சனி, 18 ஜூலை, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.45 - 18.46

||18.45|| கர்மயோக சாரம்:

स्वे स्वे कर्मण्यभिरत: संसिद्धिं लभते नर: ।

स्वकर्मनिरत: सिद्धिं यथा विन्दति तच्छृणु ।। ४५ ।। 

ஸ்வே ஸ்வே கர்மண்யபி4ரத: ஸம்ஸித்3தி4ம் லப4தே நர: ।

ஸ்வகர்மநிரத: ஸித்3தி4ம் யதா2 விந்த3தி தச்ச்2ருணு ।। 45 ।।


स्वे स्वे कर्मणि  ஸ்வே ஸ்வே கர்மணி  அவனவனுக்குரிய கர்மத்தில்     

अभिरत:  அபி4ரத:  இன்புறுகின்ற     नर:  நர:  மனிதன்     संसिद्धिं  ஸம்ஸித்3தி4ம்  மனத்தூய்மையை     लभते  லப4தே  அடைகிறான்     स्वकर्म निरत:  ஸ்வகர்ம நிரத:  தன் கர்மத்தில் கருத்து வைப்பவன்     यथा  யதா2  எப்படி      सिद्धिं  ஸித்3தி4ம்  பரிபூரணத் தன்மையை     विन्दति  விந்த3தி  அடைகிறான்     तत्  தத்  அதை    शृणु  ச்1ருணு  கேள்.


அவனவனுக்குரிய கர்மத்தில் இன்புறுகின்ற மனிதன் மனத்தூய்மையை அடைகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி பரிபூரணத் தன்மையை அடைகிறான் என்பதைச் சொல்லக்கேள்.   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

தனக்கு, தனக்குரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தி யடைகிறானென்பதை சொல்லுகிறேன், கேள்.


விளக்கம்:

இந்த இரு சுலோகத்தில் பகவான் கர்மயோகத்தின் சாரத்தை அளிக்கிறார். தேர்ந்தெடுக்கின்ற வாய்ப்புள்ள இடத்தில்தான் பாப புண்ணியத்திற்கு வாய்ப்புள்ளது. அவ் வாய்ப்பு இல்லாத இடத்தில் சரி-தவறு இல்லை; ஆகவே பாப புண்ணியம் இல்லை. நமது சுபாவத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்படவில்லை, ஆனால் செய்கின்ற கர்மத்தை எவ்விதம் செய்யலாம் எனும் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சுபாவப்படி அமையப்பெற்ற அவரவர்களின் கர்மத்தை ஒரு குறிப்பிட்ட பாவனையுடன் செய்கிறபோது அது மனப்பரிபாகத்தை அளிக்கின்றது. இதுவே கர்மயோகம் ஆகும். கோயிலில் துப்புறவு செய்பவனாக இருந்தாலும் சரி, அல்லது பூஜை செய்பவனாக இருந்தாலும் சரி, சரியான பாவனையுடன் அந்த கர்மம் செய்யப்படும்போது அவர்கள் இருவரும் அடையக்கூடிய மனத்தூய்மை என்பது ஒன்றே ஆகும். எனவே யாரையும் பார்த்து பொறாமைப்படவோ, அல்லது இழிவாக நினைக்கவோ தேவையில்லை. அந்த குறிப்பிட்ட சூழலில், அந்த குறிப்பிட்ட இயல்புடன் பிறந்துள்ளதால் அவர்கள் அந்த கர்மத்தைச் செய்கிறார்கள். ‘அவரவர்களின் இயல்பினால் அமைந்த கர்மத்தை கர்மயோகமாகச் செய்யும்போது கிடைப்பது சித்த-சுத்தி எனும் பொதுப்பலன்’, என்பதை பகவான் இங்கு கூறுகிறார். எனவே பாவனையே இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.


