||17.4|| சிரத்தையின் அடையாளம்:
यजन्ते सात्त्विका देवान् यक्षरक्षांसि राजसा: ।
प्रेतान् भूत गणांश्चान्ये यजन्ते तामसा जना: ।। ४ ।।
யஜந்தே ஸாத்த்விகா தே3வாந் யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: ।
ப்ரேதாந் பூ4த க3ணாம்ச்1சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: ।। 4 ।।
सात्त्विका ஸாத்த்விகா சாத்விகர்கள் देवान् தே3வாந் தேவர்களை
यजन्ते யஜந்தே வணங்குகின்றனர் राजसा: ராஜஸா: ரஜோ குணமுடையவர்கள்
यक्ष रक्षांसि யக்ஷ ரக்ஷாம்ஸி யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் अन्ये அந்யே மற்ற
तामसा जना: தாமஸா ஜநா: தாமஸ ஜனங்கள் प्रेतान् ப்ரேதாந் பிரேதங்களையும்
भूत गणान् च பூ4த க3ணாந் ச பூத கணங்களையும் यजन्ते யஜந்தே வணங்குகின்றனர்.
சாத்விகர்கள் தேவர்களை வணங்குகின்றனர். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும், மற்ற தாமஸ ஜனங்கள் பிரேதங்களையும் பூத கணங்களையும் வணங்குகின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர், யக்ஷர்களுக்கும், ராக்ஷதருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
விளக்கம்:
ஒருவனுடைய சிரத்தை எப்படிப்பட்டது என்பதை கண்டுகொள்ளும் அடையாளம் இங்கு கொடுக்கப்படுகிறது. சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது எனப் பார்த்தோம். விளைவாகத் தோன்றியுள்ள காரியத்திலிருந்து அதனுடைய காரணத்தின் தரத்தை அறிய முடியும். அங்ஙனம் நமது செயல்பாடுகளைக் கொண்டு நாம் எத்தகைய குணமுடையவர்கள் என்பதை கண்டுகொள்ள முடியும். நமது செயல்பாடுகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு ஆகும். எந்த தேவதையை வழிபடுகிறோம், எந்த முறையில் வழிபடுகிறோம், மற்றும் எந்த நோக்கத்திற்காக அந்த வழிபாடு செய்யப்படுகிறது என்பதைக் கொண்டு இந்த சுலோகத்திலும் அடுத்த சுலோகத்திலும் ஒருவனுடைய சிரத்தை அடையாளம் காட்டப்படுகின்றது.
=> வழிபடப்படும் தெய்வங்கள்:
சாத்விகமான சிரத்தையை உடையவர்கள் தேவர்களை வணங்குகிறார்கள் — ஸாத்த்விகா தே3வாந் யஜந்தே. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திரன், வருணன் மற்றும் அக்னி போன்ற தேவர்களையோ அல்லது பிரம்மா, விஷ்ணு அல்லது சிவனையோ வணங்குபவர்கள் சாத்விகமானவர்கள் ஆவர். ஈஷ்வரனின் ஐஸ்வர்யத்தின் வெளிப்பாடுகள் இந்த தெய்வங்கள் ஆவர். உதாரணமாக செல்வத்தின் வெளிப்பாடாக லக்ஷ்மி, ஞானத்தின் வெளிப்பாடாக தக்ஷிணாமூர்த்தியைக் கூறலாம். ஈஷ்வரனின் இனியொரு விதமான வெளிப்பாடு இந்த இயற்கை ஆகும். எனவே இயற்கையின் வெளிப்பாட்டைக் குறிக்கின்ற தேவதைகளான வாயுதேவன், அக்னிதேவன், சந்திரன், சூரிய தேவன் போன்ற தேவதைகளின் வழிபாடும் சாத்விகத்தை குறிக்கின்றது.
