செவ்வாய், 17 மே, 2022

ஸந்யாஸ யோகம் 5.24 - 5.25

||5.24|| ஞான பலன்(ஜீவன் முக்தி மற்றும் விதேஹ முக்தி) :

योऽन्त: सुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव :

योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ।। २४ ।।

யோऽந்த: ஸுகோ2 ऽந்தராராமஸ்ததா2ந்தர்ஜ்யோதிரேவ :

யோகீ3 ப்3ரஹ்மநிர்வாணம் ப்3ரஹ்மபூ4தோऽதி43ச்ச2தி ।। 24 ।।


:  :  யார்   अन्त: सुख:  அந்த: ஸுக2:  தன்னிடத்தில் சுகிக்கிறானோ  

अन्तर्-राम:  அந்தர்-ஆராம:  தனக்குத் தானே விளையாட்டு களமாக ஆகிறானோ   तथा  ததா2  மேலும்  

:  :   யார்   अन्तर्ज्योति:   அந்தர்ஜ்யோதி   உள்ளொளி காண்கிறானோ  

: योगी एव   : யோகி ஏவ  அந்த யோகியே   ब्रह्म-भूत:  ப்3ரஹ்ம-பூ4:  ப்ரம்ம சொரூபமாகி    

ब्रह्मनिर्वाणं  ப்3ரஹ்மநிர்வாணம்  ப்ரம்ம நிர்வாணத்தை  अधिगच्छति    அதி43ச்ச2தி  அடைகிறான்.


தன்னிடத்திலேயே சுகித்து, தன்னிடத்திலேயே விளையாடி, மேலும் தன்னுள்ளேயே ஒளி காணும் யோகி, தானே ப்ரம்மமாகி ப்ரம்ம நிர்வாணத்தை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் ஒரு கர்மயோகியை கிருஷ்ணர், சுகீ அதாவது மகிழ்வானவன் எனக் கூறினார். இங்கு மூன்று அற்புதமான வார்த்தைகளைக் கொண்டு, ஆத்மாவை ப்ரம்மனாக அறிந்த ஒரு ஞானியை வர்ணிக்கிறார்அந்த: ஸுக2:, அந்தர்-ஆராம: மற்றும் அந்தர்ஜ்யோதி

ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக, ப்ரம்மனாக இருக்கும் தன்னிடத்திலேயே சுகித்திருப்பவன், தன்னகத்தே நிறைவைக் காண்பவன், ‘அந்த: ஸுக2:என்றழைக்கப்படுகிறான். ‘நான்என்ற அறிவை மையமாகக் கொண்டு நிறைவை அடைந்தவனே உண்மையான நிறைவை அடைந்தவன். ஏனெனில் சுயம் முழுமையானது; தேயாதது. அது எந்தவொரு கோட்பாட்டிற்கும் வரம்பிற்கும் அபூரணத்திற்கும் அப்பாற்பட்டது. அது தூய்மையான பிரக்ஞை வடிவமாதலால் நிறைவானது. தன் சுயத்தைப் பற்றிய இந்த அறிவைக் கொண்டு தன்னை நிறைத்தவனேஅந்த: ஸுக2:என அழைக்கப்படுகிறான். இவன் வெளிவிஷயங்களில் சுகம் காணாது, சுகத்தின் உண்மையான இருப்பிடமாக விளங்கும் ஆத்மாவின்கண் சுகித்திருப்பவனாக உள்ளான்.


=> தன்னிடத்திலேயே விளையாடி மகிழ்பவன்:

சுய சொரூபத்தில் மகிழ்ந்திருக்கும் இந்த ஞானி, தனக்குத் தானே விளையாட்டுக் களமாகவும் ஆகின்றான். ‘ஆராம:என்னும் சொல் இங்கு விளையாட்டு எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது(க்ரீட:). மக்கள் பொதுவாக தங்களை உற்சாகமாகவும் மகிழ்வுடனும் வைத்திருக்க நிறைய விளையாட்டு விஷயங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். வயதிற்கேற்றார்போல் விளையாட்டு சாதனங்கள் மாறுகின்றன. கோலிகுண்டு, கிரிக்கெட் மட்டை, சைக்கிள், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி என ஒருவனின் மகிழ்விற்கான தேவைகள்(சுக ஹேது) மாறிக் கொண்டேயிருகின்றன.

