சனி, 3 ஆகஸ்ட், 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.32 - 11.34

||11.32||பகவானின் பதில்:

श्रीभगवानुवाच

कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्त:

ऋतेऽपि त्वां भविष्यन्ति सर्वे येऽवस्थिता: प्रत्यनीकेषु योधा: ।। ३२ ।।

ஸ்ரீப43வாநுவாச

காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்3தோ4

லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:

ருதேऽபி த்வாம் 4விஷ்யந்தி ஸர்வே

யேऽவஸ்தி2தா: ப்ரத்யநீகேஷு யோதா4: ।। ३२ ।।


श्रीभगवान्  ஸ்ரீப43வான்  ஶ்ரீ பகவான்    उवाच   உவாச  சொன்னது

लोक क्षय कृत्  லோக க்ஷய க்ருத்  உலகங்களை அழிக்கின்ற    

प्रवृद्ध: काल:  ப்ரவ்ருத்34: கால:  பெருவல்லமையுடைய காலமாக   अस्मि  அஸ்மி  இருக்கிறேன்      

लोकान्  லோகாந்  லோகங்களை     समाहर्तुम्  ஸமாஹர்தும்  சம்ஹாரம் செய்ய       इह  இஹ  இங்கே     

प्रवृत्त:  ப்ரவ்ருத்த:  தலைப்பட்டிருக்கிறேன்     त्वां  த்வாம்  நீ    ऋते अपि  ருதே அபி  இல்லாமலும்      

प्रत्यनीकेषु  ப்ரத்யநீகேஷு  எதிர்த்துள்ள சேனைகளில்     ये योधा:  யே யோதா4:  எந்தப் போர் வீரர்கள்    अवस्थिता:  அவஸ்தி2தா:  அணிவகுத்து நிற்கின்றார்களோ    सर्वे  ஸர்வே  அவர்கள் எல்லாரும்   

भविष्यन्ति  4விஷ்யந்தி  வாழமாட்டார்கள்.


உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களைச் சம்ஹாரம் செய்ய தலைப்பட்டிருக்கிறேன். நீ போரினின்று பின்வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லாரும் வாழமாட்டார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்.


விளக்கம்:

=> யார் நீங்கள்?

நீங்கள் யார்?’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, ‘நான் வல்லமை பொருந்திய காலம்என்று பகவான் விடைத் தருகிறார். பகவானுக்கு இருக்கும் பல அம்சங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. சிருஷ்டியை உருவாக்குவதும் அதைக் காப்பதும் மட்டும் எனது தொழில் அல்ல; அந்த அழகான செயல்களுக்கு மத்தியில் இந்த அழிக்கின்ற செயலும் என்னுடையதே, என்கிறார். எனவே தன்னை அவர் இங்கு காலம் அல்லது மரணம் என்னும் பொருளைத் தரும்காலஎன்ற சொல்லின் மூலம் வரையறுக்கிறார். காலம் என்பது முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. பொதுவாக செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. ஆனால் செயல்களுக்கே அது அளவையாக ஆகிறது. மீதமுள்ள நான்கு பூதங்களையும் எப்படி ஆகாசமானது தன்பால் அடக்கி வைத்திருக்கிறதோ அதுபோல காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது. ஆகையினால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப் போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்கள் யாவும் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணும்போது அண்டங்களின் செயல்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. இவ்வாறு நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலம் பகவத் சொரூபமாகவே உள்ளது


=> உங்களது செயல் யாது?

உங்களது செயல் யாது?’ என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தனது பிரவிருத்தி என்று பகவான் கூறுகிறார். இங்குலோகஎன்பது உலகங்களை, அதாவது மக்களைக் குறிக்கிறது. ‘மக்களுக்கு முடிவைத் தருகின்ற காலமாக, மரணத்தின் தலைவனாக நானே இருக்கிறேன்’. தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக் கொண்டிருப்பதுபோல பெருவாரியாகவும் சில வேளைகளில் விழுங்க வேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் என்பது அத்தகையதொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருவாரியாக அழிவது என்பது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈஷ்வரனின் செயலே ஆகும். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்கவேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை.

