வியாழன், 16 மே, 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.6 - 11.8

||11.6|| விஷ்வரூபத்தை வர்ணித்தல்:

पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा

बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ।। ।।

பச்1யாதி3த்யாந்வஸூந்ருத்3ராநச்1விநௌ மருதஸ்ததா2

3ஹூந்யத்3ருஷ்டபூர்வாணி பச்1யாச்1சர்யாணி பா4ரத ।। 6 ।।


भारत  பா4ரத  பாரதவம்சத்தில் உதித்தவனே    आदित्यान्  ஆதி3த்யாந்  (பன்னிரெண்டு) ஆதித்தியர்களையும்    वसून्  வஸூந்  (எட்டு) வசுக்களையும்   रुद्रान्  ருத்3ராந்  (பதினொரு) ருத்திரர்களையும்      

अश्विनौ  அச்1விநௌ  (இரண்டு) அச்வினிகளையும்   मरुत:  மருத:  (நாற்பத்தொன்பது) மருத்துக்களையும்   तथा  ததா2  அப்படியே   पश्य  பச்1  பார்    बहूनि  3ஹூநி  அநேகமான   

अदृष्टपूर्वाणि  அத்3ருஷ்டபூர்வாணி  முன்பு கண்டிராத   आश्चर्याणि  ஆச்1சர்யாணி   ஆச்சரியங்களை   

पश्य  பச்1  பார்.    


ஆதித்தியர்களையும், வசுக்களையும், ருத்திரர்களையும், அச்வினிகளையும் அங்ஙனமே மருத்துக்களையும் பார்த்தா, பார். முன்பு காணாத அதிசயங்கள் பலவற்றைப் பார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.


விளக்கம்:

நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய், என்பதாக இந்த சுலோகத்தை பகர்கிறார்.

பன்னிரெண்டு ஆதித்தியர்களையும்எட்டு வசுக்களையும், பதினொரு ருத்திரர்களையும், வாசனையின் தேவதைகளாகக் கருதப்படும் இரண்டு அச்வினிகளையும் மற்றும் நாற்பத்தொன்பது மருத்துக்களையும் உன்னால் பார்க்கமுடியும். இதற்கு முன்பு யாரும் கண்டிராத, அத்3ருஷ்டபூர்வாணி, பலவிதமான அதிசயங்களை, 3ஹூநி ஆச்1சர்யாணி, இந்த ஒரே வடிவத்தில் காணப்போகிறாய்

அது மட்டுமல்ல என்பதாக இனியும் தொடர்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.7|| விஷ்வரூபத்தை வர்ணிப்பதன் தொடர்ச்சி:

इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम्

मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ।। ।।

இஹைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் பச்1யாத்3 ஸசராசரம்  

மம தே3ஹே கு3டா3கேச1 யச்சாந்யத்3 த்3ரஷ்டுமிச்ச2ஸி ।। 7 ।।


गुडाकेश  கு3டா3கேச1  தூக்கத்தை வென்றவனே   मम  மம  என்னுடைய      इह  இஹ  இந்த    

देहे  தே3ஹே  தேகத்தில்   एकस्थं  ஏகஸ்த2ம்  ஒரே இடத்தில்/அவயவங்களாய் ஒன்று சேர்ந்திருக்கின்ற    सचराचरम्  ஸசராசரம்  அசைகின்ற மற்றும் அசையாததாக இருக்கின்ற    

जगत् कृत्स्नं  ஜக3த் க்ருத்ஸ்நம்  உலகம் முழுவதையும்    अन्यत्  அந்யத்3  வேறு இன்னும்   यत्  யத்  எதை    द्रष्टुम् इच्छसि  த்3ரஷ்டும் இச்ச2ஸி பார்க்க விரும்புகிறாயோ   अद्य  அத்3  இப்பொழுது    पश्य  பச்1  பார்.   


அர்ஜுனா, எனது இவ்வுடலிலே ஒன்று சேர்ந்துள்ள அசையும் மற்றும் அசையாததாக இருக்கின்ற உலகம் முழுதையும், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்பொழுது காண்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.


