த்தான்? பகவானின் அருளினால் அவனால் இந்த வடிவத்தைக் காண முடிந்தது. எனவே, ‘உன்னிடம் மகிழ்ச்சியடைந்த நான், எனது சக்தியினால்(மாயா சக்தியினால்), ஆத்மயோகா3த், ஒளிமயமான இந்த வடிவத்தை உனக்குக் காட்டினேன்’, என்கிறார் பகவான்.
விஷ்வரூபத்தைக் கண்டு அர்ஜுனன் பயந்திருந்தான். எனவே கிருஷ்ணர் சில ஆறுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனை சாந்தப்படுத்துகிறார்.
=> சுவாமி சித்பவானந்தர்:
ஈஷ்வர சாக்ஷாத்காரம் பண்ணினது அர்ஜுனனுடைய தனியுரிமையென்று பொருட்படுத்தலாகாது. மெய்ப்பொருள் காட்சிக்குத் தனியுரிமையிருக்குமானால் அது எல்லார்க்கும் பொது, எங்கும் வியாபகம், எல்லார்க்கும் அந்தராத்மா என்ற பேருண்மை அடிபட்டுப்போகும். அதனுடைய பரிபூரணத்துக்குக் குறையும் வந்துவிடும். கருத்து யாது எனின் சகுணப்ரம்மம், நிர்குண ப்ரம்மம் — அதன் இத்தனைவிதப் படித்தரங்கள் ஆகிய இவையாவையும் தொகுத்து ஒருங்கே காட்சி காண்பவர் மிகச் சிலர். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.48|| விஷ்வரூப தரிசன உபாயம்:
न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रै: ।
एवंरूप: शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ।। ४८ ।।
ந வேத3யஜ்ஞாத்4யயநைர்ந தா3நைர்
ந ச க்ரியாபி4ர்ந தபோபி4ருக்3ரை: ।
ஏவம்ரூப: ச1க்ய அஹம் ந்ருலோகே
த்3ரஷ்டும் த்வத3ந்யேந குருப்ரவீர ।। 48 ।।
कुरु प्रवीर குரு ப்ரவீர குருகுலத்துப் பெருவீரா
न वेद यज्ञ अध्ययनै: ந வேத3 யக்ஞ அத்4யயநை: வேதம் ஓதி யக்ஞத்தை அறிவதால் அல்ல
न दानै: ந தா3நை: தானங்களாலும் न च क्रियाभि: ந ச க்ரியாபி4: கிரியைகளாலும் அல்ல
न उग्रै: तपोभि: ந உக்3ரை: தபோபி4: உக்கிரமான தவங்களாலும்
एवंरूप: ஏவம்ரூப: இத்தகைய விசுவரூபத்தில் अहं அஹம் நான்
त्वत् अन्येन த்வத் அந்யேந உன்னைத் தவிர नृलोके ந்ருலோகே மனுஷ்ய லோகத்தில்
द्रष्टुं த்3ரஷ்டும் காண शक्य: ச1க்ய: சாத்தியம்.
குருகுலப் பெருவீரா, வேதம் ஓதி அறிவதாலும், யக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும், மனுஷ்ய லோகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னைத்தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!
விளக்கம்:
=> புலன்களின் எல்லை:
நான் இவ்வடிவத்துடன் காணக்கூடியவன் அல்லன் — ஏவம்ரூப: அஹம் ந த்3ரஷ்டும் ச1க்ய:, என்கிறார் பகவான். ஒவ்வொரு புலனுறுப்புக்களும் அவைகளுக்கேயுண்டான வரம்புகளுடன் கூடியுள்ளன. அவை ஒவ்வொன்றும் கொடுக்கப்பட்ட புலன் பொருளை மட்டுமே கிரஹிக்க முடியும். உதாரணமாக, கண்கள் வடிவத்தையும் நிறத்தையும் மட்டுமே பதிவு செய்யும்; காதுகள் ஒலியை மட்டுமே உணரும். அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லையைக் கொண்டுள்ளது. அவ்வெல்லையைத் தாண்டி அதனால் உணர இயலாது. அப்படியிருக்க, முழு பிரபஞ்சத்தையும் ஒரு வடிவத்தில் அவைகளால் உள்ளடக்க இயலாது. ஒருவனின் கற்பனையும்கூட முற்றிலும் புலனுறுப்புகளையேச் சார்ந்துள்ளது. ஆகையினால் விஷ்வரூப வடிவத்தை கற்பனை செய்வதும் இயலாதது. ஆனால் பகவானின் அருளால் அர்ஜுனன் அதை நேரில் பார்க்கின்றான். கற்பனைக்கெட்டாத அந்த வடிவின் பிரம்மாண்டம்
நிச்சயமாக சிலிர்ப்பைக் கொடுத்தாலும், அதே நேரத்தில் அவன் பார்த்த அழிவு அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த ரூபத்தை எப்படியேனும் ஒருவன் காண இயலுமா?
