திங்கள், 9 மே, 2022

ஸந்யாஸ யோகம் 5.22 - 5.23

||5.22|| சிற்றின்பத்தின் தோஷத்தை கூறுகிறார்:

ये हि संस्पर्शजा भोगा दु:खयोनय एव ते  

द्यन्तवन्त: कौन्तेय तेषु रमते बुध: ।। २२ ।।

யே ஹி ஸம்ஸ்பர்ச1ஜா போ4கா3 து3:2யோநய ஏவ தே

ஆத்3யந்தவந்த: கெளந்தேய தேஷு ரமதே பு34: ।। 22 ।।


कौन्तेय   கெளந்தேய   குந்தியின் மைந்தா  ये   யே  எவை   हि   ஹி   உண்மையில்   

संस्पर्शजा   ஸம்ஸ்பர்ச1ஜா  இந்திரிய-விஷய சம்பந்தத்தினால் தோன்றிய   भोगा:  போ4கா3:  போகங்களோ   

ते   தே அவைகள்    दु:-योनय एव   து3:2-யோநய ஏவ  துக்கத்திற்கே காரணமானவை   

दि-अन्त वन्त:  ஆதி3-அந்த வந்த:  ஆதியும் அந்தமும் உடையவைகள்   बुध: பு34:  ஞானி   

तेषु   தேஷு  அவைகளில்    रमते    ரமதே  சுகித்திருப்பதில்லை.


இந்திரிய-விஷய சம்பந்தத்தினால் தோன்றிய போகங்களே துன்பத்துக்கு காரணமானவைகளாகும். குந்தியின் மகனே, ஆதியும் அந்தமும் உடைய அவைகளில் ஞானி இன்பமுறுவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் குறிப்பிடப்பட்டபா3ஹ்யஸ்பர்சே1ஷு அஸக்த ஆத்மாமற்றும்ப்3ரஹ்மயோக3 யுக்தாத்மாபற்றி, இங்கு மீண்டும் கருத்துரைக்கப்படுகிறது. புலனுறுப்புக்களால் தொடர்பு கொள்ளப்படும் பொருள்கள்ஸம்ஸ்பர்ச1ஸ்என்று அழைக்கப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். புலனுறுப்புகளுக்கும் விருப்பமான பொருட்களுக்கும் இடையே தொடர்பு உண்டாகும்போது ஏற்படும் சுகம், இனிமையான அனுபவம் இங்குஸம்ஸ்பர்ச1ஜா போ4கா3:எனப்படுகிறது. இவ்வகை இன்பங்களே துக்கத்திற்கு சாத்தியமான காரணங்களாக கிருஷ்ணர் கூறுகிறார்துக்கயோநய:. யோனி எனில் கருப்பை

ஏன் இவ்விதம் கூறுகிறார்? ஏனெனில், ஒருவன் இந்த இனிமையான அனுபவங்களைப் பெறும்வரை அதற்காக உழைக்க வேண்டும் என்பதில் துக்கம் இருக்கிறது. அப்படி உழைத்தும் அவன் எதிர்ப்பார்த்த அந்த முடிவை அடைவது என்பது எளிதான ஒன்றாக இருக்காது. உதாரணமாக ஒரு பொருளைப் பார்க்க விரும்பினால், அது இருக்கும் இடத்திற்குச் செல்ல அல்லது அதை தன்னிடம் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட முயற்சியில் ஈடுபடவேண்டும். இது அத்துடன் முடிந்துவிடுவதில்லை. அத்தொடர்பு ஏற்படும்போது, ​​அது சரியாக அமைய வேண்டும்; விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். உதாரணமாக பிடித்தமான உணவைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அதை உண்ணும்போது, மிகவும் உறைப்பாக இருந்தாலோ அல்லது ருசியில் ஏதேனும் கோளாறு இருந்தாலோ அது பிடித்தமற்றதாகிறது. இதில் பார்த்தல் என்ற தொடர்பு விரும்பத்தக்கதாகவும், சுவைத்தல் என்ற தொடர்பு துன்பத்தை தருவதாகவும் மாறிவிட்டது. மலைகளைப் பார்க்க விரும்பி ஒருவன் அங்கு செல்கிறான்; அங்கு அவன் எதிர்பார்த்திராத வண்ணம் பெய்த பலத்த மழை, அவனுக்கு துன்பத்தை தருவதாக அமையலாம். எனவே, தொடர்பு சரியானதாகவும் விரும்பத்தக்கதாகவும் அமைவதை உறுதிப்படுத்துவது எப்போதும் எளிதான காரியம் அல்ல.

