திங்கள், 4 மார்ச், 2024

விபூதி யோகம் 10.23 - 10.25

||10.23|| ஈஷ்வர விபூதியின் தொடர்ச்சி:

रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम्

वसूनां पावकश्चास्मि मेरु: शिखरिणामहम् ।। २३ ।।

ருத்3ராணாம் 1ங்கரச்1சாஸ்மி வித்தேசோ1 யக்ஷரக்ஷஸாம்

வஸூநாம் பாவகச்1சாஸ்மி மேரு: சி12ரிணாமஹம் ।। 23 ।।


रुद्राणां  ருத்3ராணாம்  ருத்திரர்களுள்   शंकर: अस्मि   1ங்கர: அஸ்மி  சங்கரனாக இருக்கிறேன்    यक्षरक्षसाम्   யக்ஷரக்ஷஸாம்  யக்ஷரக்ஷஸர்களில்    वित्त ईशவித்த ஈச1:  செல்வபதியாகவும்/குபேரனாகவும்   वसूनां  வஸூநாம்  வஸுக்களில்   पावक:  பாவக:  அக்னியாகவும்     शिखरिणाम्  சி12ரிணாம்  சிகரமுள்ள மலைகளுள்   मेरु:  மேரு:  மேரு மலையாகவும்   अहं  அஹம்  நான்   अस्मि  அஸ்மி   இருக்கின்றேன்.     


ருத்திரர்களுள் சங்கரனாகவும், யக்ஷரக்ஷஸர்களுள் குபேரனாகவும், வசுக்களுள் அக்னியாகவும், மலைகளுள் மேரு மலையாகவும் நான் இருக்கின்றேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.


விளக்கம்:

=> ருத்திரர்களுள் சங்கரன்:

ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டுபண்ணுபவன்; அழ வைப்பவன்ரோதயதி இதி ருத்ர:. புராணங்களிலும் சுருதியிலும் காணப்படும் ருத்திரர்கள் பதினொரு பேர். அவர்களின் பெயர்கள் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்களில் அழிப்பவனாகிய சங்கரன் நான் என்கிறார் பகவான். மேலும், 1ம் கரோதி இதி 1ங்கர:அருள் செய்பவர் சங்கரன். அறியாமை மற்றும் அதன் விளைவுகளான சம்சாரத்தையும் துன்பத்தையும் அழிக்கும் இவர், நமது மரபில் மோக்ஷத்திற்காக வணங்கப்படுகிறார். ‘1ம்எனில் மங்களம், ‘கர:’ எனில் கொடுப்பவர், இறுதி முடிவாக மங்களத்தை கொடுப்பவர் இவர். துயரத்தை கொடுப்பதன் மூலம் பாபத்தை நீக்கி, மக்களைப் பண்படுத்தி, அறியாமையை அழித்து, இறுதியில் மோக்ஷமெனும் மங்களத்தை கொடுப்பவர் இவர். மோக்ஷத்தை காட்டிலும் மேலான மங்களம் எதுவுமில்லை


=> யக்ஷரக்ஷஸர்களில் குபேரன்:

யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவகணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விரைந்தோடிப் பொருள்தேடும் தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள் என்றும் பொருளைக் காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவ்விருதரத்தாரும் செல்வத்தின் அதிஷ்டான தேவதையான குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான். எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது. செல்வமானது, ஐஸ்வரியம் மற்றும் வல்லமையைத் தருகிறபடியால் அது ஈஷ்வர ஸம்பத்து எனப்படுகிறது


=> வஸுக்களில் அக்னி:

மொத்தம் எட்டு வஸுக்கள் இருக்கின்றனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்களும் மற்றும் சந்திரன், சூரியன், நக்ஷத்திரம் என இவையெட்டும் ரூபகப்படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. இதில் அக்னி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால் வஸுக்களுள் நான் நெருப்பாக உள்ளேன் என்கிறார் பகவான். எல்லாவற்றையும் பஷ்பமாக்குவதால் நெருப்புஅநலஎன்றழைக்கப்படுகிறது. அலம் வித்3யதே யஸ்ய - அதற்கு ஒருபோதும் போதுமானதாக இல்லை; அதாவது கொடுக்க கொடுக்க அது உண்டுகொண்டே இருக்கும். எரிப்பதன் மூலம் அனைத்தையும் சுத்தப்படுத்துவதால், நெருப்பின் மற்றுமொரு பெயர்பாவகஆகும். இச்சொல்லையே பகவான் இங்கு பயன்படுத்துகிறார்.