ரஜோ குணமுடையவர்கள் யக்ஷ ராக்ஷஸர்களை வழிபடுகிறார்கள் — ராஜஸா: யக்ஷ ரக்ஷாம்ஸி. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியை கையாளுபவர்கள் ரஜோகுணத்திலிருந்து வந்த சிற்றியல்பை உடையவர்கள் ஆவர். அவர்கள் வழிபடுகிற தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கின்றனர்.
தாமஸமானவர்கள் பிரேதங்கள், மற்றும் பூதகணங்களை வணங்குகின்றனர் — தாமஸா ஜநா: ப்ரேதாந் பூ4த க3ணாந் ச யஜந்தே. சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்றவாறான இயற்கையின் பகுதிகளைப் பாராட்டுகிறார்கள். இந்த தமோ குணம் பொருந்தியவர்கள் வழிபடும் வனதேவதைகள், ஆவிகள், பிசாசுகள் அல்லது பூதங்கள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும்.
=> வழிபாட்டு முறை:
வழிபாட்டு முறையும்கூட சிரத்தையின் வகையை அடையாளம் காட்டுகின்றன. பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது இந்திரன், வருணன், அக்னி போன்ற பல்வேறு தேவர்களை எவ்வாறு வழிபட வேண்டும் என்பது குறித்து சாஸ்திரத்தில் பொதுவான விதிகள் உள்ளன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒரு வழிபாட்டு முறை சாத்விகம் என்று கூறலாம் அல்லது கூறப்படாமலும் இருக்கலாம். எனவேதான் கிருஷ்ணர் இப்போது வழிபாட்டின் நோக்கத்தினை அளவுகோலாகப் பயன்படுத்தி அதை சாத்விகம், ராஜஸம் அல்லது தாமஸம் என வகைப்படுத்துகிறார். சாத்விக தெய்வங்களை வழிபடுகிற பலரில், சிலர் மட்டுமே சத்வத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். அதாவது, ஈஷ்வரனை பற்றிய அறிவை பெறுவதற்காக மனத்தூய்மையை(அந்தக்கரண-சுத்3தி4) மட்டுமே விரும்பி பிரார்த்தனைகளில் ஈடுபடுகிற ஜிக்ஞாசுக்களின் வழிபாடு நிச்சயமாக சாத்விகம்தான். ஆனால் பெரும்பாலோரின் பிரார்த்தனை அத்தகையதாக இல்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்ப்பார்த்து அதை அடைவதற்காக மட்டுமே இந்த தேவதைகளுக்கான வழிபாட்டைச் செய்பவர்கள் ராஜஸ அல்லது தாமஸமானவர்கள் ஆகிறார்கள். ஏன்? ஏனெனில், அவர்கள் வழிபாட்டின் மூலம் பணம் பதவி முதலிய சுயநலன்களையும், பிற இழிவான நோக்கங்களையும் தேடுகிறார்கள். இது அடுத்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------
||17.5|| ராஜஸ மற்றும் தாமஸமானவர்களின் வழிபாடு எத்தகையது:
अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जना: ।
दम्भाहङ्कारसंयुक्ता: कामरागबलान्विता: ।। ५ ।।
அசா1ஸ்த்ரவிஹிதம் கோ4ரம் தப்யந்தே யே தபோ ஜநா: ।
த3ம்பா4ஹங்காரஸம்யுக்தா: காமராக3ப3லாந்விதா: ।। 5 ।।
दम्भ अहङ्कार संयुक्ता: த3ம்ப4 அஹங்கார ஸம்யுக்தா: வீம்பும் அஹங்காரமும் உடையவர்களாய் काम राग बल अन्विता: காம ராக3 ப3ல அந்விதா: காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய்
ये जना: யே ஜநா: எந்த ஜனங்கள் अशास्त्र विहितं அசா1ஸ்த்ர விஹிதம் சாஸ்திரத்தில் விதிக்கப்படாத घोरं கோ4ரம் கோரமான तपो தபோ தபசை
तप्यन्ते தப்யந்தே செய்கிறார்களோ. …
வீம்பும் அஹங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய், ஜனங்கள் சிலர் சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கோரமான தபசை செய்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
(சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமு முடையோராய், விருப்பத்திலும், விழைவிலும் சார்புற்றவர்களாய் கோரமான தவஞ் செய்கிறார்கள்.
