ஞாயிறு, 14 மார்ச், 2021

ஸாங்கிய யோகம் 2.57 - 2.60

 ।।2.57।। ஸ்திதப்ரக்ஞ லக்ஷணம் - அஸங்க சொரூபம்:

: सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम्

नाभिनन्दति द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ।। ५७

: ஸர்வத்ரானபி4ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சு1பா4சு14ம்

நாபி4நந்த3தி த்3வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ।। 57


:   :   யார்  सर्वत्र   ஸர்வத்ர  எல்லா காலத்திலும்   अनभिस्नेह:   அனபி4ஸ்நேஹ:    பற்றற்றவனாக    

तत्तत्   தத்தத் அந்த அந்த   शुभाशुभम्   சு1பா4சு14ம்   நலம் கேடு தருவதை   प्राप्य   ப்ராப்ய  அடைந்து      

अभिनन्दति    அபி4நந்த3தி  மகிழ்ச்சியடைவதில்லை    द्वेष्टि    த்3வேஷ்டி   வெறுப்படைவதில்லை   तस्य   தஸ்ய   அவனுடைய   प्रज्ञा    ப்ரஜ்ஞா   ஞானம்    प्रतिष्ठिता   ப்ரதிஷ்டி2தா   நிலைபெற்றதாக இருக்கும்.     


எவன் எல்லா காலத்திலும் பற்றற்றவனாக, நலம் தருவதை அடைந்து மகிழாமலும், கேடு தருவதை அடைந்து நொந்துகொள்ளாமலும் இருக்கிறானோ அவனுடைய ஞானம் நிலைபெற்றதாக இருக்கும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.


விளக்கம்:

=> புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான்?

முன் ஸ்லோகத்தில் முனி என்றழைக்கப்பட்ட ஞானியின் சுபாவம் இங்கு வர்ணிக்கப்படுகிறது. பொதுவாக ஸ்நேஹ:(स्नेह:) என்பதன் பொருள் அன்பு அல்லது நேசம். சமஸ்க்ருதத்தில்பிசுபிசுப்பான, ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையஎன்பது பொருள். நாம் அன்பு செலுத்துபவர்களும் ஒருவிதத்தில் நம்மோடும், நம் நினைவுகளோடும் ஒட்டிக் கொள்வதாலும் இவ்விதத்தில் கூறலாம். நாம் நேசம் கொண்டவர்களின் இன்ப துன்பங்கள் நம்முடைய இன்ப துன்பங்களாகின்றன. எனினும் அன்பைக் காட்டிலும் அது அபிமானமாக, பற்றாக(அபி4ஸ்நேஹ:) மாறும் போது தான் அது பிரச்சனையைத் தருகிறது. ‘அபி4(अभि)’ எனும் முன்னீடு அபிமானத்தை குறிக்கிறது. தாய் தன் குழந்தையின் மீது அல்லது மனைவி தன் கணவனின் மீது கொண்ட அன்பு, பற்றாக மாறும் போது, அந்த நபர் தனக்குரியவராக, தனக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற நிலை உண்டாகிறது. இந்த கட்டுப்படுத்தும் மனநிலையே சிக்கலாக மாறுகிறது. இந்த மனநிலையில் ஸத்-சித்-ஆனந்தத்தின் அர்த்தத்தை விசாரம் செய்வதென்பது இயலாத ஒன்று.

ஞானியிடம் அன்பு இருக்கும். ஆனால் பற்று இருக்காது. க்ருஷ்ணருக்கு நிச்சயமாக அர்ஜுனனின் மீது அன்பு இருந்தது, ‘! என் நண்பனே, நீ என் பக்தனாகவும், நான் உன் நண்பனாகவும் இருப்பதால் நான் உனக்கு இதை உபதேசிக்கிறேன்என்கிறார்

எதிலும் அபிமானமில்லாத ஞானி, நலம் தருவதை அடைவதால் மகிழ்வதுமில்லை, கேடு தருவதை அடைவதால் நொந்துகொள்வதுமில்லை. சு14ம்(शुभम्) என்பது நன்மை, மங்களம், சுகம் மற்றும் விரும்பத்தக்கதையும் அசு14ம் (अशुभम्என்பது இறப்பு, நோய் முதலிய கேடு, அமங்களம் அல்லது துக்கத்தையும் குறிக்கிறது. விரும்பத்தகாத சூழ்நிலையை வெறுப்பதென்பது ஏற்றுக்கொள்ளாமையை காட்டுகிறது. எல்லா காலத்திலும் ஞானத்தில் நிலைபெற்ற முனிவன் எந்தவொரு சூழ்நிலையையும் வெறுப்பதோ விரும்புவதோ கிடையாது. அனைத்தையும் சமமாக பார்க்கிறான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மலைஉச்சியிலிருந்து பார்ப்பவனுக்குக் கீழேயுள்ள புல்லும் மரமும் ஒரே சமதரையாகத் தென்படும். பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்றபிறகு எல்லாம் ஒரேவிதமாய்த் தோன்றும். அப்போது நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேற்றுமையில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------

