செவ்வாய், 19 மார்ச், 2024

விபூதி யோகம் 10.29 - 10.31

||10.29|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम्

पितॄणामर्यमा चास्मि यम: संयमतामहम् ।। २९ ।।

அநந்தச்1சாஸ்மி நாகா3நாம் வருணோ யாத3ஸாமஹம்

பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் ।। 29 ।।


नागानां  நாகா3நாம்  நாகங்களுள்   अनन्त:  அநந்த:   அனந்தனாக    अस्मि  அஸ்மி  நான் இருக்கிறேன்    यादसाम्  யாத3ஸாம்  ஜலதேவதைகளுக்குள்    अहम् वरुण:  அஹம் வருண:  நான் வருணன்    

पितॄणाम्  பித்ரூணாம்  பித்ருக்களுக்கிடையில்   अर्यमा   அர்யமா அரியமாவாகவும்    

अस्मि  அஸ்மி  இருக்கிறேன்   संयमताम्  ஸம்யமதாம்  அடக்கியாளுபவர்களுள்   

अहम् यम:  அஹம் யம:  நான் யமன்.


நாகங்களுள் நான் அனந்தன், ஜலதேவதைகளுள் நான் வருணன், பித்ருக்களுள் அரியமான், அடக்கியாளுபவர்களுள் நான் யமன் ஆவேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.


விளக்கம்:

=> நாகங்களுள் அனந்தன்:

புராணங்களின்படி ஒரு தலை மற்றும் பல தலை பாம்புகள் உள்ளன. விஷமில்லாததும் பல தலைகளையுடையதும் நாகம் எனப்படுகின்றன. அவைகளுள் நாகராஜாவாயிருப்பது அனந்தன் எனும் ஆதிசேஷன். அது மஹா விஷ்ணுவிற்கு சயனமாக உள்ளது. ஐந்து தலைகளைக் கொண்டதான அது, மாயாசக்தி முழுதும் பஞ்சபூத சொரூபம் என்பதை விளக்குகிறது. இந்த நாகம் ஹரிக்கு மெத்தையாக அமைந்திருப்பது மட்டுமல்லாது, அவர் தலைக்குமேல் குடையாகவும் அமைந்திருக்கிறது. சிலந்திப்பூச்சி தன் உடலினின்று உண்டாக்கிய வலையிலேயே வசிப்பதுபோன்று, தன்னிடத்திருந்து உண்டான பிரக்ருதியிலேயே பகவான் வீற்றிருக்கிறான் என்பதை இந்த சயனம் விளக்குகிறது. நாகமே குடையாயமைவது, வழிபாடு எப்பொழுதும் பிரக்ருதிக்கு உட்பட்டது என்பதை விளக்குவதாக உள்ளது. பகவானுக்கு பாம்பணையாக விளங்கும் இந்த அனந்தன், அவருடைய விபூதியை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.


=> ஜலதேவதைகளுள் வருணன்:

வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள தேவர்களில் ஒருவன் வருணன். அவனுக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் ஆதிக்கம் உண்டு. அறிவில் சிறந்தவனான அவன் நாளடைவில் ஜலதேவதைகளோடு இணைக்கப்பட்டு அவர்களுக்கு அரனாகிறான். கங்கை, யமுனை போன்ற நதிகளின் அதிஷ்டான தேவதையாக இருக்கும் அவனுக்கு சிந்துபதி அல்லது கடல்வேந்தன் என்ற பட்டமும் அளிக்கப்படுகிறது. மேற்கு திசைக்குத் திக்பாலனாக அமைந்திருப்பவனும் வருணன். இத்தனை மஹிமைகளும் ஈஷ்வர விபூதியாகவே உள்ளது


=> பித்ருக்களுள் அரியமான்:

மரணத்தின் வாயிலாகப் பித்ருலோகத்துக்குச் சென்ற முன்னோர்களுள் முதலானவன் அரியமான். ஆதலால் அவன் பித்ருக்களுக்கெல்லாம் தலைமை வகிக்கிறான். பித்ருக்களை வணங்குபவர்கள் அனைவரும் அவனையும் வணங்குவதுண்டு. அரியமானின் இந்த சிறப்புகள் அனைத்தும் ஈஷ்வரனுடையதே ஆகும்.


