||17.24|| ‘ஓம்’ என்ற மந்திரத்தின் உபயோகம்:
तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतप: क्रिया: ।
प्रवर्तन्ते विधानोक्ता: सततं ब्रह्मवादिनाम् ।। २४ ।।
தஸ்மாதோ3மித்யுதா3ஹ்ருத்ய யக்ஞதா3நதப: க்ரியா: ।
ப்ரவர்தந்தே விதா4நோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதி3நாம் ।। 24 ।।
तस्मात् தஸ்மாத் ஆகையினால் ओं इति उदाहृत्य ஓம் இதி உதா3ஹ்ருத்ய ஓம் என்று உச்சரித்து ब्रह्मवादिनाम् ப்ரஹ்மவாதி3நாம் வேதமறிந்தவர்கள்
विधान-उक्ता: விதா4ந- உக்தா: சாஸ்திரம் உரைக்கும்
यज्ञदानतप: क्रिया: யக்ஞதா3நதப: க்ரியா: யக்ஞ தான தப கர்மங்களை
सततं ஸததம் எப்பொழுதும் प्रवर्तन्ते ப்ரவர்தந்தே தொடங்குகின்றனர்.
ஆகையினால் வேதமறிந்தவர்கள் சாஸ்திர விதிப்படி செய்யும் யக்ஞம், தானம், தவம் முதலிய கர்மங்களை எப்பொழுதும் ‘ஓம்’ என்று உச்சரித்து தொடங்குகின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் 'ஓம்' என்று தொடங்கி செய்யப்படுகின்றன.
விளக்கம்:
‘ஓம்’ எனும் சொல் எவ்விதத்திலெல்லாம் உபயோகப்படுத்தப்படுகின்றன என பகவான் இங்கு கூறுகிறார்.
ஒரு வேத சடங்கின் தொடக்கத்தில், ரித்விக்குகள் என்றழைக்கப்படுகிற வேதியர்கள், அதாவது வேள்வியை முன்நின்று நடத்துபவர்கள் ‘ஓம்’ என்று உச்சரித்த பின்னர்தான் வேள்வியைத் தொடங்குவார்கள். யக்ஞம், தானம், தவம் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்களில் அவற்றின் முழு செயல்திறனை உறுதிப்படுத்த முதலில் ‘ஓம்’ எனும் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சரியாகச் செய்யப்பட்டது போல இவைகளனைத்தையும் பயனுள்ளதாக்குகிறது.
ஆகையால் வேதமறிந்தவர்கள் வேத விதிப்படி செய்கிற யக்ஞ-தான-தவம் முதலிய கிரியைகளை ‘ஓம்’ என உச்சரித்துத் தொடங்குகின்றனர் — ப்ரஹ்மவாதி3நாம் ஓம் இதி உதா3ஹ்ருத்ய ப்ரவர்தந்தே. எப்போதெல்லாம் அவர்கள் அதை இவ்விதத்தில் தொடங்குகின்றனர்? ஏதேனும் ஒரு சில சமயங்களில் என்பதல்ல, எப்போதும் — ஸததம், அவர்கள் இவ்விதத்திலேயே தொடங்குகின்றனர். எந்த வேள்வியோ, சடங்கோ, மந்திரமோ அல்லது அர்ச்சனையோ எதுவாக இருப்பினும் அது எப்போதும் ‘ஓம்’ என்றே தொடங்கப்படுகிறது. ஏன்? ஓம் எனும் பிரணவம் எல்லாவற்றையும் சுத்திகரிக்கிறது. இது மிகவும் புனிதமான ஒலி, அதை வெறுமனே உச்சரிப்பதன் மூலம், பேச்சும்கூட சுத்திகரிக்கப்படுகிறது எனும்போது செயலும் அவ்விதமே தூய்மையானதாக ஆகி முழுமையை அடைகிறது.
---------------------------------------------------------------------------------------------
||17.25|| ‘தத்’ என்ற சொல்லின் உபயோகம்:
तदित्यनभिसन्धाय फलं यज्ञतप:क्रिया: ।
दानक्रियाश्च विविधा: क्रियन्ते मोक्षकाङ्क्षिभि: ।। २५ ।।
ததி3த்யநபி4ஸந்தா4ய ப2லம் யக்ஞதப: க்ரியா: ।
தா3நக்ரியாச்1ச விவிதா4: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி4: ।। 25 ।।
तत् इति தத் இதி தத் என்று உச்சரித்து मोक्ष काङ्क्षिभि: மோக்ஷ காங்க்ஷிபி4: மோக்ஷத்தை நாடுபவர்களால் फलं अनभिसन्धाय ப2லம் அநபி4ஸந்தா4ய பலன் கருதாது
विविधा: விவிதா4: விதவிதமான यज्ञ तप: क्रिया: யக்ஞ தப: க்ரியா: யக்ஞ தபக் கர்மங்கள்
दान क्रिया: च தா3ந க்ரியா: ச தான கிரியைகள் क्रियन्ते க்ரியந்தே செய்யப்படுகின்றன.