=> இவைகளெல்லாம் உபாயங்கள் ஆகுமா?
வேத சாஸ்திரங்களைப் படிக்கும் ஒருவனால் இந்த விஷ்வரூபத்தை பார்க்க இயலுமா? எனில் ‘இல்லை’ எனக் கூறுகிறார் பகவான் — ‘வேதத்தை ஓதுவதால் அல்ல, ந வேத3 அத்4யயநை:’. வேதத்தை அத்யயனம் செய்வது என்பதைச் சிலர் நெட்டுருப் போட்டு ஓதுதல் என்று பொருள்படுத்துகின்றனர். அது வெறும் ஞாபகசக்தியையும் மனப்பாடம் செய்யும் திறமையையும் உண்டாக்குகிறது. எனவே வேதத்தை வெறுமனே ஓதுவது மட்டும் போதாது, ஒருவனுக்கு விசாரமும் இருக்க வேண்டும். நான்கு வேதங்களைக் கற்றாலும் ஒருவனால் விஷ்வரூபத்தைக் காண இயலாது என்பதைக் குறிக்கும் விதமாக இங்கு பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேதங்களைக் கற்றலில் யாகச் சடங்குகளும் அடக்கம் எனினும், ஏன் இங்கு பகவான் ‘யக்ஞ அத்4யயநை:’ என அதை தனியாக குறிப்பிட்டுள்ளார்? ஒருவனுக்கு சடங்குகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தும் அதை எப்படி செய்யலாம் என அறியாமல் இருக்கலாம். அதற்கு ‘மீமாம்சை’ எனும் தனிக் கற்றலும் விசாரமும் தேவைப்படுகிறது. எனவே யக்ஞத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றிய தனிப்பட்ட அறிவைக்(யக்ஞ விக்ஞாந) குறிக்கும் வகையில் இங்கு அது தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் சங்கரர். ஆதலால், ‘வெறும் வேதம் படிப்பதினாலும், சம்பிரதாய ஞானத்தினாலும் என்னை இந்த ரூபத்தில் காண முடியாது’, என்கிறார் பகவான்.
மேலும், தானத்தினாலும் என்னை இந்த ரூபத்தில் காண இயலாது, ந தா3நை:. சாஸ்திரத்தை பொறுத்தவரையில் தானம் என்பது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. தானம் செய்வதன்மூலம் ஒருவன் நிறைய புண்ணியத்தை அடைகிறான். ஆனாலும் விஷ்வரூப தரிசனத்திற்கு அது போதாது என்கிறார். துலாபுருஷ, ஒருவனின் எடைக்கு இணையான தங்கம் தானமாகத் தரப்பட்டாலும் இத்தரிசனத்திற்கு அது போதுமானதாக இல்லை என்கிறார் சங்கரர்.
வேதச் சடங்குகளை செய்வதாலும் அல்ல, ந ச க்ரியாபி4:. அக்னிஹோத்ரம் உள்ளிட்ட வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து சடங்குகளைச் செய்தாலும் இத்தரிசனம் கிட்ட வாய்ப்பில்லை.
அடுத்ததாக, உக்கிரமான தவத்தினால் அது இயலுமா? எனில் ‘இல்லை’ என்கிறார், ந உக்3ரை: தபோபி4:. சந்திராயண விரதம் போன்ற கடுமையான தபசும்கூட போதாது என சங்கரர் கூறுகிறார். சந்திராயண விரதம் என்பது ஜபம் மற்றும் ஒரு வகையான உண்ணாவிரத்தத்துடன் கூடிய ஒரு தவமுறை ஆகும். பெளர்ணமி நாளில் வழக்கமான அளவு உணவை உண்ணத் தொடங்கும் ஒருவன்(பதினைந்து கவளம் உணவெப்பது கணக்கு), அடுத்த நாள் 1/15 ஆக குறைக்கிறான். இவ்விதம் அமாவாசை நாள் வரையில், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவளமாக குறைத்துக் கொண்டே வந்து, அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். மீண்டும் அடுத்த நாள், தனது உணவளவில் 1/15 எடுத்துக் கொள்ள ஆரம்பித்து படிப்படியாக ஒவ்வொரு கவளமாகச் சேர்த்து உண்டு, முழு நிலவு நாளில் தனது முழு உணவை உட்கொள்கிறான். சந்திரன் தேய்வதும் வளர்வதும் போல, ஒருவனது உணவு உட்கொள்ளும் அளவும் மாறுபடுகிறது. இதை கடைபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் சங்கரர் இதை பிரத்யேகமாகக் குறிப்பிடுகிறார்.
