||11.38||பகவானின் பெருமைகளை அர்ஜுனன் விளக்குகிறான்:
त्वमादिदेव: पुरुष: पुराणस्त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप ।। ३८ ।।
த்வமாதி3தே3வ: புருஷ: புராண:
த்வமஸ்ய விச்1வஸ்ய பரம் நிதா4நம் ।
வேத்தாஸி வேத்3யம் ச பரம் ச தா4ம
த்வயா ததம் விச்1வமநந்தரூப ।। 38 ।।
अनन्तरूप அநந்தரூப எண்ணற்ற வடிவங்களை உடையோனே त्वम् த்வம் தாங்கள்
आदिदेव: ஆதி3தே3வ: முதற்கடவுள் पुरुष: புருஷ: எங்குமிருப்பவர் पुराण: புராண: என்றுமிருப்பவர் अस्य विश्वस्य அஸ்ய விச்1வஸ்ய இந்தப் பிரபஞ்சத்திற்கு परं निधानम् பரம் நிதா4நம் மேலான இருப்பிடம் वेत्ता च வேத்தா ச அறிபவனும் वेद्यं च வேத்3யம் ச அறியப்படு பொருளும் परं धाम பரம் தா4ம பெருநிலம் असि அஸி இருக்கிறீர் त्वया த்வயா உங்களால் विश्वम् விச்1வம் உலகம் யாவும்
ततं ததம் வியாபிக்கப்பட்டுள்ளது.
எண்ணற்ற வடிவங்களை உடையோனே, முழுமுதற்பொருளே! தொல்லோனும் இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாங்களே ஆவீர். அறிபவரும், அறியப்படு பொருளும், அருட்பெரு நிலமும் ஆவீர். உங்களால் உலகம் யாவும் நிறைந்துள்ளது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தின் கடைசி வரியின் விளக்கமாகவும், பகவானின் சொரூபம் மற்றும் பெருமைகளை விளக்குவதாகவும் இந்த சுலோகம் அமைகிறது.
=> ஆதிதேவன்:
யாவும் அவரிடத்திருந்து உதயமாவதால் அவரை ஆதிதேவன் என்று அர்ஜுனன் தொடர்ந்து போற்றுகிறான். ‘ஆதி3தே3வ’ என்ற கூட்டுச் சொல்லை இரு விதமாக விளக்கலாம்:
(1) ஆதியில் இருப்பவன்(ஆதி3) மற்றும் கடவுள்(தே3வ), ஆதி3: ச அசெள தே3வ: ச ஆதி3தே3வ.
இரண்டாவதான விளக்கம் சகுணப்ரம்மம் மற்றும் நிர்குணப்ரம்மம் இரண்டையும் குறிப்பதாக உள்ளது.
(2) முதற்கடவுள் அல்லது ஜகத் காரணம்(ஆதி3) மற்றும் சுயமாக பிரகாசிப்பவர், சைத்தன்ய சொரூபமானவர்(தே3வ).
=> மேலான ஒடுங்குமிடம்:
அவர் உலகம் முழுவதையும் நிரப்புபவராகவும், பிரபஞ்சம் என்னும் புரியிலே வாசம் செய்பவராகவும் இருப்பதால் அவர் புருஷன் என்றழைக்கப்படுகிறார். அவருக்கு மூத்தவர் ஒருவருமில்லை. ஆகையால் அவர் புராணன் அல்லது தொல்லோன். மேலும் அவர் என்றுமிருப்பினும், எப்போதும் மாறாமல் புதுமையானவராகவே இருப்பதாலும் அவர் புராண: — புரா அபி நவ:. பகவான் ஜகத்திற்கு காரணமாவராக மட்டுமில்லாமல், படைக்கப்பட்ட அனைத்தும் ஒடுங்குமிடமாகவும் அவரே இருக்கிறார், நிதா4நம் — நிதீ4யதே அஸ்மிந் இதி நிதா4நம். எல்லையற்றவர் என்பதால் ‘பர’. ஒரு கனவில் எவ்விதம் கனவு காண்பவரே அந்த கனவுலகத்திற்கு காரணமோ, மற்றும் அது ஒடுங்குமிடமாகவும் அவரே இருக்கின்றாரோ, அவ்விதம் மஹா பிரளயத்தில் அனைத்துக்கும் பகவானே ஒடுங்குமிடமாக இருப்பதால் அவர் பரம் நிதா4நம். இதை சங்கரர், ‘நிதீ4யதே அஸ்மிந் ஜகத் ஸர்வம் மஹா-ப்ரளயாதெள’, என பாஷ்யத்தில் கூறுகிறார். இது சிருஷ்டியின் இறுதி ஒடுக்கமாகவோ அல்லது முக்தி-அவஸ்தையாகவோ இருக்கலாம். அதிலும் அது ஜீவன்-முக்தி-அவஸ்தையாகவோ அல்லது ஜீவன் ஒடுங்கும் விதேஹ-முக்தி-அவஸ்தையாகவோ இருக்கலாம். ஜீவத்துவம் என்பது மித்யாவாக இருப்பதால் அது காரணத்தில் ஒடுங்குகிறது.
