திங்கள், 1 மார்ச், 2021

ஸாங்கிய யோகம் 2.49 - 2.52

 ।।2.49।।  கர்மயோகத்தை கடைபிடி எனும் அறிவுரை:

दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय

बुद्धौ शरणमन्विच्छ कृपणा: फलहेतव: ।। ४९ 

தூ3ரேண ஹ்யவரம் கர்ம பு3த்3தி4யோகா3த்34னஞ்ஜய

பு3த்3தௌ4 2ரணமந்விச்ச2 க்ருபணா: 2லஹேதவ: ।। 49


धनञ्जय    4னஞ்ஜய   தனஞ்ஜயா    

बुद्धि-योगात्     பு3த்3தி4-யோகா3த்3   (சம புத்தியோடு செய்யும்)கர்மயோகத்தை காட்டிலும்  

कर्म    கர்ம   பலனில் ஆசையுடன் செய்யும் செயல்கள்(காம்ய கர்ம)     

दूरेण अवरं हि தூ3ரேண அவரம் ஹி  மிகக் கீழானது   

बुद्धौ   பு3த்3தௌ4   சம புத்தியிலேயே(கர்ம யோகத்தில்

शरणम्  1ரணம்  தஞ்சம்       अन्विच्छ  அந்விச்ச2   அடைக    

फलहेतव:   2லஹேதவ:  பலனை விரும்பிச் செயல்செய்பவர்கள்   

कृपणा:   க்ருபணா:   பரிதாபத்திற்குரியவர்கள்(கீழோர்).


சம புத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல்புரிவது மிகக் கீழானதே. சம புத்தியிலேயே தஞ்சம் அடைக. பலனை விரும்பிச் செயல்செய்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.


விளக்கம்:

=> சமபுத்தியின்கண் சரணடைக:

புத்தியில் இருக்க வேண்டிய பாவனை ஆதலால் கர்ம யோகத்தை புத்தியோகம் என்று பகவான் கூறுகிறார். விருப்பு வெறுப்பினால் தூண்டப்பட்டு செய்யும் செயலானது, சமபுத்தி பாவனையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும் கர்மயோகத்திலிருந்து முற்றிலும் வேறானது, மிகவும் கீழானது(தூ3ரேண அவரம் ஹி). ஆகவேஅர்ஜுனா, கர்மயோக புத்தியில் சரணடைவாயாக(1ரணம் அந்விச்ச2)’ என்கிறார் க்ருஷ்ணர். ஏன்

ஏனெனில் மனத்தூய்மை(அந்தக்கரண சுத்தி_अन्त करण सुद्धि) மற்றும் மோக்ஷத்திற்காக அல்லாமல் பலனிற்காக மட்டும் கர்மம் செய்பவன் பரிதாபத்திற்குரியவன்; கருமி(2லஹேதவ: க்ருபணா:). நிறைய பணம் வைத்திருந்தும் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ உபயோகிக்க விருப்பாதவனை பொதுவாக கஞ்சன், கருமி என்கிறோம். தங்களது முன்னுரிமைகளில் தெளிவில்லாமல், பணத்தை உபயோகிக்க மனமில்லாமல், எதிர்காலத்திற்காக என சேமித்து அதன் பலனை அடையாமலேயே இறக்கிறார்கள். இப்பாங்கு புத்தி விஷயத்திலும் நீடிக்கிறது. சங்கரர் தனது உரையில் இக்கருமிகளை பலகீனமானவர்கள்(க்ருபணா:) என்று வரையறுத்து ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து பின்வரும் வாக்கியத்தை மேற்கோள்காட்டுகிறார்

यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति कृपण:  

யோ வா ஏதத1க்ஷரம் கா3ர்க்3யவிதி3த்வாஸ்மால்லோகாத்ப்ரைதி க்ருபண:         (Brhadaaranyakopanisad - 3.8.10)

மனிதன் தன்னிடமுள்ள சிறந்த செல்வமான பகுத்தறியும் ஆற்றலை, தன்னை(ஆத்மாவை) அறியும் பொருட்டு உபயோகிக்காமலேயே மடிகின்றான். மோக்ஷம் என்னும் பெரும் பலனை அடையாது, புலனின்பம் முதலிய அற்பமான பலனை குறிக்கோளாக கொண்டவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்(க்ருபணா:).