இத்தனை விஷயங்களைச் செய்தபோதிலும் யாருக்கும் இந்த விஷ்வரூப தரிசனம் கிடைக்கவில்லை. ‘உன்னைத் தவிர, அர்ஜுனா’, என்கிறார் பகவான். ஆனால் வெறுமனே ஒரு கோரிக்கையினால் மட்டும் அர்ஜுனன் அதை எளிதாகப் பெற்றான்.
விலைகொடுத்து ஒரு பொருளை வாங்குவது போன்று இத்தகைய யக்ஞ, தான, தப கர்மங்களால் ஈஷ்வரப் பிராப்தியை அடைந்துவிடலாம் என்பதில்லை. அவரை அடைதற்கு அவர் அருளையே நாடி நிற்கவேண்டும். மேலும் அவ்விதம் அடைந்தவர்களும் அவரை முழுதும் அறிந்துகொண்டவர்கள் அல்லர்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கொஞ்சம் சாராயத்தைக் குடித்ததும் சிலர்க்குப் போதை உண்டாகிறது. இன்னும் சிலர்க்குப் போதையுண்டாக இரண்டு மூன்று புட்டிகள் வேண்டியிருக்கிறது. ஆயினும் இருவகையினரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். அதுபோல, ஈஷ்வர மஹிமையில் தினையளவைக் கண்டதும் சிலருக்கு ஆனந்தம் உண்டாகிறது. வேறு சிலருக்கு ஈஷ்வர சந்நிதானத்தில் நேருக்கு நேராக வந்த பிறகுதான் ஆனந்தம் உண்டாகிறது. ஆயினும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றே.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.49|| அர்ஜுனனை சாந்தப்படுத்துகிறார்:
मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम् ।
व्यपेतभी: प्रीतमना: पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ।। ४९ ।।
மா தே வ்யதா2 மா ச விமூட4பா4வோ
த்3ருஷ்ட்வா ரூபம் கோ4ரமீத்3ருங்மமேத3ம் ।
வ்யபேதபீ4: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததே3வ மே ரூபமித3ம் ப்ரபச்1ய ।। 49 ।।
ईदृक् ஈத்ருக் இப்படிப்பட்ட मम மம என்னுடைய इदं घोरम् रूपं இத3ம் கோ4ரம் ரூபம் இந்த கோர ரூபத்தை दृष्ट्वा த்3ருஷ்ட்வா பார்த்து ते தே உனக்கு व्यथा मा வ்யதா2 மா பயம் வேண்டாம்
विमूढ भाव: च मा விமூட4 பா4வ: ச மா மயங்கிய மனநிலையும் வேண்டாம்
व्यपेत भी: வ்யபேத பீ4: பயம் நீங்கியவனாய் प्रीतमना: च ப்ரீதமநா: ச மனமகிழ்ச்சியுடையவனாயும்
पुन: புந: மறுபடியும் त्वं த்வம் நீ मे மே என்னுடைய तत् इदं தத் இத3ம் அதே இந்த
रूपं एव ரூபம் ஏவ ரூபத்தையே प्रपश्य ப்ரபச்1ய நன்கு பார்ப்பாயாக.
இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக்கண்டு உனக்குக் கலக்கமும் மயங்கிய மனநிலையும் வேண்டாம்; அச்சம் நீங்கி, மகிழ்ந்த மனதுடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!