=> கடமையில் ஈடுபாடு:

அபி4ரதி’ என்பதை சங்கரர் ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்று எடுத்துக் கொள்கிறார். ‘ஸ்வே ஸ்வே கர்மணி அபி4ரத: நர:’ என்பது தனது சொந்தக் கடமைகளை முழு ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்கிற ஒருவனை குறிக்கிறது. தான் செய்ய வேண்டியதை அர்ப்பணிப்புடன் செய்வதன் மூலம் கிடைக்கும் திருப்தியை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அதை செய்வதில் உண்மையாகவே அவன் மகிழ்ச்சியை அடைகிறான். மற்றவர்களின் வேலையைச் செய்ய விரும்புவதோ, அல்லது அதை செய்தால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேன் என்கிற ஏக்கத்தை அடைவதோ கிடையாது. அப்படிப்பட்டவன் இயல்பாகவே மனத்தூய்மையை அடைகிறான் — ஸம்ஸித்3தி4ம் லப4தே. இங்கு ‘ஸம்ஸித்3தி4’ எனும் சொல் மோக்ஷத்தை குறிப்பதாக இருக்க முடியாது, ஏனெனில் இதில் கர்மம் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும் ஆத்ம ஞானத்தைப் பெறுபவன் மட்டுமே மோக்ஷத்தை அடைகிறான்.


=> மனபரிபாகம்:

ஒரு மனிதனுக்கு வெற்றி என்பது எது? மன முதிர்ச்சியடைந்த ஒருவனாக இருப்பதே வெற்றியில் முதலாவதாக இருக்கமுடியும். நாற்பத்தைந்து வயதுடைய ஒருவன் தனது பலூன் வெடித்துவிட்டதற்காக அழுகிறான் எனில் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? இது வேடிக்கையாகத் தெரிந்தாலும் உண்மையில் நம் அனைவருக்குள்ளும் இது போன்ற ஒரு குழந்தைத்தனம் இருக்கிறது. அது பலூனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு இணையான வெவ்வேறு விஷயங்கள் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கின்றன. மன பரிபாகத்தை அடைந்த ஒருவன் எல்லா கர்மங்களையும் ஒன்றாகவே பார்க்கிறான். தான் செய்துகொண்டிருக்கிற வேலையை விட வேறு ஏதேனும் ஒரு வேலை சிறந்தது என்கிற எண்ணம் அவனுக்கு வருவதில்லை. ஏனென்றால் எந்தவொரு கர்மமும் மூன்று குணங்களைக் கொண்டது(த்ரிகு3ணாத்மிக), எனவே அது பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டது. கர்மத்தின் இந்த இயல்பான குறைபாட்டிலிருந்து தப்பிக்க வழியில்லை. மேலும் கர்மத்தை மாற்றுவதினால், ஒருவனுடைய மனமானது மாற்றத்தையோ முதிர்ச்சியையோ அடைந்து விடப்போவதில்லை. இறுதியாகச் சொல்வதானால், பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் என எந்த வேலையிலும் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனதிலுள்ள மாசு கர்மத்தில் மாசு படிந்திருப்பதைப் போல காட்சி அளிக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாகச் செய்யும்போது மன முதிர்ச்சியை அடையலாம். ஆத்ம சாதகன் பரிபக்குவம் அடைதற்கு ஸ்வகர்மத்தை(சுயகர்மம்) மாற்றவேண்டிய அவசியமில்லை. எனவே, தனது கர்மத்தை கருத்துடன் செய்பவன் எவ்விதம் மனப்பக்குவத்தை அடைகிறான் எனும் முறையை சொல்கிறேன் கேள் — ஸ்வகர்ம நிரத: யதா2 ஸித்3தி4ம் விந்த3தி, எனக் கூறி அதை அடுத்த சுலோகத்தில் விளக்குகிறார் பகவான். ————————————————————————————————

||18.46|| கர்மயோகத்தின் சாரம்:

यत: प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।

स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानव: ।। ४६ ।।

யத: ப்ரவ்ருத்திர்பூ4தாநாம் யேந ஸர்வமித3ம் ததம் ।

ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ: ।। 46 ।।


यत:  யத:  யாரிடமிருந்து      भूतानां प्रवृत्ति:  பூ4தாநாம் ப்ரவ்ருத்தி:  உயிர்கள் தோன்றுகின்றனவோ      येन  யேந  யாரால்      सर्वम् इदं  ஸர்வம் இத3ம்  இந்த பிரபஞ்சம் அனைத்தும்      ततम्  ததம்  வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ   मानव:  மாநவ:  மனிதன்      स्वकर्मणा  ஸ்வகர்மணா  ஸ்வகர்மத்தால்      तम्  தம்  அவரை    अभ्यर्च्य  அப்4யர்ச்ய  அர்ச்சித்து     

सिद्धिं  ஸித்3தி4ம்  சித்தியை       विन्दति  விந்த3தி  அடைகிறான். 


யாரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகமெல்லாம் வியாபிக்கப்படுள்ளதோ அவ் ஈஷ்வரனை சுயகர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை எய்துகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாய், இவ்வையகமனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் ஈஷ்வர லக்ஷணம், கர்மயோக சாரம், கர்மயோக பலன் பேசப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈஷ்வரனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என எதுவுமில்லை. ஒவ்வொரு ஜீவனும் அவனவனது தொழிலை முறையாகச் செய்வதன் மூலம் பிரக்ருதியின் நடைமுறைக்கு துணைபுரிகிறான். ஆகையால் அறிவுடைய மனிதனானவன் தான் எக்கர்மத்தை நன்றாகச் செய்ய முடியுமோ அதை ஈஷ்வர ஆராதனையாகச் செய்யவேண்டும். இதுவே கர்மயோகம் ஆகும். அதன்மூலம் அவனது மனம் பக்குவத்தை அடைகிறது. ஞானத்தைப் பெறுவதற்கும் ஈஷ்வரனை அடைவதற்கும் அந்த கர்மம் சாதனமாக ஆகிறது.  


=> முழு படைப்பு:

இங்கு ‘ப்ரவ்ருத்தி’ எனும் சொல் படைப்பை அல்லது தோற்றத்தைக் குறிக்கிறது. ‘யாரிடமிருந்து(யத:) அனைத்து உயிரினங்களையும் பூதங்களையும் கொண்ட இந்த முழு படைப்பும் தோன்றியுள்ளதோ’ என இங்கு கூறப்படுகிறது. இது படைப்பு காரணத்தை, அதாவது ஈஷ்வரனைக் குறிக்கிறது. 

‘ஈஷ்வரனிடமிருந்து உயிரினங்கள் தோன்றியுள்ளன’ எனச் சொல்லும்போது, ​​இங்கே ஒரு சிக்கல் எழுகிறது. உயிரினங்கள், அதாவது ஜீவர்கள் பிறக்கின்றன என்று சொன்னால், அவற்றுக்கு ஒரு ஆரம்பம் உண்டு. ஆனால், ஜீவன் ஆரம்பமற்ற, அனாதியான ஈஷ்வரனிடமிருந்து வேறானதாக இல்லை எனும்போது, அந்த ஜீவன் எப்படி பிறக்க முடியும்? இது உண்மைதான். ஆரம்பமற்ற ஒரு ஜீவன் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஜீவன் ஆரம்பமற்றது, அனாதியானது, மற்றும் ஈஷ்வரனுடன் ஒன்றானது என்ற உண்மையை ஒருவன் கண்டறிய வேண்டும். அந்த வேற்றுமையின்மை உணரப்படும் வரை, ஜீவனுக்கும் ஈஷ்வரனுக்கும் இடையே ஒரு தோற்றப் பிழை போன்றதான வேறுபாடு காணப்படுகிறது. இதையே நாம் மித்யா என்றழைக்கிறோம். இதனால் அந்த ஜீவன் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பிறவி எடுத்ததுபோலத் தோன்றுகிறது. அப்படியானால் என்ன உருவாக்கப்படுகிறது? ஒருவனது உடல்-மனம்-புலனுணர்வுத் தொகுப்பு உருவாகிறது. அது ஆகாசம், காற்று, நீர், நெருப்பு, பூமி ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது. எனவே இங்கு ‘பூ4தாநாம்’ எனும் சொல் ஜீவராசிகள் மற்றும் ஐந்து பூதங்கள் என இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். 