-------------------------------------------------------------------------------------------------------------

।।2.50।। கர்மயோகத்தின் முடிவான பலன் & கர்மயோக லக்ஷணம்

बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते

तस्माद्योगाय युज्यस्व योग: कर्मसु कौशलम् ।। ५०

பு3த்3தி4யுக்தோ ஜஹாதீஹ உபே4 ஸுக்ருதது3ஷ்க்ருதே

தஸ்மாத்3யோகா3 யுஜ்யஸ்வ யோக3: கர்மஸு கௌச1லம் ।। 50


बुद्धियुक्त:    பு3த்3தி4-யுக்தோ   கர்மயோக புத்தியுடன் இருப்பவன்      

इह   இஹ  இங்கேயே(இந்த ஜென்மத்திலேயே)     

उभे सुकृत-दुष्कृते  உபே4 ஸுக்ருத-து3ஷ்க்ருதே   புண்ணிய பாபம் இரண்டையும்    

जहाति   ஜஹாதி   விட்டு விடுகின்றான்(துறக்கின்றான்)     तस्मात्   தஸ்மாத்   ஆகையினால்      

योगाय  யோகா3   (கர்ம)யோகத்தில்   युज्यस्व  யுஜ்யஸ்வ  சேர்வாயாக     कर्मसु   கர்மஸு   கர்மங்களில்     कौशलम्   கௌச1லம்   திறமையுடன் இருத்தல்    योग:   யோக3:   (கர்ம)யோகம்.


சம புத்தியுடன் இருப்பவன் நன்மை தீமையிரண்டையும் இங்கேயே துறக்கின்றான். ஆகையினால் நீ யோகத்தைச் சார்ந்திரு. திறமையுடன் செயல்புரிதல் யோகம்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.


விளக்கம்:

=> கர்ம யோகப் பலன்:

ஸுக்ருத என்பது சரியாக செய்யப்பட்டது என்றும், து3ஷ்க்ருத என்பது தவறாக(ஒழுங்கில்லாமல்) செய்யப்பட்டது என்றும் பொருள்படும். இந்த இரண்டுவித செயல்களும் முறையே புண்ணியம் மற்றும் பாபம் என்ற பலனைத் தருகிறது. இந்த ஸ்லோகத்தில், பு3த்3தி4-யுக்த: என்பது யோக புத்தியுடன் கூடியவன் அதாவது கர்மயோகி, இங்கேயே இந்த ஜென்மத்திலேயே புண்ணியம் மற்றும் பாபத்தை விட்டுவிடுகின்றான்(உபே4 ஜஹாதி) என்று கூறப்படுகிறது. ஆனால் கர்மயோகியினால் அவ்வாறு புண்ணிய பாபத்தை விடமுடியுமா? பதில், முடியாது. ஏனெனில் அவனிடம்நான் செய்கிறேன்எனும் கர்த்ருத்வம்(कर्तृत्वम्) இருப்பதால் அவனால் அதை நேரடியாக செய்ய முடியாது. அவன் சமபுத்தியினால் ராகத்வேஷத்தை அடக்கியதால் அவற்றிலிருந்து விடுதலை அடையலாம். எனில் இந்தக் கருத்தை எப்படிப் புரிந்து கொள்ளலாம்? கர்மயோகத்தில் ஈடுபடும் ஒருவனுக்கு ஞானம் தொலைவில் இல்லை. சங்கரர் தனது உரையில், ‘ஸத்வ சுத்தி ஞான த்வாரேனஎன குறிப்பிடுகிறார். சமபுத்தியுடன் கர்மத்தை செய்பவன் மனத்தூய்மை அடைவதால் அவன் ஞானத்தை அடையும் தகுதியை அடைகிறான். ஆத்ம ஞானத்தை அடைவதன் மூலம் அவன் புண்ணிய பாபத்தை கடக்கிறான். கர்மயோகம் ஞானத்திற்கான படிநிலை ஆகையால் நீ கர்மயோகத்தைச் சார்ந்திரு(யோகா3 யுஜ்யஸ்வ) என்கிறார் பகவான்

கர்மத்தினால் ஜீவர்கள் பந்தப்படுகிறார்கள். செயல் முடிந்தாலும், அதைப் பற்றிய ராகத்வேஷத்தை அச்செயலானது பதிய வைக்கிறது. இந்த விருப்பு வெறுப்பு ஒருவனை மீண்டும் செயலில் ஈடுபடுத்துகிறது. இந்த சுழற்சி தொடர்கிறது. ஆனால் கர்மயோகி சுயநல எண்ணமில்லாமல் கர்மத்தில் ஈடுபடுவதால் விருப்பு வெறுப்பிலிருந்து விடுதலை அடைகிறான். பந்தத்தை கொடுக்கும் அதே கர்மம் இவனது சமத்துவ பாவனையினால் ராகத்வேஷத்தை நீக்குகிறது. இதுவே திறமையுடன் செயல் புரிவதாகும்(கர்மஸு கௌச1லம்). 


