||5.26|| இத்தகைய ஞானிகளின் மஹிமை யாதெனில்:
कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् ।
अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम् ।। २६ ।।
காமக்ரோத4வியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம் ।
அபி4தோ ப்3ரஹ்மநிர்வாணம் வர்ததே விதி3தாத்மநாம் ।। 26 ।।
काम क्रोध वियुक्तानां காம க்ரோத4 வியுக்தாநாம் ஆசை, சினம் இவைகளினின்று விடுபட்டவர்கள் यतचेतसाम् யதசேதஸாம் புத்தியை முறைப்படுத்தியவர்கள் विदित आत्मनाम् விதி3த ஆத்மநாம் ஆத்மாவை அறிந்தவர்கள் यतीनां யதீநாம் சந்யாசிகளுக்கு अभित: அபி4த: இறப்பிற்கு முன்னும் பின்னும்
ब्रह्मनिर्वाणं ப்3ரஹ்மநிர்வாணம் மோக்ஷம் वर्तते வர்ததே இருக்கிறது.
விருப்பு வெறுப்பினின்று விடுபட்டு, புத்தியை முறைப்படுத்தி, ஆத்மஞானம் அடையப்பெற்ற சந்யாசிகள் இறப்பிற்கு முன்னும் பின்னும் மோக்ஷத்துடன் இருக்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
விளக்கம்:
=> ஞானிகளின் மஹிமை:
கீதை முழுதும் ஆசை மற்றும் சினம் போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியம் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. காம-குரோதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களை பகவான் இங்கு ‘காம க்ரோத4 வியுக்தாநாம்’ எனச் சுட்டுகிறார்.
நாம் ஏற்கனவே விசாரித்ததைப் போல், காம என்பது ஒருவனுடைய விருப்பு வெறுப்புகளிலிருந்து தோன்றும் ஆசை. இந்த ஆசை தடைபடும்போது அது குரோதமாக மாறுகிறது. இவையிரண்டும் மனிதர்களைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களை இந்த சுலோகம் பேசுவதோடு அவர்களுக்கு மேலும் சில அடைமொழிகளையும் தருகிறது.
‘யதி’ எனும் சொல் ஒரு முமுக்ஷுவை, மோக்ஷ ஆசை கொண்டவனைக் குறிக்கிறது. மேலும் அதற்கான சரியான முயற்சியை மேற்கொள்பவனை, அதாவது யோகியைக் குறிக்கிறது. பொதுவாக யதி என்றால் சந்யாசி என்று பொருள், ஆனால் அதன் முழுமையான அர்த்தத்தில் அது கர்மயோகியையும் உள்ளடக்குகிறது. எனவே சந்யாசியாக இருந்தாலும் சரி, கர்மயோகியாக இருந்தாலும் சரி, தன்னறிவைப் பற்றிய விசாரணையில் முழு நாட்டத்துடன் நன்கு வழிநடத்தப்பட்ட எவரும் முமுக்ஷு ஆகிறார்; யதி ஆகிறார்.
தனது மனம் மற்றும் புத்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் இவர்களை ‘யதசேதஸ்’ என்றும், மேலும் ஆத்மாவை அறிந்த காரணத்தினால் ‘விதி3தாத்மா’ என்றும் பகவான் அழைக்கிறார். இந்தக் கூட்டுச் சொல்லில் வரும் ‘யத’ எனும் சொல் ஆத்மாவை அகர்த்தா என அறிந்ததன் மூலம் அனைத்து செயல்களையும் துறந்த சர்வ-கர்ம-சந்யாசிகளைக் குறிக்கிறது. காம குரோதத்திலிருந்து விடுபட்டது மட்டுமல்லாமல், சுயத்தை பற்றிய அறிவினால் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபட்டவர்களாக மோக்ஷத்தை அடைகிறார்கள்.
=> நித்திய முக்தர்கள்:
சுலோகத்தில் ‘அபி4த:’ என்ற வார்த்தை, உபயத: என்ற பொருளில், ‘இரண்டு வழிகளிலும்’, என விளக்கப்பட்டுள்ளது. அதாவது, இங்கே வாழும்போதும் மற்றும் மரணத்திற்கு பின்னும், முக்தர்கள் என்பது பொருள்.