ஆனால் ஒரு ஞானி தன்னைத் தானே மகிழ்வித்துக் கொள்கிறான் என கிருஷ்ணர் இங்கே கூறுகிறார். தன்னை சந்தோஷப்படுத்த வேறு எதுவும் தேவையில்லை; எந்தக் காரணமுமில்லாமல், எல்லா நேரத்திலும் உற்சாகமாக மகிழ்வுடன் இருக்கின்றான். வெறுமனே திறந்து மூடும் கண்களும், அவனது மனமும், அதன் ஞாபகங்களும் என தன்னையே வேடிக்கை பார்க்கின்றான்

மனமே ஒரு பொழுதுபோக்கு பூங்கா போன்றது; ஒருவனை உற்சாகப்படுத்த வேறு யாரும் அல்லது எதுவும் தேவையில்லை. ஒருவனது சொந்த மனம் அனைத்து வகையான கேளிக்கைகளையும், சிந்தனைகளையும், சுவாரஸ்யங்களையும் வழங்கவல்லது! ஒரு ஞானி இவைகளில் எவ்விதத்திலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல், தன்னால் சாட்சியாகப் பார்க்கப்படும் ஒரு வேடிக்கை பொருளாகப் பார்த்து தன்னிடத்திலேயே விளையாடி மகிழ்வதால்அந்தர்-ஆராம:என்றழைக்கப்படுகின்றான்

    இறுதியாக, ஞானிஅந்தர்ஜ்யோதிஎன்று அழைக்கப்படுகிறான். பொதுவாக ஜோதி என்றால் ஒளி; ஆனால் இங்கே அது மனம் என்ற பொருளில் வந்துள்ளது. ஒளியைப் போலவே ஒருவனது மனமும் பொருட்களை ஒளிரச் செய்வதால் ஜோதி என்றழைக்கப்படுகிறது. மனமானது வெளிப்பொருட்களை இந்திரியங்கள் வாயிலாக ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், பிரிவினையின் தோற்றத்தை வெளிப்படுத்தும் சுயத்திற்கும் அது விழித்திருக்கிறது. அதாவது கனவு நிலையில், கனவு காண்பவனே அந்தக் கனவாகவும் மற்றும் கனவில் கண்ட பொருட்களாகவும் இருக்கின்றான். நனவும் அவ்விதமே உள்ளதுபார்ப்பவனும் பார்வையும் மற்றும் பார்க்கப்படும் பொருளும் சுயத்தின் வெளிப்பாடே. அறிபவனும், அறியப்படும் எண்ணமும் மற்றும் எண்ணத்திற்கான பொருட்களும் சுயமே. சுய சொரூமாக இருக்கும் அதே பிரக்ஞையே அறிபவனாகவும் உள்ளது

    எல்லா அறிவும் பிரக்ஞையை, உணர்வு நிலையைக் குறிக்கிறது. ஒவ்வொரு எண்ணமும் மற்றும் அந்த எண்ணத்திற்கான பொருளும் இந்த பிரக்ஞையிலிருந்து வேறுபட்டதல்ல. இதுவே எல்லாவற்றின் இருப்பு, ஸத். இந்த அறிபவன்-அறிபொருள்-அறிவு எனும் வேறுபாடு முற்றிலும் ஒரு தோற்றமே. எவனுடைய மனமானது சுயத்தை அறிந்தவனாக இந்த ஆத்மாவில் விழித்திருக்கிறதோ அவன்அந்தர்ஜ்யோதிஎன அழைக்கப்படுகின்றான்.