=> அடக்கியாளுபவர்களுள் யமன்:

தானே தன்னையடக்கி ஆளுதற்கு யமம் என்று பெயர். அடக்கம் அமையப்பெறவில்லையெனில் அது தண்டனையாகிறது. மனிதன் தன் வாழ்க்கையிலேயே இவ்வுண்மையைக் காணலாம். துக்கமாகத் தனக்கு வந்து அமையும் தண்டனைக்கெல்லாம் காரணம், தான் அடக்கம் பழகாமை என்பதை உணரமுடியும். அஷ்டாங்க யோகத்தில் யமம் முதல் அங்கமாகிறது. ஏனெனில் அடக்கமில்லாமல் யோகமில்லை.

மனிதர்களுள் யுதிஷ்டிரன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தேவர்களுள் யமன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தர்மன் என்றாலும் யமனையே குறிக்கிறது. அவனது ஆட்சி செங்கோல் வளையாது நடைபெறுகிறது. யமபுரம் என்பது அவனது இருப்பிடம் ஆகும். மரணத்திற்கு பிறகு ஜீவன் அவனுடைய முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு சித்திரகுப்தன் என்பவன் அந்த குறிப்பிட்ட ஜீவனின் பாப புண்ணிய கணக்கை வாசிக்கிறான். அவனது கணக்குப் புத்தகத்திற்கு அக்ரசந்தானம் என்று பெயர். ஜீவனின் வினைக்கேற்ற தீர்ப்பை யமன் சொல்லுகிறான். அதன்படி சுவர்க்கம் அல்லது நரகம் அந்த ஜீவனுக்கு வந்தமைகின்றன. தென் திசைக்கு இறைவனான யமன், மரணத்தின் அதிபதியாக உள்ளான். அவனைக் கடந்து யாரும் செல்ல முடியாது. தர்மம் இம்மியளவும் பிசகாது நடைபெறுவதால், அடக்கியாள்பவர்களில் நான் யமன் என பகவான் கூறுவது பொருத்தமானது

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.30|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

प्रह्लादश्चास्मि दैत्यानां काल: कलयतामहम्

मृगाणां मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ।। ३० ।। 

ப்ரஹ்லாத3ச்1சாஸ்மி தை3த்யாநாம் கால: கலயதாமஹம்

ம்ருகா3ணாம் ம்ருகே3ந்த்3ரோऽஹம் வைநதேயச்1 பக்ஷிணாம் ।। 30 ।।


दैत्यानां  தை3த்யாநாம்  தைத்தியர்களுக்குள்   प्रह्लाद:   ப்ரஹ்லாத3:   பிரஹ்லாதனாக   

अस्मि  அஸ்மி  இருக்கிறேன்   कलयताम्  கலயதாம்  கணக்கிடுபவர்களுள்    काल:  கால:  காலமாக இருக்கிறேன்   अहम्  அஹம்  நான்    मृगाणां   ம்ருகா3ணாம்   மிருகங்களுக்குள்  अहम्  அஹம்  நான்   मृगेन्द्र:  ம்ருகே3ந்த்3:  சிங்கமாகவும்   पक्षिणाम्  பக்ஷிணாம்  பறவைகளுள்   

वैनतेय:   வைநதேய:   கருடனாகவும் இருக்கிறேன்.


தைத்தியர்களுள் நான் பிரஹலாதன், கணிப்பவர்களுள் காலன், விலங்குகளுள் சிம்மம், பறவைகளுள் கருடன் ஆகவும் நான் இருக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.


