ஞாயிறு, 7 மார்ச், 2021

ஸாங்கிய யோகம் 2.53 - 2.56

 ।।2.53।। ஞானயோகப் பலனுக்கான அடையாளம்:

श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला

समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ।। ५३ 

ச்1ருதிவிப்ரதிபன்னா தே யதா3 ஸ்தா2ஸ்யதி நிச்1சலா

ஸமாதா4வசலா பு3த்3தி4ஸ்ததா3 யோக3மவாப்ஸ்யஸி ।। 53


यदा   யதா3   எப்பொழுது (ஞானயோக சாதனைகளினால்)  

श्रुति विप्रतिपन्ना  ச்1ருதி விப்ரதிபன்னா  கேட்டு கலக்கமடைந்துள்ள (கர்ம காண்ட வாக்கியத்தினால் குழப்பமடைந்த)   ते  தே  உன்னுடைய    बुद्धिபு3த்3தி4:    புத்தியானது   

समाधौ   ஸமாதெள    ஆத்மாவில்(பரமாத்மாவினிடத்தில்)   अचला   அசலா   உறுதியாக    

निश्चला  நிச்1சலா  அசையாமல்   स्थास्यति  ஸ்தா2ஸ்யதி   நிற்குமோ   तदा    ததா3   அப்பொழுது     

योगम्   யோக3ம்   ஞானத்தை(மோக்ஷத்தை)    अवाप्स्यसि   அவாப்ஸ்யஸி  அடைவாய்.


கேட்டு கலக்கமடைந்துள்ள உன் அறிவு எப்பொழுது ஆத்மாவில் அசையாது உறுதிபெறுமோ, அப்பொழுது யோகத்தை அடைவாய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.


விளக்கம்:

ஞான யோகத்திற்கு முன் மனமானது, தான் அனுபவிக்காத பொருளைப் பற்றி பிறர் சொல்லக் கேட்டுப் பற்று கொள்ளும்; குழப்பமடையும். இப்படிப்பட்ட இயல்பினால் சிதறடைந்த புத்தியானது, ஞான யோக சாதனைகளான சிரவணம்(கேட்டல்), மனனம்(சிந்தித்தல்), நிதித்யாசனம்(த்யானித்தல்) மூலம் எந்த காலத்தில்(யதா3), விக்ஷேபத்தை அடையாமல் அமைதியாக(நிச்1சலா), சந்தேகமில்லாமல் உறுதியாக ஆத்மாவில் நிற்குமோ(அசலா ஸமாதெள ஸ்தா2ஸ்யதி) அப்பொழுது பூர்ணத்தை நீ அடைந்துள்ளதாக புரிந்து கொள்(ததா3 யோக3ம் அவாப்ஸ்யஸி) என்கிறார் பகவான்

ஒருவன் ஞானயோக சாதனைகளினால், ‘நான்என்பதன் உண்மையான பொருள், ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண சரீரம் அல்ல என்றும், அது ஆத்மா என்றும் புரிந்து கொள்கிறான். ஆனாலும் வியவஹாரத்தில் ஈடுபடும் போது, விபரீத பாவனை என்னும் பழக்க தோஷத்தினால், அஹங்காரத்தை கையாளுவதற்குப் பதிலாக அஹங்காரமாகவே மாறி விடுகின்றான். இவ்விதம் நடக்காமல் சரீரத்தையும், அஹங்காரத்தையும் ஒரு கருவியாக வைத்து, எப்பொழுது புத்தியானது ஆத்ம தத்துவத்தில்நான்என்கிற நிச்சயமான அறிவுடன் எல்லா காலத்திலும் அமைதியாக இருக்குமோ, அப்பொழுது ஞான யோக சாதனைக்கான பலனை அடைந்ததாகப் பொருள்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

முதலில் ஈஷ்வரனை நாடி, அப்பால் உலகப் பொருள்களைத் தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்மஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் பிரவேசித்தால் உனக்கு மனச் சஞ்சலமே இராது.