இந்த சுலோகத்தில் ஞானியானவன் யோகீ என்றும் குறிப்பிடப்படுகிறான்; ஞானத்தில் பொருந்தியவன்ஞான யுக்த: யோகீ. மேலும் அவன் ப்ரம்ம சொரூபமாகவே, ப்3ரஹ்ம-பூ4:, இருக்கின்றான். அதாவது யாருடைய ஆத்மா ப்ரம்மனாகவே உள்ளதோ, ப்ரம்மத்திடமிருந்து பிரிந்திருக்கவில்லையோ என்பது பொருள். இதுவரை பார்க்கப்பட்ட சொற்கள் அனைத்தும் ஞானத்தின் பலனான ஜீவன் முக்தியைக் குறித்தன. இனி இத்தகையவன் அடையும் இறுதிப்பலனாக விதேஹ முக்தி குறிப்பிடப்படுகிறது. மரணத்திற்கு பின் அவன் ப்ரம்மத்துடன் ஒன்றாக இருக்கின்ற தன்மையை(ப்3ரஹ்மநிர்வாணம்) அடைகிறான். முக்தியை, விடுதலையை அடைகிறான்; ப்ரம்ம-ஆனந்தத்தை அடைகிறான். சுருங்கச் சொல்லின் தான் நாடும் அனைத்தும் தன்னிடத்தே இருப்பதை சுவானுபவத்தில் காணும் யோகி தானே ப்ரம்ம சொரூபமாகி ப்ரம்ம நிர்வாணத்தை அடைகிறான். ப்ரம்ம நிர்வாணம் என்பது ப்ரம்ம-ஆனந்தத்தை(ப்ரம்ம-நிர்வ்ருதி), மோக்ஷத்தைக் குறிக்கும். நிர்வாணம் எனில் ஆனந்தம் என்று பொருள்; செயல் செய்பவன் மற்றும் அனுபவிப்பவன் போன்ற எல்லாவற்றிலிருந்தும் விடுதலையைக் குறிக்கிறது. ஆகவே இது ஒருவனது தன்னியல்பான, வரம்பற்ற தன்மையை அடைதலைக் குறிக்கிறது.

கிருஷ்ணர் இரண்டாவது அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில்(2.72) ப்ரம்ம-நிர்வாணம் என்ற அதே வார்த்தையைப் பயன்படுத்தினார்; ‘எவனுடைய சுயமானது ப்ரம்மத்தில் இருக்கிறதோ அவன் மோஹத்திற்குட்படாமல், ப்ரம்மத்தில் நிலைபெற்று, வாழ்க்கையின் இறுதி காலத்திலும் கூட ப்ரம்ம நிர்வாணத்தை முக்தியை அடைகிறான்’, என்று கூறினார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகப்பற்று அதிகமுள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து இருக்கிறதோ அதற்கேற்றபடி ஞானமும் வளர ஆரம்பிக்கும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||5.25|| ஞானி முழுப் பலனை அடையும் படிகள்:

लभन्ते ब्रह्मनिर्वाणमृषय: क्षीणकल्मषा:

छिन्नद्वैधा यतात्मान: सर्वभूतहिते रता: ।। २५ ।।

லப4ந்தே ப்3ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:

சி2ந்நத்3வைதா4 யதாத்மாந: ஸர்வபூ4தஹிதே ரதா: ।। 25 ।।


क्षीण-कल्मषा:  க்ஷீண-கல்மஷா:  பாபங்களை நீக்கியவர்கள்   

छिन्न-द्वैधा: சி2ந்ந-த்3வைதா4:  சந்தேகங்களை அகற்றியவர்கள்   

यत-त्मान:  யத-ஆத்மாந:  இந்திரியங்களை முறைப்படுத்தியவர்கள்   

सर्व-भूत-हिते रता:   ஸர்வ-பூ4-ஹிதே ரதா:   எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்ச்சியடைகிறவர்கள்   

ऋषय:  ருஷய:  ரிஷிகள்   ब्रह्म-निर्वाणम्  ப்3ரஹ்மநிர்வாணம்  ப்ரம்ம நிர்வாணத்தை    

लभन्ते  லப4ந்தே  அடைகிறார்கள்.


தீவினைகளைக் களைந்து, சந்தேகங்களை அகற்றி, இந்திரியங்களை அடக்கி, எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்வுறும் ரிஷிகள் ப்ரம்ம நிர்வாணத்தை அடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.


