செவ்வாய், 26 மார்ச், 2024

விபூதி யோகம் 10.32 - 10.34

||10.32|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन

अध्यात्मविद्या विद्यानां वाद: प्रवदतामहम् ।। ३२ ।।

ஸர்கா3ணாமாதி3ரந்தச்1 மத்4யம் சைவாஹமர்ஜுந

அத்4யாத்மவித்3யா வித்3யாநாம் வாத3: ப்ரவத3தாமஹம் ।। 32 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா    सर्गाणाम्  ஸர்கா3ணாம்  சிருஷ்டிப் பொருள்களுக்கு  

आदि:  ஆதி3:  துவக்கமும்   अन्त:   அந்த:   முடிவும்    मध्यं   மத்4யம்   இடையும்   

अहं एव  அஹம் ஏவ  நானே   विद्यानां  வித்3யாநாம்  வித்யைகளுள்   अध्यात्म विद्या  அத்4யாத்ம வித்3யா  ஆத்ம வித்யை    प्रवदताम्  ப்ரவத3தாம்  தர்க்கம் செய்பவர்களுள்    वाद: अहम्  வாத3: அஹம்  வாதமாக நான் இருக்கிறேன்.


அர்ஜுனா, சிருஷ்டிப் பொருள்களுக்கு நான் ஆதி, நடு, அந்தமாகிறேன். வித்யைகளுள் நான் ஆத்மவித்யா. தர்க்கம் செய்பவர்களுள் நான் வாதமாகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.


விளக்கம்:

=> படைப்புகளின் ஆதியும் அந்தமும்:

இந்த அத்தியாயத்தின் இருபதாவது சுலோகத்தில் சொல்லியபடி இறைவன் உயிர்களுக்குத் தோற்றம், இருப்பு, ஒடுக்கமாவது போல, இந்த சிருஷ்டிப் பொருள்களுக்கும் அவரே பிறப்பிடம், இருப்பிடம் மற்றும் ஒடுங்குமிடமாகிறார். ஆபரணம் ஒன்றை உருவாக்கும்போதும், அது ஆபரணமாக நிலைத்திருக்கும்போதும், அதை அழிக்கும்போதும் அது தங்கமாகவே இருக்கிறது. அதுபோல, உலகமாகப் பரிணமிக்கும்போதும் மூலவஸ்துவாகிய பரம்பொருள் அனைத்துக்குமே ஆதாரமாயிருக்கிறது.

பொதுவாகஸர்க3என்பது எந்தவொரு செயலையும் குறிக்கலாம். எனவே இதை பலவிதமாக விரித்துரைக்கலாம்

    1. பேசுவது, உண்பது, நடப்பது போன்ற பல்வேறு செயல்களின் ஆரம்பமும் இடையும் முடிவும் நான்

    2. படைப்பு செயல், அதைக் காத்து நிலைநிறுத்தும் செயல் மற்றும் அழிக்கும் செயல் ஆகிய மூன்றும் எல்லாச் செயல்களிலும் முக்கியமானவைகள் ஆகின்றன. எனவே படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான்.

    3. அல்லது, எந்தவொரு செயலுக்கும் ஆரம்பம் என்பது அதைச் செய்ய வேண்டுமென்ற எண்ணம், சங்கல்பம். அப்படி எந்தவொரு செயலுக்கும் அதற்கான சங்கல்பமாகவும், அதைச் செய்வதற்கான செயல்முறையாகவும்(க்ரியா) மற்றும் அதனுடைய பலனாகவும் நானே இருக்கின்றேன். எதுவும் என்னிலிருந்து வேறானது அல்ல


=> வித்யைகளுள் ஆத்மவித்யா:

