||11.9|| என்ன நடந்தது என சஞ்ஜயன் திருதராஷ்டிரருக்கு கூறுதல்:
सञ्जय उवाच ।
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरि: ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ।। ९ ।।
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே3ச்1வரோ ஹரி: ।
த3ர்ச1யாமாஸ பார்தா2ய பரமம் ரூபமைச்1வரம் ।। 9 ।।
सञ्जय उवाच ஸஞ்ஜய உவாச சஞ்ஜயன் சொன்னது
राजन् ராஜந் திருதராஷ்டிர மஹாராஜனே महायोगेश्वर: மஹாயோகே3ச்1வர: மஹாயோகேஷ்வரனாகிய हरि: ஹரி: ஹரியானவர் एवम् ஏவம் இவ்விதம் उक्त्वा உக்த்வா உரைத்துக் கொண்டு
तत: தத: பிறகு पार्थाय பார்தா2ய பார்த்தனுக்கு परमं பரமம் மேலான
रूपम् ऐश्वरम् ரூபம் ஐச்1வரம் ஈஷ்வர ரூபத்தை दर्शयामास த3ர்ச1யாமாஸ காண்பித்தார்.
சஞ்ஜயன் சொன்னது,
வேந்தே, யோகத்துக்குப் பேரிறைவனாகிய ஹரியானவர், இவ்விதம் உரைத்த பின்பு பார்த்தனுக்குத் தம் மேலாம் ஈஷ்வர வடிவத்தைக் காட்டியருளினார்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.
விளக்கம்:
‘இவ்விதம் அர்ஜுனனிடம் கூறிய பிறகு, வேந்தே! பகவான் அர்ஜுனனுக்கு தனது விஷ்வரூபத்தைக் காட்டினார்’, என்கிறான் சஞ்ஜயன். இங்கு அவன், பகவானை மூன்று அடைமொழிகளுடன் குறிப்பிடுகிறான். ‘யோகே3ச்1வர:’, அனைத்து யோகிகளின் தலைவன், யோகத்துக்குப் பேரிறைவன். ‘மஹாந்’, எல்லையற்றவர். ‘ஹரி:’, அனைத்து பாபங்களையும் அழிப்பவர்.
=> மேலான வடிவம்:
அர்ஜுனனுக்கு காட்டப்பட்ட அந்த வடிவம் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதாக இருந்ததால் அது மேலான ரூபம், பரமம். கொடுக்கப்பட்ட எந்தவொரு வடிவமும் பொதுவாக மற்ற எல்லா வடிவங்களையும் விலக்குவதாக, அனைத்தையும் தன்னிடமிருந்து வேறானதாகக் காட்டுகிறது. ஆனால் இந்த விஷ்வரூபம் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு வடிவமாக இருப்பதால், ஒவ்வொன்றும் அதனது சொந்த வடிவத்தையே அனுபவிக்கின்றன. அதாவது, பல்வேறு வடிவத்தைக் கொண்ட மெழுகுப் பொருட்களை ஒன்றாக ஆக்கும்போது அவைகளின் தனிப்பட்ட வடிவங்கள் இழக்கப்படுகின்றன. ஆனால் இந்த விஷ்வரூபத்தின் அழகு என்னவெனில், ஒரே பார்வையில் அனைத்து வடிவங்களையும் கொண்ட ஒரு வடிவத்தைக் காணலாம். அப்படிப்பட்ட ஒரு வடிவத்தை, பகவான் அர்ஜுனனுக்குக் காட்டினார். அதே வடிவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் சஞ்ஜயன் அந்த ரூபத்தைக் குறித்த தனது சொந்த வர்ணனையைத் தருகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.10|| விஷ்வரூபத்தைக் குறித்த சஞ்ஜயனின் வர்ணனை:
अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ।। १० ।।
அநேகவக்த்ரநயநமநேகாத்3பு4தத3ர்ச1நம் ।
அநேகதி3வ்யாப4ரணம் தி3வ்யாநேகோத்3யதாயுத4ம் ।। 10 ।।
अनेक वक्त्र नयनम् அநேக வக்த்ர நயநம் அநேக முகங்கள், கண்கள் உடையது
अनेक अद्भुत दर्शनम् அநேக அத்3பு4த த3ர்ச1நம் பல அதிசயக் காட்சிகளை உடையது
अनेक दिव्य आभरणं அநேக தி3வ்ய ஆப4ரணம் பல திவ்வியமான ஆபரணங்களை உடையது
दिव्य अनेक उद्यत आयुधम् தி3வ்ய அநேக உத்3யத ஆயுத4ம் திவ்வியமான ஆயுதங்கள் பலவற்றை ஏந்தியது.
