வியாழன், 22 ஆகஸ்ட், 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.41 - 11.43

||11.41|| மன்னிப்பு கோருதல்:

सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति

अजानता महिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि ।। ४१ ।।

ஸகே2தி மத்வா ப்ரஸப4ம் யது3க்தம்

ஹே க்ருஷ்ண ஹே யாத3 ஹே ஸகே2தி

அஜாநதா மஹிமாநம் தவேத3ம்

மயா ப்ரமாதா3த்ப்ரணயேந வாபி ।। 41 ।।


तव  தவ  உங்களுடைய    इदं   இத3ம்  இந்த    महिमानं  மஹிமாநம்  மஹிமையை    

अजानता मया  அஜாநதா மயா  அறியாத என்னால்    प्रमादात्  ப்ரமாதா3த்  கவனமின்மையால்    

प्रणयेन वा अपि  ப்ரணயேந வா அபி  பிரியத்தினாலாவது    सखा इति मत्वा  ஸகா2 இதி மத்வா  தோழன் என்று நினைத்து    हे कृष्ण  ஹே க்ருஷ்ண  கிருஷ்ணா     हे यादव  ஹே யாத3  யாதவா    

हे सखे  ஹே ஸகே2  தோழா    इति  இதி   என்று    प्रसभं  ப்ரஸப4ம்  பணிவின்றி    

यत् उक्तं  யத் உக்தம்  எது சொல்லப்பட்டதோ,


உங்களது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி, ‘ கிருஷ்ணா, யாதவா, கூட்டாளிஎன்று பணிவின்றி எது பகரப்பட்டதோ, …


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ கண்ணா, யாதவா, தோழாஎன்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் 

சொல்லி யிருப்பதையும்,


விளக்கம்:

கிருஷ்ணரின் அவதாரத் தன்மை குறித்து அறிந்திராதபோது, தான் பழகிய விதத்தை நினைத்து வருத்தப்பட்ட அர்ஜுனன், சுலோகம் நாற்பத்தியொன்று மற்றும் நாற்பத்தியிரண்டில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறான். பகவானைப் பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது.

உங்களை நண்பனாக மட்டும் நினைத்து, கிருஷ்ணா, யாதவா, தோழா என்றெல்லாம் அழைத்தேன்’, என்கிறான் அர்ஜுனன். பலமுறை தோளில் கை வைத்து கிருஷ்ணரிடம் சாதாரணமாக இவ்விதம் பேசியிருக்கலாம். சாதாரண நண்பனொருவன் திடீரென விஷ்வத்தையே உள்ளடக்கிய ஒரு ரூபத்தை எடுக்கும்போது எப்படி உணர்வோம்! அவ்விதம் உணர்கிறான் அர்ஜுனன். அவன் கிருஷ்ணரிடம் கவனமின்றி, பணிவின்றி பேசியதாக உணர்கிறான்ப்ரஸப4ம். ‘உங்களது மஹிமைகளை அறியாதபோது, உங்களை யாரென்று தெரியாதபோது என்னால் கூறப்பட்டதுஎன அர்ஜுனன் கூறுகிறான். மேலும், தனது நண்பன் என்ற அன்பில், பிரியத்தினால்ஏய் கிருஷ்ணா! ஹே யாதவா! தோழா!’ என்றெல்லாம் அழைத்துவிட்டதாகவும் கூறுகிறான். அதற்காக மன்னிப்பு கோருகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.42|| மன்னிப்பு கோருதல்:

यच्चावहासार्थमसत्कृतोऽसि विहार शय्यासनभोजनेषु

एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ।। ४२ ।।

யச்சாவஹாஸார்த2மஸத்க்ருதோऽஸி

விஹாரச1ய்யாஸநபோ4ஜநேஷு

ஏகோऽத2வாப்யச்யுத தத்ஸமக்ஷம் 

தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் ।। 42 ।।


अच्युत  அச்யுத  அச்யுதா    विहार शय्या आसन भोजनेषु  விஹார 1ய்யா ஆஸந போ4ஜநேஷு  விளையாட்டு, படுக்கை, அமர்ந்திருத்தல், உணவருந்துதல்    एक:  ஏக:  தனித்திருந்தபொழுது   अथवा  அத2வா  அல்லது    तत्समक्षं अपि  தத்ஸமக்ஷம் அபி  பிறர் பார்வையில் இருந்தபொழுது    