-------------------------------------------------------------------------------------------------------------------

।।2.54।। ஞானியின் லக்ஷணம் குறித்த அர்ஜுனனின் கேள்வி:

     अर्जुन उवाच 

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव

स्थितधी: किं प्रभाषेत किमासीत व्रजेत किम् ।। ५४

       அர்ஜுந உவாச 

ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய கா பா4ஷா ஸமாதி4ஸ்த2ஸ்ய கேச1

ஸ்தி2ததீ4: கிம் ப்ரபா4ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ।। 54 


अर्जुन:     அர்ஜுந:   அர்ஜுனன்   उवाच    உவாச   சொன்னது

केशव   கேச1  கேசவா   समाधिस्थस्य    ஸமாதி4ஸ்த2ஸ்ய    சமாதியிலிருக்கிற (ஆத்மாவில் நிலைபெற்றவனுடைய)   स्थितप्रज्ञस्य   ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய    நிலைத்த ஞானமடைந்தவனுடைய    

भाषा    பா4ஷா   லக்ஷணம்(இலக்கணம்)    का    கா  என்ன?      स्थितधी:   ஸ்தி2ததீ4:   உறுதியான ஞானமுடையவன்   किं    கிம்   எதை    प्रभाषेत    ப்ரபா4ஷேத  பேசுகிறான்     किम्   கிம்  எப்படி    

अासीत  ஆஸீத   அமர்கிறான்    किम्   கிம்   எப்படி  व्रजेत    வ்ரஜேத  நடக்கிறான்.


கேசவா, சமாதியில் நிலைத்த நிறைஞானியின் இலக்கணம் யாது? உறுதியான ஞானமுடையவன் எதைப் பேசுகிறான்? எப்படி அமர்கிறான்? எவ்வாறு நடக்கிறான்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?


விளக்கம்:

ஸ்தி2தப்ரஜ்ஞ:

     :  - ஞானத்தை உடையவன் —> சிரவணம்

     ப்ர:  - சந்தேகமில்லாமல் —> மனனம்

     ஸ்திதம் - உறுதியாக —> நிதித்யாசனம்

சமாதி கூடியவன், ப்ரம்மஞானி, ஸ்திதப்பிரஞன்(ஸ்தி2தப்ரஜ்ஞ:) இவைகள் இங்கு ஒரே கருத்தை விளக்குகின்றன-பரிபூரணமடைந்தவன். அப்படிப்பட்டவனது மனோ வ்யாபாரம்(transactions), வாக்கு, செயல் எப்படி இருக்கும்? வ்யவஹாரத்தின் போது அவனது அஹங்காரத்தை எப்படி கையாளுவான்? அவனிடத்தில் ஒரு வ்யவஹாரமும் இல்லாத போது எப்படியிருப்பான்? அவன் ப்ராரப்தத்தை எப்படி எதிர்கொள்வான்? என்பது அர்ஜுனனின் சந்தேகம்.

பகவான் இனிவரும் பதினெட்டு ஸ்லோகங்களில் இதற்கான பதிலை எடுத்துரைக்கிறார். ஏற்கனவே முழுமையை அடைந்த ஒன்றை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு அதன் பூர்ணத்தை அடைய முயற்சிப்பது எல்லா துறைகளிலும் வழக்கமாக இருப்பது தான். ஆன்மீகத் துறையிலும் இம்முறை பொருந்தும். ஞானியின் முழு இலக்கணம் இங்கு பகவானால் கூறப்படுகிறது. இந்நிலையை அடைய முயலும் சாதகர்கள் செய்யவேண்டியது என்ன என்பதும் இதில் அடங்குகிறது. இப்பெருநிலையை குறிக்கோளாகக் கொண்டு, இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம் யோக சாதனங்களாகின்றன.

---------------------------------------------------------------------------------------------------------

।।2.55।। ஞானியின் லக்ஷணம்:

श्री भगवानुवाच

प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान्

अात्मन्येवात्मना तुष्ट: स्थितप्रज्ञस्तदोच्यते ।। ५५

ஸ்ரீ 43வாநுவாச

ப்ரஜஹாதி யதா3 காமாந்ஸர்வாந்பார்த2 மநோக3தான்

ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ததோ3ச்யதே ।। 55


श्री भगवानुवाच      ஸ்ரீ 43வாநுவாச     ஸ்ரீ பகவான் சொன்னது

पार्थ    பார்த2  பார்த்தா   यदा    யதா3  எப்பொழுது    मनोगतान्    மநோக3தான்  மனதில் எழுகின்ற   

सर्वान् कामान्   ஸர்வாந் காமாந்    எல்லா ஆசைகளையும்   प्रजहाति   ப்ரஜஹாதி   முழுமையாக விடுகின்றான்(துறக்கின்றான்)   अात्मनि एव  ஆத்மனி ஏவ   ஆத்மாவில் மட்டும்(தன்னிடத்திலேயே)      

अात्मना  ஆத்மனா   ஆத்மாவைக்கொண்டு(தன்னாலேயே)   तुष्ट: துஷ்ட:   திருப்தியடைந்தவனாகின்றான் तदा   ததா3 அப்பொழுது      स्थितप्रज्ञஸ்தி2தப்ரஜ்ஞத:  ஸ்திதப்ரக்ஞன் என்று   

उच्यते     உச்யதே     சொல்லப்படுகின்றான்.