விளக்கம்:

=> தைத்தியர்களுள் பிரஹலாதன்:

திதி என்பவள் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வி. அந்த திதிக்கு பிறந்தவன் தைத்தியன்(தை3த்ய). ஒரு சந்ததியை தாய்வழியிலோ அல்லது தந்தைவழியிலோ கூறப்படுவது மரபு. இங்கே அது அன்னைவழியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. வம்சாவளியை தாயின் நிலைபாட்டிலிருந்து கூறப்படுவதற்கான மற்றுமொரு உதாரணம் - குந்தியின் மகன், கெளந்தேயன். திதிக்கு சந்ததியாக வந்தவர்கள் அனைவரும் அசுரர்கள். இந்த அசுர சந்ததியினர் தைத்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த வழியில் வந்தவர்களில் அசுரனின் மகனாக இருந்தும்கூட பிரஹலாதன் எனும் சிறுவன் நாராயணனின் பக்தனாக இருந்தான். அவனது தந்தையான ஹிரண்யகசிபு அசுரர்குல ராஜாவாக, தனது ராஜ்ஜிய மக்கள் அனைவரும் தன்னையே தெய்வமாக வணங்க வேண்டும்; வேறு எந்த கடவுளையும் வணங்கக்கூடாது என்று கட்டளையிட்டான். மேலும் யாவரும் தனது பெயரையேஹிரண்யாய நம:’ என ஜபிக்கவேண்டும் என்றும் பிரஜைகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தனது மகனாக இருந்தும், மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு அவனுக்கு வேறுவிதமாக கற்பிக்க முயற்சித்தும் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவின் கட்டளையைப் பின்பற்றவில்லை. அவன்ஓம் நமோ நாராயணாயஎன நாராயணனின் பெயரையே உச்சரித்தான். தன்னை ஈஷ்வரனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் அனைத்து முயற்சிகள், மற்றும் பிரஹ்லாதனை கொல்வதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.  

ஒரு நாள், அவனுடைய தந்தை, ‘உன்னுடைய அந்த நாராயணன் எங்கே?’ என்றான். ‘எல்லா இடங்களிலும்என்று பதிலளித்தான் பிரஹலாதன். ‘அவன் இந்தத் தூணில் இருக்கிறானா?’ ‘ஆம்என்றான் பிரஹலாதன். உடனே ஹிரண்யகசிபு அந்தத் தூணை உதைத்தான். அவனிடம் சிறப்புவாய்ந்த வரம் ஒன்று இருந்தது; ஒரு மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ, பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியிலோ, தரையிலோ, ஈரமான அல்லது உலர்ந்த கருவி போன்றவற்றால் அவனைக் கொல்ல முடியாது என்பது அந்த வரம். அதன் மூலம் தன்னை அழியாதவன் என உறுதிப்படுத்த முயன்றான் ஹிரண்யகசிபு. அவன் உதைத்த தூண் உடைந்து உள்ளிருந்து விஷ்ணு பகவான் நரசிம்ம வடிவில் வந்தார். சிங்கத்தின் தலை மற்றும் மனித உடலுடன் கூடிய நரசிம்மர், பகலும் இரவும் இல்லாத சந்தியா காலம் எனச் சொல்லப்படும் அந்தி நேரத்தில் வந்தார். உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல் வாசலில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவை தரையில் அல்லாது மடியில் வைத்து, கூரிய நகங்களால் ஹிரண்யகசிபுவின் வயிற்றை கிழித்துக் கொன்றார். பின்னர் அவர் பிரஹலாதனை அந்த அரியணையில் அமர்த்தினார். ‘தைத்தியர்களில் பெரிய பக்தனான பிரஹலாதன் நான்’, என்கிறார் பகவான்


=> கணிப்பவர்களுள் காலன்

அனைத்தையும் கணக்கு வைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார்.


