ஞாயிறு, 21 மார்ச், 2021

ஸாங்கிய யோகம் 2.61 - 2.64

 ।।2.61।। இந்திரியங்களை அடக்கும் வழி

तानि सर्वाणि संयम्य युक्त अासीत मत्पर:  

वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ।। ६१

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:

வசே2 ஹி யஸ்யேந்த்3ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ।। 61


युक्त:    யுக்த:   மனவுறுதியுடையவன்    तानि सर्वाणि   தாநி ஸர்வாணி  அவைகளையெல்லாம்(எல்லா இந்திரியங்களையும்)      संयम्य   ஸம்யம்ய   கட்டுக்குள் கொண்டு    मत्पर:   மத்பர:   என்னை பரமாகக் கொண்டு    अासीत   ஆஸீத  (நிதித்யாசனத்தில்) இருக்கின்றான்   हि   ஹி    ஏனெனில்    

यस्य   யஸ்ய   யாருடைய     इन्द्रियाणि    இந்த்3ரியாணி    இந்திரியங்கள்      

वशे   வசே2   வசப்பட்டிருக்கின்றனவோ   तस्य    தஸ்ய   அவனுடைய     प्रज्ञा    ப்ரஜ்ஞா   ஞானம்    

प्रतिष्ठिता     ப்ரதிஷ்டி2தா    நிலைபெற்றதாக இருக்கும்.


மனவுறுதியுடையவன் அவைகளையெல்லாம் அடக்கி என்னை பரமாகக் கொண்டு யோகத்தில் அமர்கின்றான். யாருடைய இந்திரியங்கள் வசப்பட்டிருக்கின்றனவோ அவனுடைய அறிவு நிலைபெற்றதாக இருக்கும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.


விளக்கம்:

=> ஞான நிஷ்டையை அடைய முயல்பவன் செய்ய வேண்டியது:

பகவான் இங்கு கொடுக்கும் அறிவுரை - தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:. இதில் மத்பர: எனும் கூட்டுச்சொல்லில், மத் - என்னை அதாவது ஈஷ்வரனை; பர - முதன்மையாக, லக்ஷியமாகக் கொண்டு. ஆஸீத - அமர வேண்டும். எல்லா இந்திரியங்களையும் தன் கட்டுக்குள் கொண்டவனாக(தாநி ஸர்வாணி ஸம்யம்ய), ஈஷ்வரனாகிய என்னை மேலான லக்ஷியமாகக் கொண்டு நிதித்யாசனத்தில் அமர வேண்டும்.

ஒருவன் தன்னுடைய உடல்-மனம்-புலன்கள் மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிகளின் இருத்தலாக இருக்கின்ற, வரையறைக்கு உட்படாத, சத்ய வஸ்துவாக, அனைத்தினுடைய உண்மைப் பொருளாக, அனைத்துமாக விளங்கிக் கொண்டிருக்கும் சுயமாகிய ஆத்மாவைச் சிந்தனை செய்ய வேண்டும். ஒருவன் தனது முடிவான லக்ஷியமாக அடைய வேண்டியது, அனைத்திற்கும் காரணமாகவும், ஆதாரமாகவும் இருக்கின்ற, தன்னிடமிருந்து வேறாக இல்லாத இறைவனே. ப்ரத்யகாத்மாவைக் குறித்த இப்படிப்பட்ட விசாரத்தில் ஈடுபட ஒருவனுக்கு எது நிலையானது, எது நிலையற்றது என பகுத்தறியும் திறன் இருக்க வேண்டும். சாஸ்திர சிரவணத்தினால் தேவையான புரிதலை அடைந்த இந்த விவேகி, தொடர்ந்து நிதித்யாசனத்தில் ஈடுபடுவதன் மூலம், முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட ரஸ -த்தை நீக்கி ஞானத்தில் நிலைபெறுகிறான்.   