நான் இங்கு உலகங்களைச் சம்ஹாரம் செய்ய தலைப்பட்டிருக்கிறேன், அதுவே எனது செயல்பாடு’, என அர்ஜுனனின் கேள்விக்கு நேரடியாக பகவான் பதிலளிக்கிறார். ‘இங்கு_இஹஎன்பது இந்த நேரத்தில் இந்த இடத்தில் என்பதைக் குறிக்கிறது. ‘இங்கு இப்போது நான் இவர்களையெல்லாம் அழிப்பதில் ஈடுபட்டிருக்கிறேன்’. எனவே அர்ஜுனன் இப்போது அவரை அழிக்கின்ற ருத்ரனாகப் பார்க்கிறான்.


=> எல்லாரும் அழிவது திண்ணம்:

இறைவனே அனைத்தும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. படைப்பதும் காப்பதும் மட்டுமல்ல, அழிப்பவதும் அவரேயாம். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை உண்டாக்கும் நியதியும் அவரேயாம். ஆகவே, ‘நீ இல்லாவிட்டாலும், போரிலிருந்து பின்வாங்கினாலும், த்வாம் ருதே அபி, இவர்களெல்லாம் இங்கே இருக்கப்போவதில்லை, 4விஷ்யந்தி, என்கிறார் பகவான். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற இங்கு எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் எல்லா போர்வீரர்களும் வாழமாட்டார்கள்யே அவஸ்தி2தா: ஸர்வே யோதா4: 4விஷ்யந்தி. இருபுறமும் போருக்காகத் தயாராக இருக்கும் இவர்கள், எல்லாம் முடியும்போது அங்கு இருக்கப் போவதில்லை. இவர்களின் அழிவு விதிக்கப்பட்டுவிட்டது. இவர்களின் கர்மவினை இவ்விதத்தில் வெளிப்படுகிறது அவ்வளவே. இதை யாராலும் தடுக்க இயலாது. ‘ஆகவே அர்ஜுனா, நீ இல்லாவிட்டாலும் அவர்கள் அழிந்து போவார்கள்என்கிறார் பகவான்

பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொறுத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகிறான்.

அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள் என பகவான் கூறிவிட்டார். அப்படியானால்நான் ஏன் யுத்தம் செய்யவேண்டும்?’ என அர்ஜுனன் நினைக்கலாம். அதற்கு அடுத்த சுலோகத்தில் விடை வருகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.33|| நிமித்தகாரணமாக இரு:

तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्यं समृद्धम्

मयैवैते निहता: पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् ।। ३३ ।।

தஸ்மாத்த்வமுத்திஷ்ட2 யசோ1 லப4ஸ்வ

ஜித்வா 1த்ரூந் பு4ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்34ம்

மயைவைதே நிஹதா: பூர்வமேவ

நிமித்தமாத்ரம் 4 ஸவ்யஸாசிந் ।। 33 ।।


तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்   त्वं  த்வம்  நீ    उत्तिष्ठ   உத்திஷ்ட  எழுந்திரு   यश:  யச1:  கீர்த்தியை   

लभस्व  லப4ஸ்வ  அடைக    शत्रून्  1த்ரூந்  எதிரிகளை    जित्वा  ஜித்வா  ஜெயித்து    

समृद्धम्  ஸம்ருத்34ம்  செல்வம் நிறைந்த    राज्यं   ராஜ்யம்  ராஜ்ஜியத்தை     भुङ्क्ष्व  பு4ங்க்ஷ்வ  அனுபவி     

मया एव  மயா ஏவ  என்னாலேயே     एते  ஏதே  இவர்கள்    पूर्वं एव  பூர்வம் ஏவ  முன்பே     निहता:  நிஹிதா:   கொல்லப்பட்டிருக்கிறார்கள்     सव्यसाचिन्   ஸவ்யஸாசிந்   இடதுகையால் அம்பு எய்தும் திறனுடையவனே    निमित्तमात्रं   நிமித்தமாத்ரம்   நிமித்தகாரணமாக மாத்திரம்   भव  4  இருப்பாயாக.           


ஆகையால் நீ எழுந்திரு; புகழைப் பெறு. எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி. இவர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இடது கையாலும் அம்பு எய்யும் வீரா, நீ நிமித்தமாக மாத்திரம் இரு


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.