ஆத்மா அசங்க சொரூபமானது; சம்சாரமற்றது என்ற ஞானத்தை உடைய இவர்கள், இவ்வுடல் விடப்படும் முன் ஜீவன் முக்தர்களாக இருக்கிறார்கள். இறப்பிற்கு பின் விதேஹ முக்தர்களாக மீண்டும் திரும்பாத நிலையை அடைகிறார்கள். நித்திய முக்தனாக தன்னை அறிந்தவர்கள் ஆகையால் இவர்கள் எங்கும் எப்பொழுதும் முக்தர்களே.
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள், ‘நான் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டு இங்கே விடுதலைப் பெறுகிறேன், ஆனால் நான் மீண்டும் திரும்பி வருகிறேன் என்று வைத்துக்கொள்வோம்?’ என்று மீண்டும் பிறப்பெடுப்பது குறித்த சந்தேகத்தை ஆதரிக்கிறார்கள். அறிவினால் விடுதலை பெற்று, பின் மீண்டும் வருவதைக் குறிப்பிடும் எந்த ஒரு கருத்தும் முற்றிலும் பொருத்தமற்றது.
மீண்டும் திரும்புவதற்கு ஏதேனும் ஒரு வித்து, உட்கரு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வித்தாக இருந்துவந்த ஜீவன் என்ற தனித்துவம் இப்போது பொய்யாக்கப்பட்டு விட்டது. அப்படியானால், திரும்பி வர இங்கு யார் அல்லது என்ன இருக்கிறது? முக்தி கிடைத்து விட்டது, இனி மீண்டு வர யாரும் இல்லை. இவ்வாறு, ஆத்மாவை அறிந்தவர்கள் இம்மை மற்றும் மறுமை என இரண்டு வழிகளிலும், மோட்சத்தைப் பெறுகிறார்கள் என கிருஷ்ணர் கூறுகிறார்.
இம்மை மற்றும் மறுமையின் அடிப்படையில் முறையே ஜீவன் முக்தி மற்றும் விதேஹ முக்தி என முக்தியானது இரு படிகளில் பேசப்பட்ட போதிலும், உண்மையில் ஒரே ஒரு முக்தி மட்டுமே உள்ளது. ‘திரும்பி வருதல்’ என்ற கேள்வி எழும்போது மட்டுமே இந்த இரண்டு படிகள் குறிக்கப்படுகிறது.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||5.27|| & ||5.28|| அடுத்த அத்தியாயத்திற்கான முகவுரை:
स्पर्शान् कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवो: ।
प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ ।। २७ ।।
यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायण: ।
विगतेच्छाभयक्रोधो य: सदा मुक्त एव स: ।। २८ ।।
ஸ்பர்சா1ந்க்ருத்வா ப3ஹிர்பா3ஹ்யாம்ச்1சக்ஷுச்1சைவாந்தரே ப்4ருவோ: ।
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்4யந்தரசாரிணௌ ।। 27 ।।
யதேந்த்3ரியமநோபு3த்3தி4ர்முநிர்மோக்ஷபராயண: ।
விக3தேச்சா2ப4யக்ரோதோ4 ய: ஸதா3 முக்த ஏவ ஸ: ।। 28 ।।
बाह्यान् स्पर्शान् பா3ஹ்யாந் ஸ்பர்சா1ந் வெளி விஷயங்களை बहि: कृत्वा ப3ஹி: க்ருத்வா வெளியில் நிறுத்தி चक्षु: च சக்ஷு: ச கண்களை भ्रुवो: ப்4ருவோ: இரு புருவங்களுக்கு
अन्तरे एव (कृत्वा) அந்தரே ஏவ(க்ருத்வா) இடையிலே(வைத்து)
नासा अभ्यन्तर चारिणौ நாஸா அப்4யந்தரசாரிணௌ நாசியின் வழியாக சஞ்சரிக்கிற
प्राण अपानौ ப்ராண அபாநௌ பிராண அபாண வாயுக்களை समौ कृत्वा ஸமௌ க்ருத்வா சமப்படுத்தி ...