விளக்கம்:

இங்கு பகவான் அர்ஜுனனைகு3டா3கேச1’, உறக்கத்தை வென்றவனே எனக் கூறி கவனத்தை ஈர்க்கிறார். ‘ஒரே இடத்தில், எனது இந்த தேகத்தில் இந்த முழு உலகையும் பார்என்கிறார். இந்த முழு உலகமும் அசையும் மற்றும் அசையாதவைகளாக, அல்லது உயிர்கள் மற்றும் ஜடப்பொருள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஸசராசரம். எனவே மீதமில்லாமல் இவைகளனைத்தையும் சேர்த்து ஒன்றாக ஒரே இடத்தில் காணப்போகிறாய் அர்ஜுனா, மேலும் வேறு ஏதேனும் பார்க்க விரும்பினால் அதையும் இங்கு பார்ப்பாயாகயத் அந்யத்3 த்3ரஷ்டும் இச்ச2ஸி, என்கிறார் பகவான்.

=> வேறு எதைப் பார்க்கும் விருப்பம் இருக்கமுடியும்?

எல்லாம் இந்த வடிவத்தினுள் இருக்கும்போது வேறு எதையும் பார்க்கலாம் என பகவான் குறிப்பிடுவது எதை? இந்தப் போரில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி மட்டுமே மிச்சமிருக்கிறது என சங்கரர் அதைச் சுட்டிக் காட்டுகிறார். பாண்டவர்களை கெளரவர்கள் ஜெயிப்பதா அல்லது கெளரவர்களை பாண்டவர்கள் ஜெயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லை என்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்பமிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விஷ்வரூப தரிசனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும். ஆகவே, ‘இந்த போரின் முடிவு உள்ளிட்ட எதிர்காலத்தையும் காணலாம். இது அனைத்தும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. துரியோதனனின் செயல்கள் அவனது குலத்தை ஏற்கனவே அழித்துவிட்டது. இனி, உனது பங்களிப்பை அளிப்பதை தவிர இங்கு நீ எதையும் செய்ய வேண்டியதில்லை. சில அம்புகளை விடுவதைத் தவிர வேறெதுவும் செய்யத் தேவையில்லை. இந்த அழிவைத் தேடி, அதற்காக கடுமையாக உழைத்து துரியோதனன் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கின்றான். இவையனைத்தும் அவனது சொந்த கர்மங்களின் பலனேயன்றி வேறொன்றுமில்லை. இதில் நீ ஒரு கருவி மட்டுமேஎன பகவான் பின்னர் சொல்லப் போகிறார். ஆகவே, இந்த போரின் முடிவு உட்பட எதைப் பார்க்க விரும்பினாலும் என்னுடய இந்த தேகத்தில் பார்ப்பாயாக.  

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.8|| ஞானக் கண்ணை வழங்குதல்:

तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा

दिव्यं ददामि ते चक्षु: पश्य मे योगमैश्वरम् ।। ।।

து மாம் 1க்யஸே த்3ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா

தி3வ்யம் 3தா3மி தே சக்ஷு: பச்1 மே யோக3மைச்1வரம் ।। 8 ।।


तु  து  ஆனால்   अनेन  அநேந  இந்த    स्व चक्षुषा एव  ஸ்வ சக்ஷுஷா ஏவ  உன் கண்ணினாலேயே   

मां  மாம்  என்னை    द्रष्टुम्  த்3ரஷ்டும்  பார்க்க    शक्यसे  1க்யஸே  உனக்கு இயலாது    ते  தே உனக்கு    दिव्यं चक्षु:  தி3வ்யம் சக்ஷு:  தெய்விகமான கண்ணை   ददामि  3தா3மி  தருகிறேன்     मे  மே  என்னுடைய     योगम् ऐश्वरम्  யோக3ம் ஐச்1வரம்  ஈஷ்வர யோகத்தை    पश्य  பச்1  பார்.


ஆனால், உனது இந்த ஊனக் கண்ணால் என்னை நீ காண இயலாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். எனது ஈஷ்வர யோகத்தைப் பார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.