‘தத்’ என்று (ப்ரம்மத்தை குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலனை விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால் விதவிதமான யக்ஞ தபக் கிரியைகளும் தானக் கிரியைகளும் செய்யப்படுகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
‘தத்’ என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
விளக்கம்:
‘தத்’ எனும் சொல்லின் பயன்பாடு குறித்து பகவான் இந்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார்.
‘உச்சரித்தல்’ என்ற பொருளையுடைய ‘உதா3ஹ்ருத்ய’ எனும் வார்த்தையை முந்தைய சுலோகத்திலிருந்து இங்கு கொண்டுவர வேண்டும். ‘தத்’ எனும் சொல் ‘அது’ என்கிற பொருளில் எதையும் குறிக்கக்கூடிய ஒரு பிரதிபெயர்ச்சொல்லாக இருந்தாலும், எந்த குறிப்பும் சொல்லப்படாதபோது, அச்சொல் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கின்ற பரப்ரம்மத்தை மட்டுமே குறிக்கிறது. ‘தத் த்வம் அஸி’ எனும் மஹா வாக்கியத்தில் ‘தத்’ என்பது ப்ரம்மத்தை குறிக்கிறது. எனவே ‘ஓம்’ எனும் சொல்லை போலவே, தத் என்பதும் பரம் ப்ரம்மத்தையே குறிப்பதால், அது முந்தைய சுலோகத்தில் சொல்லப்பட்டது போன்ற கிரியைகளில் அதே சிரத்தையுடன் பயன்படுத்தப்படுகிறது.
=> பலனை விரும்பாத முமுக்ஷுக்கள்:
ஓம் மற்றும் தத் இரண்டும் முமுக்ஷுக்களுக்கானது. அதாவது மோக்ஷத்தை விரும்புபவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது — மோக்ஷ காங்க்ஷிபி4:. வேத சடங்குகள், யக்ஞம், தவங்கள் அல்லது தானம் போன்ற பல்வேறு செயல்கள் அவர்களால் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகளனைத்தும் பலன் எதிர்பாராது செய்யப்படுகின்றன — ப2லம் அநபி4ஸந்தா4ய. பலனை எதிர்பார்க்காமல் யாரும் ஒரு செயலைச் செய்ய முடியாது. ஆனால் இந்த முமுக்ஷுக்கள் அந்த-கரண-சுத்தியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதால் அது பலன் என்று கருதப்படமாட்டாது. சுயநலம், புகழ், சிறப்பான வாழ்வு போன்றவற்றை எதிர்ப்பாராதது மட்டுமல்லாமல் புண்ணியம் போன்ற பலனையும்கூட அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. மனத்தூய்மைக்காக மட்டுமே இந்த கர்மங்களை அவர்கள் ஈஷ்வர-அர்ப்பண-புத்தியுடன் செய்கின்றனர். சம்சாரத்திலிருந்து விடுதலையை அடைய விரும்புகிற முமுக்ஷுக்கள், இந்த மங்களகரமான வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் தங்களது கர்மங்களைத் தொடங்குகின்றனர்.
பொதுவாக ‘தத்’ எனும் சொல் தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ‘ஓம் தத் சத்’ என்ற வெளிப்பாட்டில், ஓம் எனும் சொல் தனியாகப் பயன்படுத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், அவை ஒவ்வொன்றும் பயனுள்ளவை. அவைகளை உபயோகிக்கும்போது எந்தவொரு செயலும் சாத்விகமானதாக மாறுகிறது.
=> சுவாமி சித்பவானந்தர்:
‘தத்’ என்று ப்ரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்றபொழுது, எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடிகளில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவையாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டம் அதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷுத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.
ஓம் மற்றும் தத் என்கிற சொற்களின் பயன்பாடு கூறப்பட்டு விட்டது. இனி ‘ஸத்’ என்ற வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பகவான் அடுத்த இரு சுலோகத்தில் எடுத்துரைக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------
||17.26|| ஸத் என்பதன் பொருள்:
सद्भावे साधुभावे च सदित्येतत् प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्छब्द: पार्थ युज्यते ।। २६ ।।
ஸத்3பா4வே ஸாது4பா4வே ச ஸதி3த்யேதத் ப்ரயுஜ்யதே ।।
ப்ரச1ஸ்தே கர்மணி ததா2 ஸச்ச2ப்3த3: பார்த2 யுஜ்யதே ।। 26 ।।
सद् भावे ஸத்3பா4வே இருத்தல் என்ற கருத்திலும்
साधुभावे च ஸாது4பா4வே ச நன்மை என்ற கருத்திலும்
सत् इति एतत् ஸத் இதி ஏதத் ‘ஸத்’ என்கிற இச்சொல்லானது
प्रयुज्यते ப்ரயுஜ்யதே வழங்கப்படுகிறது पार्थ பார்த2 பார்த்தா तथा ததா2 அங்ஙனமே
प्रशस्ते कर्मणि ப்ரச1ஸ்தே கர்மணி மங்களகரமான கர்மங்களிலும்
सत् शब्द: ஸத் ச1ப்3த3: ஸத் என்ற சொல் युज्यते யுஜ்யதே உபயோகிக்கப்படுகிறது.