।।2.58।। எப்படி பேசுகிறான் என்ற கேள்விக்கான விடை:

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश:

इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ।। ५८

யதா3 ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா3நீவ ஸர்வச1:

இந்த்3ரியாணீந்த்3ரியார்தே2ப்4யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ।। 58


कूर्म:   கூர்ம:  ஆமை   अङ्गानि इव  அங்கா3நி இவ  அங்கங்களை உள்ளிளுப்பது(சுருக்கிக் கொள்வது) போல  यदा   யதா3   எப்பொழுது         இன்னும்   अयम्    அயம்  இந்த யோகி(ஞானநிஷ்டைக்கு முயலும் ஞானி)   इन्द्रियार्थेभ्य:   இந்த்3ரியார்தே2ப்4:   இந்திரியங்களினால் அனுபவிக்கப்படும் பொருள்களிலிருந்து   इन्द्रियाणि   இந்த்3ரியாணி    புலன்களை(இந்திரியங்களை)     सर्वश:   ஸர்வச1:   முழுதும்    

संहरते   ஸம்ஹரதே   இழுத்துக்(விலக்கிக்) கொள்கிறானோ    तस्य    தஸ்ய   அவனுடைய     

प्रज्ञा    ப்ரஜ்ஞா   ஞானம்    प्रतिष्ठिता     ப்ரதிஷ்டி2தா    நிலைபெற்றதாக இருக்கும்.     


ஆமை தன் அவயவங்களை அடக்கிக்கொள்வது போல் இந்திரியங்களினால் அனுபவிக்கப்படும் பொருள்களிலிருந்து புலன்களை முழுதும் விலக்க வல்லவனுக்கு ஞானம் நிலைபெற்றதாக இருக்கும்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.


விளக்கம்:

=> இந்திரியக் கட்டுப்பாடு/புலனடக்கம்(3:)

* ஸ்லோகம் 58 - 68 ஸ்திதப்ரக்ஞ உபாயம்(அடையும் வழி)

சிரவண, மநநனத்தின் மூலம் ஞானத்தை அடைந்த ஒருவன், அதில் நிலைபெற மேற்கொள்ளும் தியானம் நிதித்யாசனம். சில மருந்துகள் அதற்குண்டான பத்தியத்துடன் எடுத்துக் கொள்ளும் போதே பலன் தரும். அவ்விதம் இந்த நிதித்யாசனம் எனும் மருந்துக்கு (i) 1:[शम:] (ii) 3:[दम:] இரண்டும் பத்தியமாக இருக்கிறது. நிதித்யாசனம் மனப்ரதானம். சாஸ்த்திரத்தில் கேட்ட கருத்தை எடுத்து, சிந்தித்து, அக்கருத்திலேயே இருந்து பழக மனதிற்கு ஓரளவு அமைதி தேவை. மனம் இரண்டு விதத்தில் அமைதியை இழக்கும்:

   (i) ஐந்து இந்திரியங்களின் வழியாக(கண், காது, மூக்கு, வாய், தொடுதல்)

   (ii) மனதிலுள்ள சம்ஸ்காரங்கள் மற்றும் சங்கல்பங்களினால்.

இதில் ஸ்லோகம் 58 - 61 வரை பகவான், இந்திரியக் கட்டுப்பாட்டைக் குறித்து பேசுகிறார். இந்த ஸ்லோகத்தில் ஆமையை உதாரணமாகக் கொண்டு ஸ்திதப்ரக்ஞனின் புலனடக்கத்தை விளக்குகிறார்.

  * ஆமைஞானி * ஆமையின் அங்கங்கள் = 5 புலன்கள்

  * ஆமையின் பகைவர்கள் = இந்திரியங்களுக்கான விஷயங்கள்

எப்படி ஆமையானது ஆபத்தின் போது, எல்லா திசைகளிலிருந்தும் தனது அங்கங்களை உள்ளிழுத்து தன்னைக் காத்துக் கொள்ளுமோ அப்படி ஞான நிஷ்டைக்கு முயற்சி செய்யும் ஞானியானவன் தனது புலன்களை, தன் மன அமைதியைச் சிதைக்கும் இந்திரிய விஷயங்களிலிருந்து விலக்கிக் கொள்கிறானோ அப்பொழுது அவனுடைய ஞானம் நிலைபெறும்.

நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ அப்படியிருக்கிறது ஞானிக்கு ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம் நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாம்பு கொடிய விஷமுள்ள ஜந்து. யாரேனுமொருவன் அதைப் பிடிக்கப் போனால் அது அவனைக் கடிக்கிறது. ஆனால் பாம்பை எடுத்து ஆட்டும் வித்தையைக் கற்றுக்கொண்டவன் ஏதோ ஒரு பாம்பைப் பிடிப்பதன்றி, ஆபரணங்களைப்போலக் கையிலும் கழுத்திலும் அநேகம் பாம்புகளைச் சுற்றிக் கொண்டுபோகவும் கூடும். அதுபோல ஆத்மஞானத்தை பெற்றவனுக்கு இந்திரிய விஷயங்களால் யாதொரு தீங்கும் உண்டாகாது.

-----------------------------------------------------------------------------------------------------------

।।2.59।। ஸ்திதப்ரக்ஞன் எங்ஙனம் அமர்கின்றான் என்ற கேள்விக்கான விடை:

विषया विनिवर्तन्ते निराहारस्य देहिन:

रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ।। ५९

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே3ஹின:

ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்3ருஷ்ட்வா நிவர்ததே ।। 59


निराहारस्य देहिन:   நிராஹாரஸ்ய தே3ஹின:   விஷயங்களை புலன்களிடத்தில் போகவிடாமல் தடுப்பவனுக்கு  विषया    விஷயா   அந்தந்த விஷய அனுபவங்கள்     विनिवर्तन्ते    விநிவர்தந்தே  அற்றுப்போய் விடுகின்றன  रसवर्जं  ரஸவர்ஜம்  இச்சை எஞ்சியிருக்கிறது   परं    பரம்   பரமாத்மாவை  दृष्ट्वा    த்3ருஷ்ட்வா  தரிசித்த பின்  अस्य    அஸ்ய   அவனுடைய   रस: अपि   ரஸ: அபி   இச்சையும்     निवर्तते    நிவர்ததே   அழிகிறது.


விஷயங்களை புலன்களிடத்தில் போகவிடாமல் தடுப்பவனுக்கு விஷயானுபவங்கள் இல்லை. இச்சை எஞ்சியிருக்கிறது. பரமாத்மாவை தரிசித்த பின் அவனுடைய ஆசையும் அழிகிறது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.


விளக்கம்:

=> இந்திரியக் கட்டுப்பாடு/புலனடக்கம்(3:)

ஸ்திதப்ரக்ஞன் எங்ஙனம் அமர்கின்றான் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு விடையாக 59 - 61 ஸ்லோகங்கள் வருகின்றன. இதில் ஞான நிஷ்டை அடைவதற்கு முன் ஒருவனது புலனடக்கத்திற்கும், அடைந்த பின் அவனது நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது

மனதிற்கு இந்திரியங்களின் வழியாக ஆகாரத்தை கொடுக்காத ஜீவாத்மாவிற்கு அந்தந்த விஷய அனுபவங்கள் நீக்கப்படுகிறது. ஆரம்பகட்டத்தில் ஆசை எஞ்சியிருந்த போதிலும், பரம்பொருளை அறிந்து, ஞான நிஷ்டையை அடைந்தவுடன் அந்தப் பற்றும் கூட அழிந்துவிடுகிறது.

சிறைச்சாலையில் அடைபட்டிருப்பவனுக்கு விஷய சுகங்கள் அனுபவிக்க இயலாதவாறு பலவந்தமாக விலக்கப்பட்டிருந்த போதிலும், அவைகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளத்தில் உதித்துக் கொண்டேயிருக்கும். யாராலும் அதை அடக்கிவைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தவங்களை செய்பவனது நிலைமையும் அத்தகையது. வாசனைகள்(ஸம்ஸ்காரங்கள்) மிக சூக்ஷமமாக இருந்துகொண்டு கூத்தாடும். தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அதுபோல இவ்வாசனைகள் அறவே ஒழிய வேண்டும். இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார். வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களின்  பொருள் ஒன்றே. ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப் போக வேண்டும்

ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்திற்கு ஏதுவான பொருட்களாகத் தென்படுபவைகளெல்லாம் உண்மையில் பரம்பொருளே என்று அறிபவர்கள் அவற்றின்மீது ஆசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள். அதை போற்றிப் பாராட்டுவார்கள்

சாதனையை இரண்டாகப் பிரிக்கலாம்

(1) சில சாதனைகளை சாத்யத்தை அடைந்தவுடன் விட்டுவிட வேண்டும்.