अवहासार्थम्  அவஹாஸார்த2ம்  பரிஹாஸத்திற்காக    यत्  யத்  எவ்விதம்    

असत्कृत: असि  அஸத்க்ருத: அஸி  அவமதிக்கப்பட்டிருக்கிறீரோ     तत्  தத்  அதை    अहं  அஹம்  நான்    अप्रमेयम् त्वां  அப்ரமேயம் த்வாம்  அளப்பதற்கரிய      क्षामये  க்ஷாமயே  மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.       


அச்யுதா! விளையாடியபொழுதும், படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும், ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப்பட்டீரோ, அதையெல்லாம், அளப்பிலோய் மன்னித்தருள்க.   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!


விளக்கம்:

அவஹாஸஎனில் ஒருவரை பரிஹாசத்திற்காக கேலி செய்வது. அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் அர்ஜுனன் கிருஷ்ணரை கிண்டல் செய்தும், வேடிக்கைக்காக அவரை ஒரு சிரிப்புப் பொருளாக மாற்றியும் அவமதித்துள்ளான். அதை இப்போது உணர்ந்தவனாக, ‘ஏளனமாக என்னால் அவமதிக்கப்பட்டீர்கள்அவஹாஸார்த2ம் அஸத்க்ருத: அஸி’, என்கிறான். ‘ஸத்க்ருதஎனில் கெளரவமாக நடத்துவது, மரியாதை தருவது, நல்ல வரவேற்பைக் குறிக்கிறது. ஆகவேஅஸத்க்ருதஎன்பது தவறான விதத்தில் நடத்தப்பட்டதைக் குறிக்கிறது. எப்போதெல்லாம் இவ்விதம் நடத்தப்பட்டார் என்பதையும் அர்ஜுனன் கூறுகிறான். விஹார 1ய்யா ஆஸந போ4ஜநேஷுவிளையாடியபொழுதும், படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும். ஒன்றாக காட்டில் இருந்தபோதும், வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்த போதும், நமக்குள் நடந்த உரையாடல்களிலும் என எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் நீங்கள் என்னால் அவமதிக்கப்பட்டீர்கள்; கேலியாக நடத்தப்பட்டீர்கள். அதுமட்டுமின்றி தனிமையிலும் சரி, ஏக, மற்றவர்கள் முன்னிலையிலும் சரி, தத் ஸமக்ஷம் அபி, இவ்விதமே நான் உங்களை நடத்தியுள்ளேன்

அதற்கெல்லாம் அர்ஜுனன், ‘நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன், அஹம் த்வாம் க்ஷாமயேஎன்று கூறுகிறான். மேலும் இங்கு அவன்அப்ரமேயம்எனும் அடைமொழியை பகவானுக்கு அளிக்கிறான். அளப்பதற்கரியவர், அறிய முடியாதவர் என்பது அதன் பொருள் ஆகும். ‘நீங்கள் எந்தவொரு ப்ரமாணத்தினாலும் அறியமுடியாதவராக இருப்பதால் என்னை குற்றம் சொல்ல முடியாதுஎன்பதாக தன்னிலை விளக்கம் கொடுக்கும் யோசனையில் அர்ஜுனன் இவ்வாறு அழைக்கிறான். ‘புலனுணர்வு, அனுமானம் முதலிய எந்தவிதமான ப்ரமாணமும்(அறிவைக் கொடுக்கும் கருவியும்) உங்களை அறியமுடியாது. அளப்பதற்கரிய உங்களை நான் அறியத் தகுதியற்றவனாக இருந்தேன்; அதனால், உங்களைப் பற்றிய எனது அறியாமையினால் நான் உங்களை மோசமாக நடத்திவிட்டேன். என்னை மன்னியுங்கள். இப்பொழுது நான் உங்கள் பெருமையை அறிகிறேன்’, என்கிறான்.   


