வியாழன், 19 மார்ச், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.7 - 18.9

||18.7|| தாமஸ சந்யாசம்: 

नियतस्य तु संन्यास: कर्मणो नोपपद्यते

मोहात्तस्य परित्यागस्तमस: परिकीर्तित: ।। ।। 

நியதஸ்ய து ஸம்ந்யாஸ: கர்மணோ நோபபத்3யதே

மோஹாத்தஸ்ய பரித்யாக3ஸ்தமஸ: பரிகீர்தித: ।। 7 ।।


तु  து  மேலும்    नियतस्य कर्मण:  நியதஸ்ய கர்மண:  நித்ய கர்மத்தினுடைய     

संन्यास:  ஸம்ந்யாஸ:  சந்யாஸமானது      उपपद्यते  உபபத்3யதே  பொருந்தாது     

मोहात्  மோஹாத்  மயக்கத்தால்      तस्य परित्याग:  தஸ்ய பரித்யாக3:  அதனுடைய துறவு      

तमस:  தமஸ:  தாமஸமானதென்று     परिकीर्तितபரிகீர்தித:  கூறப்பட்டுள்ளது.


மேலும் நித்ய கர்மத்தை விடுவது உகந்ததல்ல. அறிவின்மையால் அதைத் துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் தாமஸ சந்யாசத்தை பற்றிக் கூறுகிறார்


=> தாமஸ தியாகம்:

செய்துதான் ஆக வேண்டுமென்ற நித்ய கர்மங்களை அல்லது கடமைகளை சந்யாசம் செய்வது முறையானது அல்லநியதஸ்ய கர்மண: ஸம்ந்யாஸ: உபபத்3யதே, என்கிறார். அறியாமையில் இருக்கின்ற ஒருவன் ஏதேனும் ஒரு மயக்கத்தில் இவ்விதம் செய்வானாகில், அவனது மனத்தூய்மைக்கான வழிமுறையானது அவன் கையைவிட்டுப் போய்விடுகிறது. அது உகந்தது அல்ல. ஆகவேதான் மோஹத்தினால் உந்தப்பட்டு செய்யப்படுகிற சந்யாசம் தாமஸமான சந்யாசம் எனக் கூறப்படுகிறது. ‘மோஹஎன்பது இங்கு சரியான அறிவு இல்லாத தன்மையை, மனக்குழப்பத்தை, மயக்கத்தை, கற்பனையின் அல்லது ஏதேனுமொரு கவர்ச்சியின் பிடியிலிருப்பதைக் குறிக்கிறது. இதனால் எதைச் செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதில் குழப்பமான நிலை காணப்படுகிறது. இந்த மனநிலையினால் உந்தப்பட்டு செய்கிற கர்மத்தியாகம் முறையானது அல்ல. சோம்பலினால் கடமையைக் கைவிடுவதும் மற்றும் கவனக் குறைவினால் துறத்தலும் தாமஸ சந்யாசமெனப்படுகிறது.     

பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும். அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அந்த சோலையின் நித்ய கர்மமாகிறது. ஆனால் இந்த சோலையின் தியாகத்தை விரைவில் பயன்படுத்திவிட வேண்டுமென்று எண்ணிய அறிவிலி ஒருவன் காய்களை மரங்களிலிருந்து பிடுங்குகின்றான். அது பலவந்தத்தில் செய்த தியாகமாகிறது. அவ்விதம் பறிக்கப்பட்ட காய்கள் கனிவதற்கு பதிலாக வெம்பிப்போகிறது. இப்போது சுவையற்ற கனியும், முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாக ஆகிறது. அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.

