வியாழன், 9 மே, 2024

விஷ்வரூபதர்ஷன யோகம் 11.3 - 11.5

||11.3|| தனது சிரத்தையையும் விஷ்வரூப தரிசன ஆசையையும் அர்ஜுனன் வெளிப்படுத்துதல்:

एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर  

द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ।। ।।

ஏவமேதத்3யதா2த்த2 த்வமாத்மாநம் பரமேச்1வர

த்3ரஷ்டுமிச்சா2மி தே ரூபமைச்1வரம் புருஷோத்தம ।। 3 ।।


परमेश्वर  பரமேச்1வர  பரமேஷ்வரா   यथा  யதா2  எவ்விதம்   त्वम्  த்வம்  நீங்கள்   

आत्मानं  ஆத்மாநம்  உங்களைப் பற்றி   आत्थ  ஆத்தகூறியதை     

एतत् एवम्  ஏதத் ஏவம்  அது அப்படியே உள்ளது   पुरुषोत्तम  புருஷோத்தம  புருஷோத்தமரே   

ते  தே  உங்களுடைய    ऐश्वरं रूपम्   ஐச்1வரம் ரூபம்  ஈஷ்வர ரூபத்தை    

द्रष्टुम्  த்3ரஷ்டும்  பார்க்க    इच्छामि  இச்சா2மி  விரும்புகிறேன்.  

                    

பரமேஷ்வரா, தாங்கள் தங்களைப் பற்றிக் கூறியது முற்றும் முறையே. [இனி] புருஷோத்தமா, உங்களது ஈஷ்வர வடிவத்தைக் காண விரும்புகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.


விளக்கம்:

=> சிரத்தையைக் கூறுதல்:

அர்ஜுனன் இங்கு பகவானைபரமேச்1வரஎன அழைக்கின்றான். ‘பரமஎனில் இடம், பொருள், காலத்திற்கு அப்பாற்பட்டது, அவைகளால் வரையறுக்கப்படாதது என்பது பொருள். ‘ஈச்1வரஎனில் எல்லாவற்றிற்கும் காரணமான இறைவன். உங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கூறியது அனைத்தும் அப்படியே உள்ளதுயதா2 த்வம் ஆத்மாநம் ஏவம் ஏதத் ஆத்த2 , என்கிறான். அதாவது நீங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த இடத்தில் சங்கரர், ‘ அந்யதாஎன்ற சொல்லைச் சேர்த்து விளக்குகிறார். இதன் பொருள், வேறெந்த விதத்திலும் இல்லாமல் சரியாக அந்த முறையிலேயே ஏற்றுக் கொள்கிறேன். இங்கு அர்ஜுனன் தனது சிரத்தையை வெளிப்படுத்துகிறான். உண்மையை மனம் ஏற்றுக் கொள்வதற்கு ஒரு பக்குவம் தேவை. அர்ஜுனன் கூறியதன் சாராம்சம் என்னவெனில், ‘நீங்கள் கூறுவது உண்மை என்பதை நான் காண்கிறேன், அதை சரியாகப் புரிந்து கொள்கிறேன், அதனால் அதை அவ்விதமே ஏற்றுக் கொள்கிறேன்’. 

நான் இப்படியெல்லாம் இருக்கின்றேன் என உங்களது மஹிமைகளை எடுத்துரைத்தீர்கள். உங்களது அந்த ஐஸ்வர்யமான ரூபத்தை நான் காண விரும்புகிறேன்ஐச்1வரம் ரூபம் த்3ரஷ்டும் இச்சா2மி, என்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணரை மதிப்பீடு செய்யும் பொருட்டு அவன் இதை கேட்கவில்லை


=> பகவான்:

எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐஸ்வரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் எனும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். இந்த ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் பூரணமாக அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே ஆகும்

கிருஷ்ணபகவானின் பிரபஞ்ச வடிவத்தைப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை அர்ஜுனன் அறிவான். இருப்பினும் அதை பகவான் வெளிப்படுத்துவாரா இல்லையா என்பதில் அவனுக்கு சிறிய சந்தேகம் இருந்தது. அதை அடுத்த சுலோகத்தில் வெளிப்படுகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.4|| அர்ஜுனனின் கோரிக்கையின் தொடர்ச்சி:

मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो

योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ।। ।।

மந்யஸே யதி3 தச்ச2க்யம் மயா த்3ரஷ்டுமிதி ப்ரபோ4

யோகே3ச்1வர ததோ மே த்வம் 3ர்ச1யாத்மாநமவ்யயம் ।। 4 ।।


प्रभो  ப்ரபோ4  பிரபுவே   तत्  தத்  அது   मया  மயா  என்னால்    द्रष्टुम्   த்3ரஷ்டும்  பார்ப்பதற்கு    

शक्यं इति  1க்யம் இதி  சாத்தியம் என்று    मन्यसे यदि  மந்யஸே யதி3  கருதுவீர்களானால்     

तत:  தத:  அப்பொழுது   योगेश्वर  யோகே3ச்1வர  யோகேஷ்வரா   त्वं मे  த்வம் மே  தாங்கள் எனக்கு     

अव्ययम्  அவ்யயம்  அழிவில்லாத    आत्मानम्  ஆத்மாநம்  உங்களை  दर्शय  3ர்ச1  காண்பிப்பீராக


இறைவா, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின், யோகேஷ்வரா, உமது அழிவற்ற உருவத்தைக் காட்டியருள்க.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.


விளக்கம்:

யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேஷ்வரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச செயல்களுக்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான். ஈஷ்வரனது விஷ்வரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தரிசனம் கொடுத்தருள யோகேஷ்வரனுக்கு இயலும்.

தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராமல், ஈஷ்வரனுடைய அனுகிரஹத்துக்கு முதன்மை கொடுப்பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே உள்ளபடி அறிகிறார்.

=> அர்ஜுனனின் கோரிக்கை:

ஆசைப்படுதல் மட்டுமே ஒன்றை அடைய தகுதியாகாது. எனவே அர்ஜுனன், எனக்கு தகுதியுள்ளது என நீங்கள் நினைத்தால் உங்களது விஷ்வரூபத்தை காட்டுங்கள் என்கிறான். பொதுவாக, அதிகப்படியாக ஒன்றை கேட்கும்போது மக்கள் இப்படித் தொடங்குவார்கள், ‘நான் கேட்பது அதிகமானதாக இல்லையெனில்…’. பெரியதான ஒன்றை கேட்கப்போகிறேன் என்பதை தயார் செய்யும் முன்நிகழ்வாக இது இருக்கும். அதேபோல, இங்கு அர்ஜுனன்அதை நான் பார்ப்பது சாத்தியம் என்று நீங்கள் கருதினால்…’ மந்யஸே யதி3 மயா தத் த்3ரஷ்டும் 1க்யம் இதி, என்கிறான்.

தன்னிடமுள்ள சாதாரணமான கண்களினால் அதை காண இயலாமல் போகலாம். ஆகையினால், அவன் அதற்கு தகுதியற்றவன் என அர்ஜுனனுக்குத் தெரிகிறது. எனவே விஷ்வரூபத்தை காணக்கூடிய கண்களுக்கான மறைமுக கோரிக்கையாகவும் இதை கொள்ளலாம்


=> விளி வேற்றுமை:

இங்கு அர்ஜுனன் கிருஷ்ணரை, ‘ப்ரபோ4என்றும்யோகே3ச்1வரஎன்றும் அழைக்கின்றான். இலக்கணத்தில், அருகிலுள்ளவரை அழைக்கும்பொருட்டு பயன்படுத்தப்படும் விளி வேற்றுமைச் சொற்களை, இந்த அத்தியாயம் முழுதும் நிறைய காணப்போகிறோம். ‘ப்ரபு4எனில் தலைவன், அனைத்தையும் தருகின்ற இறைவனைக் குறிக்கின்றது. ‘யோகே3ச்1வரஎனில் யோகிகளின் தலைவன் எனப் பார்த்தோம். சந்யாசத்தின் மூலம் அடையப்படும் மோக்ஷம் எனும் மேலான முடிவை அடைந்தவனை யோகி என்கிறோம். அல்லது, குறைந்த பட்சம் ஆசந-சித்தியின் மூலம் தனது உடலை கட்டுக்குள் வைத்திருப்பவன் யோகி. அல்லது, யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரனா, தியானா, சமாதி ஆகிய எட்டு அங்கங்களுடன் கூடிய அஷ்டாங்க யோகத்தின் துணைக் கொண்டு தனது புலன்கள் மற்றும் மனதை கட்டுக்குள் வைத்திருப்பவன் யோகி. இந்த யோகத்தின் மூலம் அவர்கள் யோகசூத்திரத்தில் கூறப்படும் அணிமா, கரிமா, லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை தங்களின் கட்டுக்குள் கொண்டுவருகின்றனர். சிலவற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் இத்தகு யோகிகளுக்கு மத்தியில் அவர்களின் தலைவரான கிருஷ்ணர் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக உள்ளார். யோக-மாயையையே ஆளுமைக்கு உட்படுத்தும் மாயாவி இவர். ‘என் பிரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு என் மாயையினால் பிறக்கிறேன்என நான்காம் அத்தியாயத்தில் சுலோகம் 4.6-ல் பகவான் கூறியிருந்தார். எனவே இங்குயோகே3ச்1வரஎனும் சொல்லை அர்ஜுனன் விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதாகத் தெரிகிறது. ‘சித்திகளையுடைய யோகிகளின் தலைவனாகவுள்ள யோகேஷ்வரனான தாங்கள், உங்கள் சக்திகளில் சிலவற்றை எனக்களித்து அந்த மேலான வடிவத்தை காணும்படிச் செய்யலாம். எனவே இது சாத்தியம் என நீங்கள் நினைத்தால் என் பொருட்டு தயவு செய்து உங்களுடைய முடிவற்ற அழியாத ரூபத்தை காண்பிப்பீராகஎன்கிறான் அர்ஜுனன்


=> பகவானின் முடிவு:

அர்ஜுனனின் இந்த வேண்டுகோளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை இப்போது கிருஷ்ணர் தீர்மானிக்க வேண்டும். அவர் நினைத்திருந்தால் இக்கோரிக்கையை மறுத்து, உபதேசத்திற்கான விஷயத்தை மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் இதை கற்பித்தலுக்கான ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கிறார். இதுவரை அவர் உபதேசித்ததைக் காட்சியின் மூலம் காட்டும்போது அது அர்ஜுனனுக்கு நன்மை பயக்கும் என எண்ணுகிறார். ஒரே ஒரு புருஷ தத்துவம் மட்டுமே; மற்றவை அனைத்தும் பிரக்ருதியே என்பதை காட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக இதை கிருஷ்ணர் எண்ணியிருக்கக் கூடும். புருஷோத்தமனான அந்த ஒரு புருஷன் ஆத்மாவாகவே இருக்கிறது; இரண்டாவது என எதுவுமில்லை என்பதையே முழு சாஸ்திரமும் கூறுகிறது.

முதலாம் அத்தியாயத்தில், தனக்குப் பாவம் வந்துவிடும் என்று நினைத்து, போரில் ஈடுபடுவதை எதிர்த்துப் பல்வேறு விதமான விவாதங்களை முன்வைத்தான் அர்ஜுனன். அதன்மூலம் இவைகளனைத்திலும் தனது பங்கை பூதாகரமானதாகக் கருதும் உணர்வை வெளிப்படுத்தினான். அந்த வெளிப்பாடு அனைத்திற்கும் இந்தக் காட்சி-போதனை எளிமையாகப் பதிலளித்துவிடும் என எதிர்ப்பார்த்து, விஷ்வரூபத்தைக் காட்ட பகவான் முடிவு செய்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||11.5|| அர்ஜுனனின் விண்ணப்பத்தை ஏற்றல்:

श्रीभगवानुवाच

पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रश:

नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

பச்1 மே பார்த2 ரூபாணி 1தசோ1ऽத2 ஸஹஸ்ரச1:  

நாநாவிதா4நி தி3வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ।। 5 ।।


श्रीभगवान् उवाच  ஸ்ரீப43வாந் உவாச  ஶ்ரீ பகவான் சொன்னது

पार्थ  பார்த2  பார்த்தா   मे  மே  என்னுடைய   दिव्यानि  தி3வ்யாநி  தெய்வத்தன்மை வாய்ந்தவைகளும்   नानाविधानि  நாநாவிதா4நி  அநேக விதங்களானவைகளும்   

नाना वर्ण आकृतीनि   நாநா வர்ண ஆக்ருதீநி   பல நிறங்களும் வடிவங்களும் உடையனவும்   

शतश:  1தச1:  நூற்றுக்கணக்கிலும்   अथ  அத2  பின்னும்    सहस्रश:  ஸஹஸ்ரச1:  ஆயிரக்கணக்கிலும்    रूपाणि  ரூபாணி  ரூபங்களை    पश्य  பச்1  பார்.     

         

ஶ்ரீ பகவான் சொன்னது

பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவங்களும் உடைய எனது தெய்விக உருவங்களை நூறு நூறாய், ஆயிரம் ஆயிரமாய், இனிப் பார், பார்த்தா.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

பல நூறாகவும், பல்லாயிரமாகவும்,
வகை பல, நிறம் பல, அளவு பலவாகும்
என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.


விளக்கம்:

=> கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுதல்:

பகவான், ‘பார்_பச்1என தனது பதிலை ஆரம்பிக்கிறார். ஆனால் அவர் விஷ்வரூபத்தை உடனே காட்டுவதில்லை; எனவே இதை, ‘நான் காட்டப் போகிறேன், நீ பார்க்கப் போகிறாய்என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் அர்ஜுனன் விஷ்வரூபத்தை பார்க்கத் தகுதியுடையவன் என்பதுபார்என பகவான் பகர்வதிலிருந்து தெரிகிறது. எனவே, ‘நீ தகுதியானவன்தான், ஆகவே பார்எனக் கூறுவதாகக் கொள்ளலாம்.

நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் எனது வடிவங்கள் உள்ளன1தச1: ஸஹஸ்ரச1: ரூபாணி, என்கிறார். இந்தநூறுமற்றும்ஆயிரம்உள்ளிட்ட எண்களை நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது. அவை எண்ணற்றவைகள் என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையில் ஏராளமானதாக இருப்பது மட்டுமின்றி, அவைகள் எண்ணற்ற வகைகளை உடையதாகவும் இருக்கின்றன, நாநாவிதா4நி. வெவ்வேறு விதங்களில் இருப்பது மட்டுமின்றி, பல்வேறு வகையான வடிவங்களுடனும் பல நிறங்களுடனும் இருக்கின்றனநாநா வர்ண ஆக்ருதீநி. மேலும் விஷ்வரூபம் என்பது இங்கு இருக்கின்ற நமக்கு அறிமுகப்பட்டவைகளை மட்டுமல்ல, கற்பனையும்கூட செய்யமுடியாத அளவு சொர்க்கம் மற்றும் பிற லோகங்களில் உள்ளவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறதுதி3வ்யாநி. இந்த பூமியிலும் நம்மால் பொதுவாக பார்க்கப்படாத பலவகையான பழங்குடி மக்கள் மற்றும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என பல்வேறு வகையான உயிரினங்களையும் விஷ்வரூபம் உள்ளடக்கியதாக உள்ளது. ‘ஏற்கனவே அறிமுகப்பட்ட விஷயங்களை மட்டுமே பார்க்கப் போகிறோம் என நினைக்க வேண்டாம். நீ இதுவரை பார்த்திராத அனைத்து விஷயங்களையும் பார்’, எனக் கூறி அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார் பகவான்

வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம், ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன்; ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பலவிதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப் பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன.

---------------------------------------------------------------------------------------------------------------------