விளக்கம்:

=> எந்தெந்த படிகளின் வழியாக ஞானிகள் முழுப் பலனை அடைகிறார்கள்:

(1) க்ஷீண கல்மஷா:முதலில் பாபங்களை, தீவினைகளை நீக்கியவர்களாக ஆகிறார்கள். இது சாதகர்களைக் குறிக்கிறது. இங்கு பாபம் என்பது ராக-த்வேஷம். பெரிய மகான்கள் அவர்களின் சாதக நிலையின்போது தவம், உபாசனை, யாத்திரை மற்றும் தானம் முதலிய சாதனைகளின் வாயிலாக பாபத்தை போக்குகிறார்கள். ‘தபஎனில் வருத்திக் கொள்ளுதல் என்பது பொருள். தவம் மற்றும் உபாசனையினால் தன்னை வருத்தி, விருப்பு-வெறுப்பு முதலிய அசுத்தங்களை அகற்றி, மனத்தூய்மையை அடைகிறார்கள். ஆகவே வாழ்க்கையில் துயரம் வரும்பொழுது அதை பாபத்தை நீக்க பகவான் அனுப்பும் உபாயமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்திக் கொள்ளுதல் வேண்டும்; பிரசாத புத்தியுடன் கர்மயோகத்தில் ஈடுபடுதல் வேண்டும். பிரார்த்தனை வடிவமாக, ஈஷ்வரார்ப்பண புத்தியுடன் மேற்கொள்ளும் தவம், மனமுதிர்ச்சிக்கும் மனத்தூய்மைக்கும் வழிவகுக்கிறது.


(2) ருஷய:ரிஷிகள் ஆகிறார்கள். ரிஷிகள் என்பவர்கள் தத்வதர்ஷணம் அடையப்பெற்றவர்கள். பொதுவாக, ‘ருஷி_ऋषिஎன்ற சொல்லிற்கு இரு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, நகர்ந்து கொண்டே இருப்பவர், அடதி(अटति) ; அதாவது எந்த ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ சிக்கிக் கொள்ளாதவர் என்பது பொருள். இரண்டாவது, அறிந்தவர், ஜானாதி(जानाति). இந்த சுலோகத்தில் பிந்தைய பொருள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பற்றற்ற வாழ்க்கையினால் பூரணஞானம் கொண்டவர்களாக நுண்ணிய தத்துவத்தை பார்க்கும் சக்தியை அடைந்தவர்கள் ரிஷிகள். உலகை மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒரு மாதிரியும், நுண்மையாகப் பார்க்கும் பொழுது வேறு மாதிரியும் உள்ளது. உதாரணமாக, நேரடியாகப் பார்த்தால் தட்டையாகவும் அசையாததாகவும் இருக்கும் இந்த பூமியானது, உண்மையில் உருண்டை வடிவானதாகவும் சதா காலமும் சுழன்று கொண்டிருப்பதாகவும் உள்ளது. உலகில் என்றுமே உண்மை நேரடிப் பார்வைக்கு மறைக்கப்பட்டுள்ளது. உண்மையை அறிய சூக்ஷம புத்தி அவசியம். சிரவணத்தின் மூலம் இத்தகைய நுண்ணிய அறிவானது உண்டாகிறது.

(3) சி2ந்ந த்3வைதா4:சந்தேகங்களை அகற்றியவர்களாக ஆகிறார்கள். ‘த்3வைதா4என்பது இங்கு ஐயத்தை(ஸம்சயம்) குறிக்கிறது. ‘சி2ந்நஎனில் தீர்க்கப்பட்டது, நீக்கப்பட்டது, வேரோடு பிடுங்கப்பட்டது என்பது பொருள். இவர்களின் அனைத்து சந்தேகங்களும் அகற்றப்பட்டுவிட்டது. உதாரணமாக, ஆத்மா வரையறுக்கப்பட்டதா? அல்லது வரம்பற்றதா? ஆத்மா நித்தியமானதா? அல்லது அழியக்கூடியதா? ஆத்மா ஒன்றா அல்லது பலதா? தனிமனிதனாக விளங்கும் ஒரு ஜீவன், ஈஷ்வரனிடமிருந்து வேறுபட்டவனா? உலகம் உண்மையானதா அல்லது உண்மையற்றதா? இதுபோன்ற அனைத்துவித சாத்தியமான ஐயங்களிலிருந்தும்  விடுபடுகிறார்கள்; நிச்சய ஞானம் உடையவர்களாகிறார்கள். இது மனனத்தின் மூலம், கருத்துக்களைக் கவனமாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் அடையப் பெறுகிறது