ப்ரத்யகாத்மாவான சுயத்தை பின்வருமாறு வெவ்வேறு கோணங்களில் விசாரம் செய்யலாம்

* பூர்ண ஆத்மா - வரையறைக்குட்படாதவன்

* அஸங்க ஆத்மா - எதனோடும் சம்பந்தமற்றவன்

* சாக்ஷி ஆத்மா - சாக்ஷியாக இருப்பவன்

* அகர்த்ரு ஆத்மா - செயலில் ஈடுபடாதவன்

* அபோ4க்த்ரு ஆத்மா - எதையும் அனுபவிக்காதவன்

* ஆனந்த ஆத்மா - முழுமையானவன்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால் அவ்வேளையில் சிற்றின்பத்தைப் பற்றி நினைக்க யாருக்கும் இயலாது. ஏனென்றால் முழுமனதும் துக்கத்தில் ஈடுபடுகிறது. அதுபோன்று யாருடைய மனது முழுதும் ஈசுவரனிடம் திரும்புகிறதோ அவனால் இந்திரிய சுகங்களை நினைக்க முடியாது. இந்திரியங்களெல்லாம் தாமே ஓய்ந்து போய்விடுகின்றன

-------------------------------------------------------------------------------------

।।2.62।। மனக் கட்டுப்பாடு இல்லாததன் விளைவு:

ध्यायतो विषयान्पुंस: सङ्गस्तेषूपजायते

सङ्गात् सञ्जायते काम: कामात्क्रोधोऽभिजायते ।। ६२

த்4யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்க3ஸ்தேஷூபஜாயதே

ஸங்கா3த்  ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ4ऽபி4ஜாயதே ।। 62


विषयान्   விஷயான்   இந்திரிய விஷயங்களை   ध्यायत:    த்4யாயத:   த்யானிக்கின்ற    

पुंस:  பும்ஸ:   மனிதனுக்கு    तेषु   தேஷு   அவைகளிடத்து    सङ्ग:   ஸங்க3:    பற்றுதல்    

उपजायते   உபஜாயதே    உண்டாகிறது      सङ्गात्   ஸங்கா3த்  பற்றுதலிலிருந்து   कामகாம: ஆசை    

सञ्जायते   ஸஞ்ஜாயதே  உண்டாகிறது    कामात्    காமாத்   ஆசையிலிருந்து    

क्रोध:   க்ரோத4:   கோபம்(வெறுப்பு)    अभिजायते     அபி4ஜாயதே  வளர்கிறது.


பொருள்களை நினைப்பதால் அவைகளிடத்து பற்றுண்டாகிறது. பற்று ஆசையாக மாறுகிறது. ஆசையிலிருந்து கோபம் தோன்றுகிறது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.


விளக்கம்:

=> கேடு அனைத்திற்கும் முதற்காரணம்

ஸ்லோகம் 62-68 மனக்கட்டுப்பாடு(शम:) பற்றிய விளக்கம் வருகிறது

ஒரு குறிப்பிட்ட பொருளையும், அதனுடைய பயனையும், அதை அனுபவிப்பதால் கிடைக்கும் சுகத்தையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தல் இங்கு விஷய த்யானம் என சொல்லப்படுகிறது. உடை, நகை, உணவு, வீடு, ஒருவரின் குரல், பேச்சு, நடத்தை, ஒப்பனை என எண்ணிக்கையில் அடங்காத பொருட்கள்விஷய’-த்தில் அடங்கும். இது போன்ற தொடர் சிந்தனை அப்பொருளின் மீது பற்றுதலாக வடிவெடுக்கிறது. பொதுவாக பற்று அதனளவில் எவ்வித சிக்கலையும் தருவதில்லை. ஆனால் தான் விரும்பும் ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் வருகிறது. இத்தீர்மானத்திற்கு ஆசை அல்லது காமம் என்று பெயர்

எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பது போல எண்ணம் காமத்தை வளர்க்கிறது. இது, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் தூண்டுகிறது. அதற்கான செயலில் ஈடுபட வைக்கிறது. ஆனால் உலகம், சுற்றத்தார் அதற்கு இடந்தருவதில்லை. அதை தடைப்படுத்துகின்றனர். தடைப்பட்ட ஆசை சினமாக மாறுகிறது. பொருளைக் காட்டிலும் அதன் மீதுள்ள ஆசையின் தீவிரமே, கோபத்தின் ஆழத்தை தீர்மானிக்கிறது. கோபத்தினால் ஏற்படும் அழிவை பகவான் அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறார்.