விளக்கம்:

=> கடமையைச் செய்:

ஆகையினால் நீ எழுந்திருதஸ்மாத் த்வம் உத்திஷ்ட, என்கிறார் பகவான். ‘தயவு செய்து எழுந்து நின்று போரிடுஎனக் கூறுவதன் மூலம் சொல்லப்படுவது யாதெனில்உனது கடமையைச் செய்’. இதுவே முழு கீதையின் உபதேசமாகவும் வாதமாகவும் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ஞானம் மட்டுமே மோக்ஷத்திற்கான வழி, அதைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை கீதை தெளிவுபடுத்துகிறது. விடுதலையை அடைய விரும்பும் முமுக்ஷு ஒருவன் ஞானத்தை அடைய வேண்டும். அதற்கு சந்யாசம் மற்றும் கர்மயோகம் எனும் இரு வாழ்க்கை முறைகள் உள்ளன. துறவு வாழ்க்கை சந்யாசத்தையும், ஈஷ்வரார்ப்பண-புத்தியுடன் ஒருவனது கடமையைச் செய்தல் கர்மயோகத்தையும் குறிக்கிறது. சில சமயங்களில் போரும் கூட கடமையாக வந்து நிற்கும். அப்படித்தான் இங்கும் அர்ஜுனனுக்கு இந்த மகாபாரத யுத்தம் கடமையாக அவன் முன் நின்று கொண்டிருக்கிறது. இது வெறும் போர் மட்டுமல்ல, தர்மத்திற்கானப் போராட்டம். அர்ஜுனனுக்கு இந்தப் போரில் நாட்டமில்லை என்றபோதிலும், அவன் ஒரு க்ஷத்ரியன் என்பதால் அவனது நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் அவனது தன்னறம். எனவே சுவதர்மத்தின் பொருட்டு இந்தப் போரை அவன் செய்யவேண்டும்; அது அவனது கடமை. எனவே கிருஷ்ணர், ‘எழுந்து போரிடு. உனது கடமையைச் செய். தர்மத்தை காப்பது உனது தன்னறம்; ஆகவே செய்ய வேண்டியதைச் செய்’, என்கிறார்.


=> புகழை, ராஜ்ஜியத்தை அனுபவி:

தன்னறத்திற்காக செய்யப்படும் இந்த யுத்தத்தினால் அர்ஜுனன் சில கூடுதல் நன்மைகளைப் பெறுவான். ‘நீ புகழைப் பெறு’, யச1: லப4ஸ்வ, என்கிறார். அர்ஜுனன் தர்மத்தின் பக்கம் நின்றான் என காலத்திற்கும் அறியப்படுவான். பீஷ்மர், துரோணர் போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து நிற்க வேண்டிய நிலை இருந்தும் அவன் பின்வாங்கவில்லை. நீதியை நிலைநாட்டும் பொருட்டு பயப்படாமல் போர் புரிந்தான் என்ற புகழ் கிடைக்கும். மேலும் பகவான், எதிரிகளை வென்று புகழ் பெறுவதோடு மட்டுமல்லாமல் செல்வம் நிறைந்த வளமான ராஜ்ஜியத்தையும் அனுபவிப்பாய், 1த்ரூந் ஜித்வா ஸம்ருத்34ம் ராஜ்யம் பு4ங்க்ஷ்வ, என்கிறார்.

ஆயிரமாயிரம் தேர்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய மிக உயர்ந்த போர்வீரர்களாகவும் தேவர்களாலும்கூட வெல்ல முடியாதவர்களாகவும் உள்ள பீஷ்மர், துரோணர் போன்றவர்களை அர்ஜுனன் வென்றான் என்று சங்கரர் கூறுகிறார். இதன் காரணமாக அவன் பெரும் புகழ் பெற்றான். இத்தகைய புகழை சாதாரண மனிதர்களால் அடைய முடியாது; புண்ணிய புருஷர்களால் மட்டுமே அடைய முடியும். இவர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன், அர்ஜுனன் ஒரு வளமான ராஜ்ஜியத்தை, எதிரிகளால் சூழப்படாத ராஜ்ஜியத்தை அனுபவிப்பான். அது ஒரு நிகரற்ற சாம்ராஜ்ஜியமாக இருக்கும் என சங்கரர் மேலும் கூறுகிறார்