சுவாமி விவேகானந்தர் :

சிதறடையும் சிந்தையுடைய யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் பழகுகிறான் என்று வைத்துக்கொள்வோம். செருப்புத் தைக்கும் சக்கிலியன் ஒருவன் கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு ஒருமை மனதாகத் தன் தொழிலைத் திறம்படச் செய்கிறான் என்றும் வைத்துக் கொள்வோம். இவ்விருவருள் மனபரிபாகத்தில் அல்லது கர்மயோகத்தில் சக்கிலியனே சிறந்தவன்.

-------------------------------------------------------------------------------------------------------------

।।2.51।। திறம்படச் செய்யும் வினைகளுக்குள் தலைசிறந்த வினை:

कर्मजं बुद्धियुक्ताहि फलं त्यक्त्वा मनीषिण:

जन्मबन्धविनिर्मुक्ता: पदं गच्छन्त्यनामयम् ।। ५१

கர்மஜம் பு3த்3தி4யுக்தா ஹி 2லம் த்யக்த்வா மநீஷிண:

ஜந்மப3ந்த4விநிர்முக்தா: பத3ம் 3ச்ச2ந்த்யநாமயம் ।। 51


बुद्धियुक्ता:   பு3த்3தி4யுக்தா: கர்மயோகியாக இருப்பவர்கள்(சம புத்தியுடையவர்கள்)   

मनीषिण:   மநீஷிண: ஞானிகள்   कर्मजं फलं   கர்மஜம் 2லம்    கர்மத்திலிருந்து தோன்றிய பலனை   

त्यक्त्वा   த்யக்த்வா  தியாகம் செய்து   जन्मबन्धविनिर्मुक्ता:  ஜந்மப3ந்த4விநிர்முக்தா:  ஜென்மம் என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு    अनामयम् அநாமயம்   துன்பமற்ற   पदं   பத3ம்   நிலையை     हि  ஹி   நிச்சயமாக      गच्छन्ति   3ச்ச2ந்தி  அடைகிறார்கள்.


நடுவு நிற்கும் ஞானிகள் கர்மத்திலிருந்து தோன்றிய பலனை தியாகம் செய்து, ஜென்மம் என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு, கேடில்லாப் பெரு நிலையடைகிறார்கள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.


விளக்கம்:

=> கர்ம யோக பலன்:

கர்மத்தின் பலனில் விருப்பு வெறுப்பின்றி, சம புத்தியுடன் கர்மயோகியாக இருப்பவன், காலப்போக்கில் விவேகத்தை அடைகின்றான். இப்படிப்பட்ட தகுதியுடன் கூடிய ஒருவன், ஆத்ம ஞானமடைந்து மநீஷிண: அல்லது ஞானி ஆகின்றான். பின்னர் ஜென்மம் எனும் பந்தத்திலிருந்து விடுபடுகின்றான் (ஜந்மப3ந்த4விநிர்முக்தா:). பந்தத்திலிருந்து விடுதலை என்பது மரணத்திற்கு பின் அல்ல, வாழும் போதே நிகழ்கிறது என சங்கரர் இங்கு தெளிவுபடுத்துகிறார்.

கஷ்டமான நிலை அல்லது பிரச்சினை ஆமய(अामय) எனப்படும். சங்கரர் அநாமயம் என்பதற்கு सर्व उपद्रव रहित-அனைத்துவித பிரச்சினைகளிலிருந்து விடுதலை என பொருள் கூறுகிறார். தன்னை ப்ரம்மன் என அறிந்த ஞானி, எல்லா பந்தத்திலிருந்தும் விடுதலை அடைந்து வாழும் போதே துன்பமற்ற நிலையை அடைகின்றான் (அநாமயம் பத3ம் 3ச்ச2ந்தி).