=> விலங்குகளுள் சிம்மம்

வனவிலங்குகளுள் வேந்தனாயிருப்பது சிம்மம். அது எந்தவொரு மிருகத்திற்கும் பயப்படாது. சில நேரங்களில் யானையிடம் எச்சரிக்கையாக இருந்தாலும்கூட, யானையையும் கொல்லக்கூடிய ஆற்றலும் பயமின்மையும் அதற்குண்டு. இங்கு பகவான்ம்ருகே3ந்த்3:’, வனவிலங்குகளின் அரசன் என்கிறான். பெரும்பாலும் அது சிங்கத்தைக் குறிக்கும். சிங்கம் இல்லாத காடுகளில் சில சமயம் புலிகள் ஆள்கின்றன. அந்நிலையில் அது புலியையும் குறிக்கும். இங்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது மிருகங்களின் அரசனிடமுள்ள பயமின்மையும் ஆற்றலும் நான் என்கிறார் பகவான்.


=> பறவைகளுள் கருடன்:

பறக்கும் உயிரினங்கள் அல்லது பறவைகளில் நான் கருடன், என்கிறார். கருடன் வினதையின் மகன் ஆகையால் அதுவைநதேயஎன்று அழைக்கப்படுகிறது. பறவைகளில் இது கழுகுகளை விட அதிக உயரத்தில் பறக்கின்றன. கழுத்தில் வெள்ளைப் பட்டையுடய கழுகு போல் காட்சியளிக்கும் இந்த கருடனை பார்த்தல் நல்ல சகுனமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் விஷ்ணுவை ஞாபகமூட்டுவதால், பறவைகளுள் அது சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஈஷ்வர சொரூபத்தை ஞாபகமூட்டுபவைகள் அனைத்திலும் ஈஷ்வர விபூதி அமையப்பெற்றுள்ளன.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.31|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

पवन: पवतामस्मि राम: शस्त्रभृतामहम्

झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ।। ३१ ।।

பவந: பவதாமஸ்மி ராம: 1ஸ்த்ரப்4ருதாமஹம்

2ஷாணாம் மகரச்1சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ।। 31 ।।


पवताम्  பவதாம்  தூய்மைப்படுத்துபவைகளுள்   पवन:  பவந:  காற்றாக   अस्मि  அஸ்மி  இருக்கிறேன்   

शस्त्र भृताम्  1ஸ்த்ர ப்4ருதாம்  ஆயுதம் தரித்தவர்களுள்   अहम्  அஹம்  நான்    राम:  ராம:  தசரத ராமன்   झषाणां  2ஷாணாம்  மீன்களுள்    मकर:   மகர:   சுறாவாகவும்   अस्मि  அஸ்மி  இருக்கிறேன்     

स्रोतसाम्  ஸ்ரோதஸாம்  நதிகளுள்    जाह्नवी  ஜாஹ்நவீ  கங்கையாக    अस्मि  அஸ்மி  இருக்கிறேன்.


தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் பிடித்தவர்களுள் ராமனாகவும், மீன்களுள் மகரமாகவும், நதிகளுள் கங்கையாகவும் நான் இருக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.


விளக்கம்:

=> தூய்மைப் படுத்துபவைகளுள் காற்று:

பவநஎன்பது வாயுவின் மற்றொரு பெயர். நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கும் தூய்மைப்படுத்தும் தன்மையுடையவைகள். அவைகளுள் காற்று எங்கும் நிறைந்திருந்து, எப்பொழுதும் பொருள்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வருகிறது. நிலம், நீர், தீ ஆகியவைகளையும் தூய்மைப்படுத்தவல்லது காற்றே. அது தீயை எரியும்படிச் செய்கிறது. நீரை ஆவியாக மாற்றி, மழை நீராகச் செய்கிறது. வளிமண்டலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் வாயுவே ஆகும். மேலும் அது உயிர் கொடுக்கும் குணத்தையும் கொண்டுள்ளது. தாவரங்களுக்கு கார்பன்-டை-ஆக்ஸைடையும், மனிதர்களுக்கு ஆக்ஸிஜனையும் வழங்குகிறது. அந்த சுத்திகரிப்பு மற்றும் உயிர் கொடுக்கும் திறனாக நானே இருக்கின்றேன்.


