||11.17|| அர்ஜுனன் மேலும் தொடர்கிறான்:
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ताद् दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ।। १७ ।।
கிரீடிநம் க3தி3நம் சக்ரிணம் ச
தேஜோராசி1ம் ஸர்வதோ தீ3ப்திமந்தம் ।
பச்1யாமி த்வாம் து3ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா
த்3தீ3ப்தாநலார்கத்3யுதிமப்ரமேயம் ।। 17 ।।
किरीटिनं கிரீடிநம் கிரீடமுடையவரே गदिनं க3தி3நம் கதையையுடையவரே
चक्रिणं च சக்ரிணம் ச சக்கரத்தையும் உடையவரே सर्वत: ஸர்வத: எங்கும்
दीप्तिमन्तम् தீ3ப்திமந்தம் பிரகாசிக்கும் तेजोराशिं தேஜோராசி1ம் ஒளிப்பிழம்பை
दुर्निरीक्ष्यं து3ர்நிரீக்ஷ்யம் கண்கொண்டு காண்பதற்கு அரியவராய்
दीप्त अनल अर्क द्युतिम् தீ3ப்த அநல அர்க த்3யுதிம் கொளுத்துகின்ற தீயும் சூரியனும் போன்றவரை
अप्रमेयम् அப்ரமேயம் அளவிட முடியாதவரை त्वां த்வாம் உங்களை
समन्तात् ஸமந்தாத் எங்கும் पश्यामि பச்1யாமி பார்க்கிறேன்.
கிரீடம் தரித்து, கதை தாங்கி, சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிழம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.
விளக்கம்:
=> விஷ்ணுவின் வடிவம்:
நாம் அன்றாடம் வழிபடும் வடிவில், அதாவது கிரீடம் அணிந்து, கைகளில் சூலாயுதமும் சக்கரமும் தரித்த விஷ்ணுவின் வடிவிலும் பகவானைக் காண்பதாகக் கூறுகிறான் அர்ஜுனன். நாம் வழிபடும் மூர்த்தியில், நீட்டப்பட்டதாக காணப்படும் மூன்றாவது கை, அடைக்கலம் மற்றும் பாதுகாப்பைக் குறிப்பதாகவும் மற்றும் அவரின் பாதங்களைச் சுட்டும் நான்காவது கையானது, ‘என்னைச் சரணடைந்தவர்களை நான் காக்கிறேன்’ என்று கூறுவதாகவும் உள்ளது. மற்ற இரண்டு கைகளும் அழிப்பதைக் குறிப்பவனவாக உள்ளன. இதனால்தான் விஷ்ணு அல்லது ஈஷ்வரனின் வேறு எந்த வடிவமும் நான்கு கைகளுடன் சித்தரிக்கப்படுகிறது. ‘எதற்கும் பயப்படத் தேவையில்லை, உங்களைப் பாதுகாக்கத் தேவையானவைகள் என்னிடம் உள்ளன’ என்பதைக் காட்டுவதைபோல, இரு கைகள் ஆயுதங்கள் ஏந்திக் காணப்படுகின்றன. ‘க3தா3’ எனும் ஆயுதம் அருகிலிருக்கும் அச்சுறுத்தலை கவனித்துக் கொள்கிறது. மேலும் ‘சக்ர’ என்பது தூரத்திலிருக்கும் ஆபத்துக்களை அழிக்கவல்லது. எவ்வளவு தூரமும் பயணித்து அது எதிரிகளை அழித்துவிடும். இதன்மூலமாக பகவான் அபயத்தைத் தருகிறார். ஒருவனின் அருகிலும் தொலைவிலும் உள்ள சம்சாரம் எனும் ஆபத்தை அழித்து காத்தருள்கிறார் பகவான் என்பதை இவைகள் குறிக்கின்றன. மக்களால் அவாகனம் செய்யப்படும் விஷ்ணுவின் இந்த வடிவத்திலும் அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்க்கிறான்.