=> மலைகளுள் மேரு:

மலைகளில் சிகரங்கள் உள்ளவை(சி12ரீ), சிகரங்கள் இல்லாதவை(அசி12ரீ), என இரண்டு வகை மலைகள் பேசப்பட்டுள்ளன. சிகரத்தையுடைய மலைகளுள் இங்கு பகவானால் கூறப்படும் பொன்மலையாகிய மேருவானது, சந்திர சூரியன் ஆகிய அனைத்துக்கும் நடுநாயகமானது. அத்யாத்மிகத்தில் பிரம்மதண்டம் அல்லது சுஷும்னை நாடி ரூபகப்படுத்தி மேருமலை எனப்படுகிறது. தேவர்களெல்லாம் மேருவைச் சார்ந்திருப்பதுபோல சரீரத்தில் இந்திரியங்கள், பிராணன் யாவும் சுஷும்னை நாடியைச் சார்ந்திருக்கின்றன. ஆதலால் இயற்கையின் அமைப்பிலும் மானுட உடல் அமைப்பிலும் மேருமலை முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.24|| ஈஷ்வர விபூதியின் தொடர்ச்சி:

पुरोधसां मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम्

सेनानीनामहं स्कन्द: सरसामस्मि सागर: ।। २४ ।।

புரோத4ஸாம் முக்2யம் மாம் வித்3தி4 பார்த2 ப்3ருஹஸ்பதிம்  

ஸேநாநீநாமஹம் ஸ்கந்த3: ஸரஸாமஸ்மி ஸாக3: ।। 24 ।।


पार्थ  பார்த2  குந்தி புத்திரா   मां  மாம்  என்னை   पुरोधसां  புரோத4ஸாம்  புரோகிதர்களுள்    

मुख्यं  முக்2யம்  முக்கியமானவரான    बृहस्पतिम्   ப்3ருஹஸ்பதிம்  பிரஹஸ்பதி என்று    

विद्धि  வித்3தி4  அறிந்துகொள்   सेनानीनाम्  ஸேநாநீநாம்  சேனாதிபதிகளுள்   अहं  அஹம்  நான்     

स्कन्द:  ஸ்கந்த3:  ஸ்கந்தனாகவும்    सरसाम्  ஸரஸாம்  நீர்நிலைகளுள்    

सागर: अस्मि  ஸாக3: அஸ்மி  சமுத்திரமாகவும் இருக்கிறேன்.  

 

பார்த்தா, புரோகிதர்களுள் முக்கியமானவரான பிரஹஸ்பதி நான் என்று அறிக. சேனாதிபதிகளுள் நான் முருகக்கடவுள்; நீர்நிலைகளுள் நான் கடல்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.


விளக்கம்:

=> புரோகிதர்களுள் பிரஹஸ்பதி:

புர:எனில் எதிர்காலம் என்று பொருள். எனவேபுரோதஸ்எனில் வேள்விகள் செய்வதன் மூலம் ஒருவனின் எதிர்காலத்தில் புண்ணியத்தைப் பெற உதவுபவர். அத்தகையவர்களை புரோகிதர்கள் அல்லது அர்ச்சகர்கள் என்று அழைக்கிறோம். அரசர்களும் கூட இவர்களை வணங்குகிறார்கள். இந்த புரோகிதர்களில் மேலானவர், தேவர்களின் தலைவனாகவுள்ள இந்திரனின் குருவாக விளங்கும் பிரஹஸ்பதி ஆவார். தேவலோகத்திற்கே குருவான இவரை தேவர்களின் அரசனும் வணங்குகிறான். வியாழ பகவான் என்று இவரை இயம்புகிறோம். இவ்விதம் அரச குருக்களில் முதன்மையானவரான பிரஹஸ்பதி நானாக உள்ளேன் என்கிறார்


=> சேனாதிபதிகளுள் ஸ்கந்தன்:

படையொன்றின் வெற்றியானது சேனாதிபதியின் வல்லமையைப் பொருத்ததாகும். படையை வழிநடத்தும் தளபதிகளில் நான் ஸ்கந்தன், என்கிறார் பகவான். ‘ஸ்கந்த3:என்பது முருகக் கடவுளைக் குறிக்கிறது. இவருக்கு சுப்ரமணியர், சண்முகர் என்ற பெயர்களும் உள்ளன. புராணங்களில் இவர் தேவர்களின் தளபதியாக, தேவசேனாதிபதி எனக் குறிப்பிடப்படுகிறார். மேலும் எந்த வகையான பயத்திலிருந்தும் பாதுகாப்பளிக்கும் பொருட்டு இவர் வணங்கப்படுகிறார். எனவே, பாதுகாப்பை அளிக்கும் கடவுளாக இவர் ஆவாகனம் செய்யப்படுவதால் இந்த ஸ்கந்தபெருமானின் மஹிமை ஈஷ்வரனின் மஹிமையன்றி வேறில்லை


=> நீர்நிலைகளுள் கடல்:

இரண்டு வகையான நீர் தேக்கங்கள் உள்ளன. ஒன்று கடவுளால் படைக்கப்பட்டது, மற்றொன்று மனிதனால் உருவாக்கப்பட்டது. இறைவனால் அமைந்த நீர்த்தேக்கங்களில் நான் கடல் என்கிறார். இதில் ஓடுகின்ற ஆறுகள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை; அதைப்பற்றி பகவான் பின்னர் பேச இருக்கிறார். இங்கு இயற்கையான மற்றும் நிலையாகவுள்ள நீர்த்தேக்கங்களில் நான் வலிமைமிக்க கடல், என்கிறார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.25|| ஈஷ்வர விபூதியின் தொடர்ச்சி:

महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम्

यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालय: ।। २५ ।।

மஹர்ஷீணாம் ப்4ருகு3ரஹம் கி3ராமஸ்ம்யேகமக்ஷரம்

யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா2வராணாம் ஹிமாலய: ।। 25 ।।


महर्षीणां  மஹர்ஷீணாம்  மஹரிஷிகளுக்குள்   अहं  அஹம்  நான்    भृगु:  ப்4ருகு3:  பிருகு மஹரிஷியாகவும்    गिराम्  கி3ராம்  பதங்களுள்   एकम् अक्षरम्  ஏகம் அக்ஷரம்  ஓரெழுத்தாகிய பிரணவமாக   

अस्मि  அஸ்மி  இருக்கிறேன்   यज्ञानां  யஜ்ஞாநாம்  யக்ஞங்களுள்    जपयज्ञ:  ஜபயஜ்ஞ:  ஜபயக்ஞமாக   स्थावराणां  ஸ்தா2வராணாம்  ஸ்தாவரங்களுள்/மலைகளுள்    हिमालय:  ஹிமாலய: ஹிமாலயமாக    

अस्मि  அஸ்மி  இருக்கிறேன்.     

 

மஹரிஷிகளுள் நான் பிருகு; சொற்களுள் ஓரெழுத்தாகிய பிரணவம் நான். யக்ஞங்களுள் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களுள் நான் ஹிமாலயம்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான்ஓம்என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.


விளக்கம்:

=> மஹரிஷிகளுள் பிருகு:

பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் தவத்தில் சிறந்தவர் பிருகு. இவர் பண்டைய காலத்தில் மஹரிஷிகளில் மேலானவராக கருதப்பட்டார். ஆதலால் அவரிடத்து ஈஷ்வர விபூதி ஓங்கப் பெற்றிருப்பது இயல்பு


=> சொற்களுள் பிரணவம்:

கி3ராம்எனில் சொற்களைக் குறிக்கின்றது. அனைத்து மொழிகளிலும் உள்ள பல வார்த்தைகளில், ‘ஓம்எனும் ஒற்றை எழுத்துடைய சொல்லானது அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஒற்றெழுத்தை கணக்கில் கொள்ளாமல், உயிரெழுத்து மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் இது ஏகாக்ஷரம் ஆகிறது. ஓம் எனும் இந்த பிரணவம் எந்தவொரு மொழிக்கும் சொந்தமானது அல்ல எனலாம். ++ம் = ஓம் என்பது உலகளாவிய ஒலியாகிறது. யாரேனும் வாயைத் திறந்து ஒலியெழுப்பினால் அது’. வாயை மூடிக்கொண்டு ஒலி எழுப்பும்போது உருவாகும் ஒலிம்’, மற்றும் வாயை வட்டமிட்டபடி ஒலியெழுப்பும்போதுஎன்பதுஆகிவிடும். எனவே இவை எந்த மனிதனுக்கும் இயல்பாக வரும் ஒலிகள்; மற்ற எல்லா ஒலிகளும்’-வினுடைய மாற்றங்களாகவே உள்ளது. உலகிலுள்ள எந்தவொரு வார்த்தையும் இந்த ஒலிகளின் கலவையாகவே இருக்கமுடியும். மேலும் அனைத்து பெயர்களும் வார்த்தைகளாகவே உள்ளதால் எல்லா வார்த்தைகளையும் உள்ளடக்கியதான இந்தஓம்எனும் சொல்லே இறைவனின் பெயராக இருக்க முடியும். மேலும் இந்த பிரணவத்தில் அனைத்து பெயர்களும் அடக்கப்பட்டுவிட்டதால் ஈஷ்வரனின் வெளித்தோற்ற வடிவமான இந்த முழு ஜகத்தும் இச்சொல்லில் உள்ளடக்கப்பட்டுவிடுகிறது.  