ஸ்ரீ பகவான் சொன்னது,

பார்த்தா, மனதில் எழுகின்ற எல்லா ஆசைகளையும் முழுமையாக அகற்றி, ஆத்மாவில் ஆத்மத் திருப்தியடைந்திருப்பவன் ஸ்திதப்ரக்ஞன் என்று சொல்லப்படுகின்றான்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.


விளக்கம்:

=> அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கான விடை:

இங்கு பகவான், ஞானியின் இலக்கணமாக இரண்டு லக்ஷணங்களைக் கூறுகிறார்

[i] ஆசையை துறத்தல்(कामत्याग:)  

[ii] திருப்தி(மன நிறைவு)


[i] ஆசையை துறத்தல்:

நிறைவான மனதில் ஆசை இருக்காது. முழுமையற்றவன் என்ற உணர்விலிருந்து(sense of incompleteness) ஆசை உற்பத்தியாகிறது. நிறைவற்ற அனாத்மாவில்நான்என்ற புத்தி, அதனுடைய தர்மங்களை நமது தர்மங்களாக்கிறது. மனதின் தர்மம்(சுபாவம்) ஆசைப்படுதல்.

* மனதில் பந்தப்படுத்தும் ஆசை ஞானியிடம் கிடையாது.

* பந்தப்படுத்தும் ஆசைகள், ஞானியிடம் பந்தப்படுத்தாத ஆசைகளாக மாறி விடுகிறது. ஆகவே ஞானியின் ஆசை ஈஷ்வரனின் சங்கல்பம்.

[ii] திருப்தி(மன நிறைவு):

ஆத்மனி ஏவ ஆத்மனா துஷ்ட: => எந்தப் பொருளின் துணையுமின்றி தன்னிடத்திலேயே தான் திருப்தியடைந்தவனாக சுகமாக இருக்கின்றான்.

ஒருவன் தனது திருப்திக்கும் வெளி விஷயத்திற்கும் எப்பொழுதும் ஒரு சம்பந்தத்தை வைத்துக் கொள்கிறான். இந்த சம்பந்தம் எப்பொழுது நீக்கப்படுமோ, எப்பொழுது தன்னை நிறைவுபடுத்த யாரும், எதுவும் தேவையில்லையோ, யாரும் தன்னை நிறைவுபடுத்த முடியாது என்ற சுதந்திரத்தை அடைகின்றானோ அப்பொழுது அவன் ஸ்திதப்ரக்ஞன் ஆகின்றான்

என்னுடைய மனநிறைவுக்கு எந்த நிபந்தனையும் இல்லைஎனும் இந்த நிலை கேட்பதினால் மட்டும் வருவதல்ல; முயற்சியினால் அடையப்படுவது. ஞானியின் சுபாவம், ஞானநிஷ்டை அடைபவனுக்கு சாதனம் என்கிறார் சங்கரர். ஆகவே ஞானியின் இந்த சுபாவத்திற்கும், நம்முடைய நிலைக்கும் இடையிலிருக்கும் இடைவெளியை அறிந்து, அதை குறைக்கும் பயணத்தில் ஈடுபடுதல் வேண்டும்.

உண்மையில் உலகில் எந்தப் பொருளும் நம்மை திருப்திபடுத்துவதில்லை. விதவிதமான சூழ்நிலையை அர்த்தப்படுத்தும் நமது மனம் தான் நம்மை துயரப்படுத்துகிறது. மனதை மாற்றுவதினால் தான் ஒருவன் தன்னிடத்தில் திருப்தியை அடைய முடியும். ஆகவே மனதிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் மனமானதுஇது வேண்டும், இச்சூழ்நிலை இப்படித்தான் இருக்க வேண்டும்என நினைக்கிறதோ அப்போதெல்லாம்என்னிடத்தில் நான் நிறைவாக உள்ளேன். என்னை திருப்திபடுத்த வேறு எதுவும் தேவையில்லைஎன்பதை நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.