ஆகவே, இன்பமான அனுபங்களைப் பெறுவதற்கு முன் துக்கம். அவற்றை சுகிக்கும் வேளையிலும், ‘இந்த மகிழ்ச்சியை நான் இழக்கப் போகிறேன்என்று நினைப்புடன் நேரம் கழிக்கப்படுகிறது. இறுதியாக, அவை முடிந்ததும், மேலும் துக்கம். பிறகு மீண்டும் அவைகளை அடைவதற்கான செயலைச் செய்தல் நடைபெறுகிறது

அனைத்துவித இன்பங்களும் துக்கத்திற்கான அடித்தளங்கள், துக்க-யோனிகள், ஏனெனில் அவற்றுக்கு ஒரு ஆரம்பம்(ஆதி) மற்றும் முடிவு(அந்தம்) உள்ளது. எனவே, அவைகள் இங்குஆதி3-அந்த வந்த:என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட விரும்பத்தக்க தொடர்பு ஒன்றின் ஆரம்பமாகவும், அது இனி இல்லை எனும்போது அதனுடைய முடிவாகவும் அமைகிறது. இதன் பொருள், இந்த போகங்கள் அனைத்தும் அநித்தியமானவைகள், முடிவிற்குட்பட்டவைகள் என்பதாகும்.


=> விஷய சுகத்தினால் உண்டாகும் தோஷங்கள்:

இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் தொடர்பு வைக்கும்பொழுது சுகம் ஆரம்பிக்கிறது. நிலையற்ற தன்மையையுடைய இப்படிப்பட்ட விஷய சுகங்களே சிற்றின்பம் என ஏற்கனவே பார்த்தோம். இப்போது இத்தகு விஷய சுகத்திலுள்ள குறைகளை சிறிது ஆராயலாம்.

(1) க்ஷணிகத்வம் - எந்தவொரு சுகமும் க்ஷண நேரம்தான் இருக்கும். நன்கு கவனிக்கும்போது அந்த குறிப்பிட்ட நொடிக்கு முன்னும், பின்னும் அந்த சுகம் இல்லாதத்தை உணரமுடியும். இடையில் மின்னல் போன்று சிறிது இன்பம் தென்பட்டதுதான் மிச்சம். மேலும் இது பின்வரும் விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

(2) துக்கயோநி - துக்கத்திற்கு காரணம்.

ஒவ்வொரு சுகமும் துக்கத்திற்கு மூலகாரணமாக அமைகிறது. விஷயங்களில் தொடர்பு வைக்கும்போது உண்டாகும் சுகம், அதிலிருந்து விலகும்போது துக்கமாக பரிணமிக்கிறது. ஆகவே பழக்கப்படுத்தப்பட்ட விஷய போகங்கள் ஒருவனை அடிமைப்படுத்தி விடுகிறது.

(3) பயம் - இந்திரிய சுகத்தை அனுபவித்து பழகியவன், அது இல்லாமல் சென்றுவிடுமோ, அனுபவிக்கமுடியாமல் போய்விடுமோ என எதிர்காலத்தை குறித்து பயம் கொள்கிறான். ஆகையினால் எதிலிருந்தெல்லாம் விலகுகிறோமோ, எதன் மேலெல்லாம் வைராக்கியம் கொள்கிறோமோ அதிலிருந்தெல்லாம் பயம் வருவதில்லை.

(4) பலகீனம் - எந்தவொரு புலனை அதிகமாக போகத்திற்கு பயன்படுத்துகிறோமோ அது பலகீனத்தை அடைகின்றது. உதாரணமாக, இக்காலகட்டத்தில் தொலைக்காட்சி அலைபேசி மற்றும் கணிணி போன்றவற்றை அதிகம் பார்த்து பழகிய காரணத்தினால் பள்ளி செல்லும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கண்ணாடிகளின் தேவை அதிகரித்துவிட்டதை பார்க்கிறோம்.