இருமையற்ற ஏகமாக விளங்கும் இறைவன், அனைத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியிருப்பது, அனைத்து சொற்களையும் உள்ளடக்கிய ஓம் எனும் ஒற்றைச் சொல்லினால் குறிக்கப்படுகிறது. இது சகுண ப்ரம்மத்தையும் நிர்குண ப்ரம்மத்தையும் குறிப்பதாக உள்ளது. இந்த ஓம் நானாக உள்ளேன், என்கிறார் பகவான்

இத்தகைய பெருமை வாய்ந்த ஓங்காரம் ஈஷ்வர தியானத்திற்குரிய சொல்லாகவும் உள்ளது. ‘என்பது விழிப்பு உலகத்தையும், ‘என்பது சிந்தனை அல்லது கனவு உலகத்தையும், ‘ம்என்பது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையையும் குறிக்கிறது. இது சிருஷ்டியில் ஆரம்பித்து ப்ரம்மத்தில் ஒடுங்குகிறது. எனவே பரப்ரம்ம தியானத்திற்கான மந்திர சொல்லாக ஓம் உள்ளது


=> யக்ஞங்களுள் ஜபயக்ஞம்:

இறைவழிபாட்டு முறைகளுள் யக்ஞம் என்று சொல்லப்படும் வேள்வி அல்லது வைதிக சடங்குகளுக்கு பல பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த யக்ஞத்திற்கு நெருப்பு அவசியமான ஒன்றாக இருப்பதனால், அந்தச் செயல்பாட்டில் மரத்தில் வாழும் சில சிறிய உயிரினங்கள் மற்றும் மரக்கட்டைகளைச் சார்ந்திருக்கும் உயிர்கள் போன்றவை நாம் அறியாமலேயே அழிக்கப்படலாம். மேலும் யக்ஞத்திற்கான பொருட்களை, உலக நடைமுறைகளைப் பின்பற்றி மற்றவர்களுடன் போட்டியிட்டு ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்க வேண்டிவரும். அந்தச் செயல்பாட்டில் பலரை காயப்படுத்தியிருக்கலாம், ஏனெனில் ஒருவரின் ஆதாயம் மற்றவரின் இழப்பில் வந்தமைகிறது. எனவே இவ்வகையான யக்ஞங்களில் நம்மை அறியாமல் நாம் பலவற்றை காயப்படுத்துகிறோம் அல்லது அழிக்கிறோம். ஆகவேதான் இத்தகைய வழிபாடுகளின் இறுதியில், இந்த பாபத்தை ஈடுகட்டும் விதமாக கூடுதல் மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்படுகின்றன. அனைத்து வேள்விகளும் சடங்குகளும் பிரார்த்தனைகளும் இறுதியில் அந்த-கரண-சுத்தியின் பொருட்டே செய்யப்படுகின்றது. எனவே இத்தகைய வழிபாட்டு முறைகளில், அஹிம்சையோடுகூடிய மற்றும் பொருள் நஷ்டமற்ற ஜப-யக்ஞம் மேலானதாகும். மேலும் எல்லாவற்றிலும் மிக எளிதில் செய்யக்கூடியதாக ஈஷ்வர நாமஜபமாகிய யக்ஞம் அமைகிறது. யாரும், எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். மற்றவைகளில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருக்கையில், ஜப யக்ஞத்தில் எவ்வித கேட்டிற்கும் இடமில்லை. ஈஷ்வர எண்ணத்தில் ஜீவன் தன்னை இழந்துவிடுதல் எனும் நன்மையானது நன்கு அமையப்பெறுகிறது.

இறைநாமமும் இறைவனும் வேறல்ல. எனவே இறைநாமத்தை மனதில் ஜபித்தலில் பகவானின் அருகில் இருத்தல், பகவானுடன் இருத்தல் நடைபெறுகிறது. ஆகவே, யக்ஞங்களுள் ஈசன் தானே ஜபயக்ஞமாக இருப்பது மிகப் பொருத்தமானது.


=> மலைகளுள் ஹிமாலயம்:

ஸ்தா2வரம்எனில் அசையாமல் இருப்பது என்பது பொருள். அதாவது, பூமியில் முளைத்து அவ்விடத்திலேயே உயிரோடிருப்பது எதுவோ அது ஸ்தாவரம். மலைக்கு உயிருண்டு என்பது அறிஞர் கொள்கை. ஆகவே, பூமியில் முளைத்து உயிரோடிருப்பவைகளில் மிகப் பெரியது ஹிமாலயம் ஆகும். ‘ஹிமஎனில் பனி; ‘ஆலயஎனில் உறைவிடம். ஹிமாலயத்தைக் காண்பது இறைவனைக் காண்பதற்கு ஒப்பாகும். மலையில் ஈஷ்வர மஹிமையை காண விரும்புபவர் ஹிமாலயத்தை காண்பதன்மூலம் ஈடேற்றிக் கொள்ளலாம்

---------------------------------------------------------------------------------------------------------------------