=> ஒளிப்பிழம்புகள்:
மேலும் எங்கும் வீசும் ஒளிப்பிழம்பாய் காண்கிறான் — தேஜோராசி1ம். ‘எங்குப் பார்த்தாலும் சைத்தன்யமாக விளங்கும் அந்த ஒளியைத் தவிர வேறெதுவுமில்லை. அதற்குள்தான் அனைத்தும் இருக்கின்றது’ என்கிறார் சங்கரர். கண்கொண்டு பார்க்கமுடியாத அளவு ஒளிவிடும் அந்த ஒருங்கிணைந்த ஒளிகளின் கூட்டத்தை சிரமத்துடன்தான் காண முடிகிறது(து3ர்நிரீக்ஷ்யம்) என்பதாகக் கூறுகிறான்.
கொளுத்துகின்ற தீயும் சூரியனும் அல்லது மின்னலையும் போன்ற ஒளியானது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அர்ஜுனன் பார்க்கிறான்.
=> அளவிட முடியாதது:
மேலும் இந்த வடிவத்தை அர்ஜுனன், ‘அப்ரமேயம்’ என வர்ணிக்கிறான். பொதுவாக ‘அப்ரமேயம்’ எனில் ஒரு அறிபொருளாக பார்க்கமுடியாதது என்பது பொருள். ஆத்மா அப்ரமேயம். ஆத்மா என்பது ஒருவனின் சுயமாகவே இருப்பதால் அதை தன்னிலிருந்து வேறானதாக, அறிபொருளாகப் பார்க்க முடியாது. ஆனால் இங்கு அச்சொல் அந்தப் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. ஒரு பூவை அறியும்போது ஒரே எண்ணத்தில்(வ்ருத்தி) மற்ற எல்லா பொருள்களும் தவிர்க்கப்பட்டு பூ மட்டும் மனதில் நிற்கிறது. ஆனால் இந்த விஷ்வரூபத்தை அப்படி ஒரே வ்ருத்தியில் அடக்கிவிட முடியாது. ஒரு வரையறுக்கப்பட்ட வடிவமாக இந்த விஷ்வரூபத்தை புரிந்துகொள்ள முடியாது என்பது இதன் பொருள். எனவே அர்ஜுனன், இதுதான் நீங்கள் என என்னால் கூற இயலவில்லை, ஏனெனில் அனைத்துமே நீங்களாகவே இருக்கிறீர்கள்’, அப்ரமேயம் பச்1யாமி, என்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.18|| விஷ்வரூபத்துடன் கூடிய ஈஷ்வரனின் நிர்குண தத்துவத்தை வர்ணிக்கிறான்:
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्यय: शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ।। १८ ।।
த்வமக்ஷரம் பரமம் வேதி3தவ்யம்
த்வமஸ்ய விச்1வஸ்ய பரம் நிதா4நம் ।
த்வமவ்யய: சா1ச்1வதத4ர்மகோ3ப்தா
ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே ।। 18 ।।
त्वम् த்வம் தாங்கள் अक्षरं அக்ஷரம் அழியாப் பொருள் परमं பரமம் பரம்பொருள்
वेदितव्यं வேதி3தவ்யம் அறியவேண்டிய பொருள் त्वम् த்வம் தாங்கள்
अस्य विश्वस्य அஸ்ய விச்1வஸ்ய இந்த பிரபஞ்சத்துக்கு परं பரம் மேலான
निधानम् நிதா4நம் இருப்பிடம் त्वम् த்வம் தாங்கள்
अव्यय: அவ்யய: மாறாதவர் शाश्वत धर्म गोप्ता சா1ச்1வத த4ர்ம கோ3ப்தா என்றுமுள்ள தர்மத்தை பாதுகாப்பவர் त्वम् த்வம் தாங்கள் सनातन: ஸநாதந: எப்பொழுதுமிருப்பவர்
पुरुष: புருஷ: பரமாத்மா என்று मे मत: மே மத: என்னால் அறியப்படுகிறீர்.