(5) அதிருப்திகரம் - விசாரித்துப் பார்த்தால், எந்தவொரு பொருளோ அல்லது மனிதனோ இதுவரையில் நமக்கு முழுமையான திருப்தியை கொடுத்திராததை உணரமுடியும். ஏனெனில் எந்தவொன்றுக்கும்அதற்கு மேல்என்ற ஒரு வாய்ப்பு உண்டு. மனம் எப்போதும் அதை நோக்கியே செல்லும் இயல்புடையது.

இவ்விதம் வெளிவிஷய போகங்களினால் உண்டாகும் குறைகளை சிந்தித்து உணர்வதன் பலனாக ஒருவன் அதன்மீது வைராக்கியத்தை அடைகிறான். நிலையான மற்றும் நிலையற்றவைகளை பகுத்தறியாத மனிதர்களே அவைகளை நாடிச் செல்கின்றனர். விவேகமுடையவன் அவைகளை அறவே விலக்கிவிடுகிறான்


=> விவேகியின் தெரிவு:

இவ்விதம் போகங்களின் வரையறுக்கப்பட்ட தன்மையைப் புரிந்துகொள்பவன் இந்த சுலோகத்தில்பு34:என்று அழைக்கப்படுகிறான். பு34: என்றால் விவேகி; நிலையான மற்றும் நிலையற்றதை பகுத்தறிபவர் அல்லது ஞானி என்று பொருள் கொள்ளலாம். இந்த சுலோகத்திற்கான தனது வர்ணனையில் சங்கரர், தனது சுயத்தின் உண்மைத் தன்மையை, சுய சொரூபத்தை அறிந்தவன்அவக3-பரமார்த்த-தத்த்வ:, என இதன் பொருளை வரையறுக்கிறார்.

ஒரு விவேகி சாதாரண இன்பத்தின் எல்லைகளைப் புரிந்துகொள்வதால், அவன் குறையாத மகிழ்ச்சியின் பின்னால் செல்கிறான், அக்ஷயம் ஸுக2ம். எதற்கும் கட்டுப்படாமல், செய்ய வேண்டியதை மட்டுமே செய்வதால் அவன், ‘பா3ஹ்யஸ்பர்சே1ஷு அஸக்த ஆத்மா’, மனதின் வெளிவிஷயங்களுக்கான கற்பனைகளால் ஆட்கொள்ளப்படாதவன், என சென்ற சுலோகத்தில் அழைக்கப்பட்டான்.

ஆத்மாவை ப்ரம்மனாக அறிந்து அதில் நிலைபெற்ற, ப்3ரஹ்மயோக3 யுக்தாத்மா, சுயத்தினுடைய சொரூபத்தினால் உண்டாகும் இயற்கையான மகிழ்ச்சியை, தேயாத மற்றும் அழியாத இன்பத்தை அடைகிறான்.

கண், காது முதலிய புலனுறுப்புகளை வாழ்க்கைக்காகவும் பயன்படுத்தலாம்; போகத்திற்காகவும் பயன்படுத்தலாம். ஞானிகள் அவைகளை வாழ்க்கைக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இத்தகைய வாழ்க்கை மிக நுண்ணியது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாம்பைக் கண்டதும், ‘மானஸதேவி! வாலைக்காட்டித் தலையை மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போஎன்று ஜனங்கள் சொல்லுவது வழக்கம். அதுபோல இந்திரிய சுகங்களைத் தூண்டும் விஷயங்களினின்றும் விலகியிருப்பது நல்லது. அவைகளில் அழுந்தி வருந்துவதனால் உண்டாகும் அனுபவத்தைக் காட்டிலும், அவைகளுடைய ஸஹவாசமே இல்லாது செய்துகொள்வது வெகு மேலானது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||5.23|| ஆசையை போக்க எத்தகைய பிரயத்தனம் தேவை?