மனிதனுடைய பக்குவத்திற்கு ஏற்றவாறு நித்ய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு நித்ய கர்மமாக இருக்கின்றது. ஆனால் விவேகிக்கு யக்ஞம், தானம், தவம் முதலியவைகள் நித்ய கர்மங்களாகின்றன. உடல் இருக்கின்ற வரை நித்ய கர்மம் நடைபெறவேண்டும். ஏனெனில் உடல் வாழ்வும், நித்ய கர்மமும் இணைபிரியாதவைகள். மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக் கொண்டே வருகிறது. அறிவின்மையினால் அது விடப்படும்போது அது கேட்டை உண்டாக்குகிறது. அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும், உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வர வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------

||18.8|| ராஜஸ சந்யாசம்:

दु:खमित्येव यत्कर्म कायक्लेश भयात्त्यजेत्

कृत्त्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ।। ।। 

து3:2மித்யேவ யத்கர்ம காயக்லேச1 4யாத்த்யஜேத்

க்ருத்வா ராஜஸம் த்யாக3ம் நைவ த்யாக32லம் லபே4த் ।। 8 ।।


दु:खम् इति एव  து3:2ம் இதி ஏவ  துக்கம் என்ற கருத்தாலே     

काय क्लेश भयात्  காய க்லேச1 4யாத்  உடலுக்கு வருத்தம் வருமென்கிற அச்சத்தால்     

यत् कर्म  யத் கர்ம எக்கர்மத்தை     त्यजेत्  த்யஜேத்  தியாகம் செய்கிறானோ     : :  அவன்       

राजसं त्यागं  ராஜஸம் த்யாக3ம்  தியாகம்      कृत्त्वा  க்ருத்வா  செய்து      त्याग फलं  த்யாக3 2லம்  தியாக பலத்தை(மோக்ஷத்தை)    एव लभेत्  ஏவ லபே4த்  அடைவதே இல்லை.


உடம்பின் வருத்தத்துக்கு அஞ்சி, கர்மத்தைத் துக்கமெனக் கருதி அதை விடுகிறவன் ராஜஸ தியாகம் செய்கிறான். அதனால் அவன் தியாக பலனை அடைவதேயில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற் பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ராஜஸ சந்யாசத்தை பகர்கிறார்


=> ராஜஸ தியாகம்:

உடலுக்கு கஷ்டம் வரும் என்கிற பயத்தினால் ஒருவன் கர்மத்தை துறப்பானாகில் அவன் ராஜஸ தியாகம் செய்தவனாகிறான்காய க்லேச1 4யாத் த்யஜேத். உலக கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும், சந்யாச ஆஸ்ரமம் எடுத்துக் கொண்டு பிறர் செய்கிற உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகமாக வாழலாம் என்றும் எண்ணி கர்மத்தை தியாகம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நோக்கத்துடன் செய்யப்படுகிற சந்யாசம் ராஜஸம் ஆகும். உடல் மீது அதிகப் பற்று உடையவர்கள் அவ்விதம் எண்ணுகிறார்கள். அந்த வகையாக துறவை மேற்கொள்ளும்போது அவன் அந்த தியாகத்திற்கானப் பலனை அடைவதில்லைத்யாக3 2லம் லபே4த்


=> தியாக பலன்:

ஒரு பொருளை அனுபவிக்கும்போது வருகிற சுகத்தைக் காட்டிலும் அதை தியாகம் செய்யும்போது உண்டாகிற வைராக்கிய சுகத்தில் 100 மடங்கு அதிக இன்பம் உள்ளது. ராஜஸ சந்யாசத்தில் அந்த வைராக்கிய சுகத்தை அவன் பெறுவதில்லை

மேலும் உண்மையான தியாகத்தினால் மனநிறைவு உண்டாகிறது. அதேபோல சித்த-சுத்தியையும், இறுதியாக மோக்ஷத்தையும் அது பலனாக அளிக்கிறது. ஆனால் உடல் துன்பத்தைத் தவிர்ப்பதற்காக, ஒருவன் அனைத்து கர்மங்களையும் கைவிட்டால், அவன் உண்மையில் சந்யாச வாழ்க்கையை வாழவில்லை, சோம்பலை அடிப்படையாகக் கொண்ட இலக்கற்ற வாழ்க்கையையே அவன் மேற்கொள்கிறான் என்பதால் நிச்சயமாக துறவின் பலனை அவன் பெறுவதில்லை. பள்ளிக்குச் செல்வது சிரமமென்று எண்ணி சிறுவன் ஒருவன் பள்ளி வாழ்க்கையைத் தியாகம் செய்வானாகில், அங்கு படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான். அதாவது நல்லறிவும் மேலான படிப்பும் உண்டாவதில்லை. எனவே பரிபூரணத்துடன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது. ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிடைப்பதில்லை