=> கருவியாக இரு:

இவர்கள் ஏற்கனவே என்னாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள்மயா ஏவ ஏதே நிஹிதா: பூர்வம்’, என பகவான் கூறுகிறார். கர்மவினையை முன்னின்று நடத்துகிற காலமெனும் இறைவனால் அவர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். நேரம் வந்துவிட்டது; அவர்களின் மரணத்தை நான் நிச்சயம் செய்துவிட்டேன். ஆகவே அர்ஜுனா, நீ நிமித்த மாத்திரமாக, வெறும் கருவியாக இருநிமித்தமாத்ரம் 4, என்கிறார். முழுவதுமாக பழுத்துவிட்ட ஒரு பழமானது காற்றின் வேகத்தில் விழுந்தால், அந்த காற்று அங்கு ஒரு கருவி மட்டுமே, நிமித்தமாத்திரம். பழம் ஏற்கனவே விழத் தயாராக இருந்தது.


=> கரணமா? அல்லது கர்த்தாவா?

ஜீவர்களாகிய நாம் பகவானிடம் வெறும் கருவியா அல்லது செயலை செய்யும் கர்த்தாவா? என சிறிது விசாரம் செய்யலாம். ‘கரணம்எனில் கருவி, அது எப்போதும் ஒரு கர்த்தாவைச் சார்ந்தே செயல் செய்கிறது. ஒரு வண்டியோ அல்லது பேனாவோ செயல்பட அதைக் கையாள்பவனின் உதவி தேவை. ஆகவே அவை கருவிகள் எனப்படுகின்றன. ‘கர்த்தாஎனில் செயல் செய்பவன், எதையும் சாராமல் சுதந்திரமாகச் செயல்படுவனைக் குறிக்கிறது. இனி நாம் எழுப்பிய கேள்விக்கான பதிலைப் பார்க்குமிடத்து, ஜீவர்களாகிய நாம் கர்த்தா. ஏனெனில் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் உள்ளது

இனி, எங்கு தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதோ அங்குதான் குழப்பமும் மோஹமும் வருகிறது. அதனால் கருவியுடன் ஒப்பிடுகையில், கர்த்தாவிற்குத்தான் முரண் வருகிறது. ஆகையினால் கர்த்தாவிற்குத்தான் பாப-புண்ணியம் வருகிறது. கரணத்திற்கு பந்தமும் இல்லை; ஆகவே மோக்ஷமும் இல்லை

இந்த சுலோகத்தில், பகவான் நிமித்தமாத்திரமாக இரு என்கிறார். அதாவது, நீ எனக்கு கரணமாக இரு. அல்லது உன்னுடைய தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டு, நீ எனக்கு கருவியாக இருக்கின்ற முடிவைத் தேர்ந்தெடு. அதர்மமே அவர்களை அழிக்கின்றது; நீ நிமித்தம், ஒரு கருவி மட்டுமே.


=> அம்பெய்து:

அர்ஜுனன் இங்கு பகவானால்ஸவ்யஸாசிந்’, இடது கையால் அம்புகளை எய்தும் திறன் கொண்டவனே, என அழைக்கப்படுகிறான். அதாவது, இரு கைகளையும் ஒப்பான திறனுடன் செயல்படுத்துபவன். அவனால் வலது கையினால் எந்த திறனுடன் அம்பெய்த இயலுமோ அதே திறனுடன் இடது கையினாலும் அம்பெய்த முடியும். அர்ஜுனனின் வீரத்தை நினைவுபடுத்துவதற்காக கிருஷ்ணர் இந்த அடைமொழியை இங்கே பயன்படுத்தியிருக்கலாம், இதனால் அவன் போரிடத் தூண்டப்படுவான்.