விளக்கம்:
தனது விஷ்வரூப வடிவத்தைக் கண்டு பயந்திருந்த அர்ஜுனனை பகவான் இப்போது சாந்தப்படுத்துகிறார். அற்புதமான விஷ்வரூபம் எனினும் அதில் அர்ஜுனன் கண்ட கோரமும் கொடூரமும் அவனை அச்சம் கொள்ளச் செய்தது. ஆகையினால், உனக்கு எந்த பயமும் வேண்டாம் என்கிறார் — மா தே வ்யதா2. அதாவது, நான் இந்த வடிவத்தை மாற்றியருளப் போகின்றேன் என்பது பொருள். தனக்கு வலது அல்லது இடது, வடக்கு அல்லது மேற்கு என எதுவும் புலப்படவில்லை என்று அர்ஜுனன் கூறியிருந்தான். எனவே கிருஷ்ணர், ‘நீ குழப்பமடைய வேண்டாம்’ என்கிறார். ‘விமூட4 பா4வ:’ என்பது கலக்கம், மயங்கிய மனநிலையைக் குறிக்கும். பயத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ந்த மனதுடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தை பார், வ்யபேத பீ4: ப்ரீதமநா: ச ப்ரபச்1ய, என்கிறார் கிருஷ்ணர்.
கொந்தளிப்புள்ள கடல் தேங்கியிருக்கும்போது மனமகிழ்வு உண்டாவது போன்று ஸம்ஹார மூர்த்தியின் காட்சி சாந்த மூர்த்தியின் காட்சியாக மாறுகையில் அதைப் பார்க்கும் ஜீவனுக்கு மனவமைதி ஏற்படுவது இயல்பு.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.50|| மீண்டும் வந்த சாந்த சொரூபம்:
सञ्जय उवाच ।
इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूय: ।
आश्वासयामास च भीतमेनं भूत्वा पुन: सौम्यवपुर्महात्मा ।। ५० ।।
ஸஞ்ஜய உவாச ।
இத்யர்ஜுநம் வாஸுதே3வஸ்ததோ2க்த்வா
ஸ்வகம் ரூபம் த3ர்ச1யாமாஸ பூ4ய: ।
ஆச்1வாஸயாமாஸ ச பீ4தமேநம்
பூ4த்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா ।। 50 ।।
सञ्जय उवाच ஸஞ்ஜய உவாச ஸஞ்ஜயன் சொன்னது
वासुदेव: வாஸுதே3வ: வாசுதேவரானவர் अर्जुनं அர்ஜுநம் அர்ஜுனனுக்கு इति இதி இவ்விதம்
उक्त्वा உக்த்வா சொல்லி भूय: பூ4ய: மறுபடியும் तथा ததா2 அவ்வாறு
स्वकं रूपं ஸ்வகம் ரூபம் சொந்த வடிவத்தை दर्शयामास த3ர்ச1யாமாஸ காண்பித்தார்
महात्मा மஹாத்மா மஹாத்மாவானவர் सौम्य वपु: भूत्वा ஸௌம்ய வபு: பூ4த்வா இனிய வடிவம் எடுத்து
पुन: புந: மறுபடியும் भीतम् एनं பீ4தம் ஏநம் பயந்தவனை
आश्वासयामास च ஆச்1வாஸயாமாஸ ச தேற்றினார்.
ஸஞ்ஜயன் சொன்னது: வாசுதேவர் இங்ஙனம் அர்ஜுனனுக்குச் சொல்லி, பின்பு தமது சொந்த வடிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும் தேற்றினார்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
விளக்கம்:
=> சஞ்ஜயனின் விவரணை:
தற்போதுள்ள நிலைமையை சஞ்ஜயன் வர்ணிக்கிறார். ‘இவ்விதமாக அர்ஜுனனிடம் கூறியபிறகு, கிருஷ்ணர் தனது சொந்த வடிவத்தை அப்படியே காண்பித்தார்’ — ஸ்வகம் ரூபம் த3ர்ச1யாமாஸ. வசுதேவர் வீட்டில் பிறந்து வளர்ந்த வடிவத்தை, அந்த குறிப்பிட்ட அவதார வடிவத்தை மீண்டும் அர்ஜுனனுக்கு காண்பிக்கிறார். அவர் மனதிற்கு மிகவும் இனிமையான மற்றும் கையாளுவதற்கு எளிதானதொரு உடலைக் காண்பித்தார் — ஸௌம்ய வபு: பூ4த்வா. முன்பு அர்ஜுனனால் அவரது உடலின் எல்லைகளைக் காண முடியவில்லை; அது முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இப்போது, தனது உயிர்த் தோழனின் வடிவத்தை காட்டி, அச்சத்திலிருந்த அர்ஜுனனை அமைதிப்படுத்தினார் — பீ4தம் ஏநம் ஆச்1வாஸயாமாஸ ச.