அறிவைக் கொடுக்கும் பல்வேறு துறைகளில் நான் ஆத்ம-ஞானத்தை கொடுக்கும் ஆத்ம-வித்யாவாக இருக்கிறேன் என்கிறார். ஆத்ம வித்யா என்பது ப்ரம்ம வித்யா. ப்ரம்மத்தை அறிந்தால் அக்ஞானம் அறவே அகன்று, பிறவிப் பிணியிலிருந்து விடுதலைக் கிடைக்கின்றது. சாந்தோக்ய உபநிஷதத்தில் நாரதர் விதவிதமான துறைகளைப் பற்றிச் சொல்லி, இத்தனை அறிவிலும் தனக்கு மனநிறைவு கிடைக்கவில்லை என்றும் ஆகவே ஆத்ம-அறிவை அளிக்குமாறும் கோருவார். ஆத்ம-ஞானத்தின் மிக முக்கியமான இரண்டு பெருமைகள்

(1) பிற எந்தவொரு அறிவும் நிலையற்றதான(அநித்திய) அறிவாகவே உள்ளது. ஒன்று, அறிவு காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் அல்லது அந்த அறிவானது மாறக்கூடிய விஷயத்தைப் பற்றியதாக இருக்கும். ஆனால் ஆத்ம-ஞானம் என்பது என்றும் மாறாது; அதன் விஷயமும் என்றும் நித்தியமானதாக இருப்பது.

(2) இது மோக்ஷத்திற்குப் பிரதானமாக இருப்பதாக உள்ளது. இந்த அறிவு மட்டும்தான் சம்சாரத்திலிருந்து விடுதலையைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆத்ம-வித்யையாக நான் இருக்கின்றேன் என்கிறார் பகவான்.


=> தர்க்கம் செய்பவர்களுள் வாதம்:

இருவர் தங்களுக்கிடையில் தர்க்கம் செய்வதை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:

(1) வாதம்: விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி உண்மையை அறியவேண்டும் என்ற ஓர் எண்ணத்துடன் முறையாகப் பேசுவது வாதம். இதில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கேள்வியில்லை. அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய சரியான அறிவை அடையவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

(2) ஜல்பம்: ஒவ்வொருவனும் தனது கொள்கையே சரி என நிலைநாட்டப் பார்ப்பது ஜல்பம். சாஸ்திரப் பிரமாணம், யுக்தி இவைகளைக் கையாண்டு, எதிரியை வாயடக்குவது இதன் நோக்கம்

(3) விதண்டை: விதண்டா வாதம் அல்லது விதண்டையில் தன் கொள்கையை ஸ்தாபிப்பதுமில்லை, எதிரியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதலுமில்லை. எதிரியையும் அவனது கொள்கையையும் ஏளனம் செய்வது மட்டுமே இதன் முக்கிய நோக்கமாகிறது.

இவை மூன்றில் உண்மையான ஆராய்ச்சிக்கு வாதம் ஒன்றே துணைபுரிவதால் தர்க்கத்தில் தாம் வாதமாக இருப்பதாக பகவான் பகர்கிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மூலமாகிய ஒன்றைத் தெரிந்துகொள்; பிறகு உனக்கு எல்லாம் தெரியவரும். ஒன்று என்ற இலக்கத்தின்பின் பூஜ்யங்களைச் சேர்த்தால், அது நூறாகவும் ஆயிரமாகவும் ஆகின்றது. ஆனால் அந்த ஒன்று என்னும் இலக்கத்தை அழித்துவிட்டால் மிகுந்திருப்பனவற்றுக்கு மதிப்பு இல்லை. ஒன்றில்தான் பலவற்றுக்கு யோக்கியதையுண்டாகிறது. முதலில் ஒன்று; பின்னர் பல. முதலில் ஈஷ்வரன்; பின்னர் ஜீவனும் உலகமும்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.33|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

