செவ்வாய், 12 மார்ச், 2024

விபூதி யோகம் 10.26 - 10.28

||10.26|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

अश्वत्थ: सर्ववृक्षाणां देवर्षीणां नारद:  

गन्धर्वाणां चित्ररथ: सिद्धानां कपिलो मुनि: ।। २६ ।।

அச்1வத்த2: ஸர்வவ்ருக்ஷாணாம் தே3வர்ஷீணாம் நாரத3:  

3ந்த4ர்வாணாம் சித்ரரத2: ஸித்3தா4நாம் கபிலோ முநி: ।। 26 ।।


सर्ववृक्षाणां  ஸர்வவ்ருக்ஷாணாம்  மரங்கள் எல்லாவற்றினுள்   अश्वत्थ:   அச்1வத்த2:  அரசமரம்    

देवर्षीणां   தே3வர்ஷீணாம்   தேவரிஷிகளுள்    नारद:  நாரத3:  நாரதர்   

गन्धर्वाणां  3ந்த4ர்வாணாம்  கந்தர்வர்களுள்    चित्ररथ:  சித்ரரத2:  சித்ரரதன்    

सिद्धानां  ஸித்3தா4நாம்  சித்தர்களுள்    कपिल: मुनि:  கபில: முநி:  கபில முனிவனாகவும் இருக்கின்றேன்.


மரங்கள் எல்லாவற்றினுள் நான் அரசமரம், தேவரிஷிகளுள் நான் நாரதர். கந்தர்வர்களுள் சித்ரரதன்; சித்தர்களுள் நான் கபிலமுனி.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.


விளக்கம்:

=> மரங்களுள் அரசமரம்:

தொன்றுதொட்டு ஆத்ம சாதனங்கள் யாவும் அரசமரத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. சுருதி மற்றும் கீதையினால் புகழ்பெற்ற இந்த அச்வத்த மரம் முழு சம்சாரத்தையும் குறிக்கிறது. அரசமரக் கிளைகள் வைதிக சடங்குகளில் உபயோகப்படுத்தப் படுகின்றன. மேலும் அரசமரத்துடன் வளரும் வேப்பமரத்தை அதனுடைய மனைவியாகக் கருதி, குழந்தை செல்வத்தை விரும்பும் தம்பதியினர் அதற்கு திருமணம் செய்யும் சடங்கின்மூலம் அதனை வழிபடுகின்றனர். இவ்வகையில் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் வணங்கப்படுவதால், மரங்களில் புனிதமானதாகவுள்ள அச்வத்த மரமாக நான் இருக்கின்றேன் என்கிறார். இம்மரத்தின் சிறப்பை கூறும் சுலோகம் ஒன்று உள்ளதுமரத்தின் வேரில் பிரம்மதேவரையும், மத்தியில் விஷ்ணுவையும், உச்சியில் சிவனையும் ஆராதித்து, அங்கேயே வழிபடுகிறார்கள்மூலதோ ப்ரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிநே அக்ரத: சிவரூபாய விருக்ஷராஜாய தே நம:.


=> தேவரிஷிகளுள் நாரதர்:

இரண்டு வகையான ரிஷிகள் உள்ளனர்மனிதர்களாகவுள்ள ரிஷிகள் மற்றும் தேவர்களில் ரிஷிகள். தேவர்கள் நரர்களிலும் மேலானவர்களாக இருப்பினும் தேவர்கள் அனைவரும் ரிஷிகள் அல்ல. அவர்களில் தத்துவ தரிசணம் அடையப் பெற்றவர்களே ரிஷிகள் ஆவர். தேவரிஷிகளில் நாரதர் மிக முக்கியமானவர். ஏனெனில் அவர் பக்தர் கூட்டத்தில் தலைசிறந்து விளங்குகிறார். மேலும் பதினெட்டு புராணங்களிலும் நாரத முனி அடிக்கடி வருகிறார். அவர் கிளப்பும் கலகங்களெல்லாம் இறுதியில் மங்களத்தையே கொடுக்க வல்லவைகளாகின்றன. நோய் தோன்றி, உடலை நலப்படுத்துவது போல அவரது கலகங்களெல்லாம் நன்மை பயப்பவைகளாகவே உள்ளன. நாரதரிடத்தில் அனுபவிக்கப்படும் மேன்மை என்பது என்னுடைய விபூதியாகவே உள்ளது என்கிறார் பகவான்.