அவ்வடிவம் அநேக முகங்கள், கண்கள் உடையது; பல அதிசயக் காட்சிகள் கொண்டது. தெய்விக ஆபரணங்கள் பல அணிந்தது; தெய்விக ஆயுதங்கள் அநேகம் ஏந்தியது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.
விளக்கம்:
அந்த ரூபம், எண்ணற்ற முகங்கள் மற்றும் கண்கள் உடையது — அநேக வக்த்ர நயநம். உலகெலாம் அவர் சொரூபமாதலால் அவருக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். பல அதிசயக் காட்சிகளை உடையது — அநேக அத்3பு4த த3ர்ச1நம். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன, ஆதலால் அவரிடத்து அற்புத தரிசனங்கள் நிறைந்துள்ளன. பல திவ்வியமான, முன்னர் பார்த்திராத ஆபரணங்களை உடையது — அநேக தி3வ்ய ஆப4ரணம். பிரக்ருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செளந்தரியம் யாவும் அவருடையவைகள் ஆகையினால் அழகுக்குப் பிறப்பிடம் அவர். அதை முன்னிட்டு அவர் தெய்விக ஆபரணங்களை அணிந்தவர் எனப்படுகிறார். அவ்வடிவம், திவ்வியமான ஆயுதங்கள் பலவற்றை ஏந்தியது — தி3வ்ய அநேக உத்3யத ஆயுத4ம். தெய்வ காரியம் எவ்விதத்திலும் நடைபெற்றுவிடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்யமுடியாது. அவர் ஏந்தியிருக்கும் அநேக திவ்விய ஆயுதங்கள் அத்திறனை விளக்குகின்றன. இந்த உலகத்தில் அறியப்பட்டது மட்டுமல்லாமல் வேறு உலகத்திற்குரிய ஆயுதங்களும் காணப்படுகின்றன என்பதை ‘தி3வ்ய’ எனும் சொல் குறிக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்து அழிவானது நடந்து கொண்டேயிருக்கிறது. எனவே அனைத்து விதமான அழிவுக்கும் பொருத்தமான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.11|| சஞ்ஜயனின் வர்ணனைத் தொடர்ச்சி:
दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ।। ११ ।।
தி3வ்யமால்யாம்ப3ரத4ரம் தி3வ்யக3ந்தா4நுலேபநம் ।
ஸர்வாச்1சர்யமயம் தே3வமநந்தம் விச்1வதோமுக2ம் ।। 11 ।।
दिव्य माल्य अम्बर धरं தி3வ்ய மால்ய அம்ப3ர த4ரம் திவ்வியமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது
दिव्य गन्ध अनुलेपनम् தி3வ்ய க3ந்த அ4நுலேபநம் திவ்வியமான வாசனை திரவியங்கள் பூசப்பெற்றது
सर्व आश्चर्यमयं ஸர்வ ஆச்1சர்யமயம் பெரும் வியப்பூட்டுவது देवम् தே3வம் பிரகாசிப்பது
अनन्तं அநந்தம் முடிவற்றது विश्वतोमुखम् விச்1வதோமுக2ம் எங்கும் முகமுடையது.