தாங்கள் அழியாப் பரம் பொருள்; அறியத்தகுந்தவர்; இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடமாக இருப்பவர்; மாறாதவர்; என்றுமுள்ள தர்மத்தை பாதுகாப்பவர்; எப்பொழுதுமிருக்கின்ற பரமாத்மா தாங்கள் என என்னால் அறியப்படுகிறீர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; ‘சநாதன புருஷன்’ நீயெனக் கொண்டேன்.
விளக்கம்:
பகவானின் விஷ்வரூபக் காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் அதை இவ்வாறு சித்தாந்தப்படுத்துகிறான். விஷ்வரூபத்துடன் கூடிய ஈஷ்வரனின் நிர்குண தத்துவத்தை வர்ணிக்கிறான்.
கிருஷ்ணரின் இந்த விஷ்வரூப வடிவிலுள்ள அனைத்தையும் பார்க்கும் அர்ஜுனன், பகவானை எல்லாவற்றிற்கும் காரணமான(ஜகத்-காரண) பரம் ப்ரம்ம என்கிறான். அதாவது இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் அழியக்கூடிய மாயையுடன் கூடிய இந்த ரூபம் மட்டும் உங்களின் சொரூபமல்ல; அதற்கு காரணமான பரப்ரம்மமாக நீங்களே இருக்கிறீர்கள், என்கிறான். சாஸ்திரத்திலிருந்து அறிந்தவைகளை தற்போது உண்மையாகவே பார்க்கிறான். நீங்களே அறியத்தகுந்தவர் — வேதி3தவ்யம். பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியப்பட வேண்டியவர்; அறியத்தகுந்தவர்.
=> மேலான உறைவிடம்:
‘நிதா4நம்’ எனில் உறைவிடம் என்பது பொருள். ‘பரம் நிதா4நம்’ என்பது மேலான இருப்பிடத்தை அதாவது மூலக்காரணத்தைக் குறிக்கிறது. இந்த உலகிற்கு நீங்களே மேலான இருப்பிடமாக உள்ளீர்கள் — அஸ்ய விச்1வஸ்ய பரம் நிதா4நம். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடமாக இருப்பது பரமாத்மா. பானையின் மூலகாரணமாக களிமண்ணும், நகையின் மூலகாரணமாக தங்கமும் இருப்பதைப் போல அனைத்தினுடைய மூலக்காரணமாக நீங்கள் இருக்கிறீர்கள், என்கிறான் அர்ஜுனன்.
=> மாறாதவர், தர்மத்தைக் காப்பவர்:
‘அவ்யய:’ எனில் மாறாதவர். உலகம் அழியும்போதும் நீங்கள் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை; அழிவதில்லை. நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் காரணமாக விளங்குவது மாயை ஆகும். இந்த மாயையானது ப்ரம்மத்தை சார்ந்துள்ளது. ப்ரம்மமானது மாயைக்கு இருத்தலையும், விளங்குதலையும், செயல்படுதலையும் கொடுக்கிறது. இந்த விஷ்வரூபத்திலுள்ள அனைத்து வடிவங்களும் உங்களைச் சார்ந்து இருப்பதால், நீங்கள் எந்த மாற்றத்தையும் அடையாத ப்ரம்ம என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது என்பதாக அர்ஜுனன், நீங்கள் மாறாதவர் — த்வம் அவ்யய:, என்கிறான்.
‘என்றுமுள்ள தர்மத்தை காப்பவர்’ என்கிறான் அர்ஜுனன் — சா1ச்1வத த4ர்ம கோ3ப்தா. ‘சா1ச்1வத த4ர்ம’ என்ற சொல்லை ‘நித்ய த4ர்ம’ என்பதாக சங்கரர் விளக்குகிறார். அதாவது இந்த ஒழுக்கநெறிகள் மாறாததாக என்றுமுள்ளதாக இருப்பதாலேயே ஒரு சிருஷ்டி முடிந்து, பின் அடுத்த சிருஷ்டியின்போதும் அவை அதே வடிவத்தில் உருவாகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்மத்தின் பாதுகாவலனாக நீங்களே உள்ளீர்கள்.