=> கந்தர்வர்களுள் சித்ரரதன்:

கந்தர்வர்கள் தேவர்களில் ஒரு பிரிவினர். சோமபானத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய முக்கிய வேலை. வைத்தியத்தில் அவர்கள் வல்லவர்கள்; இசை ஞானத்தில் அலாதித் தேர்ச்சியுடையவர்கள். காமத்தில் நாட்டமுடையவர்கள் ஆதலால் விவாகத்துக்கு அவர்களுடைய துணை நாடப்படுகிறது. சூதாட்டத்தில் கந்தவர்கள் நிபுணர்கள். வேதம் அவர்களால் விளக்கப்பட்டது ஆகையால் சில ரிஷிகளுக்கு ஆச்சாரியர்களாக அவர்கள் அமைவதுண்டு. அவர்களுக்கு அரசன் சித்ரரதன். ஆதலால் பகவான் தம்மைக் கந்தவர்களுள் சித்ரரதனாக கூறுகிறார்


=> சித்தர்களுள் கபிலமுனி:

பிறவியிலேயே விசேஷமான தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம் ஆகியவைகளை உடையவர்கள் சித்தர்கள் எனப்படுகின்றனர். மனன சீலத்தையுடையவர் அல்லது ஜப யக்ஞத்தில் உறுதிபெற்றவர் முனி எனப்படுகின்றார். மரபில் இரு கபில முனிகள் பேசப்படுகின்றனர்

(1) ஆறு தரிசணங்களில் ஒன்றாகிய சாங்கிய தரிசணத்தை விளக்கியவர் கபிலர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் எனப்படுகிறார். நித்திய சித்தராய் இவர் இருப்பதால் பகவான் தம்மைச் சித்தர் கணத்தில் கபில முனி என்கிறார்

(2) பாகவதத்தில் பேசப்படும் கபில முநி இவர். பாகவதபுராணத்தில் கபிலரை பற்றிய ஒரு அழகான கதை உள்ளது. இவர் சிறுவனாக இருந்தபோதே, தனது தாயான தேவஹூதிக்கு பிரம்மவித்யையைக் கற்றுக் கொடுக்கிறார்

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.27|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

उच्चै: श्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम्

ऐरावतं गजेन्द्राणां नाराणां नराधिपम् ।। २७ ।।

உச்சை: ச்1ரவஸமச்1வாநாம் வித்3தி4 மாமம்ருதோத்34வம்

ஐராவதம் 3ஜேந்த்3ராணாம் நராணாம் நராதி4பம் ।। 27 ।।


अश्वानां  அச்1வாநாம்  குதிரைகளுக்கிடையில்   अमृत उद्भवम्  அம்ருத உத்34வம்  அமிர்தத்தோடு உண்டான    उच्चै: श्रवसम्   உச்சை: ச்1ரவஸம்  உச்சைசிரவஸ் என்னும் குதிரை   

गजेन्द्राणां  3ஜேந்த்3ராணாம்  அரசயானைகளுக்குள்   ऐरावतं  ஐராவதம்  ஐராவதம் என்னும் யானை    

नाराणां  நராணாம்  நரர்களுக்குள்   नर अधिपम् நராதி4பம்   அரசனாகவும்     

माम् विद्धि  மாம் வித்3தி4  என்னை அறிந்து கொள்.


குதிரைகளுள் அமிர்தத்துடன் உண்டான உச்சை சிரவஸ் என்றும் யானைகளுக்குள் ஐராவதம் என்றும் மக்களுள் வேந்தன் என்றும் என்னை அறிக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.