கிருஷ்ணரை இங்கு சஞ்ஜயன் ‘மஹாத்மா’ எனக் குறிப்பிடுகிறார். அதாவது, மஹாந் ச அசெள ஆத்மா — அவரே அனைத்துமாக இருக்கிறார், மஹாந்; அவரே ஒவ்வொருவருள்ளும் சுயமாகவும் இருக்கிறார், ஆத்மா. உயிர்களுக்குப் பாடம் புகட்டுதற்கு வேண்டியவளவே அவர் அச்சமூட்டுகிறார். பின்பு இனிய வடிவங்காட்டி அவர்களை மகிழ்விக்கிறார். இத்தகைய தன்மையை உடையவராய் இருப்பதால் அவர் மஹாத்மா ஆகிறார்.
மீண்டும் கிருஷ்ணரை பழைய வடிவத்தில் பார்த்தவுடன், அர்ஜுனன் சுயநினைவுக்கு வந்து, மிகுந்த நிம்மதியை அடைகிறான். இதை அடுத்த சுலோகத்தில் தனது வார்த்தைகளிலேயே தெரிவிக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.51||அர்ஜுனனின் வெளிப்பாடு:
अर्जुन उवाच ।
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन ।
इदानीमस्मि संवृत्त: सचेता प्रकृतिं गत: ।। ५१ ।।
அர்ஜுந உவாச ।
த்3ருஷ்ட்வேத3ம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்த3ந ।
இதா3நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் க3த: ।। 51 ।।
अर्जुन उवाच அர்ஜுன உவாச அர்ஜுனன் சொன்னது
जनार्दन ஜநார்த3ந ஜனார்தனா तव தவ உங்களுடைய इदं இத3ம் இந்த
सौम्यं मानुषं रूपं ஸௌம்யம் மாநுஷம் ரூபம் இனிய மானுட வடிவத்தை दृष्ट्वेा த்3ருஷ்ட்வா பார்த்து
इदानीम् இதா3நீம் இப்பொழுது सचेता: संवृत्त: ஸசேதா: ஸம்வ்ருத்த: (நான்)மனத்தெளிவை பெற்றவனாய் प्रकृतिं गत: ப்ரக்ருதிம் க3த: என் இயல்பை அடைந்தவனாய் अस्मि அஸ்மி இருக்கிறேன்.
அர்ஜுனன் சொன்னது: ஜனார்தனா, உங்களது இந்த இனிய மானுட வடிவங்கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.
விளக்கம்:
பகவான் கிருஷ்ணர் தனது பழைய அசல் வடிவத்திற்குத் திரும்புவது மட்டுமின்றி, கீதையும் தனது பழைய சந்த அமைப்பிற்கு திரும்புகிறது. பெரும்பாலும், அநுஷ்டுப் சந்தத்தில் காணப்படும் சுலோகங்கள், அர்ஜுனன் விஷ்வரூப வடிவத்தை பார்க்கத் தொடங்கியதிலிருந்து, திரிஷ்டுப் சந்தத்திற்கு வந்தது. இப்போது மீண்டும் சுலோகங்கள் அநுஷ்டுப் சந்தத்திற்கு மாறுகின்றன.
கிருஷ்ணர் இப்போது ஒரு மனித உருவில் அடையாளம் காணப்படுகிறார். அதை அர்ஜுனன், ‘உங்களது இந்த இனிமையான மானுட உருவம் கண்டு’ எனக் கூறி, ‘மனத் தெளிவை பெற்றவனாய் எனது இயல்பை அடைந்தேன்’ என்கிறான். ‘ப்ரக்ருதி’ என்பது ஒருவனின் யதார்த்த நிலை, இங்கு அது அர்ஜுனனின் பழைய நிலையை, சுபாவத்தைக் குறிக்கிறது. விஷ்வரூபத்தை கண்டு பயந்து, மனம் கலங்கிய நிலையில் இருந்த அர்ஜுனன் இப்போது, கிருஷ்ணரின் இந்த பரிச்சயமான வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான்.
எல்லாம் ஈசன் வடிவெனினும் சிங்கத்தின் வடிவெடுத்துள்ள ஈசனிடத்திருந்து சிறிது எட்ட நிற்கவே ஒரு ஜீவன் விரும்புகிறான். அவனிடத்து ஜீவபோதம் இருக்குமளவு இத்தகைய மனப்பான்மையும் இருக்கும்.
இனி, பகவான் கிருஷ்ணர் அர்ஜுனன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவனுடைய மகிழ்ச்சியான மனநிலையை வலுப்படுத்துகிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------