अक्षराणामकारोऽस्मि द्वन्द्व: सामासिकस्य

अहमेवाक्षय: कालो धाताहं विश्वतोमुख: ।। ३३ ।।

அக்ஷராணாமகாரோऽஸ்மி த்3வந்த்3: ஸாமாஸிகஸ்ய  

அஹமேவாக்ஷய: காலோ தா4தாஹம் விச்1வதோமுக2: ।। 33 ।।


अक्षराणाम्  அக்ஷராணாம்  அக்ஷரங்களுள்   अकार: अस्मि  அகார: அஸ்மி அகாரமாக இருக்கிறேன்    सामासिकस्य   ஸாமாஸிகஸ்ய   கூட்டுச் சொற்களுள்    द्वन्द्व:  த்3வந்த்3:  த்வந்த்வ ஸமாஸமாகவும்   

अहम् एव   அஹம் ஏவ   நானே   अक्षय: काल:  அக்ஷய: கால:  முடிவில்லாத காலமாகவும் இருக்கிறேன்    

अहं  அஹம்   நான்     विश्वतोमुखவிச்1வதோமுக2எங்கும் முகமுள்ளவனாகிய    धाता  தா4தா  கர்மபலனை வகுத்தளிப்பவனாகிறேன்.


எழுத்துக்களுள் நான் அகரம்; கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு. ஓயாத காலம் நானே. எங்கும் பரந்திருந்து, வினைப்பயனை வழங்குபவன் நானே.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.


விளக்கம்:

=> எழுத்துக்களுள் அகரம்

அனைத்து எழுத்துக்களுள், நான்என்ற எழுத்தாகவுள்ளேன். பெரும்பாலான மொழிகளிலும் பேச்சுவழக்குகளிலும் முதல் ஒலியாக இருப்பதுஆகும். அந்த அடிப்படை ஒலியில் ஏற்படும் மாற்றத்திலிருந்தே மற்ற அனைத்து எழுத்துக்களும் வருகின்றன. எல்லா எழுத்துக்களுக்கும் சப்தம் மூலம் எனில் அந்த சப்தத்திற்கே மூலமாக விளங்குவது’. எனவே அனைத்து எழுத்துக்களிலும் ஆதாரமாக விளங்கும்’-வாக நான் உள்ளேன். ‘அகர முதல வெழுத்தெல்லாம்என்பது வள்ளுவன் வாக்கு.


=> கூட்டுச் சொற்களுள் இரு சொற்கூட்டு

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளைத் தரும்பொழுது அவை கூட்டுச் சொற்கள் எனப்படுகின்றன. அது சமஸ்கிருதத்தில்ஸமாஸ(समास)’ என்றழைக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் கூட்டுச் சொற்கள் உள்ளன. உதாரணமாக தமிழில், பற்பொடி, தீப்பெட்டி, பயணச்சீட்டு போன்றவற்றைக் கூறலாம். அவைகள் பெரும்பாலும் நம் அன்றாடப் பயன்பாட்டைப் பொறுத்து உருவாகின்றன. ஆனால் சமஸ்கிருத சொற்கள் கூட்டுச் சொற்களாக அமைவதற்குச் சில முறைகள் இருக்கின்றன. அதன்படி, அவை நான்கு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

(1) அவ்யயீபா4இந்த கூட்டுசொற்களில் முதல் சொல் அவ்யயமாக இருக்கிறது. சமஸ்கிருத இலக்கணத்தில் ஆண்பால், பெண்பால், இறந்தகாலம், நிகழ்காலம், ஒருமை பன்மை என சொற்கள் எந்த தன்மை கொண்டதாக இருந்தாலும், இலக்கண ரீதியாக மாறுதல் அடையாத சொற்கள் அவ்யயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அவ்யயமே இவ்வகை கூட்டுசொற்களின் பிரதான சொல்லாகவும் இருக்கிறது. .கா., உபகும்பம் - பானைக்கு அருகில். இதில்உபஎனும் அவ்யய சொல்லே முக்கியச் சொல்லாக உள்ளது

(2) தத்புருஷஇதில் கடைசி வார்த்தை முக்கியமானது. .கா., ராஜபுருஷ - அரசனின் பணியாளன். இந்த சொல்லில் அரசனுக்குச் சொந்தமான பணியாளன் எனும் அர்த்தத்தில் இரண்டாம் சொல் முக்கியதுவம் பெறுகிறது.