=> சுவாமி சித்பவானந்தர்:

பகவானைப் பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது. கிருஷ்ணனாகத் தோன்றிய தோற்றம் ஒன்றுமட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈஷ்வரனுடையவைகளே. அறியாமையினால் நாம் அவைகளை அலட்சியப்படுத்துகிறோம். அவைகளைப் பாராட்டுமளவு, நமக்கு நல்லறிவு வருகிறது. நல்லறிவுக்கு மற்றோர் அறிகுறியுண்டு. நம் அறிவு எவ்வளவு தெளிந்தது எனினும் நம் அறிவால் அவனை முழுதும் அளந்துவிட முடியாது. வணக்கம் நிறைந்த இணக்கம் இறைவனிடத்தும் இறைவனது சிருஷ்டியின் கண்ணும் வைக்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதுவே தெளிவுபட்ட மனமாறுதல் ஆகிறது

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.43|| அர்ஜுனன் கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்கக் காரணம்:

पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्

त्वत्समोऽस्त्यभ्यधिक: कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ।। ४३ ।। 

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய

த்வமஸ்ய பூஜ்யச்1 கு3ருர்க3ரீயாந்

த்வத்ஸமோऽஸ்த்யப்4யதி4: குதோऽந்யோ

லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா4 ।। 43 ।।


अप्रतिम प्रभाव  அப்ரதிம ப்ரபா4  ஒப்பற்ற பெருமையுடையவரே    त्वं  த்வம்  தாங்கள்    

अस्य चर अचरस्य  அஸ்ய சர அசரஸ்ய  இந்த சரம் அசரமாகிய     लोकस्य  லோகஸ்ய  லோகத்தினுடைய    

पिता असि  பிதா அஸி  தந்தையாக உள்ளீர்    पूज्य:   பூஜ்ய:   போற்றுதற்குரியவரும்     

गुरु: गरीयान्  கு3ரு: 3ரீயாந்  பெரியவர்க்குப் பெரியவர் ஆகிறீர்       लोकत्रये अपि  லோகத்ரயே அபி  மூவுலகிலும்     त्वत्सम:  த்வத்ஸம:  உங்களுக்குச் சமமானவர்    अस्ति  அஸ்தி  இல்லை   

अभ्यधिक:  அப்4யதி4:  உங்களிலும் மேலானவர்   अन्य:  அந்ய:  வேறொருவர்     कुत:  குத:  ஏது?


ஒப்பற்ற பெருமையுடையவரே, தாங்கள் இந்தச் சராசர லோகத்துக்குத் தந்தை; போற்றுதற்குரியவரும் குருவுக்குக் குருவும் ஆகிறீர்; மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உங்களிலும் மேலானவர் ஏது?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!


விளக்கம்:

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதற்கு காரணம் யாது என்பதற்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது


=> லோக பிதா:

சிருஷ்டி முழுதுக்கும் ஈஷ்வரன் முதற்காரணமாதலால் அவர் நகர்வன, நிலைத்திருப்பன அனைத்துக்கும் பிதா என்று அழைக்கப்படுகிறார். ஆகையினால் அர்ஜுனன் பகவானை தொடர்ந்து பின்வருமாறு விவரிக்கிறான்:

நீங்களே அசைகின்ற மற்றும் அசையாத இந்த உலகிற்கு தந்தை, அதாவது காரணம் ஆகிறீர்த்வம் அஸ்ய சர அசரஸ்ய லோகஸ்ய பிதா’, என்கிறான். அல்லது, ‘சரஎன்பது உணர்வுள்ள மற்றும்அசரஎன்பது உணர்வற்றவைகளையும் குறிக்கலாம்

மேலும், பெருமையனைத்தும் அமையப் பெற்றிருப்பதால் அவர் எல்லோராலும் போற்றுதற்குரியவராக ஆகிறார். எனவே, ‘சிருஷ்டிக்கு காரணமான நீங்களே போற்றுதற்குரியவர், பூஜ்ய’, என்கிறான். பல தேவதைகள் பலவிதமான வடிவங்களில் வழிபடப்பட்டாலும், எல்லா வழிபாடுகளும் பரமேஷ்வரனுக்கு மட்டுமே செல்கிறது. எனவே அர்ஜுனன், ‘நீங்களே பூஜிக்கத் தகுதியானவர். மற்றும் நீங்கள் குருவுக்கு குரு ஆகிறீர், கு3ரு: 3ரீயாந்என்கிறான். பிரம்மதேவருக்கும் வேதங்களைக் கற்பித்தவராக, முழுமுதற் ஆசிரியராக, அனைத்து அறிவுக்கும் ஆதாரமானவராக பகவானே இருப்பதால் அவர்கு3ரு: 3ரீயாந்’.  