=> அர்ஜுனனின் அனுமானம்:
‘ஸநாதந’ எனில் எப்பொழுதுமிருப்பவர். ‘புருஷ:’ எனில், (1) பூர்ணமாக இருப்பவர், (2) எல்லா சரீரத்திலும் இருப்பவர். இவைகளனைத்தையும் கூறியபின் அர்ஜுனன், இவ்விதமாக என்னால் அறியப்படுகிறீர் — மே மத: என்கிறான். இந்த குறிப்பிட்டச் சொல்லின் காரணமாக சங்கரர் இந்த சுலோகத்திற்கான விளக்கத்தில், விஷ்வரூபத்தைப் பார்த்த அர்ஜுனன் இவ்வாறு அனுமானம் செய்வதாகக் கூறுகிறார். அதாவது ‘மே மத:’ எனும் சொல்லிலிருந்து, அர்ஜுனன் இவைகளையெல்லாம் அனுமானிக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் என்கிறார் சங்கரர் — அநுமிநோமி, நான் அனுமானிக்கிறேன். பின்னர், அர்ஜுனன் கூறுவதாக பின்வருவனவற்றைக் கொடுக்கிறார். ‘ஓ பகவானே! உங்களது இந்த விஷ்வரூப தரிசனத்தினால் உங்களைப் பற்றி சாஸ்திரம் கூறும் அனைத்தையும் இப்போது புரிந்து கொள்கிறேன். நீங்கள் எல்லையற்றவர், அழியாதவர், நீங்களே சிருஷ்டிக்கு காரணமான ப்ரம்மம் என்பதை அனுமானிக்கிறேன். இந்த வார்த்தைகள் அனைத்திலும் இருக்கின்ற உண்மைத்தன்மை இப்போது எனக்குப் புரிகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்திற்கும் காரணமான முழுமையான இருப்பாக இருப்பவர் நீங்களே’.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.19|| மீண்டும் விஷ்வரூப வர்ணனை தொடர்கிறது:
अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहूं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्त हुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ।। १९ ।।
அநாதி3மத்4யாந்தமநந்தவீர்ய
மநந்தபா3ஹும் ச1சி1ஸூர்யநேத்ரம் ।
பச்1யாமி த்வாம் தீ3ப்தஹுதாச1வக்த்ரம்
ஸ்வதேஜஸா விச்1வமித3ம் தபந்தம் ।। 19 ।।
अनादि मध्य अन्तम् அநாதி3 மத்4ய அந்தம் ஆதி நடு முடிவு இல்லாதவர்
अनन्त वीर्यम् அநந்த வீர்யம் முடிவில்லாத சக்திமான்
अनन्त बाहूं அநந்த பா3ஹும் எண்ணற்ற கைகளையுடையவர்
शशि सूर्य नेत्रम् ச1சி1 ஸூர்ய நேத்ரம் சந்திர சூர்யர்களைக் கண்களாய் கொண்டவர்
दीप्त हुताश वक्त्रं தீ3ப்த ஹுதாச1 வக்த்ரம் ஜ்வலிக்கின்ற அக்னியை முகமாகவுடையவர்
स्व तेजसा ஸ்வதேஜஸா தனது தேஜஸினால் इदं विश्वम् இத3ம் விச்1வம் இந்த பிரபஞ்சத்தை
तपन्तम् தபந்தம் எரிக்கின்ற त्वां த்வாம் உங்களை पश्यामि பச்1யாமி பார்க்கிறேன்.
ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவில்லாத சக்தியை உடையவரும், எண்ணற்ற கைகளை கொண்டவரும், சந்திர சூரியர்களை கண்களாய் உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், தனது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உங்களைக் காண்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.