சுவாமி சித்பவானந்தர்:

அக்னி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்கள்மீது ஏற்றுவித்து, மனதைக்கொண்டு அவைகளை நாடிச் செல்கிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலைகள் வீசும்பொழுது அடிப்பக்கம் தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்ததுபோன்று ஆகிறது. காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும்போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி; ஆத்ம திருப்தன்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உயிருடனிருக்கும்போதே எவனொருவன் இறந்தவன் போலாகிறானோ, அதாவது எவனுடைய ஆசாபாசங்கள் பிணத்தினிடத்திற் போன்று நசிந்திருகின்றனவோ, அவன்தான் உண்மையான ஆத்மஞானியாவான்.


-------------------------------------------------------------------------------------

।।2.56।। மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம்:

दु:खेष्वनुद्विग्नमना: सुखेषु विगतस्पृह:

वीतरागभयक्रोध: स्थितधीर्मुनिरुच्यते ।। ५६

து3:கே2ஷ்வனு3விக்3நமனா: ஸுகே2ஷு விக3தஸ்ப்ருஹ:

வீதராக34யக்ரோத4: ஸ்தி2ததீ4ர்முனிருச்யதே ।। 56


दु:खेषु    து3:கே2ஷு    துக்கத்தில்  अनुद्विग्नमनाஅனு3விக்3நமனா:    அசையாத மனதையுடையவன்    

सुखेषु    ஸுகே2ஷு  சுகத்தில்   विगतस्पृह:   விக3தஸ்ப்ருஹ:   நாட்டமில்லாதவன்      

वीतरागभयक्रोध:   வீதராக34யக்ரோத4:   பற்றுதல் பயம் கோபம் அற்றவன்   मुनि:  முனி:  முனி என்றும்     

स्थितधी:   ஸ்தி2ததீ4:   உறுதியான அறிவுடையவன்(ஞானத்தில் நிலைபெற்றவன்) என்றும்    

उच्यते   உச்யதே   சொல்லப்படுகிறான்.


துன்பத்தில் அசையாமல், இன்பத்தில் நாட்டமில்லாமல், பற்று அச்சம் சினம் அற்ற உறுதியான உள்ளத்தையுடையவன் முனி எனப்படுகின்றான்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”


விளக்கம்:

=> ஸ்திதப்ரக்ஞன் எப்படி ப்ராரப்தத்தை சந்திக்கிறான்?

ப்ராரப்தத்தை இரண்டாகப் பிரிக்கலாம்:

(1) இச்சா ப்ராரப்தம்(इच्छा प्रारब्ध) - விரும்பும் சூழ்நிலை அமைதல்

(2) அனிச்சா ப்ராரப்தம்(अनिच्छा प्रारब्ध) - விரும்பாத சூழ்நிலை அமைதல்

ஒருவன் தனக்கு அமையும் சூழ்நிலையை எப்படி எடுத்துக்கொள்கிறான் என்பது அவன் கையில் தான் உள்ளது.

நிறைஞானியானவன், துக்கத்திற்கு காரணமான சூழ்நிலையில் மனக்கொந்தளிப்பு இல்லாமலும், சுகமான சூழ்நிலையை சந்திக்கும் போது அதில் வீழ்ந்துவிடாமலும், அது தொடர வேண்டுமென்று ஆசைப்படாமலும் தன்னுடைய ப்ராரப்தத்தைச் சமமாக பார்க்கின்றான். மேலும் அவன் பற்றுதல், பயம், கோபம், வெறுப்பு அற்றவனாக இருக்கின்றான்.

   * பற்று இல்லாதவன் - அஸங்கனாக(எதனோடும் சம்பந்தம் அற்றவனாக) இருப்பதால்.

   * பயம் இல்லாதவன் - சுதந்திரமாக, எதையும் சாராமல் இருப்பதால்.

   * கோபம் & வெறுப்பு இல்லாதவன் - எதிர்பார்ப்பில்லாமல், சம்பந்தமில்லாமல், உதாசீனனாக இருப்பதால்.

ஆகவே பற்றற்று, பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது. தெளிவடைதலும் அத்தகைய மனதுக்குச் சாத்தியமாகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உனது காம இச்சைகளை நன்றாய் அடக்கியாளப் ப்ரயத்தனப் படு. அதில் ஜயமடைந்தால் சரீரத்தில் ஒருவித மாறுபாடு உண்டாகும். அதாவது இந்திரிய சக்திகளை ஆத்ம சொரூபத்தில் ஈடுபடுத்தும்மேதைஎன்ற ஒரு நாடி வளர்கிறது. இந்த மேதைநாடி வளர்ச்சியடைந்த பிறகே ஆத்மாவைப்பற்றிய உயர்ந்த ஞானம் உண்டாகிறது.

----------------------------------------------------------------------------------------