ஆகவே, நீ முற்றிலும் ஒரு கருவியாக இருப்பாயாகஎன்கிறார். அவன் செய்ய வேண்டியதெல்லாம் சில அம்புகளை எய்துவது மட்டும்தான். பகவானுடைய இந்த பெரும் திட்டத்தில் அது மட்டுமே அவன் பங்கு. அர்ஜுனன் விரும்பாத ஒன்று அவன் முன் நடப்பதிலிருந்தே இது அவனது பிராரப்தம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவையனைத்திற்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்கிறது. எனவே, கிருஷ்ணர் கூறுகிறார், ‘உனது விருப்பத்தை இதில் கொண்டு வந்து முழு விஷயத்தையும் குழைக்க வேண்டாம். ஏனெனில், இங்கே உனது விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கும் எந்தவொரு முடிவும் அதர்மமாகும். ஆகவே எது செய்யப்பட வேண்டுமோ அதை மட்டும் செய். என்ன செய்யப்பட வேண்டும் என்பதும் இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. ஆதலால் அர்ஜுனா, எழுந்திரு, இந்தப் போரில் ஒரு கருவியாக மட்டும் இருஎன்கிறார் பகவான்.

அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை என்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்த வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்த சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றவன் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயிருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன.

தான் கண்ட காட்சி மனதின் கற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற சந்தேகமும் அர்ஜுனனுக்கு வரலாம். அவைகளை நீக்குதற்கு அடுத்த சுலோகத்தில் பகவான் மேலும் தொடர்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.34|| பகவான் தொடர்கிறார்:

द्रोणं भीष्मं जयद्रथं कर्णं तथान्यानपि योधवीरान्

मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान् ।। ३४ ।।

த்3ரோணம் பீ4ஷ்மம் ஜயத்3ரத2ம்

கர்ணம் ததா2ந்யாநபி யோத4வீராந்

மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி2ஷ்டா2

யுத்4யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ।। 34 ।।


मया  மயா  என்னால்    हतान्  ஹதாந்  கொல்லப்பட்டிருக்கிற    द्रोणं   த்3ரோணம்   துரோணரையும்   

भीष्मं   பீ4ஷ்மம்   பீஷ்மரையும்    जयद्रथं   ஜயத்3ரத2ம்   ஜயத்ரதனையும்   कर्णं  கர்ணம்  கர்ணனையும்    तथा  ததா2  அப்படியே     अन्यान्  அந்யாந்  மற்ற      योधवीरान् अपि  யோத4வீராந் அபி  யுத்தவீரர்களையும்    

त्वं  த்வம்  நீ    जहि  ஜஹி  கொல்    मा व्यथिष्ठा:  மா வ்யதி2ஷ்டா2:  அஞ்சி வருந்தாதே     

रणे  ரணே   யுத்தத்தில்    सपत्नान्  ஸபத்நாந்  எதிரிகளை    

जेतासि  ஜேதாஸி  வெல்வாய்    युध्यस्व  யுத்4யஸ்வ  போர்புரி.


என்னால் கொலையுண்ட துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ஙனம் மற்ற போர்வீரர்களையும் நீ [என் கருவியாயிருந்து] கொல். அஞ்சி வருந்தாதே; போரில் பகைவரை வெல்வாய், போர்புரி.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.


விளக்கம்:

துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதல்ல என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, இத்தகைய ஜாம்பவான்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் அர்ஜுனனுக்கு எழலாம். அதை நீக்கும்பொருட்டு அவர் இதைப் பகர்கிறார்

இத்தனை போர்வீரர்களில் துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன் மற்றும் கர்ணனை மட்டும் ஏன் பகவான் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்? எதிர்ப்படையில் நின்று கொண்டிருக்கும் அனைத்து வீரர்களிலும் இவர்கள் வலிமையானவர்கள் என சங்கரர் அதற்கு காரணம் கூறுகிறார்.


=> வலிமைமிக்க வீரர்கள்:

ஆயுர்வேதம் முதலிய நான்கு உபவேதங்களில் ஒன்றான தனுர்வேதத்தில் தேர்ச்சி பெற்றவர் துரோணர். அம்புகள் தனது செயல்திறனை துல்லியமாகக் கொடுப்பதற்கும், தெய்வீக ஆயுதங்களை பெறுவதற்கும் ஏற்ற மந்திரங்கள் அதில் உள்ளன. ஆகவே அவர் தெய்விக அஸ்திர சஸ்திரங்களையுடையவர் ஆகிறார். அதுமட்டுமின்றி, துரோணாசாரியர் அர்ஜுனனின் குரு ஆவார். போரில் அவரை எதிர்த்து அர்ஜுனன் எப்படி நிற்கப் போகிறான்?