(2) சில வகையான  சாதனைகள் சாத்யத்தை அடைந்த பின், அது நம் சொரூபமாகவே மாறி விடும். உதாரணமாக, கோபப்படாமலிருத்தல், புலனடக்கம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சிங்கம் போன்று பொய்க்கோலம் பூண்டு சிறுவன் ஒருவன் கர்ஜிக்கிறான். அவன் தங்கை தப்பித்துக்கொள்ள நடுங்கி ஒடுகிறாள். அவ்வேளையில் அவன் வேஷத்தைக் கலைக்கிறான். ‘! இது அண்ணாதானா!’ என்று சிறுமி மனம் தெளிந்து அவனிடம் ஓடுகிறாள். உலகப் பொருட்களைக் கண்டு மருண்டு அல்லது ஆசைகொண்டு திரியும் உலகப்பற்றுடையவர்களது நிலைமையும் இத்தகையதே. பிரபஞ்சம் என்ற பொய்க்கோலத்தில் பரம்பொருள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதை உள்ளபடி காண்பவர்க்கு அச்சமும் ஆசையும் இல்லை.

-----------------------------------------------------------------------------------------------------------

।।2.60।। புலன்களின் சுபாவம்:

यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चित:

इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मन: ।। ६०

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்1சித:

இந்த்3ரியாணி ப்ரமாதீ2னி ஹரந்தி ப்ரஸப4ம் மந: ।। 60 


कौन्तेय    கௌந்தேய    குந்தியின் மைந்தா    हि    ஹி   நிச்சயமாக     यतत:   யதத:  முயற்சி செய்கிற    विपश्चित: पुरुषस्य   விபச்1சித: புருஷஸ்ய   விவேகமுள்ள மனிதனுடைய    मन: अपि   மந: அபி    மனதையும்   प्रमाथीनि   ப்ரமாதீ2னி  கொந்தளிப்புள்ள    इन्द्रियाणि   இந்த்3ரியாணி   புலன்கள்    

प्रसभं   ப்ரஸப4ம்   பலவந்தமாக     हरन्ति   ஹரந்தி   இழுத்துச் செல்கின்றன.


குந்தியின் மைந்தா, நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக இழுத்துச் செல்கின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.


விளக்கம்:

=> அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்:

பொல்லாத இந்திரியங்கள், தவ விரதமுடையவர்களையும் தத்தளிக்கச் செய்கின்றன. முயற்சி செய்தும் கூட(யதத: அபி), விளைவைப் பற்றிய அறிவு இருந்தும் கூட(விபச்1சித: அபி), புலன்கள் விஷயத்தில் அறிவு பயனில்லாமல் போகிறது. ஏன்? முன் ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ரஸ(रस), விஷயங்களுக்கான இச்சை எஞ்சியிருப்பதால். இந்த ரஸம் உள்ளவரை, ஒருவனுடைய புலன்கள் அவனது மனதை தொடர்ந்து கட்டுப்படுத்தி, பலவந்தமாக இழுத்துச் செல்கின்றன; விவேகத்தையும் களவாடிவிடுகின்றன.


* ஒவ்வொரு இந்திரியத்திற்க்கும் சுபாவமாகவே விருப்பு வெறுப்பு உள்ளது. சுதந்திரமாக செயல்படும் சக்தி உள்ளது. அதை வசத்திற்கு கொண்டு வர அதன் சுபாவத்தை புரிந்து கொள்வது மிக அவசியம்.


* புலனடக்க விஷயத்தில் பலமுறை தோல்வியை நிச்சயம் சந்திப்போம். இருப்பினும் கூட மனதை தளர விடாமல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.


* இந்திரியக் கட்டுப்பாடு இல்லாததன் விளைவு: நம் மனதை நாம் இழத்தல்(மந: ஹரந்தி).


* தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள பண்பாட்டை அங்கு தென்படும் புலனடக்கத்தைக் கொண்டு அளந்துவிடலாம். சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது. இம்மை மறுமையாகிய இரண்டிலும் மேண்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

விஷப்பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப் போல் உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும் காசு ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------