||11.13|| சஞ்ஜயன் தொடர்கிறான்:
तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ।। १३ ।।
தத்ரைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் ப்ரவிப4க்தமநேகதா4 ।
அபச்1யத்3தே3வதே3வஸ்ய ச1ரீரே பாண்ட3வஸ்ததா3 ।। 13 ।।
तदा ததா3 அப்பொழுது पाण्डव: பாண்ட3வ: பாண்டவன் तत्र தத்ர அங்கு
देव देवस्य தே3வ தே3வஸ்ய தேவர்களுக்குத் தேவனுடைய शरीरे ச1ரீரே உடலில்
अनेकधा प्रविभक्तम् அநேகதா4 ப்ரவிப4க்தம் பலவிதமாய் பிரிந்துள்ள जगत् कृत्स्नं ஜக3த் க்ருத்ஸ்நம் உலகம் முழுவதையும் एकस्थं ஏகஸ்த2ம் ஒன்று சேர்ந்திருப்பதை अपश्यत् அபச்1யத் பார்த்தான்.
அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவ தேவனுடைய தேகத்தில் ஒன்றுகூடியிருப்பதைப் பாண்டவன் பார்த்தான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.
விளக்கம்:
வேற்றுமையில் ஒற்றுமை குடிகொள்வது இயற்கையின் அமைப்பு. தேவர்கள், மக்கள், விலங்குகள், பறவைகள், மரம் செடி கொடி போன்ற நிலைத்திணைகள் ஆகிய எண்ணற்ற இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள் ஆகும். மண் உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவையாவும் உயிருக்குயிராய், அறிவுக்கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.14|| அர்ஜுனனின் ஆச்சரியத்தை சஞ்ஜயன் விளக்குகிறான்:
तत: स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जय: ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिर भाषत ।। १४ ।।
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த4நஞ்ஜய: ।
ப்ரணம்ய சி1ரஸா தே3வம் க்ருதாஞ்ஜலிரபா4ஷத ।। 14 ।।
तत: தத: பிறகு स: ஸ: அவன் धनञ्जय: த4நஞ்ஜய: தனஞ்ஜயன்
विस्मय आविष्ट: விஸ்மய ஆவிஷ்ட: வியப்படைந்தவனாய் हृष्टरोमा ஹ்ருஷ்டரோமா மயிர்க்கூச்சலுடையவனாய் देवं தே3வம் தேவனை शिरसा சி1ரஸா தலையால்
प्रणम्य ப்ரணம்ய வணங்கி कृत अञ्जलि: க்ருத அஞ்ஜலி: கூப்பிய கைகளுடன்
अभाषत அபா4ஷத பேசினான்.
பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தேவனைத் தலையால் வணங்கிக் கைகூப்பிக் கொண்டு சொல்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.
விளக்கம்:
=> அர்ஜுனனின் பாவனை:
இப்படிப்பட்ட ரூபத்தை அர்ஜுனன் உண்மையில் நேரடியாகப் பார்க்கிறான். அந்நேரத்தில் அவனுடைய உணர்ச்சிகள் என்னவாக இருந்திருக்கும்? ஆச்சரியமும் பயமும் கலந்ததாக இருக்கிறது என இனிவரும் சுலோகங்களில் அதை அர்ஜுனனே கூறப்போகிறான். அதன் பின்னர் அது பக்தியாக மாறுகிறது.
இத்தகையதொரு தரிசனத்தின் உடனடி தாக்கத்தால் முதலில் அவனுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாகி அவனது உரோமம் சிலிர்த்து, மயிர்க்கூச்சலுடையவனாய் ஆகிறான். பின்னர் தலை குனிந்து, கூப்பிய கைகளுடன் இறைவனைப் புகழ்ந்து பேச ஆரம்பிக்கிறான்.