(3) பஹுவ்ரீஹிஇவ்வகையான கூட்டுச் சொற்களில், கலவையில் இல்லாத ஒரு வார்த்தை பிரதானமாக உள்ளது. அதாவது, இச்சொல் வேறொரு சொல்லுக்கு பெயரடையாக அமைகிறது. எனவே இந்த அடைமொழிக்குரிய அந்த சொல் முக்கியமானதாக இருக்கும். .கா., ‘ஏக-கர்ணம் ஆநய’ — இதில் ஏக என்பது ஒன்று, கர்ண என்பது காது, ஆநய என்றால் கொண்டு வருதல். எனில், முதலில் பார்க்கும் நபரின் ஒரு காதை கொண்டு வர வேண்டுமா? இல்லை; ஏக-கர்ண எனில் ஒரு காது மட்டுமே உள்ளவன். எனவே, ‘ஒரு-காதுடைய மனிதனை கொண்டு வாஎன்பது இதன் பொருள். இதுவே பஹுவ்ரீஹி ஆகும். கீதையில் உள்ள பெரும்பாலான கூட்டுச் சொற்கள் பஹுவ்ரீஹியில் உள்ளன.

(4) த்வந்தவ - இரண்டு சொற்களையுடைய கூட்டுச் சொல்லில் இரண்டுமே சம அந்தஸ்து வகிப்பது எதுவோ அது த்வந்துவ ஸமாஸம் ஆகும். .கா., ராமலக்ஷமணெள - ராமனும் லக்ஷமணனும்; இதில் ராம மற்றும் லக்ஷமண இரண்டு சொற்களும் சம அளவு முக்கியதுவத்தை பெறுகிறது

எனவே ஒரு கூட்டுசொல்லில் பகவானை காண விரும்புபவன், அதை ஒரு த்வந்தவ கூட்டுச் சொல்லை பகுப்பாய்வு செய்வதன் மூலம் காணலாம். ஏனெனில் அதில் அனைத்து வார்த்தைகளும் சமமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது இறைவன் எல்லாவற்றிலும் சமமாக இருக்கிறார் என்பதை உணர்த்துவதாக அமைகிறது - ஸமோஹம் ஸர்வ பூதேஸு.   


=> முடிவில்லாத காலம்:

ஒரு க்ஷணம், ஒரு மணி, ஒரு நாள், ஒரு கற்பம் என்று பார்க்கும்போது, காலத்துக்கு உற்பத்தியும் முடிவும் உண்டு. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் அதை அளந்துகொண்டு போனால் காலம் அகண்டாகாரத்தில் விரிந்தோடும். ஆக காலம் அழிவற்றதாகிறது. ஆகையால் சர்வேஷ்வரனே மஹாகாலன் எனப்படுகிறான்

காலமற்றவனாக இருக்கின்ற யாரால் காலம் பிறக்கிறதோ, அந்த அழியாத காலமாக இருக்கின்றேன். காலம் என்பதின் மெய்மையாக, காலத்தை உருவாக்கியவனாக, முடிவிலாத காலமாக உள்ளேன்என சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார்.


=> எங்கும் பரந்திருந்து, வினைப்பயனை வழங்குபவன்:

இறைவன் ஒருவரே பல்கோடி உருவங்களாகப் பரிணமித்து, ஒவ்வொரு வடிவத்தின் மூலம் ஒருவிதக் கர்மபலனை அனுபவித்து வருகிறார். அவரே எங்கும் நிறைந்திருந்து, எண்ணரிய முகங்களை கொண்டவராய், வினைப்பயனை வழங்கிவருதல் இயற்கையில் நாம் எங்கும் காணும் காட்சியாக உள்ளது.