=> அறிபவனும் அறியப்படும் பொருளும்:
அறியும் தன்மை அவரிடத்திருந்து வருவதால் அவர் ‘வேத்தா’. ஆத்மாவின் நிலைபாட்டில் இருந்து பார்க்கும்போது, உலகத்தை அறியும் மனதை, அதன் எண்ணங்களை மற்றும் புத்தியை அறிபவர் — சாக்ஷி. சர்வஞானத்தின்(ஸர்வஞத்வ) நிலைபாட்டில் இருந்து பார்க்கும்போது, அனைத்தையும் அறிபவர். மேலும், அறியப்படு பொருள்களெல்லாம் அவரிடத்திருந்து வந்தவையாதலால் அவர் ‘வேத்3யம்’. அல்லது, நீங்களே அறியப்பட வேண்டியவர், அறிவின் இறுதிப் பொருளாக விளங்குபவர் — வேதந யோக்யம், ஆகையால் ‘வேத்3யம்’.
=> மேலான இருப்பிடம்:
கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் அது ஒடுங்குவது போல உலகம் அவரிடத்து தோன்றி, இருந்து, மறைகிறது. ஆதலால் அவர் எப்போதும் அதற்குப் பெருநிலம் அல்லது ‘பரம் தா4ம’ ஆகிறார்.
‘தா4ம’ எனில் இருப்பிடம், அதிஷ்டானம். ஒருவன் ஆர்வத்துடன் செல்லக்கூடிய இடமாக, விரும்பதக்க இடமாக இருப்பிடம் இருக்கிறது. ஒருவன் செல்ல வேண்டிய இறுதி இடம் பகவான் ஆதலால் ‘பரம் தா4ம’, மேலான இருப்பிடம். எந்தவொரு இடமும் ஒருவன் ஏற்கனவே பார்த்த சில விஷயங்களின் கலவையாகவே இருப்பதால், அவன் எங்கு சென்றாலும், கடைசியில் சலிப்பு ஏற்பட்டு விட்டுவிலகுவான். இங்கிருந்து சொர்க்கத்திற்குப் போனாலும் அதன் பிறகு ஒருவன் எங்கே போவான்? ஒருவன் வேறு எங்கும் செல்ல விரும்பாத இடம் எங்கே? அந்த இறுதி உறைவிடம், பரம்தாமம் எது? எங்கு சென்றால் ஒருவன் திரும்பி வருவதில்லையோ அதுவே இறுதி உறைவிடம். ஜீவன் முற்றிலுமாக ஒடுங்கி ஈஷ்வரனுடன் ஐக்கியமாகும் அந்த இடமே மோக்ஷ ஸ்தானம். இது விஷ்ணுவின் இறுதி உறைவிடம் — பரமம் பதம் வைஷ்ணவம், அதாவது மோட்சம் என்று சங்கரர் கூறுகிறார். இந்த உலகம் முழுவதையும் வியாபித்திருப்பவர் விஷ்ணு, விச்1வ. பல்வேறு விதமாக அறியப்படுவதே விச்1வம், விவித3-ப்ரத்யய-க3ம்யம். ‘விஷ்வம் என்படும் இந்த பலவிதமான பெயர்களும் வடிவங்களும் விஷ்ணுவாகிய உங்களால் வியாபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலக்காரணமாக நீங்களே இருப்பதால் உங்களிடமிருந்து வேறாக எதுவுமில்லை’, என்கிறான் அர்ஜுனன். விஷ்வரூப தரிசனத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அர்ஜுனனுக்கு இவ்விஷயத்தில் எந்த ஐயமும் இருக்கவில்லை. முழு விஷ்வத்தையும் ஈஷ்வரனின் வடிவில் கண்டு கொண்டிருக்கின்றான். அவரது விஷ்வரூபம் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆகையால் எண்ணிக்கைக்கு அடங்காத ரூபத்துடன் இருப்பவரே, அநந்தரூப, என அர்ஜுனன் பகவானை அழைக்கின்றான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.39|| பகவான் இன்னும் என்னவாகிறார் என்பதை தொடர்கிறான்:
वायुर्यमोऽग्निर्वरुण: शशाङ्क: प्रजापतिस्त्वं प्रपितामहश्च ।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्व: पुनश्च भूयोऽपि नमो नमस्ते ।। ३९ ।।
வாயுர்யமோऽக்3நிர்வருண: ச1சா1ங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்1ச ।
நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
புநச்1ச பூ4யோऽபி நமோ நமஸ்தே ।। 39 ।।
त्वं த்வம் தாங்கள் वायु: வாயு: வாயு यम: யம: யமன் अग्नि: அக்3நி: நெருப்பு
र्वरुण: வருண: வருணன் शशाङ्क: ச1சா1ங்க: சந்திரன் प्रजापति: ப்ரஜாபதி: பிரஜாபதி(லோக பிதா) प्रपितामह: च ப்ரபிதாமஹ: ச முப்பாட்டனார் ते தே உங்களுக்கு
नम: नम: நம: நம: திரும்பத் திரும்ப நமஸ்காரம் अस्तु அஸ்து இருக்கட்டும்
सहस्रकृत्व: ஸஹஸ்ரக்ருத்வ: ஆயிரம் முறை पुन: च புந: ச இன்னும்
भूय: अपि பூ4ய: அபி அதற்கு மேலும் ते தே உங்களுக்கு नम: नम: நம: நம: நமஸ்காரங்கள்.
வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீங்கள். உங்களைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன். ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரங்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!”
விளக்கம்:
அர்ஜுனன், பகவானை மீண்டும் சகுணப்ரம்மாக வர்ணித்துத் தனது போற்றுதலைத் தொடர்கிறான். அனைத்தும் பகவானின் மஹிமைகளே. அவரே வாயு, அல்லது வாயு தேவதை. அவரே மரணதேவனான யமன். அவரே அக்நி அல்லது அக்னிதேவன். அவரே நீரின் அதிபதியான வருணன். இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களிடமிருந்து வேறானவைகள் அல்ல என அர்ஜுனன் கூறுகிறான். மேலும் அவன், ‘நீங்களே சந்திரன், நீங்களே பிரஜாபதி’ என்கிறான். காச்யபர், தக்ஷன் முதலிய லோகபிதாக்காளுக்கு பிரஜாபதி என்று பெயர். முதன்முதலாக படைக்கப்பட்ட இவர்களிலிருந்து மற்ற எல்லா உயிர்களும் வந்தன. பின்னர் மீண்டும் அர்ஜுனன், ‘நீங்களே முப்பாட்டனார், ப்ரபிதாமஹ, என்கிறான். பரம் ப்ரம்மத்திலிருந்து பிரம்மதேவர் தோன்றினார். பொதுவாக பிரம்மதேவர் பாட்டனார் என அழைக்கப்படுகிறார். ஆகையால், முப்பாட்டனார் என கிருஷ்ணரை அழைப்பதிலிருந்து, அவரே பரம் ப்ரம்ம என உரைக்கிறான். உங்களை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன் என்கிறான். எத்தனை முறை? ஆயிரம் முறை, ஸஹஸ்ரக்ருத்வ:.