यत इन्द्रिय मन बुद्धि: யத இந்த்3ரிய மந பு3த்3தி4: இந்திரியம் மனம் புத்தி இவைகளையடக்கி
मोक्ष परायण: மோக்ஷ பராயண: முக்தியைக் குறிக்கோளாகக் கொண்டு
विगत-इच्छा-भय-क्रोध: விக3த-இச்சா2-ப4ய-க்ரோத4: இச்சை பயம் குரோதம் இவைகளை விட்டு
य: मुनि: ய: முனி: யார் மனனசீலனாய் இருக்கிறானோ स: ஸ: அவன்
सदा ஸதா3 எப்பொழுதும் मुक्त: एव முக்த: ஏவ முக்தனேயாவான்.
வெளி விஷயங்களை வெளியில் நிறுத்தி, கண்களை இரு புருவங்களுக்கிடையில் வைத்து நாசியின் வழியாக சஞ்சரிக்கிற பிராண அபாண வாயுக்களைச் சமப்படுத்தி,
இந்திரியம் மனம் புத்தி இவைகளையடக்கி, முக்தியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஆசை, அச்சம் மற்றும் சினம் இவைகளை விட்டு மனனசீலனாய் இருப்பவன் முக்தனேயாவான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
விடுதலை யிலக் கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான்
முக்தனே யாவான் முனி.
விளக்கம்:
=> தியான யோக முகவுரை:
முக்தியின் பொருட்டு மனதை ஒருமுகப்படுத்தியாக வேண்டும். ஆகவே அதற்கான வழிமுறைகளை பகவான் அர்ஜுனனுக்கு பகிரும்பொருட்டு அடுத்த அத்தியாயமான தியான யோகத்தை ஆரம்பிக்கிறார். இந்த இரு சுலோகங்களும் அதற்கான முகவுரை எனலாம்; அல்லது பின்வரும் அத்தியாயம் முழுதும் இந்த இரு சுலோகங்களுக்கான விளக்கம் என்றும் கூறலாம்.
இங்கு தியானத்தின்போது உதவியாக இருக்கும் சில குறிப்புகளை கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகர்கிறார். புலனுறுப்புகளுடன் தொடர்பிற்கு வரும் வெளிவிஷயங்கள் அனைத்தும் ‘ஸ்பர்ச1’ என ஏற்கனவே பார்த்தோம். உடலுக்கு வெளிப்புறமாக இருப்பதால், பா3ஹ்ய, அவை பா3ஹ்ய-ஸ்பர்ச1 என்று அழைக்கப்படுகின்றன. புலனுறுப்புக்கள் தங்களுக்கான பொருட்களுடன், அதாவது உலகுடன் ஏற்படும் தொடர்பினால் வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கண்கள் நிறங்கள் மற்றும் வடிவங்களுக்கும், காதுகள் ஒலிகளுக்கும் மற்றும் மூக்கு வாசனைக்கும் வெளிப்படுகிறது. இங்கு கிருஷ்ணர், வெளி விஷயங்களை வெளியிலேயே நிறுத்துமாறு தனது அறிவுரையை தொடங்குகிறார்.
=> வெளி விஷயங்களை எங்ஙனம் வெளியில் நிறுத்துவது?
சங்கரர் தனது பாஷ்யத்தில், வடிவம் ஒலி முதலிய வெளிவிஷயங்கள் அனைத்தும் புலன்கள் எனும் வாயில்களின் வழியாக ஒருவனின் மனதில் நுழைகின்றன என்று விளக்குகிறார். தியானத்தில், வெளிப்புறப் பொருட்கள் தற்காலிகமாக வெளியே வைக்கப்பட வேண்டும். இது அவைகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்துவதன் மூலம் அடையப்படுகிறது. இதனால் மனமானது வேறொன்றின் பக்கம் திரும்புகிறது.