விச்1வதோமுக2:எனில் எங்கும் முகங்களை உடையவர், அனைத்து திசைகளையும் பார்த்துக் கொண்டிருப்பவர் அல்லது இந்த பிரபஞ்சத்தையே முகமாகக் கொண்டவர். அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவராக இருக்கின்றார் என்பதை இச்சொல் குறிக்கின்றது. மேலும் அவர் அனைத்து உயிரினங்களுக்கும் அவரவர் கர்மங்களின்படி கர்மபலனை அளிப்பவராக உள்ளார்தா4தா. இது அவரே அனைத்தையும் நிர்ணயிப்பவர் என்பதைக் காட்டுகிறது. இது தன்னிச்சையான ஒருதலைப்பட்சமான கொடுத்தல் அல்ல. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறிப்பிட்ட முடிவு கொடுக்கப்பட வேண்டும். நானே அதையும் செய்கிறேன் என்கிறார். எனது சட்டங்களும் நியதிகளுமே எல்லா விளைவுகளையும் உருவாக்குகின்றன. சரியோ தவறோ எல்லா விதமானச் செயல்களுக்கும் அதற்கானப் பலனை நானே தருகிறேன்.

அனைத்துமே இறைவனின் வெளிப்பாடாக இருந்தாலும், சிலவற்றில் அவரின் வெளிப்பாடு சிறப்பானதாக உள்ளது. இறைவனைப் போற்றிட உதவும் இடங்கள் இவை. அச்சிறப்பை ஒரு பார்க்கப்படும் பொருள் என நினைக்கும்போது நாம் அங்கு எதையோ இழக்கிறோம். ஆனால் அப்பொருளை இறைவனின் மஹிமையாகப் போற்றும்பொழுது, அங்கு ஒரு முழுமையுடன் நாம் நம்மை இணைத்துக் கொள்கிறோம். பார்ப்பவன் - பார்க்கப்படும் பொருள் எனும் உறவில் அந்தவொரு குறிப்பிட்ட பொருளுடன் மட்டுமே இணக்கத்தை உண்டாக்குகிறோம். ஆனால் ஈஷ்வரனின் மஹிமையென அதை அறியும்போது நாம் உடனடியாக இறைவனுடன் இணைகிறோம். ஆகையால், எங்கெங்கு மேன்மையின் வெளிப்பாடு உள்ளதோ, அது எனக்குரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று பகவான் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.34|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

मृत्यु: सर्वहरश्चाहमुद्भवश्च भविष्यताम्

कीर्ति: श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृति: क्षमा ।। ३४ ।। 

ம்ருத்யு: ஸர்வஹரச்1சாஹமுத்34வச்1 4விஷ்யதாம்

கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா4 த்4ருதி: க்ஷமா ।। 34 ।।


अहम्  அஹம்  நான்    सर्वहर:  ஸர்வஹர:  எல்லாவற்றையும் கரக்கின்ற  मृत्यु:  ம்ருத்யு:   மரணமாயும்   भविष्यताम्   4விஷ்யதாம்  வரவிருக்கின்ற    उद्भव:  உத்34:   செழிப்பிற்கு காரணமாகவும்     

नारीणां   நாரீணாம்  பெண்மைகளுள்   कीर्ति:  கீர்தி:  புகழ்   श्री:  ஶ்ரீசெல்வம்(திரு)    वाक्  வாக்  சொல்   स्मृति:  ஸ்ம்ருதி:  நினைவு     मेधा  மேதா4  அறிவு   धृति:  த்4ருதி:  துணிவு    क्षमा  க்ஷமா  பொறை.