=> ஆயுதம் தரித்தவர்களுள் ராமன்:

ஆயுதம் பிடித்தவனுக்கு ஆற்றல் அதிகம். அதை முறையாக கையாளுபவன் மேலோனாக இருக்கின்றான். ஶ்ரீராமன் எங்கும் தனது கோதண்டத்தைச் சரியாகவே கையாண்டான்; துர்ப்பிரயோகம் செய்தது கிடையாது. தர்மத்தை ஸ்தாபனம் செய்யும் பொருட்டே அது கையாளப்பட்டது. நல்வழியில் ஆயுதப் பிரயோகம் செய்ய பராக்கிரமம் வேண்டும். பராக்கிரமத்தில் ராமனுக்கு ஒப்பான ஒரு வீரனைக் காண்பது அரிது. அவனது வில்லும் அம்பும் கெட்டவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, நல்லவர்களுக்குத் இன்பத்தை வளர்த்தன. ஆகையால் ஆயுதம் ஏந்தியவர்களில் நான் விஷ்ணுவின் அவதாரமான ராமன். பரசுராம மற்றும் பலராம போன்றராமஎனும் பெயருடைய சக்தி வாய்ந்த அவதாரங்கள் மரபில் இருப்பதால் தசரதனின் மகனான தாசரதீ ராம, என சங்கரர் தனது பாஷ்யத்தில் கூறுகிறார்.


=> மீன்களுள் மகரம்:

2ஷஸ்எனில் மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கிறது. அவைகளில் நான் மகரம் என்கிறார். இது சுறா அல்லது திமிங்கிலம் போன்ற பெரிய நீர்வாழ் விலங்கினங்களைக் குறிக்கிறது. சுறாவிற்கு விழுங்கும் ஆற்றல் அதிகம். இத்தகைய ஆற்றலின் காரணமாக அது இறைவனோடு ஒப்பிடப்படுகிறது


=> நதிகளுள் கங்கை:

கங்கைக்குஜாஹ்நவீஎன்பது ஒரு பெயர். ஜன்னு மஹரிஷியின் புத்திரி என்று அது பொருள்படுகிறது. பகீரதனது வேண்டுதலுக்கு இரங்கி, ஆகாசகங்கை பூலோக கங்கையாக வந்தது. தவத்தில் இருந்தபொழுது தம்மீது அந்த நதி மோதுவதைக் கண்டு கோபித்து, ஜன்னு முனிவர் அதை எடுத்து விழுங்கிவிட்டார். பிறகு, பகீரதனது வேண்டுதலுக்கு இணங்கித் தம் காது வழியாகக் கங்கையை வெளியில் விட்டார். ஆகையால் அந்நதிக்குஜாஹ்நவீஎன்ற பெயர் வந்தது. நதிகளுள் இது புனிதமே வடிவெடுத்தது. மேலும் இது சிவபெருமானின் தலையிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. ஞானம் மற்றும் தூய்மைப்படுத்துதல் சம்பந்தமாக நூற்றுக்கணக்கான கதைகள் கங்கையைப் பற்றி உள்ளன. ஒருமுறை மூழ்கியெழுந்தாலே அனைத்து பாவங்களும் நீங்குவதாகக் கூறப்படுகிறது. இதுவே மக்கள் கங்கையின்மீது வைத்துள்ள சிரத்தையைக் குறிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நதியும் வணங்கப்படுகிறது எனினும் அதில் கங்கைக்கு ஒரு தனியிடமுண்டு. கங்கை ஒரு தேவதையாகப் பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் ப்ரம்ம சொரூபம் என்பது ஆன்றோர் கொள்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கங்கையாக நான் இருக்கின்றேன் என்கிறார் பகவான்.

---------------------------------------------------------------------------------------------------------------------