விளக்கம்:

=> குதிரைகளுள் உச்சை சிரவஸ்:

உச்சை சிரவஸ் என்பது தேவர்களின் தலைவனான இந்திரனின் குதிரை ஆகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தத்தைப் பிரித்தெடுத்ததாக புராணத்தில் ஒரு பிரபலமான கதை உள்ளது. அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைகிறார்கள். அந்த கடைதலின் போது நிறைய விஷயங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குதிரை. இது இந்திரனுக்கு கொடுக்கப்பட்டது. அமிர்தத்தை உண்டாக்கும் சமுத்திரத்திலிருந்து பிறந்ததாலோ அல்லது அமிர்தத்தை உண்டாக்கும்போது பிறந்ததாலோ அதுஅம்ருத உத்34வம்எனக் கூறப்படுகிறது. ‘அம்ருதஎனில் இங்கு பால்; அமிர்தத்திற்காக கடைந்த பாற்கடல். ‘உத்34வம்எனில் பிறந்தது. எனவேஅம்ருத உத்34வம்எனில் பாலில் பிறந்தது; இங்கு அது பாற்கடலில் பிறந்தது என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

=> யானைகளுக்குள் ஐராவதம்:

ஐராவதம் என்பது யானைகளின் அரசன். இது இந்திரனின் வாகனம் ஆகும். அமிர்தம் வேண்டி கடலை கடைந்தபோது கிடைத்தவைகளில் ஐராவதமும் ஒன்று. இராவதியின் குழந்தை ஐராவதம் என்பது ஐதிகம்.


=> மனிதர்களுள் அரசன்:

மக்களைக் காக்கவும் ஆளவும் வல்லவன் அரசன். பிறப்பு உரிமையினால் அரசனாக உபசரிக்கப்பட்டு, வெறுமனே சிம்மாசனத்து வீற்றிருப்பவன் அரசன் ஆகான். இறைமை யாரிடத்து இருக்கிறதோ அவன் அரசன். ஆகையால்தான் வேந்தன், விஷ்ணுவினுடைய அம்சம் என்ற கொள்கை எழலாயிற்று. இந்த அரசனின் அதிகாரம், ஆடம்பரம் அனைத்தும் எனக்குச் சொந்தம்; அவனை அரசனாக்கும் கிரீடம் நானே, என்கிறார் பகவான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.28|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक्

प्रजनश्चास्मि कन्दर्प: सर्पाणामस्मि वासुकि: ।। २८ ।।

ஆயுதா4நாமஹம் வஜ்ரம் தே4நூநாமஸ்மி காமது4க்

ப்ரஜநச்1சாஸ்மி கந்த3ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: ।। 28 ।।


आयुधानाम्  ஆயுதா4நாம்  ஆயுதங்களுள்   अहं  அஹம்  நான்   वज्रं  வஜ்ரம்  வஜ்ராயுதம்   

धेनूनाम्  தே4நூநாம்  பசுக்களுள்    कामधुक् अस्मि  காமது4க் அஸ்மி  காமதேனுவாக இருக்கின்றேன்   

प्रजनப்ரஜந:  பிரஜைகளைப் பிறப்பிக்கின்ற   कन्दर्प: अस्मि  கந்த3ர்ப: அஸ்மி  மன்மதனாகவும் இருக்கிறேன்   सर्पाणाम्  ஸர்பாணாம்  பாம்புகளுள்    वासुकि: अस्मि  வாஸுகி: அஸ்மி  வாசுகியாக இருக்கிறேன்.


ஆயுதங்களுள் நான் வஜ்ராயுதம், பசுக்களுள் காமதேனு, பிறப்பிப்பவர்களிடத்து நான் மன்மதன், பாம்புகளுள் நான் வாசுகியாக இருக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.


விளக்கம்:

=> ஆயுதங்களுள் வஜ்ராயுதம்:

விஷ்ணுவினுடைய ஆயுதங்களாகிய கதை, சக்கரம் ஆகியவைகளை இங்கு பகவான் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவைகள் செய்யப்பட்டவைகள் அல்ல. ஈஷ்வர சொரூப லக்ஷணத்தில் அவைகள் நித்தியமாய், உருவகமாக அடங்கப் பெற்றவைகள். உண்டுபண்ணப்பட்ட ஆயுதங்களில் இந்திரன் கையாளும் வஜ்ராயுதம் தலைசிறந்தது. விருத்திராசுரனைக் கொல்லுவதற்காக அது ஆயத்தப்படுத்தப்பட்டது. ததீசி(3தீ4சி) என்ற மஹா முனிவரது எலும்பினின்று அது உண்டாக்கப்பட்டது. அந்த மஹரிஷியின் நைஷ்டிக பிரம்மசரியமும் தபோவலிவும் மற்றும் அவர் பெற்ற ஈஷ்வர பிரசாதமும் சேர்ந்து அவரது எலும்புக்கே அளவில்லாத சக்தியை கொடுத்தன. அசுரரை அடக்குதல் என்ற தேவ காரியத்துக்கு ஆயுதமாக அவரது எலும்பு வேண்டியிருக்கிறது என்று விண்ணவர் விண்ணப்பித்தவுடனே, ததீசி மனமுவந்து தேகத் தியாகம் செய்தார். பிறகு அவரது எலும்பினின்று வஜ்ராயுதம் செய்யப்பட்டது. மனிதன் தூய வாழ்க்கை வாழ்ந்து, அதை உலக நன்மைக்காக ஒப்படைக்க வேண்டும் என்ற சிறந்த லட்சியத்தின் சின்னமாக வஜ்ராயுதம் அமைந்துள்ளது. ஆகவே உருவாக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களிலும் இந்திரனுடையாதவுள்ள இந்த ஆயுதம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வஜ்ராயுதமாக நான் உள்ளேன் என்கிறார் பகவான்.