அனைத்தையும் அழிக்கும் மரணம் நான். வரவிருக்கின்ற அனைத்து செழிப்பிற்கும் காரணம் நான். பெண்மைகளுள் நான் புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறையாக இருக்கின்றேன்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை


விளக்கம்:

=> மரணமும் நான்:

எந்தவொரு விஷயத்திற்கும் வைக்கப்படும் முற்றுப்புள்ளி, முடிவு, அதாவது மரணம், ‘ம்ருத்யுஎனப்படும். சங்கரர் மரணத்தில் இரண்டு வகையுண்டு என்கிறார்

    (1) 4-ஹர, ஒருவனின் செல்வத்தை எடுத்துச் செல்பவன் அல்லது அழிப்பவன். இந்த அழிவு அவனின் பட்டம், பதவி, நிலம், உடைமைகள், பணம் போன்றவற்றை பறிப்பவனைக் குறிக்கிறது

    (2) ப்ராண-ஹர, இது ஒருவனுடைய உயிரைப் பறிப்பவனைக் குறிக்கிறது

இங்கு பகவான் எந்த மரணத்தைப் பற்றிப் பேசுகிறார்? ஸர்வஹர, அனைத்தையும் எடுத்துச் செல்பவன் நான் என்று கூறித் தெளிவுபடுத்துகிறார்ஸர்வம் ஹரதி இதி ஸர்வஹர:. ஒருவன் மரணத்தின்போது அவனுடைய செல்வம், புகழ், பதவி என தனது வாழ்நாளில் அவன் ஈட்டிய அனைத்தையும் மிச்சமின்றி விட்டுச் செல்கிறான். அந்த மரண தேவனாகவும் நானே இருக்கின்றேன் என்கிறார்.    

பகவான் தன்னை யமன் என ஏற்கனவே கூறியிருந்தார். ஸம்யமதாம் அஹம் யம:அடக்கியாளுபவர்களுள் நான் யமன். இதில்யம்எனும் வினையடி கட்டுப்பாட்டைக் குறிப்பதால், தானே தன்னையடக்கி ஆளுதற்கு யமம் என்று பெயர். இவ்வாறு யமனின் ஒழுங்குபடுத்தும் அம்சம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுவிட்டதால், இங்கு எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ம்ருத்யு அம்சம் சுட்டிக் காட்டப்படுகிறது.  

அல்லது, பிரளய சமயத்தில் அனைத்தையும் தனக்குள் ஒடுக்கிக் கொள்வதன் மூலம் அழிவை உண்டாகும் இறைவடிவம் நான், ஸம்ஹாரகர்தா, என்றும் பொருள் கொள்ளலாம்.


=> செழிப்பும் நான்:

உத்34:எனில் விரும்பத்தக்க விதத்தில் நடப்பது. சங்கரர் இச்சொல்லை செழிப்பு(அப்4யுத3), என மொழிபெயர்க்கிறார். உலக அனுபவம் அல்லது சில செல்வம் மூலமாக கிடைக்கும் சுகம் என எந்தவொரு இனிமையான அனுபவமாக இருந்தாலும் அதுஅப்4யுத3ஆகும். ஒரு மனிதனுக்கு இரண்டு விரும்பத்தக்க இலக்குகள் உள்ளனஅப்4யுத3 மற்றும் நிச்1ச்1ரேயச. ‘நிச்1ச்1ரேயசஎனில் அது மிகவும் விரும்பத்தக்கதாகவுள்ள மோக்ஷத்தைக் குறிக்கிறது. மோக்ஷத்தை தவிர மற்ற அனைத்தும், அதாவது தர்ம-அர்த்த-காம அனைத்தும்அப்4யுத3’. 

இந்த தர்ம-அர்த்த-காம முதலிய செழிப்புகளாக நான் இருப்பதோடு மட்டுமல்லாமல், அதனுடைய மூலமாகவும் நானே இருக்கின்றேன். தர்மமும் புண்ணியமும் என்னிடமிருந்தே பிறக்கின்றன. தான் அதை உருவாக்குவதாக ஒருவன் நினைத்துவிட முடியாது. என்னால் உருவாக்கப்பட்ட நியதியிலிருந்து பிறக்கின்ற எதுவும் என்னிடமிருந்து வேறானது அல்ல.  

இப்பொழுது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஒருவன் அடையப்போகின்ற அனைத்து செழிப்புக்கும் நானே காரணம்4விஷ்யதாம் உத்34: .