-------------------------------------------------------------------------------------

।।2.63।। முன் ஸ்லோகத்தின் தொடர்ச்சி:

क्रोधाद्भवति संमोह: संमोहात्स्मृतिविभ्रम:

स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ।। ६३

க்ரோதா4த்34வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்4ரம:

ஸ்ம்ருதிப்4ரம்சா1த்3 பு3த்3தி4நாசோ1 பு3த்3தி4நாசா1த் ப்ரணச்1யதி ।। 63


क्रोधात्   க்ரோதா4த்   சினத்திலிருந்து   संमोहஸம்மோஹதெளிவின்மை(மனக்குழப்பம்)    

भवति   4வதி   உண்டாகிறது    संमोहात्    ஸம்மோஹாத்  குழப்பதிலிருந்து   

स्मृति-विभ्रम:   ஸ்ம்ருதி-விப்4ரம:    (அடைந்த அறிவில்/ஞானத்தில்) நினைவின்மை  

स्मृति-भ्रंशात्     ஸ்ம்ருதி-ப்4ரம்சா1த்   நினைவு நாசத்திலிருந்து   बुद्धि-नाश:  பு3த்3தி4நாச1:   புத்திநாசம்   बुद्धिनाशात्   பு3த்3தி4நாசா1த்   புத்திநாசத்தினால்   प्रणश्यति   ப்ரணச்1யதி  அழிந்து போகிறான்.


சினத்தால் மனக்குழப்பம். குழப்பத்தால் நினைவின்மை. நினைவு நாசத்தால் புத்திநாசம். புத்தி நாசத்தால் அழிந்து போகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.


விளக்கம்:

=> சினத்தினால் வரும் விளைவு:

சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது. சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய மன நிலையே(ஸம்மோஹ:) அதன் விளைவு. இது நன்மை, இது தீமை என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை. இங்கு நினைவு(ஸ்ம்ருதி) என்னும் சொல், சாஸ்த்திரத்திலிருந்து பெற்ற ஞானம், ஆசிரியர்கள் பெரியவர்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட அறிவு, பழைய நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு நலம் கேடுகளைக் குறித்த முடிவுகள் போன்றவற்றைக் குறிக்கிறது. எப்பொருள் எத்தன்மையுடையது என்ற ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் உண்மைத்தன்மையை புத்தியினால் ஆராய்ந்து பாகுபடுத்த முடியும். ஆகவே, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது. அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகின்றான். ஏனென்றால் நெறி வழுவுதல் மாய்தலுக்கு ஒப்பாகிறது

தன்னை மேலோனாக அல்லது கீழோனாகப் படைப்பது அவனுடைய எண்ணமே. எண்ணம் நுண்ணியதாக உள்ளத்தில் புகுந்து, பெரியதாகப் பரிணமித்து ஆளையே மாற்றிவிடவல்லது. கீழான எண்ணம் செய்யும் கேட்டை இங்கு பகவான் விளக்கியுள்ளார். ஆகையால் மனிதன் தன் எண்ணத்தைப் பற்றி எச்சரிக்கையாயிருப்பானாக. தூய தெய்விக எண்ணமே எப்பொழுதும் மனதில் இடம் பெறட்டும்.  

வெறுப்பிலிருந்து வருவது தெளிவின்மை, குழப்பம். மோஹத்தினால் நாம் இதுவரை அடைந்த அறிவு, ஞானம் நாசமடைந்து விடும்(ஸ்ம்ருதி-விப்4ரம:). அறிவு வெளித்தோற்றத்திற்கு வராத காரணத்தால், எது சரி, எது தவறு என பிரித்துப் பார்க்கும் புத்தியானது நாசமடைந்து விடும். புத்தி நாசத்தினால் ஒருவன் தனது புருஷார்த்தத்தை(லக்ஷியத்தை) அடையும் தகுதியை இழந்து அழிந்து விடுகின்றான்.