शक्नोतीहैव : सोढुं प्राक्शरीरविमोक्षणात्

कामक्रोधोद्भवं वेगं युक्त: सुखी नर: ।। २३ ।। 

1க்நோதீஹைவ : ஸோடு4ம் ப்ராக்ச1ரீரவிமோக்ஷணாத்

காமக்ரோதோ4த்34வம் வேக3ம் யுக்த: சுகீ2 நர: ।। 23 ।।


:   :  யார்   शरीर-विमोक्षणात्   1ரீர-விமோக்ஷணாத்  சரீரத்தை விடுவதற்கு(மரணத்திற்கு)   

प्राक्  ப்ராக்  முன்பு   काम-क्रोध-उद्भवं   காம-க்ரோத 4த்34வம்  ஆசை குரோதம் இவைகளில் உண்டாகும்  

वेगं   வேக3ம்  வேகத்தை   इह एव  இஹ ஏவ  இம்மையிலேயே   सोढुं    ஸோடு4ம்  சகிப்பதற்கு   

शक्नोति   1க்நோதி  வல்லவனோ   :  :  அவன்    युक्त:  யுக்த:  யோகி    :   :  அவன்   

सुखी नर:  சுகீ2 நர: சுகமான மனிதன்.


இம்மையில் சரீரத்தை விடுவதற்கு முன்பு ஆசை, குரோதம் இவைகளின் வேகத்தை சகித்துக்கொள்ள வல்லவனே யோகி; அவனே இன்பம் துய்ப்பவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:

சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.


விளக்கம்:

மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு ராக-த்வேஷம் மிகப் பெரும் எதிரி. அதிலிருந்து விடுபட முடியாதவனால் ஞானத்திற்கு தேவையான மனமுதிர்ச்சியை அடைய முடியாது.


=> ஆசை மற்றும் சினத்தின் தன்மை:

காம, ஆசை என்பது விருப்பு மற்றும் வெறுப்பு இரண்டிற்குமான பொதுவான சொல். தனது தேவை என ஒருவனால் நினைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பலனைக் குறித்த தொடர்சிந்தனை ஆசை எனப்படும். எதையாவது அடையவேண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை - விருப்பையும், ராக, எதையாவது தவிர்க்கவேண்டும் விலகிச்செல்ல வேண்டுமென்ற ஆசை -வெறுப்பையும், த்வேஷ, குறிக்கிறது. இந்த ஆசையின் வீரியம் அதிகரிக்கும்போது, அது சில அறிகுறிகளுடன் ஒரு குறிப்பிட்ட வேகத்தை உருவாக்குகிறது. இதைக் கொண்டு அதை பந்தப்படுத்தும் ஆசை, பந்தப்படுத்தாத ஆசை என வகைப்படுத்தலாம்.

நிறைவேறாத ஆசை ஒருவனுக்கு எந்தவித மனக் கிளர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கவில்லையெனில் அது பந்தப்படுத்தாத ஆசையாகும். அத்தகைய ஆசையைப் பற்றி இங்கு பகவான் பேசவில்லை. ஒருவித வேகத்தை உற்பத்தி செய்யும் வீரியமான ஆசையை பற்றிக் கூறுகிறார். இந்த ஆசை நிறைவேறாதபோது அது குரோதமாக, சினமாக உருவெடுக்கிறது. காம மற்றும் குரோதத்தினால் வெளிப்படும் வேகத்தை சகித்துக் கொள்ளுதல் இங்கு பேசப்படுகிறதுகாம-க்ரோத 4த்34வம் வேக3ம்

இந்த சுலோகத்தில் உபயோகப்படுத்தப்படும் மற்றொரு முக்கியமான வெளிப்பாடுப்ராக் 1ரீர-விமோக்ஷணாத். ‘ப்ராக்எனில் முன்பு, ‘1ரீர-விமோக்ஷணாத்எனில் உடலிலிருந்து விடுபடுதல். ஆகவே ஒருவன் மரணத்திற்கு முன்பு, காம மற்றும் குரோதத்திலிருந்து தோன்றும் வேகத்தை சகித்துக்கொள்ள மற்றும் கையாளப் பழகுதல் வேண்டும். கிருஷ்ணர் இதை இரண்டு காரணங்களுக்காகக் குறிப்பிடுகிறார். முதலாவதாக, இறப்பதற்கு முன் ஒருவனால் இதைச் செய்ய முடிந்தால் அவன் முதிர்ச்சியடைந்த மனிதனாகிறான், நர:. மேலும் இந்த முதிர்ச்சியின் விளைவாக தனது சொந்த மனதை கட்டுப்படுத்தியதால் அவன் மகிழ்வடைகிறான் - : சுகீ2.