=> பெண்மைகளுள் நான்:

நாரீணாம்எனும் சொல் இருவகையாக இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது. பெண் பாலினத்திலுள்ள சமஸ்கிருத சொற்களுள், என்பது ஒருவகை விளக்கம். அல்லது, பெண்களிடத்துள்ள குணங்கள் என்பது இனியொரு விளக்கம். இங்கு பகவான், பெண்களிடத்து நான் பின்வருகின்ற குணங்களாக இருக்கின்றேன் எனக் கூறுகிறார்:

கீர்தி புகழ். தர்மத்திலிருந்து பிறக்கும் புகழ். நல்வாழ்க்கை நிலைத்திருக்குமிடத்து கீர்த்தி தானே வந்தமைகிறது

ஶ்ரீசெல்வத்தைக் குறிக்கிறது. பணம், அறிவு, ஆரோக்கியம் போன்ற விரும்பத்தக்க அனைத்து ஐஸ்வர்யங்களையும் இச்சொல் குறிக்கிறது.

வாக்சொல்; பேச்சு. இது நல்ல(ஹித), உண்மையான(ஸத்ய), இனிமையான(ப்ரிய) பேச்சைக் குறிக்கிறது. உயர்ந்த விஷயங்களைப் பேசும் ஒருவனின் சொல்லில் இவைகள் இருக்கின்றன என்பதால்வாக்என்பது மறைமுகமாக இம்மூன்று குணங்களையும் குறிக்கிறது.

ஸ்ம்ருதிஞாபக சக்தி; நினைவில் வைத்துக் கொள்ளும் திறனைக் குறிக்கிறது.

மேதா4மனதில் பதிய வைக்கும் சக்தி; சாஸ்திரங்களின் உட்கருத்தை அல்லது எந்தவொரு அறிவையும் உள்ளபடி பெற்று, அதை நன்கு தக்கவைத்து பிரதிபலிக்கும் திறன் மேதை அல்லது அறிவு எனப்படுகிறது. பொதுவாக மேதை இருந்தால் ஞாபகசக்தியும் (ஸ்ம்ருதி) இருக்கும்

த்4ருதி:துணிவு, உறுதி. உடலும் இந்திரியங்களும் துன்பங்களுக்கிடையிலும் தடுமாற்றமடையாமல் இருக்குமாயின் அது திருதி அல்லது திண்மையாகிறது

க்ஷமாபொறுமை. உண்ணும் பொழுது அல்லது பேசும் பொழுது பல்லானது தவறி உதட்டைக் கடித்துவிடுமாகில் அதற்காக யாரும் பல்லை நொந்து கொள்வதில்லை. அங்கு மனிதன் பொறையே வடிவெடுத்தவனாகிறான். ஒவ்வொருவனும் தான் செய்த குற்றத்தைத் தானே மன்னித்துக் கொள்கிறான். அவ்விதம் பிறர் செய்த குற்றத்தையும் கேட்டையும் பொறுத்துக் கொள்ளுதலே க்ஷமா அல்லது பொறையாகிறது

இந்த மேலான தன்மைகளே சிறந்த பெண்மைகளாகின்றன. இவ்விதம் பெண் பாலினத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளிலும், நான் இந்த குணங்களாக இருக்கின்றேன் என்கிறார் பகவான். யாரேனும் ஒருவன் இவற்றில் ஏதேனுமொன்றின் சாயலையோ அல்லது ஒரு சிறிய அளவு செல்வத்தையோ பெற்று மன நிறைவை அடைந்ததாக கருதினாலும்கூட அது பரமேஷ்வரனே ஆகும் என்று சங்கரர் தனது பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மாயைதான் ப்ரம்மத்தை தோற்றுவிக்கின்றது. மாயையில்லாவிட்டால் ப்ரம்மத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? ஈஷ்வரனுடைய சக்தியை அறிந்துகொள்ளாமல் போனால் அவனை அறியவே முடியாது.

---------------------------------------------------------------------------------------------------------------------