ஆயிரம் முறை உங்களுக்கு நமஸ்காரங்கள் என்று கூறியும் அர்ஜுனன் திருப்தி அடையவில்லை. எனவே, ‘மீண்டும் மீண்டும் உங்களை நமஸ்கரிக்கிறேன் — புந: ச பூ4ய: அபி தே நம: நம:’, என்கிறான். நமஸ்கரிப்பதற்கு முடிவின்மையானது அவனது பக்திப் பெருக்கை விளக்குகிறது. பகவானின் விஷ்வரூபத்தைக் கண்ட அர்ஜுனனின் உயர்ந்த சிரத்தையும், மற்றும் அவனிடமெழுந்த அதீதமான பக்தியும் அவனை ஏதாவது செய்யவேண்டும் எனத் தூண்டுகிறது. சிரம் பணிவதை தவிர அவனால் வேறென்ன செய்யமுடியும்? பொதுவாக மக்கள் அதிகபட்ச நன்றியுணர்வு ஏற்படும்போது, ‘உங்களிடம் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று கூறுவது வழக்கம். அந்த நிலையில்தான் இப்போது அர்ஜுனனும் இருக்கிறான். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பகவானும் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் முடிவற்ற தனது நமஸ்காரங்களை இவ்விதமாக தெரிவிக்கிறான்.
இனி, எங்கு அவரை நமஸ்கரிப்பது? பொதுவாக ஒருவரை நமஸ்கரிக்க, அவரது காலில் விழுவது வழக்கம். ஆனால் இங்கு அர்ஜுனனுக்கோ எது முன், எது பின் எனத் எதுவும் தெரியவில்லை. அனைத்துமே பரமேஷ்வரனாக நிரம்பி இருக்கிறது. ஆகையினால் அடுத்த சுலோகத்தில் தொடர்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.40|| போற்றுதலின் தொடர்ச்சி:
नम: पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्व: ।। ४० ।।
நம: புரஸ்தாத3த2 ப்ருஷ்ட2தஸ்தே
நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ।
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ: ।। 40 ।।
सर्व ஸர்வ எல்லாமானவரே ते தே உங்களுக்கு पुरस्तात् புரஸ்தாத் முன்னும் अथ அத2 அப்படியே पृष्ठत: ப்ருஷ்ட2த: பின்னும் नम: நம: நமஸ்காரம் ते தே உங்களுக்கு
सर्वत: एव ஸர்வத: ஏவ எல்லாப் பக்கங்களிலும் नम: अस्तु நம: அஸ்து நமஸ்காரம் இருக்கட்டும்
अनन्त वीर्य அநந்த வீர்ய: அளவில்லாத வீரியத்தையும் अमित विक्रम: அமித விக்ரம பரந்த பராக்கிரமத்தையும் உடைய त्वं த்வம் தங்களை सर्वं ஸர்வம் அனைத்தையும்
समाप्नोषि ஸமாப்நோஷி நன்கு வியாபித்திருக்கிறீர்கள் तत: தத: அதனால்
सर्व: असि ஸர்வ: அஸி அனைத்துமாய் இருக்கிறீர்கள்.
எல்லாமானவரே, உங்களுக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் நமஸ்காரம். எல்லாப் பக்கங்களிலும் உங்களுக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த பராக்கிரமத்தையும் உடைய நீங்கள் அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர். ஆதலால் நீங்களே அனைத்துமாய் இருக்கிறீர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.
விளக்கம்:
எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய சொரூபம். ஆகையினால் நாலாப்பக்கங்களிலும் அவருக்கு நமஸ்காரம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும்.
எனவே அர்ஜுனன், ‘உங்களுக்கு முன்புறம் எனது நமஸ்காரங்கள் இருக்கட்டும் — நம: புரஸ்தாத்’, என்கிறான். அதாவது கிழக்கு திசையில் தனது வணக்கத்தை வைக்கிறான். ஒரு கோவிலில், இறைவன் பொதுவாக கிழக்கு நோக்கி இருக்கிறார் என்பதால் முன்புறம் என்பதை கிழக்காக எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, ‘பின்புறம், அதாவது மேற்கில் எனது நமஸ்காரங்கள் — அத2 ப்ருஷ்ட2த: தே நம: அஸ்து’. உண்மையில், ‘எல்லாத் திசைகளிலும் எனது வணக்கங்கள் இருக்கட்டும் — ஸர்வத: ஏவ’. ஏனெனில் கிழக்கு மேற்கு மட்டுமல்ல, தெற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு, வடமேற்கு போன்ற இடையிலுள்ள அனைத்து திசைகளிலும் அவன் பகவானையே பார்க்கிறான். ஆகவேதான் அர்ஜுனன் பகவானை எல்லாமானவரே என அழைக்கிறான், ஸர்வ.