விளக்கம்:

ஒன்றிற்கு நமக்கு தகுதியுள்ளதா இல்லையா என்ற முடிவை குருவிடம் கொடுத்துவிட்டால், குருவானவர் நமக்கு தகுதியையும் கொடுத்து, கோரிக்கையையும் நிறைவேற்றி அருள்கிறார். அப்படி அர்ஜுனன் தனக்கு விஷ்வரூபத்தைக் காணும் தகுதியுள்ளதா என்பதை பகவானிடமே விட்டுவிட்டான். இப்போது பகவான் தரிசனத்திற்கு தேவையான தகுதியாகவுள்ள ஞானக் கண்ணையும் கொடுத்து, விஷ்வரூபத்தையும் காட்டி அருள்கிறார்


=> ஞானக் கண்:

இந்த பிரபஞ்ச வடிவிலான என்னைப் பார்க்க உனது கண்கள் போதுமானதாக இல்லை. ஆதித்தியர்கள், வசுக்கள் உள்ளிட்டோரையும் தேவர்களையும் சொர்க்கம் உள்ளிட்ட அனைத்துலகங்களையும் உள்ளடக்கிய இந்த வடிவத்தை சாதாரணக் கண்களைக் கொண்டு பார்க்க இயலாது. இத்தகைய பரிமாணத்தை உடைய ஒன்றை பார்ப்பதற்கு சிறப்புவாய்ந்த கண்கள் தேவை

பிராக்ருத கண்கொண்டு பிரக்ருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைக்கொண்டே காணமுடியும். அதுபோல ஈஷ்வரனது விஷ்வரூபத்தை காண்பதற்கு ஞானக்கண் தேவை. இதை, கிருஷ்ணர் தனது மாயாசக்தியின் மூலம் உருவாக்கிய ஒரு அசாதாரண கண் எனக் கூறலாம். அல்லது, தோன்றிக் கொண்டிருக்கும் இந்த முழு உலகையும் ஈஷ்வரனாகப் பார்க்க, விருப்பு-வெறுப்பு நீக்கப்பட்ட தெளிந்த மனமே ஞானக் கண்ணாக வழங்கப்படுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். எவ்வகையில் எடுத்துக் கொண்டாலும், தனது விஷ்வரூபத்தைக் காணும் திறனை அவர் அர்ஜுனனுக்கு வழங்குகிறார். ஆகவே, ‘நான் உனக்கு திவ்யமான கண்களைத் தருகிறேன்என்கிறார்.


=> மாயா சக்தி:

எனது ஈஷ்வர யோகத்தைப் பார்’, என்கிறார் பகவான். இங்கு யோகம் என்பது ஒப்பிட முடியாத மாயா சக்தியைக் குறிக்கிறது. இது அனைத்து அறிவு (ஞான-சக்தி), அனைத்து செயல்பாடு (க்ரியா-சக்தி) மற்றும் அனைத்து விருப்பங்கள் (இச்சா-சக்தி) ஆகியவற்றிற்கான திறன்முழுதும் தன்னகத்தே கொண்டுள்ளது. மாயையின் அற்புத சக்தியை எனது இந்த தேகத்தில் பார், எனக் கூறி அதற்கான ஆற்றலை அர்ஜுனனுக்கு கொடுக்கிறார்.  

இப்போது காட்சி, போர்க்களத்திலிருந்து அஸ்தினபுரியில் உள்ள அரண்மனைக்கு மாறுகிறது. இதன்மூலம் இவையனைத்தும் திருதராஷ்டிரருக்கு சஞ்ஜயன் கூறும் கதை என்பது நினைவுபடுத்தப்படுகிறது. கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான முழு உரையாடலும், இந்த கீதை முழுதும், சஞ்ஜயனால் திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்கப்படும் காட்சியாகவே உள்ளது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவதுபோல அந்த விஷ்வரூபக் காட்சியை சஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்ட காட்சியை சஞ்ஜயன் திருதராஷ்டிரருக்கு  அப்படியே விளக்குகிறான்.     


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பெரியோர்கள், பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஶ்ரீமதி ராதை ஒரு சமயம்ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன்என்றாள். அதற்கு கோபி ஸ்திரீகள், ‘தோழி, நீ பக்தையாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றதுஎன்றார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------