விளக்கம்:
=> எல்லையற்ற சக்தியுடையவர்:
இந்த விஷ்வரூபத்தில் ஆரம்பமும் முடிவும் இல்லை, மேலும் இரண்டிற்கும் இடையிலென எந்த நடுவுமில்லாமலும் நான் உங்களைப் பார்க்கிறேன் — அநாதி3 மத்4ய அந்தம், என்கிறான் அர்ஜுனன். அதாவது, எங்கு பார்க்கினும், ஒவ்வொரு திசையிலும் விஷ்வரூபத்தை மட்டுமே காண்கிறான். இத்தகைய ஆற்றலுடன் கூடிய அவரை, அர்ஜுனன் சர்வ வல்லமை பொருந்தியவர், முடிவில்லாத சக்திமான் (அநந்த வீர்யம்) என்கிறான். எல்லையற்ற கைகளை உடையவர் என மீண்டும் கூறுகிறான். மேலும் சூரியனையும் சந்திரனையும் தனது கண்களாகக் கொண்டிருப்பதாக இந்த விஷ்வரூபத்தைப் பார்க்கிறான். விஷ்வரூபத்தை காட்சிப்படுத்தவும் தியானிக்கவும் கொடுக்கப்பட்ட ஒரு உன்னதமான வரையறையாக இது பார்க்கப்படுகிறது. சந்திரனும் சூரியனும் கண்கள், ஆகாசம் உடல், சொர்க்கம் தலை, பூமி பாதங்கள். இறைவனின் பிரபஞ்ச வடிவத்தை, இந்த பூமியில் நின்று பார்க்கும்போது கண்களாக சூரியனையும் சந்திரனையும் தவிர வேறென்ன இருந்துவிட முடியும்!
‘ஹுதாச1’ எனில் தனக்கு வழங்கப்படும் அனைத்தையும் உண்பவன் என்பது பொருள்; எனவே இது நெருப்பைக் குறிக்கிறது. நன்கு கொளுந்துவிட்டு எரியும் நெருப்பையுடைய வாயை பார்க்கிறேன் என்கிறான் அர்ஜுனன். மேலும் உங்களின் இந்த தேஜஸினால் இவ்வுலகம் எரிந்து கொண்டுள்ளது, அல்லது செயல்பட்டுக் கொண்டுள்ளது — ஸ்வதேஜஸா இத3ம் விச்1வம் தபந்தம், என்கிறான்.
=> சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:
கால தேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துக் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்து முடிப்பதால் அவர் கணக்கற்ற கைகளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவிடமிருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விஷ்வத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.20|| விஷ்வரூப வர்ணனையின் தொடர்ச்சி:
द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वा: ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ।। २० ।।
த்3யாவாப்ருதி2வ்யோரித3மந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந தி3ச1ச்1ச ஸர்வா: ।
த்3ருஷ்ட்வாத்3பு4தம் ரூபமுக்3ரம் தவேத3ம்
லோகத்ரயம் ப்ரவ்யதி2தம் மஹாத்மந் ।। 20 ।।
महात्मन् மஹாத்மந் மஹாத்மாவே द्यावा पृथिव्यो: த்3யாவா ப்ருதி2வ்யோ: விண்ணுலகு மண்ணுலகினுடைய इदम् अन्तरं இத3ம் அந்தரம் இந்த இடைவெளி त्वया एकेन हि த்வயா ஏகேந ஹி உங்கள் ஒருவராலேயே व्याप्तं வ்யாப்தம் நிறையப் பெற்றிருக்கிறது सर्वा: दिश च ஸர்வா: தி3ச1: ச எல்லா திசைகளும் (அப்படியே) तव अद्भुतं தவ அத்3பு4தம் உங்களுடைய அற்புதமான इदं उग्रं रूपं இத3ம் உக்3ரம் ரூபம் இந்த உக்கிரமான ரூபத்தை दृष्ट्वा த்3ருஷ்ட்வா பார்த்து लोक त्रयं லோக த்ரயம் மூவுலகும்
प्रव्यथितं ப்ரவ்யதி2தம் நடுங்குகிறது.
மஹாத்மாவே, விண் மண் உலகின் இடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உங்களாலே நிரம்பப் பெற்றிருக்கின்றன. உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
விளக்கம்:
=> மஹாத்மா:
அர்ஜுனன் இங்கு கிருஷ்ணரை ‘மஹாத்மந்’ என அழைக்கிறான், எல்லாவற்றிலும் நிறைந்து முழு படைப்பிற்கும் இடமளிக்கின்ற மஹத்தான பெரிய ஆத்மாவை உடையவர்.