அர்ஜுனா, இருத்தல் என்ற கருத்திலும் நன்மை யென்ற கருத்திலும் ‘ஸத்’ என்ற சொல் வழங்கப்படுகிறது. மங்கள கர்மங்களிலும் ஸத் என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
'ஸத்' என்ற சொல் உண்மையென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா! புகழ்வதற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் 'ஸத்' என்ற சொல் வழங்குகிறது.
விளக்கம்:
‘ஸத்’ என்ற சொல்லிற்கான ஐந்து அர்த்தங்கள் அல்லது உபயோகங்கள் பகவானால் அளிக்கப்படுகிறது. இச் சுலோகத்தில் மூன்று அர்த்தங்களும், அடுத்த சுலோகத்தில் இரண்டு பயன்களும் சொல்லப்படுகின்றன.
=> (1) இருத்தல்:
‘ஸத்3பா4வ’ எனில் முன்பு இல்லாத ஒன்றை இருத்தலுக்குக் கொண்டுவருதல் என்று பொருள். சங்கரர் ஒரு மகனின் பிறப்பை இங்கு உதாரணமாகக் கொடுக்கிறார். முன்பு இல்லாத மகன் ஒரு குறிப்பிட்ட நபருக்குப் பிறக்கிறான். அந்த மகனுக்கு ‘ஸத்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது; அதாவது, இப்போது மகன் ‘இருக்கிறான்’. இங்கு ‘இருக்கிறான்’ என்பது அக் குழந்தையின் இருத்தலைக் குறிக்கிறது. அதேபோல எந்தவொரு பொருளின் இருப்புக்கும் ‘ஸத்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஒரு பானை இருக்கிறது — க4ட: ஸந், துணி இருக்கிறது — பட: சந். இதில் ‘இருக்கிறது’ என்பது அப்பொருளின் இருத்தலைக் குறிக்கிறது. இவ்விதம் இருத்தல் என்கிற பொருளில் ‘ஸத்’ பயன்படுத்தப்படுவதாலும், மேலும் அனைத்தின் இருப்புக்கும் காரணமான ஒரே இருப்பு பரமேஷ்வரன் மட்டுமே என்பதாலும், ‘ஸத்’ என்ற சொல் தூய்மைப்படுத்துவதாக ஆகிறது, பவித்ர. முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத ப்ரம்மமே ‘ஸத்’ என்று சொல்லப்படுகிறது. ப்ரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரபஞ்சமும் ஜீவர்களும் ப்ரம்மத்தை சார்ந்து தோன்றிக் கொண்டிருப்பதால் அவைகளின் இருத்தல் அநித்தியம். இல்லாமை இல்லாத இருத்தல் என்பது பரப்ரம்மம் ஒன்றேயாகும்.
=> (2) நன்மை:
நன்மை என்கிற பொருளிலும் ‘ஸத்’ எனும் சொல்லானது பயன்படுத்தப்படுகிறது. ‘ஸாது4பா4வ’ எனில் தர்மப்படி வாழ்தல் ஆகும். முறையாக தர்மங்களை பின்பற்றுபவரை ‘ஸதாசார’ என்றழைக்கின்றனர். அத்தகைய நபருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும், நன்மையைத் தருகின்ற கூட்டங்களில் பங்கு கொள்வதும் ‘ஸத்ஸங்க’ எனப்படுகிறது. ஸத் வஸ்துவை குறித்து அறிந்தவனை ‘ஸத்புருஷன்’ என்கின்றனர். இவ்விதமாக ‘ஸத்’ எனும் சொல்லானது நன்மை, நல்லது என்கிற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது — ப்ரயுஜ்யதே.
=> (3) மங்களமான செயல்:
மேலும் இது உயர்ந்த அல்லது புனிதமான கர்மங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது — ப்ரச1ஸ்தே கர்மணி. திருமணச் சடங்கை(விவாஹ) சங்கரர் இங்கு உதாரணமாகக் கொடுக்கிறார். ஒருவனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் புனிதப்படுத்தும் எந்தவொரு முக்கியமான கர்மமும் ‘ஸத்கர்ம’ என்று அழைக்கப்படுகிறது.
இன்னும் எதற்கெல்லாம் ‘ஸத்’ என்னும் சொல் வழங்கப்படுகிறது என்பது அடுத்த சுலோகத்தில் சொல்லப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------