போர்க்களத்துக்கு யுத்த செய்வதற்காக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது. உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாம் என்கிற மனப்பான்மை உண்டாகிறது. வலிய வந்துள்ள அறப்போர்புரிவது க்ஷத்திரியனான அர்ஜுனனின் நித்ய கர்மமாகும். நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது. அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்திலிருந்து உண்டான தியாகம் ஆகும். எனவேதான் பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை

---------------------------------------------------------------------------------------------

||18.9|| சாத்விக சந்யாசம்:

कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन

सङ्गं त्यक्त्वा फलं चैव त्याग: सात्त्विको मत: ।। ।।  

கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந

சங்க3ம் த்யக்த்வா 2லம் சைவ த்யாக3 ஸாத்த்விகோ மத: ।। 9 ।।

 

अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா     सङ्गं  சங்க3ம்  பற்றுதலையும்    फलं एव  2லம் ஏவ  பலனையும்    त्यक्त्वा  த்யக்த்வா  தியாகம் செய்து     कार्यम् इति एव  கார்யம் இதி ஏவ  செய்யத்தக்கதே என்று     यत् नियतं कर्म  யத் நியதம் கர்ம  எந்த நித்ய கர்மம்       क्रियते  க்ரியதே  செய்யப்படுகிறதோ     

: त्याग:  : த்யாக3  அந்த தியாகமானது     सात्त्विक:  ஸாத்த்விக:  சாத்விகமானதென்று     

मत:  மத:  கருதப்படுகிறது.


அர்ஜுனா, பற்றுதலையும் பலனையும் விட்டு, செய்தற்குரியதென்றே எந்த நித்ய கர்மம் செய்யப்படுகிறதோ, அந்த தியாகம் சாத்விகமானதென்று கருதப்படுகிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நியமத்துக் கிணங்கிய செய்கையை, 'இது செய்தற்குரியது' என்னு மெண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் சாத்விக சந்யாசம் விளக்கப்படுகிறது


=> சாத்விக தியாகம்:

நியத கர்மஎன்பது சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட, கண்டிப்பாக செய்யப்பட வேண்டிய, வைதிக மற்றும் உலகியல் ரீதியான அனைத்து கடமைகளையும் குறிக்கிறது. இது போன்ற கடமைகள் எப்போது சாத்விகமாகிறது? ‘இது செய்யப்பட வேண்டும்கார்யம் இதிஎன்கிற ஒரு குறிப்பிட்ட மனப்பான்மையுடன் செய்யும்போது அது சாத்விகமானதாக ஆகிறது. அந்த-கரண-சுத்திக்காக என்பதையும்கூட எண்ணாமல் கட்டளைக்காகச் செய்யப்படுவது போல செய்தலை அது குறிக்கிறது

மேலும் அந்த கர்மத்தின் மீதான பற்றுதலை கைவிட்டு செய்தல் வேண்டும்சங்க3ம் த்யக்த்வா. பொதுவாக ஒரு செயலானது, ‘நான் இதைச் செய்கிறேன்என்ற சிந்தனையுடன் செய்யப்படுகிறது, இதனால் அது அஹங்காரத்துடன் தொடர்புடையதாகிறது. அதற்கு பதிலாக, ‘இது என்னால் செய்யப்பட வேண்டும்; எனவே நான் இதைச் செய்கிறேன்' என்று நினைக்கும்போது, ​​அங்கு சரணடைதல் நிகழ்கிறது. இந்த நேரத்தில், இந்த இடத்தில், இந்த செயல் அவசியம்; இது செய்யப்பட வேண்டும். இதில் எனக்கு வேறு வழியில்லை; இது ஈஷ்வரனுக்கான ஒரு காணிக்கையாக இருக்கட்டும். இந்த மனப்பான்மையுடன் செயலைச் செய்வது சாத்விக-தியாகம் எனப்படும்