தேவ தரிசனம் மனதில் பெரிய மாறுதலை உருவாக்குகிறது. அது அகமும் புறமும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. இதில் வியப்படைதல் என்பது உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலில் தோன்றும் பரவசச் செயல்கள் ஆகும். இனி மனநிறைவு நிறைமொழியாய்ப் பொங்கி வழிய பின்வருமாறு பேசுகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.15|| அர்ஜுனனின் வர்ணனை:
अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेष संघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थमृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ।। १५ ।।
அர்ஜுந உவாச
பச்1யாமி தே3வாம்ஸ்தவ தே3வ தே3ஹே
ஸர்வாம்ஸ்ததா2 பூ4தவிசே1ஷஸங்கா4ந் ।
ப்3ரஹ்மாணமீச1ம் கமலாஸநஸ்த2 ம்ருஷீம்ச்1ச
ஸர்வாநுரகா3ம்ச்1ச தி3வ்யாந் ।। 15 ।।
अर्जुन उवाच அர்ஜுன உவாச அர்ஜுனன் சொன்னது
देव தே3வ ஓ தேவா तव தவ உங்களுடைய देहे தே3ஹே தேகத்தில்
सर्वान् देवान् ஸர்வாந் தே3வாந் அனைத்து தேவர்களையும் तथा ததா2 அப்படியே
भूत विशेष संघान् பூ4த விசே1ஷ ஸங்கா4ந் விதவிதமான உயிரினக் கூட்டங்களையும்
कमल आसनस्थम् ईशं ब्रह्माणम् கமல ஆஸநஸ்த2ம் ஈச1ம் ப்3ரஹ்மாணம் தாமரை மலர்மீது அமர்ந்துள்ள இறைவனான பிரம்மதேவரையும் सर्वान् ऋषीन् च ஸர்வாந் ருஷீந் சகல ரிஷிகளையும்
दिव्यान् उरगान् च தி3வ்யாந் உரகா3ந் ச திவ்வியமான பாம்புகளையும் पश्यामि பச்1யாமி பார்க்கிறேன்.
தேவா, உங்களது உடலில் தேவர்கள் எல்லோரையும், விதவிதமான உயிரினக் கூட்டங்களையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவனான பிரம்மதேவரையும்ன, சகல ரிஷிகளையும், திவ்வியமான பாம்புகளையும் காண்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.
விளக்கம்:
விஷ்வரூபத்தைப் பார்த்து அர்ஜுனனுக்கு முதலில் ஆச்சரியமும், பின்னர் பயமும், அதைத் தொடர்ந்து பக்தியும் உண்டாகிறது. சுலோகம் பதினைந்து முதல் இருபத்திரண்டு வரை அர்ஜுனன் விஷ்வரூபத்தை குறித்த தனது ஆச்சரியத்தை விவரிக்கிறான்.
உங்களது விஷ்வரூபத்தை நான் பார்க்கிறேன். அதில் அனைத்து வானவர்களையும் பார்க்கிறேன் — ஸர்வாந் தே3வாந். விதவிதமான உடல்களைக் அனுபவிக்கும் பல்வேறு வகையான உயிரினக் கூட்டங்களைக் காண்கிறேன் — பூ4த விசே1ஷ ஸங்கா4ந். அவற்றில் நகராத தன்மைக் கொண்ட தாவரங்கள் மற்றும் மரங்களும்(ஸ்தாவர), நகரும் தன்மையுடைய விலங்குகள், மனிதர்கள் போன்ற நடமாடும் உயிர்த் தொகுதிகளும்(ஜங்கம) உள்ளன, என சங்கரர் இங்கு மேலும் விளக்கமளிக்கிறார். ‘எண்ணற்ற விதங்களில், எண்ணிக்கையில் அடங்கா வகைகளில் இந்த பலவிதமான உயிரினங்களை உங்களது உடலில் நான் காண்கிறேன்’, என்கிறான் அர்ஜுனன்.
உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மதேவர் ஈசன் என்றழைக்கப்படுகிறார். இவர் பிரம்மலோகத்தில் தாமரை மலர்மீது வீற்றிருப்பவர். எனவே, அர்ஜுனன் தான் பிரம்மலோகத்தைப் பார்க்கிறேன் எனக் கூறுகிறான். மேலும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளையும் வாஸுகி முதலிய ஸர்ப்பங்களையும் பார்ப்பதாகச் சொல்லுகிறான். ‘உரகா3ந்’ எனில் பாம்புகள். ‘உரஸ்’ எனில் மார்பு, ‘க3’ எனில் செல்பவன். அதன் உடலினால்(மார்புப் பகுதியினால்) நகர்வது - உரஸா க3ச்சதி இதி உரக3:. திவ்வியமான பாம்புகளில் மிகவும் பிரசித்தி பெற்ற வாஸுகி எனும் பாம்பையும் அர்ஜுனன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.16|| அர்ஜுனன் மேலும் தொடர்கிறான்:
अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ।। १६ ।।
அநேகபா3ஹூத3ரவக்த்ரநேத்ரம்
பச்1யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் ।
நாந்தம் ந மத்4யம் ந புநஸ்தவாதி3ம்
பச்1யாமி விச்1வேச்1வர விச்1வரூப ।। 16 ।।
विश्व ईश्वर விச்1வ ஈச்1வர விஷ்வத்தின் தலைவனே
विश्व रूप விச்1வ ரூப விஷ்வத்தையே ரூபமாகக் கொண்டவனே
अनेक बाहू उदर वक्त्र नेत्रं அநேக பா3ஹூ உத3ர வக்த்ர நேத்ரம் எண்ணிக்கைக்கு அடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய अनन्त रूपम् அநந்த ரூபம் அநேக ரூபங்களையுடையதும்
त्वां த்வாம் உங்களை सर्वत: ஸர்வத: எங்கும் पश्यामि பச்1யாமி பார்க்கிறேன்
पुन: புந: மேலும் तव தவ உங்களுடைய न अन्तं ந அந்தம் முடிவையாவது न मध्यं ந மத்4யம் மத்தியத்தையாவது न आदिं पश्यामि ந ஆதி3ம் பச்1யாமி ஆதியையாவது காண்கிறேனில்லை.
