||18.65|| பகவான் புகட்டும் நலன் யாது?
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ।। ६५ ।।
மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே ।। 65 ।।
मन्मना: மந்மநா: என்னிடம் மனம் வைத்தவனாய் मद्भक्त: மத்3ப4க்த: என்னிடம் பக்தி வைத்தவனாய் मद्याजी மத்3யாஜீ என்னை ஆராதிப்பவனாய் भव ப4வ ஆவாய் मां மாம் என்னை नमस्कुरु நமஸ்குரு நமஸ்காரம் செய் माम् एव மாம் ஏவ என்னையே एष्यसि ஏஷ்யஸி அடைவாய் ते தே உனக்கு सत्यं ஸத்யம் உண்மையாக प्रतिजाने ப்ரதிஜாநே உறுதி கூறுகிறேன் मे प्रिय: असि மே ப்ரிய: அஸி எனக்கு பிரியமானவனாக இருக்கிறாய்.
என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திடுவாய். என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்கு பிரியமானவன் நீ.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே. உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் கர்மயோகத்தின் சாராம்சம் பகரப்படுகிறது.
=> கர்மயோக சாரம்:
(1) எனக்காகவே அனைத்து கர்மங்களையும் செய்வாயாக — மத்3யாஜீ. ‘யாஜீ’ எனில் யாகம் செய்பவன். கர்மயோகியிடமிருந்து உருவாகிற அனைத்து கர்மங்களும் ஈஷ்வரனுக்காகவே இருக்கிறது. அவனது சடங்குகள், யாகங்கள் மற்றும் அனைத்துக் கர்மங்களும் இறைவனுக்காக மட்டுமே செய்யப்படும்போது அவன் ‘மத்3யாஜீ’ எனப்படுகிறான்.
(2) என்னையே மனதில் நினைத்திரு — மந்மநா:. பரமேஷ்வரனையே இலக்காகக் கொண்டவனாக இருப்பவன் கர்மயோகி. அதாவது மோக்ஷத்தை புருஷார்த்தமாகக் கொண்டிருப்பவன்.
(3) என்மீது பக்தி கொண்டிரு — மத்3ப4க்த:. அவனது பக்தியும் அர்ப்பணிப்பும் ஈஷ்வரனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கின்றன. உணர்ச்சி ரீதியாகவும் இறைவனையே சார்ந்திருப்பவன் பக்தனாகிறான்.
(4) என்னை வணங்கு — மாம் நமஸ்குரு. ஈஷ்வரனையே அவனது புகலிடமாகவும், சரணாகதியின் மையமாகவும், ஒரே ஆதாரமாகவும் கொண்டவன். சரணடைதல் என்பது இறையின் மீதான சிரத்தையை ஆதாரமாகக் கொண்டு அஹங்காரத்தை பலகீனப்படுத்துவது ஆகும்.
=> கர்மயோகப் பலன்:
இத்தகைய நிலை கைகூடும்போது, ‘நீ என்னையே வந்தடைவாய் — மாம் ஏவ ஏஷ்யஸி’ என்று கிருஷ்ணர் இங்கு உறுதிமொழி அளிக்கிறார். நான் உனக்கு சத்தியமாக உறுதியளிக்கிறேன் — ஸத்யம் தே ப்ரதிஜாநே. சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார்.
வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி(சாதனம்). ஊரை அடைவது குறி(சாத்யம்). கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே; சாதனமும் சாத்யமும் ஒன்றே. ஈஷ்வரனைத் துணையாகக் கொண்டு ஈஷ்வரனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் எப்போதும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நமது பண்படாத மனம் நிற்கிறது. பல ஜென்மங்களில் வேறு பல காரியங்களுக்கு அந்த மனது உதவி வந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது நிலையில்லாப் பொருள்களை நாடி நின்றது. ஆனால் இறைவனை அடைவதற்கான கருவியாக மனம் அமைவது அவசியம். ஈசனுக்கான இடமாக உள்ளம் வைக்கப்பட வேண்டும்; மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாகும். இறையின் மீது பக்தி செலுத்துமளவு மனமானது உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக அவன் இறைவனுக்கு இடையறாது நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அதுபோல இத்தகைய மனப்பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார். ஒன்பதாவது அத்தியாயத்தில்(9.31) என்னுடைய பக்தன் அழிவதில்லை — ந மே ப4க்த: ப்ரணச்1யதி, என்பதைப் பிரகடனம் செய்யும்படி அர்ஜுனனிடம் கூறினார். இங்கு அவரே அப்பேருரையைப் பகரவும் செய்கிறார்.
=> கர்மயோகி:
கர்மம் என்பது பலதரப்பட்ட காரியங்களுக்காக உள்ளது. ஆனால் கர்மயோகம் என்பது ஞானத்தின் பொருட்டு தேவைப்படுகிற அந்தக்கரண-சுத்தியை அடைகிற ஒரே ஒரு காரியத்திற்காக மட்டுமே உள்ளது. கர்மயோகிக்கு தனது வாழ்க்கையின் நோக்கம்(புருஷார்த்தம்) குறித்த எந்தவொரு குழப்பமும் இல்லை. ஈஷ்வரனுடனான தனது ஐக்கியத்தை கண்டறிவதைத் தவிர வேறெதுவும் தனது பிரச்சினையைத் தீர்க்காது என்பதை அவன் அறிவான். எந்த ஜீவனும் இதைவிடக் குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான், ஏனெனில் மற்றவை எதுவும் அவனுக்கு தேவையான பலனை அளிக்கப் போவதில்லை. அவன் எதைச் செய்தாலும், மேலும் தொடர்ந்து எதையோ தேடுபவனாகவே இருப்பான். அந்த தேடல் முடிவடைவது எப்போது? அவனது தனிமையுணர்வு கைவிடப்படும்போதுதான் அது நிகழும். ‘நானே அனைத்துமாக இருக்கிறேன்’ என்பதை உணர்வதன் மூலமே அது சாத்தியப்படும். அதுவரை, எந்தவொரு ஜீவனும் திருப்தியுடன் ஓய்வெடுக்க முடியாது என்பதால் ஈஷ்வரனே அவனது இறுதி இலக்கு.