புலனுணர்வுப் பொருட்களைத் தொடர்ந்து சிந்திப்பதன் மூலமே அவைகள் மனதில் நுழைகின்றது. ஆகவே தலைக்குள் இருக்கின்ற வெளிவிஷயங்களை ஒருவன் குற்றம் சொல்ல முடியாது. அவைகளை சிந்திக்காத பட்சத்தில் அவைகள் அங்கு இருக்காது என்கிறார் சங்கரர். புறப்பொருட்கள் ஏற்கனவே வெளிப்புறமாகதான் இருக்கின்றன. எனவே விஷயத் தியானம் செய்யாத வரை, அதாவது தொடர்சிந்தனையின் மூலம் அதன் புகலிடமாக மனதை மாற்றாத வரை அவை வெளிப்புறமாகவே இருக்கும்.
பொதுவாக, தியானத்தில் கண்கள் மூடப்பட்டிருக்கும். கண்களைத் திறந்து கொண்டும் தியானம் செய்யலாம், ஆனால் கண்களை மூடிக்கொண்டு இருப்பது தியானத்தின் பொருளைப் பற்றி சிந்திப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது. பார்த்தல் என்ற ஒரு குறிப்பிட்ட புலனுணர்வினால் ஏற்படும் கவனச்சிதறலை அகற்ற கண்களை மூடுகிறோம். இந்த சுலோகத்தில், ‘சக்ஷு: ச ப்4ருவோ: அந்தரே க்ருத்வா’ என்பதன் பொருளும் அதையையே குறிக்கின்றது. ‘கண்களை புருவங்களுக்கு இடையே வைத்தல்’, என்பது உண்மையில் கண்ணிமைகளுக்குள் கண்கள் வைக்கப்படுகின்றன என்ற அர்த்தத்தில், கண்கள் மூடியிருக்கட்டும் என்பது பொருள். சிலர், பாதி கண்களை மூடியவாறு வைப்பர்; அப்போது அவைகள் புருவங்களுக்கிடையில் குவிந்தனவாக தென்படும்.
=> சுவாசத்தை கவனித்தல்:
பின்னர், சுவாசம் குறிப்பிடப்படுகிறது — ப்ராண அபாநௌ ஸமௌ க்ருத்வா. நாசியால் புறத்தேவிடும் மூச்சுக்குப் பிராணன் என்றும் உள்ளே இழுக்கும் காற்றுக்கு அபானன் என்றும் பெயர். பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தின் போக்கும் வரவும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. மனதின் அமைதிக்கும் பிராண அபானனின் ஒழுங்குமுறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்குகிறது. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்குகிறது. ஆகவே மூச்சை கவனிப்பதன் மூலம் உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதலை சீராக்கும்போது சுவாசம் அமைதியாகி, உடலைத் தளர்த்தி மனதை அமைதிப்படுத்துகிறது.
இவைகளை செய்வதன் மூலம் ஒருவன் புலன்கள், செயலுறுப்புக்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றை கட்டுப்படுத்தியவனாகிறான் — யத இந்த்3ரிய மந பு3த்3தி4:. இத்தகையவன் அதிக அளவு சிரவணம் மற்றும் மனனத்தில் ஈடுபட்டவனாக, முநி என்றழைக்கப்படுகிறான். ஒரு முனியைப் பொறுத்தவரை, மோக்ஷமே இறுதி முடிவு — மோக்ஷ பராயண:. எல்லா சந்தேகங்களையும் அகற்றியவனாக, அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவனாக, சதா காலமும் முக்தனாக இருக்கிறான்.
=> பயத்தை அகற்றியவன்:
முனிவனுக்கு இருக்கின்ற மற்றொரு தகுதியாக பகவான் ஏற்கனவே கூறிய ஒரு பண்பை மீண்டும் கூறுகிறார் — விக3த இச்சா2 ப4ய க்ரோத4:, ஆசை பயம் மற்றும் கோபத்திலிருந்து விடுபட்டவன். முன் சுலோகங்களில், ஒரு ஞானி ஆசை மற்றும் குரோதத்திலிருந்து விடுதலையடைந்தவன் என்று கூறியிருந்தார். அந்தக் கூட்டணியோடு இங்கு அவர் பயம் என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்கிறார். ஒருவன் மனவெழுச்சியில் முதிர்வை அடைந்தவனாக விருப்பு, பயம் மற்றும் சினம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடுகிறான். சந்யாசியான இவன் தன்னறிவை அடைந்ததனால் நித்திய முக்தனாக ஆகின்றான்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------