அர்ஜுனனின் அன்பிற்குரிய பாட்டனாராகிய பீஷ்மர், தான் இறக்கும் நேரத்தை அவரே தீர்மானிக்க முடியும் என்கிற வரம் பெற்றவர். அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் யாரும் அவரை வென்றது கிடையாது. குரு குலத்தின் இந்த மரியாதைக்குரிய மூதாதை, அவதாரமான பரசுராமருடன் சண்டையிட்டுள்ளார். இப்படிப்பட்ட சக்திவாய்ந்த எதிரிகளை எப்படி வெல்லப் போகிறோம் என்பதில் இயற்கையாகவே அர்ஜுனனுக்கு சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும்.

ஜயத்ரதனுடைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்து பூமியில் விழும் எனும் வரத்தை அவன் தனது தந்தையிடமிருந்து பெற்றான். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம் ஆகிறது.

இனி கர்ணனின் விஷயமும் அப்படியே இருக்கிறது. அர்ஜுனனின் பரம எதிரியான கர்ணன், ஆயுதத்திலும் வீரத்திலும் அர்ஜுனனுக்கு நிகரானவன். அர்ஜுனனைக் கொல்வதே கர்ணனின் லட்சியமாக இருந்தது. குந்திக்கு சூரிய பகவானின் அருளால் பிறந்த கர்ணன், இந்திரனிடமிருந்துசக்திஎன்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். அர்ஜுனனைக் கொல்வதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான்

இப்போது அர்ஜுனனுக்கு முன்னால் இருக்கின்ற துரியோதனனின் படையில் முக்கியமானவர்களாக விளங்கும் இவர்கள் அனைவரும் தொட முடியாத வீரர்கள். இத்தகைய சிறப்பு பொருந்திய வலிமைமிக்க வீரர்களை தன்னால் தோற்கடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு.  

 

=> ஆகவே, போரிடு:

இவர்கள் மட்டுமல்லாது மற்ற பெருமை பொருந்திய வீரர்களும் எதிரிப்படையில் இருந்தனர். ஆனால் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னால் அழிக்கப்பட்டுவிட்டனர். அத்தகையவர்களை நீ கொல், மயா ஹதாந் த்வம் ஜஹிஎன்று உறுதியளிக்கிறார். அதாவது அர்ஜுனன் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கனவே தங்களது அழிவை தாங்களே கொண்டு வந்துள்ளனர். பகவான் இங்கு வெறுமனே கர்மநியதிக்கு தலைமைத் தாங்குகிறார். இதன்மூலம் அவர்கள் தேடிய அழிவை அவர்களே அறுவடை செய்வார்கள். அதை யாராலும் தடுக்க இயலாது. எனவே கிருஷ்ணர், ‘நீ அவர்களைக் கொல்லலாம்த்வம் ஜஹிஎன்கிறார்.

பகவான் அவர்களைத் துடைக்கத் திருவுளங் கொண்டுள்ளார். சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்பு போன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாக இருப்பது அர்ஜுனனின் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற புகழ் அவனுக்கு கிடைக்கும். இக்கருத்துக்களை பகவான் பார்த்தனுக்கு தெளிவுறுத்துகிறார். எனவே கிருஷ்ணர் தொடர்கிறார், ‘அஞ்சி வருந்தாதேமா வ்யதி2ஷ்டா2:’, போர்களத்தில் இந்த எதிரிகளை நீ வெல்வாய்ரணே ஸபத்நாந் ஜேதாஸி’, போர்புரியுத்4யஸ்வ. அவர்களுக்கு விசேஷமான சக்திகள் இருந்தாலும், இந்த பெரிய மனிதர்கள் ஏற்கனவே மரணத்தின் வாயிலை மிதித்து விட்டனர். நீ அதை தடுக்கப் போவதில்லை’. 

இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான் என்பதை அடுத்த சுலோகத்தில் சஞ்ஜயன் விளக்குகிறார். முழு கீதையும் போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் தெரிவிப்பதைத் தவிர வேறில்லை. அதில் பெரும்பாலானவை

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல்; அது அப்படியே அவர்களுடைய வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சில இடங்களில் சஞ்ஜயன் தனது வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------