(அவ்வடிவம்) திவ்வியமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்விய கந்தம் பூசியது; பெரும் வியப்பூட்டுவது, பிரகாசிப்பது, முடிவற்றது; எங்கும் முகமுடையது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
விளக்கம்:
இது கற்பனைக்கு அப்பாற்பட்ட திவ்வியமான மலர்களைக் கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும் திவ்வியமான ஆடைகளை அணிந்ததாகவும் உள்ளது — தி3வ்ய மால்ய அம்ப3ர த4ரம். மேலான வாசனை திரவியங்கள் பூசப்பட்டதாக உள்ளது — தி3வ்ய க3ந்த அ4நுலேபநம். பெரும் வியப்பூட்டும் முடிவற்ற அதிசயமாக உள்ளது — ஸர்வ ஆச்1சர்யமயம். பிரகாசமானதாக இருப்பது — தே3வம். எந்த திசையில் பார்த்தாலும் எல்லையற்று விரிந்துள்ள இந்த வடிவத்திற்கு மேலோ, கீழோ, அகலமோ, நீளமோ இல்லை — விச்1வதோமுக2ம். முகமானது எல்லா திசைகளை நோக்கியும் உள்ளது, எங்கும் முகமுடையது எனவும் பொருள் கொள்ளலாம்.
இயற்கையை உடலாய் ஏற்றுக் கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிர்கிறான் எனக் கொண்டால், இந்த வர்ணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்தமுடையவைகள் ஆகின்றன. அப்படியிருக்கையில், ஞானக்கண் கொண்டு காணும்போது எங்கும் தெய்வத் தன்மையே பொலியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.12|| இந்த ரூபத்தின் ஒளி வர்ணனை:
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भा: सदृशी सा स्याद्भासस्तस्य महात्मन: ।। १२ ।।
தி3வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப4வேத்3யுக3பது3த்தி2தா ।
யதி3 பா4: ஸத்3ருசீ1 ஸா ஸ்யாத்3பா4ஸஸ்தஸ்ய மஹாத்மந: ।। 12 ।।
दिवि தி3வி ஆகாசத்தில் सूर्य सहस्रस्य ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ஆயிரம் சூரியர்களுடைய
भा: பா4: ஒளியானது युगपत् யுக3பத் ஒரே காலத்தில்
उत्थिता भवेत् यदि உத்தி2தா ப4வேத் யதி3 உதித்திருக்குமானால் सा ஸா அது
तस्य महात्मन: தஸ்ய மஹாத்மந: அந்த மஹாத்மாவினுடைய भास: பா4ஸ: ஒளிக்கு
सदृशी स्यात् ஸத்3ருசீ1 ஸ்யாத் சமானமாக இருக்கும்.
வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது அம்மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.
விளக்கம்:
தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டு தெரியாத ஒன்றை அறிந்து கொள்ளலாம். காணாதவர்களுக்கு ஈஷ்வரனின் பிரகாசம் ஒன்றும் விளங்காது. உண்மையில் அவர் அவருக்கே ஒப்பானவர். ஒரே சமயத்தில் உதயமான ஆயிரம் சூரியன்களோடு ஒப்பிடுவதே அவர் ஒப்பில்லாதவர் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவர் ஒருவரே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறார்.
கோடைகாலத்தின் உச்சியில் கொளுத்தும் வெயிலின் பிரகாசத்தை நினைத்துப் பாருங்கள். இப்போது ஆயிரம் சூரியன்கள் வானத்தில் ஒரே நேரத்தில் உதிக்கின்றன என வைத்துக் கொள்வோம். அது எவ்வளவு பிரகாசமானதாக இருக்கும்? அதற்கு ஒப்பான பிரகாசத்தை உடையதாக இந்த விஷ்வரூப வடிவம் உள்ளது என்கிறான் சஞ்ஜயன். நம்முடைய அனுபவத்தில் உள்ள எந்த உதாரணமும் இதை அப்படியே வர்ணிக்கப் போதுமானதாக இல்லை. ஆகவே கற்பனை செய்வதற்கும்கூட கடினமான ஒரு ஒப்புமையைத் தருகிறான். இவ்விதம் அறியப்படாத அனுபவங்களிலிருந்து எடுக்கப்படும் உவமைகள், சமஸ்கிருத மொழியில் ஸம்பா4வித-உபமா என்றழைக்கப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------