=> மனமுதிர்ச்சியை அடைந்தவன் யார்?

முதிர்ச்சி என்பது ஒருவன் தனது சுதந்திரமான விருப்பத்தை(free will) அதன் மிக உயர்ந்த வடிவத்தில் வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. உதாரணமாக தானாக முன்வந்து ஒருவனைப் பாராட்டுதல் மற்றும் பிரார்த்தனை செய்தல் முதலியவற்றைக் கூறலாம். பிரார்த்தனையும் அதற்குரிய மனோபாவனையும் ஒரு முதிர்வடைந்த விருப்பத்தின் வெளிப்பாடேயாம். ஏனெனில் வழிபாடு என்பது முழுக்க முழுக்க ஒருவனின் விருப்பம் குறித்த செயல்பாடு; யாராலும் ஒருவனை பிரார்த்தனையில் ஈடுபடத் தூண்டமுடியாது. ஆகவே வாழ்க்கைப் பயணத்தில் ஈஷ்வரனை அங்கீகரித்து பிரார்த்தனையை சமர்ப்பிக்கும் மனமுதிர்வை அடைந்தவன், கர்மயோகியாகிறான். இத்தகைய யோகியே, ஆசை மற்றும் குரோதத்திலிருந்து உற்பத்தியாகும் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடியவன். இத்தகையவனை பகவான் இங்குயுக்த:எனும் சொல்லின்மூலம் சுட்டுகிறார்.

இதில் ஒரு வரிசைக்கிரமம் உள்ளது என ஏற்கனவே பார்த்துள்ளோம். அதாவது, முதலில் கர்மயோகி ஆக வேண்டும். பிறகு ஞானத்தை அடைதல் என்பது தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும். எனில், இவை அனைத்தும் எப்போது நடக்கும்? இம்மையிலேயே, இந்த வாழ்க்கையிலேயேஇஹ ஏவ. ஞானத்தினால் முக்தி என்பது ஒருவனது வாழ்க்கையில் எந்த நேரத்திலும், முதுமையிலும் நிகழலாம் என்பதை 2.72-ல் பார்த்துள்ளோம்अन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति. ஆகவே, ‘ப்ராக் 1ரீர-விமோக்ஷணாத்என்ற வெளிப்பாட்டின் மற்றுமொரு பொருள், எந்த நேரத்திலும், இந்த உலகில் இந்த உடலில் வாழும் போதே, மனபக்குவமடைந்த மனிதனால் இந்த அறிவை அடையமுடியும் என்பதாகும்.


=> ஆசையினால் உண்டாகும் வேகத்திற்கான அறிகுறிகள்:

விருப்பு-வெறுப்பினால் உண்டாகும் வேகத்தை அறிவதெங்ஙனம்? சங்கரர் இத்தகு வேகத்தின் இருப்பை உணர்த்தும் சில சுவாரசியமான அறிகுறிகளை தனது பாஷ்யத்தில் வழங்குகிறார். ஒருவனது ஏக்கத்தை அதிகரிக்கும் ஆசைக்குரிய விஷயத்தை பார்க்கும்போது அல்லது கேட்கும்போது, மயிர் கூச்செரிதல்ரோமாஞ்சநா, கண்கள் அகலத் திறத்தல்ப்ரஹ்ருஷ்ட நேத்ரத்வா, வாய் அகன்றுபோதல்ப்ரஹ்ருஷ்ட வதநத்வா, முதலிய அறிகுறிகள் தென்படுகின்றன. சினம் சிந்தையில் சீறியெழும்போது, உடல் நடுங்குதல்காத்ர-ப்ரகம்ப, வியர்த்தல்ப்ரஸ்வேட, கண்கள் சிவத்தல்ரக்த-நேத்ர மற்றும் உதட்டைக் கடித்தல்சந்டஷ்ட-ஒளஷ்தபுடத்வ, முதலியவைகள் அறிகுறிகளாகத் தென்படுகின்றன. கோபத்தினால் வெளிப்படும் சக்தியின் பிற அறிகுறிகள் கத்துவது, அலறுவது, பெருமூச்சு விடுவது, மற்றும் பல. உண்மையில் இத்தகைய வெளிப்பாடு அவரவர்களின் கலாசாரத்தை பொறுத்தது. மேலும் ஒருவன் வளர்ந்து வந்த சூழல் மற்றும் அவனின் பண்பட்ட தன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகு காம-க்ரோத வேகத்தின் போது, ஒருவன் தனது கட்டுப்பாட்டை இழக்கிறான்; இந்த வேகமே அவனை முழுமையாக ஆட்கொண்டுவிடுகிறது. ஆகவே அவைகளை கையாளப் பழகுதல் அவசியம். கீதையின் மூன்றாம் அத்தியாயம் அதற்கான வழிமுறைகளை விரிவாகக் கூறுகிறது. உண்மையில் இந்த சுய-கட்டுப்பாடு, கீதை முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.


=> சுய-கட்டுப்பாடு:

ஒழுக்கமான மற்றும் தர்மத்திற்குட்பட்ட வாழ்க்கையும், பிரசாத-புத்தியுடன் கூடிய ஆன்மீக வாழ்க்கைமுறையும் ஒருவனை தனது சுய-கட்டுப்பாட்டை அடைய வழிவகுக்கும். தர்ம வாழ்க்கையின் மீதுள்ள மதிப்பு மற்றும் வருவதை ஈஷ்வரனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு போன்றவை காம-குரோத-வேகத்தை குறைக்கவல்லது. கோபம் உண்டானபோதிலும், அது அவனை வெல்லாமல் பார்த்துக் கொள்ளமுடியும். இந்த விதத்தில் ஒருவன் சுய-கட்டுப்பாட்டில் தேர்ச்சி பெற்று யோகியாக ஆகின்றான். வேகத்தை கட்டுப்படுத்திய ஒரு யோகியாக அவன் பொறுப்பிலேயே இருக்கின்ற முதிர்ந்த மனிதன் இன்புற்றிருக்கின்றான்: சுகீ2 நர:.

இங்கு பகவான், எவனொருவன் மரணத்திற்கு முன்பு ஆசையினாலும் கோபத்தினாலும் தோன்றும் வேகத்தை, சகித்துக் கொள்கிறானோ, அவன் யோகி என்கிறார். சகித்துக் கொள்ளுதல் என்பது இத்தகு வேகத்தினால் உண்டாகும் பதட்டத்திற்கு அடிமையாகாமல் இருத்தலை, தாங்கிக் கொள்ளுதலைக் குறிக்கிறது. ஆகவே பொறுமை மிக அவசியமான பண்பாக மாறுகிறது. இந்த வேகத்தை பொறுப்பவனே, தடுப்பவனே மனிதன் ஆகின்றான். அதிக முயற்சியுடன் விருப்பு-வெறுப்பின் பிடியை தளர்த்தி, அதன் வேகத்திலிருந்து விடுபட்ட மனிதனே வேதாந்த சிரவணத்திற்குத் தேவையான ஒரு குறிப்பிட்டவளவு மனத்தூய்மையை, அமைதியை அடைகிறான். பின்னர் ஞானத்தினாலும், ஞான நிஷ்டையினாலும் காம-குரோதத்தின் விதையானது முழுமையாக அழிகிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

காமமும் காசு ஆசையும் உலகம் முழுவதையும் பாபத்தில் அமிழ்த்திவிட்டன. ஸ்திரீகளை லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால், உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது. ஆசை நசுக்காதிருக்கும் வரையில் ஈசனைக் காணமுடியாது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------