=> பசுக்களுள் காமதேனு:

பால் கொடுக்கும் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு மத்தியில் இந்த காமதேனு பசு வேண்டிய பொருள்களையெல்லாம் வேண்டியவாறு வழங்கவல்லது. எனவே கொடுப்பவர்களில் காமதேனுவைப் போல் யாரும் கொடுக்க முடியாது. இதுவும் அமிர்தத்திற்காகப் பாற்கடலை கடைந்தபோது உண்டான திரவியங்களுள் ஒன்று. வசிஷ்ட முனிவருக்குச் சொந்தமான இது, அவருடைய ஆஷ்ரமத்தில் நிறைந்த செல்வத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. நல்ல மனதுடன் முறையாக உழைத்தலே காமதேனுவாகிறது என்று கீதையின் மூன்றாம் அத்தியாயம் பத்தாவது சுலோகத்தில்(3.10) விளக்கப்பட்டது. நல்ல மனமும் பேருழைப்பும் ஈஷ்வர விபூதியாகின்றன.


=> பிறப்பிப்போரில் மன்மதன்:

பிரஜா விருத்தி சம்பந்தமான ஆசையே மன்மதன் அல்லது கந்தர்ப்பன் என்று உருவகப்படுத்திய பெயர் பெறுகிறது. இந்த ஆசையின் வலிவால்தான் உயிர்கள் விரிவடைந்து வருகின்றன. ஜகத் சிருஷ்டிக்கே மூலக்காரணமாயிருப்பது இந்த இச்சா சக்தியே ஆகும். சந்ததிக்கு காரணம்ப்ரஜந:எனப்படும். குழந்தைகளினுடைய பெற்றோரில் நான் காதல் சொரூபமான தேவனான கந்தர்ப்பனாக இருக்கின்றேன், என்கிறார் பகவான்.


=> பாம்புகளுள் வாசுகி:

பாம்புகள் விஷமுடையது; ஒற்றைத் தலையோடு இருப்பது. எல்லாத் தெய்வங்களோடும் பாம்பு ஏதேனும் ஒருவிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கடவுளின் சக்திக்கு இது ஒரு சின்னம். சக்தியினின்று இன்ப துன்பம் இரண்டும் தோன்றுகின்றன. துன்பத்தைக் குறிப்பது விஷம். துன்பம் எல்லார்க்கும் பொதுவானது ஆகைகயால் அது ஒற்றைத் தலையுடையது. பாற்கடலை கடைவதற்கு வாசுகி எனும் விஷப்பாம்பு பயன்பட்டது. தேவலோகத்தில் காணப்படும் பாம்புகளிலேயே மிக நீளமானதான இந்தப் பாம்பின் சுவாசமே மக்களை அழிக்கவல்லதாக இருந்தது. எனவே அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. அந்த பயத்தின் மூலமும், அந்த விஷமும் என்னைத் தவிர வேறில்லை. என்னை விட்டு வேறானதாக எதுவும் இல்லை என்பதாக, விஷப்பாம்புகளுள் நான் வாசுகி, என்கிறார் பகவான். ஈஷ்வர சிருஷ்டியில் கேட்டுக்கும் இடமுண்டு. நலம், கேடு ஆகிய இரண்டும் கலந்தது உலகம்.

---------------------------------------------------------------------------------------------------------------------