=> மூலகாரணம்:

பொதுவாக காரியம் ஒன்று உருவாக இரு காரணங்கள் பேசப்படுகின்றது — நிமித்த காரணம் மற்றும் உபாதான காரணம். நிமித்த காரணம் என்பது செயல் செய்பவனை, செயல் செய்வதற்கான அறிவைக் குறிக்கிறது. உபாதான காரணம் என்பது அதற்கான பொருள்-காரணத்தை குறிக்கிறது. உதாரணமாக பானை என்கிற ஒரு காரியம்(விளைவு) உருவாக, குயவன் நிமித்த காரணமாகவும் களிமண் பொருள்-காரணமாகவும் உள்ளது. இங்கு முன்வைக்கப்படும் பரம்பொருளான ஈஷ்வரன், படைப்பின் காரணகர்த்தா மட்டுமல்ல, அதன் மூலப்பொருளும்கூட. அதாவது ஈஷ்வரனே நிமித்த மற்றும் உபாதான காரணமாக உள்ளார் என இங்கு சொல்லப்படுகிறது.  எப்படி? ‘இவ்வுயிர்களனைத்தும் யாரிடமிருந்து உற்பத்தியாயினவோ’ — யத: ப்ரவ்ருத்தி: பூ4தாநாம், என்கிறது சுலோகம். இதில் ‘யத:’ எனும் சொல் யாரிடமிருந்து எனும் அர்த்தத்தைக் கொடுக்கிறது.   

இனியொரு வாக்கியமான ‘யாரால் இவைகளனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளதோ’ — யேந ஸர்வம் இத3ம் ததம், என்பது அனைத்தையும் வியாபித்திருக்கிற உபாதான காரணமாகவும் அவரே உள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. ‘யத்’ எனும் அதே பிரதிப்பெயர்ச்சொல்லை பயன்படுத்துவதன்மூலம், யாரிடமிருந்து இந்த பூதங்களால் ஆன முழுப்படைப்பும் தோன்றியதோ — யத:, அதே காரணத்தினால்தான் இவை அனைத்தும் வியாபிக்கப்பட்டிருக்கின்றன — யேந ததம், எனக் கூறப்படுகிறது. களிமண் எவ்விதம் பானையை வியாபித்துள்ளதோ அதுபோல இவ்வுயிர்கள் ஈஷ்வரனால் வியாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் பானை என்பது அதை உருவாக்கிய குயவனிலிருந்து வேறானது என்கிற சந்தேகம் எழலாம். இதற்கு உபநிஷத் சிலந்திப் பூச்சியை உதாரணமாகக் கொடுக்கிறது. எவ்விதம் சிலந்திப் பூச்சியின் வலைக்கு அதுவே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறதோ அவ்விதம் ஈஷ்வரன் இப் படைப்பின் இரு காரணமாகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட ஈஷ்வரனை தனது கடமையையே வழிபாடெனக் கொண்டு, அச் செயலை செய்யும்போது மனிதன் சித்தியை, அதாவது மனத்தூய்மையை அடைகிறான் — தம் ஸ்வகர்மணா அப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி.