கிருஷ்ணரின் இந்த விஷ்வரூபம் எங்கும் முழுவதுமாக வியாபித்திருப்பதைக் கண்ட அர்ஜுனன் அவரை மஹாத்மா என அழைத்து, ‘வானத்திற்கும் பூமிக்கும் இடையேயுள்ள ‘அந்தரிக்ஷ’ என்றழைக்கப்படும் இடைவெளி முழுதையும் நீங்கள் ஒருவரே வியாபித்திருப்பதைக் காண்கிறேன். இதேபோல, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, பின்னர் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என அனைத்து திசைகளும் உங்களால் மட்டுமே நிறையப் பெற்றுள்ளது. எங்கு பார்த்தாலும் உங்கள் வடிவத்தையே காண்கிறேன்’, என்கிறான். இந்த ஜகத் முழுவதும் ஈஷ்வரனாக இருப்பதை அவன் காண்கிறான்.
=> அர்ஜுனனின் பயத்தின் வெளிப்பாடு:
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவனிடம் உள்ளது. அவைகளுள் இங்கு பயங்கரக் காட்சியைப் பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத் திருத்தியமைக்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவத்தை எடுக்க வல்லதென்று இப்பொழுது உணர்கிறான். இந்த விஷ்வரூபம் இதுவரை யாரும் பார்த்திராத அற்புதமான ஒன்று — அத்3பு4தம். இந்த உக்கிரமான ரூபத்தை, உக்3ர, பார்த்து மூன்று உலகங்களும், த்3ருஷ்ட்வா லோக த்ரயம், பயந்துள்ளன, ப்ரவ்யதி2தம், என்கிறான் அர்ஜுனன். உண்மையில் வேறு யாரும் இங்கு பயப்படவில்லை. அர்ஜுனன் எவ்வளவு பயந்துள்ளான் என்பதையே அவன் இவ்வாறு வெளிப்படுத்துகிறான். விஷ்வரூபம் எப்படி ஒருவனை பயமுறுத்தும்? அதனிடமிருந்து தன்னை பிரித்துப் பார்க்கும்போது மட்டுமே அது பயம் அளிப்பதாக இருக்கும். பயத்தை அளிப்பதாகக் கூறுவதன் மூலமாக அர்ஜுனனின் பிரச்சனை வெளிப்படுகிறது. எதையும் நீக்காது விஷ்வத்தையே உள்ளடக்கிய ஒரு வடிவத்தில் அர்ஜுனன் தன்னையும் சேர்த்துப் பார்த்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. தானே அனைத்துமாக இருக்கும் ஒருவன் எதைப் பார்த்து பயப்படவேண்டும்? இரண்டாவது விஷயத்திலிருந்து மட்டுமே பயம் இருக்க முடியும் — த்3விதீயாத் வை ப4யம் ப4வதி. அர்ஜுனன் தன்னையும் விஷ்வரூபத்தில் இணைத்திருந்தால் இரண்டவதான எதுவும் அங்கு இல்லை. அப்பொழுது அங்கு எந்த பயமும் இல்லை. தன்னை உள்ளடக்காமல் எப்படி பிரபஞ்சம் இருக்க முடியும்? இது ஒரு சிற்றலை தன்னைத் தவிர்த்து முழுக் கடலையும் பார்ப்பது போன்றது. அந்த அலையும் கடலின் உள்ளடக்கமே ஆகும். அர்ஜுனன் உலகத்தை மட்டுமே கிருஷ்ணரின் விஷ்வரூபத்தில் பார்த்தான்; ஆகவே பயத்தை அடைந்தான்.
வெற்றி யாருடையது என்கிற சந்தேகம் அர்ஜுனனுக்கு இருந்தது என்பதை இரண்டாம் அத்தியாயம் ஆறாம் சுலோகத்தின்(2.6) மூலம் அறிகிறோம். அதை அகற்றுவதற்கானக் காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் கண்ட குந்தி மைந்தன் பின்வருமாறு கூறுகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------