துன்பத்திற்கு ஏதுவாக, பிறவிக்கு வித்தாயிருக்கும் இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாகவும், பிறப்பற்ற பெருநிலையாகவும் செய்துகொள்கிறான் கர்மயோகி. மனிதனைக் கட்ட வந்த கர்மத்தை எடுத்து முக்தி மார்க்கமாக மாற்றுகிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

அநித்தியத்தைக் கொண்டு நித்தியத்தை அடைக.


-------------------------------------------------------------------------------------

।।2.52।। கர்மயோகப் பலனுக்கான அடையாளம்:

यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति

तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य ।। ५२

யதா3 தே மோஹகலிலம் பு3த்3தி4ர்வ்யதிதரிஷ்யதி

ததா3 3ந்தாஸி நிர்வேத3ம் ச்1ரோதவ்யஸ்ய ச்1ருதஸ்ய ।। 52


यदा   யதா3  எப்பொழுது    ते  தே உன்னுடைய    बुद्धि:  பு3த்3தி4:   புத்தியானது     

मोहकलिलं   மோஹகலிலம்   அவிவேகம்(மயக்கம்) என்னும் அழுக்கை   

व्यतितरिष्यति  வ்யதிதரிஷ்யதி கடந்து செல்லுமோ  तदा  ததா3  அப்பொழுது   

श्रोतव्यस्य ச்1ரோதவ்யஸ்ய  கேட்கப் போகிற விஷயத்திலும்   श्रुतस्य   ச்1ருதஸ்ய   கேட்டதிலும்     

निर्वेदं   நிர்வேத3ம்   வைராக்யம்(பற்றின்மையை)     गन्तासि   3ந்தாஸி   அடைவாய்.


உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கை கடக்குமோ அப்பொழுது கேட்கப் போவதிலும் கேட்டதிலும் பற்றின்மையைப் பெறுவாய்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.


விளக்கம்:








(1) கர்மயோகப்படி வாழ்வதன் முதல் பலனாக புத்தியிலுள்ள மோஹம் சென்றுவிடும். புத்தியின் சுபாவம், எது தர்மம் - அதர்மம்? எது உண்மை - பொய்? என பிரித்துப் பார்த்தல் மற்றும் தீர்மானம் செய்தல். ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகம்(மோஹம்) ஆகும்.

மோஹத்தை பின்வருமாறு விளக்கலாம்

* நன்மையை(ஹிதம்) தீமை(அஹிதம்) என்றும், நன்மை  

            அல்லாததை நன்மை என்றும் புரிந்து கொள்ளுதல்.

* ஆத்ம அனாத்ம விபரீத ஞானம் - நிலையானதை(ஆத்மா)      

            நிலையற்றதாக(அனாத்மா) புரிந்து கொள்ளுதல்.

பணம், பதவி முதலிய சாதனையை, சாத்யமாக எடுத்துக்  

             கொள்ளுதல்.

மோஹம் நீங்கினால் விவேகம் வெளிப்படும்.


(2) கர்மயோகத்தின் இரண்டாவதான பலன் வைராக்யம்.

விருப்பு(राग:) என்பது பற்று, ஒட்டிக் கொள்ளுதல், சார்ந்து இருத்தல். மனதிலுள்ள பற்றை நீக்குதல் வைராக்யம்

வைராக்யம் என்பது செயல்(action) அல்ல. உலகப் பொருட்களைக் குறித்து மனதிலுள்ள ஒருவித பாவனை. பாவனையை பலனாக அடையலாமே தவிர அதை தேர்ந்தெடுத்து செயல்படுத்த முடியாது. எந்த ஒரு பொருளையும் நமது போகத்திற்கு, இன்பத்திற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என எண்ணும் போக்கு வைராக்யத்திற்கு எதிரான பாவனை. இதை துறத்தல் வைராக்யம் எனப்படும். ஒரு பொருளை நமது சிற்றின்பத்திற்கு உரியதாக பார்க்காமல் அது பகவானால் படைக்கப்பட்டது என்ற பாவனையுடன் போக(भोग) புத்தியை துறத்தல் வைராக்யம் - வியவகாரத்திற்காக(transaction) பார்க்கலாம், கேட்கலாம், சாப்பிடலாம்; ஆனால் அதை இன்பத்திற்காக செய்யாமலிருத்தல் வைராக்யம். உண்மையில் ஒரு பொருளின் மீதுள்ள போகத்தை துறத்தல் என்பது அதிலிருந்து வரும் துக்கத்தை துறத்தலாகும்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் 

அதனின் அதனின் இலன்    -    திருக்குறள்.

-------------------------------------------------------------------------------------