=> சித்தி:

இங்கு சொல்லப்படுகிற முக்கியமான கருத்து என்னவென்றால், ஒருவன் தன் கடமையைச் சரியான மனப்பாங்குடன் செய்வதே ஈஷ்வர வழிபாடு ஆகும். பொதுவாக, ஆராதனை என்பது உடல், வாக்கு அல்லது மனம் மூலம் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட செயல் என்று கருதப்படுகிறது. உதாரணமாக மந்திரம் சொல்லுதல், பூ சமர்பித்தல், கடவுளின் நாமத்தை உச்சரித்தல் போன்ற செயல்களை ஆராதனை(அப்4யர்ச்ய) என்று நினைக்கிறோம். அவைகளும்கூட இறைவனுடன் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ளச் செய்யப்படுகிற செயல்கள்தான் என்றாலும், உண்மையான வழிபாடு என்பது சூழ்நிலைக்கேற்றபடி ஒருவன் தனக்குரிய கடமைகளைச் சரியான முறையில், சரியான நேரத்தில், சரியான பாவனையோடு செய்வதுதான் என்கிறார் பகவான். வருகிற எந்தவொரு விளைவையும் ஈஷ்வர பிரசாதமாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்புரிதலே ஈஷ்வரனை ஆராதிப்பதாகும். சரியான செயல் என்பது எப்போதும் மனநிறைவைத் தருகிறது, ஏனெனில் அது தர்மத்துடனும் கர்ம-நியதியுடனும் ஒத்திசைவாக இருக்கிறது. மாறாக தவறான செயல் மகிழ்ச்சியையும் அமைதியையும் நம்மிடமிருந்து எடுத்துவிடுகிறது. இவ்வாறு கர்மயோகமாகச் செயல்களைச் செய்யும்போது நமது விருப்பு-வெறுப்புகள் படிப்படியாகக் குறைகிறது. இறுதியில் நம்மை பந்தப்படுத்தாத, அதாவது நிறைவேறவில்லை எனினும் பரவாயில்லை என்கிற அளவில் இருக்கின்ற சில விருப்பங்கள் மட்டுமே மீதமாக இருக்கின்றன. 

ஒருவனின் விருப்பங்களும் வெறுப்புகளும் பந்தப்படுத்தாதவைகளாக ஆகும்போது, அவனுக்கு மனத்தூய்மை உண்டாகிறது. அதன்மூலமாக கர்மத்திலிருந்து முழுமையாக விடுவிக்கும் ஞானத்தை அவனால் பெற முடியும். மேலோட்டமாக ‘ஸித்3தி4’ என்பது வெற்றியைக் குறிக்கிறது. ஆன்மிக ரீதியான வெற்றி என்பது ஞானயோகத்திற்கு தகுதியான மனம், நற்பண்புகளைக் கொண்ட மனம், அதாவது மனத்தூய்மையைக் குறிக்கிறது. ஒருவன் தன் கடமைகளைச் செய்வதே ஈஷ்வர வழிபாடு என்று புரிந்துகொண்டால், அவன் அந்த வெற்றியைப்(ஸித்3தி4) பெறுகிறான் — முதலில் அந்தக்கரண-சுத்தியின் வடிவில் பெறுகிறான்; பின்னர் இறுதியில் ‘ஸித்3தி4’யை, அதாவது ஞான-வடிவிலான மோக்ஷத்தை நிறைநிலையை அடைகிறான். 

எனவே ஈஷ்வர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என பலர் எண்ணியிருக்கின்றனர். கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணத்தை கொண்டிருப்பர். ஒவ்வொரு செயலையும் ஈஷ்வர வழிபாடாகச் செய்ய முடியும். தருமவியாதன் எனும் இறைச்சிக் கடைக்காரன் தனது தொழிலை சமுதாய சேவையாகவும் தேவாராதனையாகவும் செய்தான். அவன் பரமஞானி ஆனான். அவன் கெளசிக முனிவருக்கு செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது. மகாபாரதத்தின் வன பருவத்தில் பாண்டவர்களின் வனவாச காலத்தில் இது வருகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக என்றல்லாமல், ஈஷ்வர ஆராதனையென்ற பாவனையுடன் செய்யப்படுகின்ற கர்மம் அவனை அதிவிரைவில் ஈசனிடம் அழைத்துச் செல்கிறது. உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.

————————————————————————————————