(4) யத ஆத்மாந: —  முறைப்படுத்திய மனதையும் புலன்களையும் உடையவர்கள் ஆகிறார்கள். ‘ப்ரம்ம சத்யம்; ஜகன் மித்யாஎன்ற அறிவை அடைந்த பின்னரும் மனமானது, தனது தொடர்பழக்கத்தின் காரணமாக பழைய வாசனைகளை விடமுடியாமல் உலகை உண்மையானதாக எண்ணி மீண்டும் மீண்டும் சம்சாரத்தில் வீழ்ந்து கொண்டே இருக்கும். இதற்கு விபரீத பாவனைகள் என்று பெயர். இதிலிருந்து மீண்டு வந்தவர்கள்யத ஆத்மாந:ஆகிறார்கள். கட்டுப்படுத்தி வென்ற மனதைக் கொண்டவர்களாக, புத்தி எதை நினைக்க எண்ணுகிறதோ அதையையே மனம் நினைக்கும் நிலையை அடைகிறார்கள். தியானம் மற்றும் நிதித்யாசனத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைந்தவர்களாக மனதை முழுமையாக வெற்றி கொள்கிறார்கள்.

(5) ஸர்வ-பூ4-ஹிதே ரதா:எல்லா உயிர்களின் நன்மையில் மகிழ்ச்சியடைகிறார்கள்; அஹிம்சையை பின்பற்றுபவர்கள் என்பது இதன் பொருள். ஞான நிஷ்டை அடையப்பெற முக்கிய தர்மமாக அஹிம்சை அமைகிறது. எந்தவொரு உயிர்க்கும் உடலாலும், சொல்லாலும், மனதாலும் தீங்கு செய்யக்கூடாது. ஆகையினால், அனைத்துயிர்களின் மகிழ்ச்சியில் இவர்கள் சுகிக்கிறார்கள். சம்பிரதாயத்தில், சந்யாசத்தை மேற்கொள்ளும் ஒருவரின் முக்கிய உறுதிமொழியாக, மற்றவரைக் காயப்படுத்தக் கூடாது என்ற விரதம் அமைகிறது. இதனாலேயே சந்யாசிகள் அனைத்துவித போட்டிக்குரிய செயல்பாடுகளையும் கைவிடுகின்றனர். ஏனெனில் எதிலும் வெற்றி பெற அல்லது போட்டியிட நேரும்போது இனியொரு உயிரை மனதளவிலாவது காயப்படுத்துதல் தவிர்க்க முடியாதது. ஆகவே ஒரு சந்யாசி அஹிம்சை சபதத்தை எடுத்துக்கொண்டு, எந்தவொரு உயிரினமும் தங்களிடம் பயப்பட எதுவும் இல்லை என்பதை அறிவிக்கிறான்.


இப்படிப்பட்ட படிகளைக் கடந்து முழுத் தகுதியை அடைந்தவர்களாக இந்த ஞானிகள் ப்ரம்ம நிர்வாணம் அல்லது பேரானந்த பிராப்தியை அடைகிறார்கள்ப்3ரஹ்மநிர்வாணம் லப4ந்தே.


* படிகளின் சுருக்கம்:

பாபத்தை நீக்கி —> ஞானியாக மாறி —> சந்தேகத்தை களைந்து —> விபரீத பாவனைகளை அகற்றி —> ப்ரம்ம சொரூபமாக ப்ரம்மத்தை அடைதல்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------