மேலும், ‘மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை, லோகத்ரயே அபி த்வத்ஸம: அஸ்திஎன்கிறான். ஈசன் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு ஒப்பானவரே இல்லையென்றால் அவரினும் உயர்ந்தவரைக் காண்பது எங்ஙனம்? எனவேஉம்மிலும் மிக்கார் ஏது?, அப்4யதி4: அந்ய: குத:என்கிறான். ஆக, உலக நடைமுறைக்கு அதிபதியாக இருப்பவர் ஈஷ்வரன் ஒருவரே எனலாம். ஒருவருக்கு மேற்பட்ட ஈஷ்வரர்கள் இருப்பார்களானால் உலக நடைமுறையில் ஒழுங்கின்மை உண்டாகும். ஒருவர் சிருஷ்டிக்க எண்ணுகையில் மற்றொருவர் சம்ஹாரம் செய்ய நினைப்பாரானால் ஒரு செயல் மற்றொரு செயலோடு முரண்பட்டுக் குழப்பம் வந்து அமையும். மாறாக, ஒழுங்கான உலக நடைமுறைக்குத் தலைவனாக ஈசன் ஒருவரே இருக்கிறார். அவர் எல்லார்க்கும் பெரியவர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி தோன்றலாம். பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் இருக்கிறார்களே? இவர்களெல்லாம் ஈசன் இல்லையா? அப்படியானால், ஏற்கனவே மூன்று ஈஷ்வரர்கள் உள்ளனர் என்கிற சந்தேகம் எழலாம். இது உண்மையல்ல. ஒரே ஒரு ஈஷ்வரன் என்பது மட்டுமே உண்மை. வெவ்வேறு செயல்பாடுகளில் இருந்து பார்க்கும்போது, ஒரே ஈஷ்வரனைபடைத்தவனாக பிரம்மா என்றும், நிலைநிறுத்திக் காப்பவனாக விஷ்ணு என்றும், அழிப்பவனாக ருத்ரன் என்றும் அழைக்கிறோம். அவர்களைத் தனித்தனியாகப் பார்க்கும்பொழுது அவர்கள் உயர்ந்த ஜீவர்களாகிறார்கள். அடிப்படையில் அனைவரும் ஈஷ்வரனே என்றாலும் உபாதியை வைத்துக் குறிப்பிடுகையில், பிரம்மதேவர், விஷ்ணு மற்றும் ருத்ரன் ஜீவர்களாக அறியப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அறியாமை இல்லாததால், அவர்கள் பரமேஷ்வரனாக உள்ளனர். உண்மையில், மூவரையும் சேர்த்து நாம் பரமேஷ்வரன் என்று அழைக்கிறோம்.

அர்ஜுனன் இங்கு கிருஷ்ணரை, ‘ஒப்பற்ற பெருமையுடையவரே, அப்ரதிம ப்ரபா4,’ என்றழைக்கிறான். அவருடைய மஹிமை ஈடு இணையற்றது; அவருடைய சக்திகள் எங்கும் நிகரற்றவை. ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒத்ததான ஒரு சிலையை உருவாக்கி, ‘இது அவர்என்று அச்சிலையை கொண்டு அடையாளப்படுத்துவது சாத்தியம். இவ்விதம் உருவாக்கப்படுவதுப்ரதிமாஆகும். ஆனால் ஈஷ்வரனுக்கு இணையானதான ஒரு ப்ரதிமாவை எப்படி உருவாக்க முடியும்? முழு உலகமும் ஈஷ்வரன். எதுவும் அவரிடமிருந்து வேறானதாக இல்லை. அவருடைய மஹிமையும் வல்லமையும் ஒப்பற்றது. தான் புரிந்த கொண்ட பரமேஷ்வரனை அர்ஜுனன் இவ்விதமாக போற்றுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------