=> அளவற்ற சக்தி:
மேலும், ‘ நீங்கள் எல்லையற்ற சக்தியுடையவர், அநந்த வீர்ய:, மற்றும் அளவில்லாத பரந்த பராக்கிரமத்தை கொண்டவர், அமித விக்ரம’ என்கிறான். வீரியம் என்பது வல்லமையைக் குறிக்கிறது. அளவற்ற வல்லமையைக் கொண்டிருக்கும் ஒருவன் அதைக் கையாளாது விட்டுவிடலாம். அதனால் அது வீணாகிறது. ஆனால் பகவான் அத்தகையவரல்ல. தனது முடிவற்ற வல்லமையை எண்ணற்ற விதங்களில் அவர் செயலுக்கு கொண்டு வருகிறார். இந்த ஜகத்தின் நடைமுறையே அதற்குச் சான்று.
மேலும், ‘நீங்களே அனைத்தையும் முழுவதுமாக வியாபித்து இருக்கிறீர்கள், ’ என்கிறான். இங்கு ‘ஆப்நோஸி’ என்ற சொல்லுடன் இணைக்கப்பட்டுள்ள ‘ஸம்’ எனும் முன்னொட்டு எதையும் விட்டுவிடாமல், முழுவதுமாக வியாபித்திருப்பதைக் குறிக்கிறது. பழம் என்று கூறும்போது அதன் சதைப்பகுதி, மேல்தோல், கொட்டை ஆகிய எல்லாப் பகுதிகளும் அதில் அடங்கப்பெறுகின்றன. அவ்விதம் பகவான் என்று கூறும்போது, ஜகத் ஜீவகோடிகள் அனைத்தும் அவரிடத்து அடங்கப் பெறுகின்றன. அவரைப் போற்றுதலில் எல்லாம் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றுதலில் அவர் போற்றப்படுகிறார். ‘நீங்கள் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை’ என்பதை அர்ஜுனன் இவ்விதமாகச் சொல்வதாக சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார். பார்க்கின்ற எல்லா வடிவங்களிலும் பகவானைக் காண்கிறான் அர்ஜுனன். எல்லா நாமரூபங்களும் அவராலேயே நிலைபெற்றுள்ளன. அவரில்லாமல் இங்கு ஒரு பொருளுக்கும் இருப்பே இருக்காது.
=> இனிவருபவை:
அர்ஜுனனும் கிருஷ்ணரும் இளமையில் ஒன்றாக பல துணிச்சலான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும், மற்றும் சமீபத்தில் கிருஷ்ணரைத் தன் தேரோட்டியாகக் கேட்டபோதும், படைகளுக்கு இடையே தேரை நிறுத்தும்படி கட்டளையிட்டபோதும், என பல சந்தர்பங்களில் அவரை எவ்வளவு இலேசாக நடத்தினான் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அர்ஜுனனுக்கு சற்று வருத்தம் உண்டாயிற்று. கிருஷ்ணர் அசாதாரணமானவர் என்பதை அர்ஜுனன் அறிந்திருந்தான்; அவர் ஒரு அவதார புருஷர் என்று கூட கேள்விப்பட்டிருந்தான்; எனினும் அதன் உண்மைப்பொருள் என்னவென்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பரமேஷ்வரனாகவே இருக்கிறார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட அவரை தான் நடத்திய விதத்தை எண்ணி வருத்தப்பட்டு, இனிவரும் சுலோகங்களில் மன்னிப்பு கேட்கிறான். ‘உன் மஹிமையை நான் அறியாததால், செய்யக்கூடாத பலவற்றைச் செய்தேன். எனவே, என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்பதை அர்ஜுனன் இவ்விதங்களில் கூறுவதாக சங்கரர் முன்னுரை கொடுக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------------