ஆகவே கிருஷ்ணர், ‘நீ என்னையே வந்தடைவாய் — மாம் ஏவ ஏஷ்யஸி’ என்கிறார். இங்கு கூறப்படும் இந்த பிரிவின்மை அல்லது ஏகமாதல் என்பது உருவாக்கப்பட்ட ஒன்றல்ல; அது கண்டறியப்பட வேண்டிய ஒன்றாகும். செயற்கையாக உருவாக்கப்படுகிற எந்தவொரு சேர்த்தலும், மரணம் அல்லது ஏதேனுமொரு காரணத்தினால் ஒருகாலத்தில் பிரிவில் முடிவடையும். ஏதேனும் ஒரு வகையான சிதைவுச் செயல்முறை அந்தப் பிரிவை நிகழச் செய்யும். ஆனால் இங்கே, இந்த ஒற்றுமை என்பது ஏற்கனவே முழுமையாக நிலைபெற்றுள்ளது. ஆத்மாவே ப்ரம்மம் — ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்ம. அதுவே பிரக்ஞையுணர்வின் ஒரே மூலமாக உள்ளது. அது அறிபவன், அறியப்படுபொருள் அல்லது அறிதற்கான கருவி ஆகியவற்றுள் ஒன்றல்ல. மாறாக, அம்மூன்றிலும் பொதுவாகவும், அம்மூன்றிற்கும் அடிப்படையாகவும், அம்மூன்றிலும் மாறாமல் திகழும் உணர்வாகவும் அந்த ஆத்மாவே இருக்கிறது. ஏற்கனவே நிலைபெற்றுள்ள இந்த ஒற்றுமையை உணர்வதே மோக்ஷம் என்றும், அல்லது ஈஷ்வரனை அடைதல் என்றும் அழைக்கப்படுகிறது.
=> உறுதிமொழி:
இங்கே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நீ என்னையே அடைவாய் என்று வாக்குறுதி அளிக்கிறார் — ஸத்யம் தே ப்ரதிஜாநே. இப்படிப்பட்ட உறுதிமொழியை பகவான் அளிக்க முடிவதற்கான காரணம் என்ன? உண்மையில் அவரே நீங்களாக இருப்பதால் உங்களால் அவரைத் தவறவிட முடியாது என்பதால் அவரால் அத்தகைய வாக்குறுதியை அளிக்க முடிகிறது. பகவான் இங்கு சொல்வதைப் பின்பற்றினால் நீங்கள் அவரை அடைவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனதைத் தயார்படுத்தி, ஞானத்தை தேடுவது மட்டுமே ஆகும். அப்போது மோக்ஷம் என்பது அங்கு தவிர்க்க முடியாததொரு விளைவாகக் கிட்டும். மேலும் அந்தக்கரண-சுத்தியைத் தவறவிடுவதற்கான கேள்விக்கே இடமில்லை ஏனெனில் ஈஷ்வரன் மீதான பக்தி ராக-த்வேஷங்களைக் கவனித்துக் கொள்ளும். கர்மயோகத்தில் நீங்கள் ஒரு செயலை விருப்பப்படி என்றல்லாமல் கடமைப்படி செய்வதாலும், அதை பக்தியுடன் செய்வதாலும் விருப்பு-வெறுப்புகள் நடுநிலையாக்கப்படுகின்றன. இதனால் மனத்தூய்மை நிகழும்; மோக்ஷமும் வெகு தொலைவிலிருக்காது. ஆகையினால், ஞானத்தேடல் என்பது கர்மயோக வாழ்வின் ஒரு பகுதியாகும். ராக-த்வேஷங்களின் பிடியிலிருந்து மனம் விடுபடும்போது ஞானத்தின் தெளிவு அதிகரிக்கிறது. ஈஷ்வரனிடம் பக்தி கொண்டவனுக்கு இந்த முடிவு உறுதியானது. ஈஷ்வரனே அடையப்பட வேண்டிய இலக்கு; மேலும் அவருடனான எனது ஐக்கியத்தை நான் உணர்ந்துகொள்ள உதவும் அருளும் அவருடையதே ஆகும்.
அர்ஜுனனுக்குள் சிரத்தையை உருவாக்கும் பொருட்டு இந்த உறுதிமொழியை பகவான் அளித்து, அதற்கான காரணத்தை கூறுகிறார், நீ எனக்குப் பிரியமானவன் — மே ப்ரிய: அஸி. உண்மையில் ‘நீ எனக்குப் பிரியமானவன்’ என்பதை ஒரு மகாவாக்கியம் எனலாம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குவதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈஷ்வரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ளவேண்டும்.
————————————————————————————————