மேலும், அதனுடன் பலனின் மீதான தியாக புத்தியும் இருத்தல் வேண்டும்2லம் த்யக்த்வா. அதாவது புண்ணியத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ அது செய்யப்படவில்லை. அந்த-கரண-சுத்திக்காகவும் ஈஷ்வரனின் அருளுக்காகவும் மட்டுமே செய்யும்போது அச்செயலின் பலன் தியாகம் செய்யப்பட்டதாகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த-கரண-சுத்திக்காக என்பதையும் கருத்தில் கொள்ளாமல், ஈஷ்வரனுக்காகவென சிரத்தையுடன் செய்யபடுகிற தியாகம் சாத்விகமாகிறது. இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சாத்விக-தியாகத்தில் கர்ம-பலன் தியாகம் செய்யப்படுகிறதே தவிர, கர்மம் கைவிடப்படுவதில்லை. ஆனால் தாமஸ தியாகத்திலும் ராஜஸ தியாகத்திலும் கர்மமே கைவிடப்படுகிறது. மோஹத்தினாலோ, கர்மத்தின் மீதான பயத்தின் காரணமாகவோ, அல்லது உடலுக்கு துன்பம் ஏற்பட்டுவிடும் என நினைத்தோ செய்ய வேண்டிய கடமையானது செய்யாமல் துறக்கப்படுகிறது. ஆனால் சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்று போவதில்லை.  


=> பலனை துறத்தல்

நித்ய கர்மங்களுக்கு பலன் உண்டு என்று சங்கரர் இங்கே கூறுகிறார். பகவானே அதை அவ்விதம் சொல்லியிருக்கிறார். பொதுவாக நித்ய-நைமித்திக-கர்மங்கள் எந்த பலனையும் தருவதில்லை, ஆனால் அவற்றைச் செய்யாவிட்டால் பாபம் உண்டாகிறது(அகரணே ப்ரத்யவாய) என்ற ஒரு கருத்து இருப்பதால் சங்கரர் தனது பாஷ்யத்தில் இதை நமக்கு நினைவூட்டுகிறார். இக்கூற்று உண்மையல்ல; நித்ய-நைமித்திக-கர்மங்கள் உட்பட அனைத்து கர்மங்களும் பலனைத் தருகின்றன; அதனால்தான் அவற்றை கைவிட முடியும். நித்ய-நைமித்திக-கர்மங்கள் புண்ணியத்தை உருவாக்குகின்றன, ஆனால் அந்த புண்ணியத்தை அடைவதற்காகச் செய்கிறேன் என்கிற விருப்பமோ சங்கல்பமோ இல்லாமல் செய்யப்படும்போது, அதாவது 2-த்யாகம் செய்யப்படும்போது அது மனத்தூய்மைக்கு வழிவகுக்கிறது.

=> சந்யாச வாழ்க்கை:

விவேக வைராக்கியத்தின் காரணமாக அனைத்து கர்மங்களையும் துறந்து, சந்யாச வாழ்க்கையை எடுத்துக் கொள்வதும் சாத்விக சந்யாசம் ஆகும்விவேக ஜந்ய வைராக்3 பூர்வக ஸந்யாஸம். நிலையாமை பற்றிய அறிவினால் உண்டான வைராக்கியத்திலிருந்து செய்யப்படுகிற சந்யாசம் இது. ஒருவன் தனது தகுதி மற்றும் மனப்பக்குவத்தை முழுமையாக உணர்ந்து துறத்தல் வேண்டும்

உண்மையில் இங்கு பகவான் சந்யாச வாழ்க்கைமுறையைப் பற்றிய விளக்கத்தை தரவில்லை. இந்த மூன்று சுலோகங்களிலும், துறத்தல் எனும் நோக்கில் எது தாமஸம், எது ராஜஸம் மற்றும் எது சாத்விகம் என்பதை எடுத்துரைத்தார். கர்ம-தியாகத்தை அல்ல, அவர் கர்ம-பல-தியாகத்தை சாத்விகமானது என புகழ்ந்தார். இதன் கருத்து என்னவென்றால், கர்மங்களைச் செய்து கொண்டே இருப்பதும், கர்ம-பலத்தை கைவிடுவதுமே சிறந்தது. இதன் மூலம் ஒருவன் அந்த-கரண-சுத்தியைப் பெறலாம். அப்படிப்பட்டவனுக்கு ஆத்மாவைப் பற்றிய தெளிவான அறிவு படிப்படியாக உண்டாகிறது.

---------------------------------------------------------------------------------------------