* மனக்கட்டுப்பாடு(शम:) இல்லாததன் விளைவு —> விஷய த்யானம் —> பற்று(ஸங்கம்) —> ஆசை(காமம்) —> கோபம்(க்ரோதம்) —> குழப்பம்(மோஹம்) —> அறிவு வெளிப்படாதது(ஸ்ம்ருதி விப்ரம:) —> புத்தி நாசம் —> அழிகின்றான்.   

-------------------------------------------------------------------------------------

।।2.64।। புலனடக்கத்தின் பலன்:

रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्

अात्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ।। ६४ 

ராக3த்3வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்3ரியைச்1சரன்

ஆத்மவச்1யைர்விதே4யாத்மா ப்ரஸாத3மதி43ச்ச2தி ।। 64


तु   து   ஆனால்   रागद्वेष-वियुक्तै:   ராக3த்3வேஷ-வியுக்தை:   விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபட்ட   अात्मवश्यै:   ஆத்மவச்1யை:  தன் வசப்பட்டுள்ள   इन्द्रियैஇந்த்3ரியை:   இந்திரியங்களைக் கொண்டு   

विषयान् चरन्  விஷயான் சரன்   விஷயங்களில் சஞ்சரிக்கின்ற   विधेयात्मा   விதே4யாத்மா  அடங்கிய மனதுடையவன்   प्रसादम्   ப்ரஸாத3ம்  மன அமைதியை(மனத் தெளிவை)    

अधिगच्छति   அதி43ச்ச2தி  அடைகிறான்.


விருப்பு வெறுப்பற்றனவும், ஆத்ம வசப்பட்ட இந்திரியங்களால் விஷயங்களில் சஞ்சரிக்கின்ற மனதை அடக்கியவன் மன அமைதியை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு :

விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.


விளக்கம்:

=> புலனடக்கத்தின் பலன்:

இயல்பாக புறவுலகை நோக்கிச் செல்லும் இந்திரியங்களை ஆராயும் போது, ஒருவனுடைய மனதிலுள்ள விருப்பு வெறுப்பானது அதில் அதிக பங்கு வகிப்பது புலப்படும். ஆனால் மோக்ஷத்தில் இச்சை கொண்ட முமுக்ஷுவிற்கு அவனுடைய விவகாரங்கள், நாட்டங்கள் விருப்பு வெறுப்பை சார்ந்ததாக இருக்காது. மோக்தும் இச்சு: முமுக்ஷு: (मोक्तुम् इच्छु: मुमुक्षु:). பகவான் இந்த ஸ்லோகத்தில், ராக-த்வேஷத்திலிருந்து விலக்கப்பட்ட(ராக3த்3வேஷ-வியுக்தை:), தன் வசத்திலுள்ள புலன்கள்(ஆத்மவச்1யை: இந்த்3ரியை:) என குறிப்பிடுகிறார். எனில், இங்கு முமுக்ஷுவினுடைய இந்திரிய விவகாரத்தை முடிவு செய்யும் அளவுகோலாக தர்ம-அதர்மம் அமைகிறது. அவன் கர்ம-யோக வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலம் தன்னை விருப்பு வெறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்கிறான். இத்தகைய மனம் வெளி விஷயங்களில் போதும் ஆசைப்படாமல் புனித இயல்போடு சஞ்சரிக்கிறது. இவ்விதம் மனதை அடக்கி வென்ற ஒருவன்(விதே4யாத்மா) அதன் பலனாக மனத் தெளிவை, நிறைவை, அமைதியை(ப்ரஸாத3ம்) அடைகின்றான்

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும் அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார். அதனால் அவருக்கு ஆனந்த சமாதி ஏற்பட்டது. காதால் பகவன் நாமத்தை கேட்டபொழுதெல்லாம் அவருக்கு சமாதி வந்தது. வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு ஈஷ்வர ப்ரஸாதம். இந்திரியங்களைப் பயன்படுத்தி அவர் ஈஷ்வர சந்நிதியையே சார்ந்திருந்தார். மனம் அடங்கப் பெற்றார்க்கு இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும், தெளிந்த நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது.

-------------------------------------------------------------------------------------