விஷ்வத்தையே ரூபமாகக் கொண்ட அகிலாண்ட வடிவினனே, எண்ணிறந்த கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உங்களது முடிவிலா உருவத்தை எங்கும் பார்க்கிறேன். மேலும் உங்களது முடிவையோ இடையையோ துவக்கத்தையோ காண்கிறேனில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.
விளக்கம்:
‘எண்ணிக்கைக்கு அடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்களுடன் முடிவிலா உருவங்களைக் கொண்ட உங்களை எங்கும் பார்க்கிறேன்’, என்கிறான் அர்ஜுனன். பொதுவாக, ‘அநேக’ எனில் ‘ஒன்றல்ல’ என்பது பொருள். ஆகவே அதை வெறுமனே இரண்டு என்றும் பொருள் கொள்ள முடியும், ஆனால் இங்கு அது எண்ணற்றது என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. அர்ஜுனன் புராணங்களின் வழியாக கேட்டறிந்த அனைத்து தேவர்களையும் யக்ஷர்களையும் மற்றும் பிற தேவதைகளையும் பகவானின் மாயா சக்தியினால் பார்க்க முடிகிறது. இங்கு பகவான் நேரிடையாகவோ மறைமுகமாகவோ அர்ஜுனனுக்கு தெரிந்த அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வடிவத்தை முன்வைக்கிறார். அவனறிந்த அனைத்தும் பார்க்கப்படும்போதே அவனுக்கு சிரத்தை உண்டாகும். எனவே யக்ஷர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, புராணங்களின் வாயிலாக அர்ஜுனன் அறிந்திருந்த யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், அசுரர்கள், சித்தர்கள் மற்றும் ரிஷிகள் என அனைவரையும் தனது வடிவத்தில் காட்டுகிறார். பிரபஞ்சத்தில் இவைகளனைத்தும் இருக்கின்றது என நினைத்துக் கொண்டிருக்கும் அர்ஜுனன், விஷ்வரூபத்தை காணவேண்டுமென கேட்கும்போது அந்த வடிவத்தில் இவைகளனைத்தையும் எதிர்ப்பார்க்கிறான். இப்போது அவைகள் எல்லாவற்றையும் பார்க்கிறான். ஒருகால் இக்காலகட்டத்தில் பகவான் விஷ்வரூபத்தைக் காட்டுவதாக வைத்துக்கொண்டால், செயற்கைக்கோள்கள், கருந்துளைகள் போன்ற நாமறிந்த அனைத்தும் அந்த வடிவத்தில் இடம்பெற வைத்திருப்பார், அதன்மூலம் அதை அனைத்தையும் உள்ளடக்கிய ரூபம் என நாமறிவோம்.
=> ஆதியந்தமற்ற வடிவினன்:
‘நான் முடிவு என எதையும் பார்க்கவில்லை’ என்கிறான். அதாவது மேல் அல்லது கீழ் இரண்டும் இல்லை. எங்கு பார்த்தாலும் முடிவற்றதாக இந்த ரூபம் இருக்கின்றது. அதேபோல, ‘மத்தியத்தையோ அல்லது ஆரம்பத்தையோ பார்க்கவில்லை’, ந மத்4யம் ந ஆதி3ம் பச்1யாமி. ஆதியை தலையாகவும் அந்தத்தை பாதங்களாகவும் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக எவ்வளவு பெரிய வடிவமாக இருந்தாலும் அதன் வரம்பை ஒருவனால் காணமுடியும். ஆனால் இந்த விஷ்வரூபத்தில் எந்த எல்லையையும் அர்ஜுனனால் பார்க்கமுடியவில்லை. ஆரம்பமும் முடிவும் இல்லாதபோது நடுப்பகுதி என்ற ஒன்றும் இல்லை. உண்மையில் அனைத்துமே நடுவில் தோன்றிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இப்படியொரு வடிவத்தை காணும் அர்ஜுனன், கிருஷ்ணரை, விஷ்வத்தையே ரூபமாகக் கொண்ட அகிலாண்ட வடிவினனே, விச்1வேச்1வர, என்றழைக்கிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------