விளக்கம்:
வழிபாடுகளில் பெரும்பான்மையோர் போக்கு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை சுலோகம் ஐந்து மற்றும் ஆறில் கூறுகிறார் பகவான். அடுத்த சுலோகம் இந்த சுலோகத்தின் தொடர்ச்சி என்பதால் இதன் பொருள்விளக்கத்தையும் அங்கு காணலாம்.
————————————————————————————————
||17.6|| சென்ற சுலோகத்தின் தொடர்ச்சி:
कर्शयन्त: शरीरस्थं भूतग्राममचेतस: ।
मां चैवान्त: शरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ।। ६ ।।
கர்ச1யந்த: ச1ரீரஸ்த2ம் பூ4தக்3ராமமசேதஸ: ।
மாம் சைவாந்த: ச1ரீரஸ்த2ம் தாந்வித்3த்4யாஸுரநிச்1சயாந் ।। 6 ।।
अचेतस: அசேதஸ: அறிவிலிகள் शरीरस्थं ச1ரீரஸ்த2ம் சரீரத்தில் இருக்கின்ற
भूत ग्रामम् பூ4த க்3ராமம் இந்திரியங்களையும் अन्त: शरीरस्थं அந்த: ச1ரீரஸ்த2ம் சரீரத்தில் வீற்றிருக்கின்ற मां च மாம் ச என்னையும் एव ஏவ மேலும்
कर्शयन्त: கர்ச1யந்த: துன்புறுத்தும் तान् தாந் அவர்களை
आसुर निश्चयान् ஆஸுர நிச்1சயாந் அசுர வழியில் துணிந்தவர்கள் என்று विद्धि வித்3தி4 அறி.
இங்ஙனம் அறிவிலிகள் சரீரத்தில் இருக்கின்ற இந்திரியங்களையும், சரீரத்தில் வீற்றிருக்கின்ற என்னையும் துன்புறுத்துகிறார்கள். அவர்களை அசுர வழியில் துணிந்தவர்கள் என்று அறி.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.
விளக்கம்:
இந்த இரண்டு சுலோகத்தையும்(5 மற்றும் 6) ஒன்றாகச் சேர்த்து படித்து ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்க வேண்டும்.
வீம்பும் அஹங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய், எந்த அறிவிலிகள் உடலிலுள்ள இந்திரியங்களையும் உள்ளத்திலுறையும் என்னையும் துன்புறுத்தி சாஸ்திரத்துக்கு ஒவ்வாத கொடுந்தவம் புரிகிறார்களோ அவர்களை அசுர வழியில் துணிந்தவர்களென்று அறிக.
=> கோரமான வழிபாடு:
இங்கு, ‘தபஸ்’ என்பது பிரார்த்தனைகள், சடங்குகள் போன்றவற்றைக் கொண்ட மத வழிபாட்டைக் குறிக்கிறது. இந்த மக்கள் சாஸ்திரத்தில் அங்கீகரிக்கப்படாத கோரமான வழிபாடுகளைச் செய்கின்றனர் — அசா1ஸ்த்ர விஹிதம் கோ4ரம். இதனால் தனது சொந்த உடல், மனம் மற்றும் இந்திரியங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். ஆடு, கோழி போன்றவற்றை பழிகொடுத்து வழிபடுதல், தீ மிதித்தும் அழகு குத்தியும் காணிக்கை செலுத்துதல், முள்ளின்மீது படுத்தும் ஒற்றைக் காலில் நின்றும் தவம் செய்தல், சூரியனையே உற்று நோக்கி தியானம் செய்தல் போன்றவைகள் தங்களுக்கும், தங்களது இந்திரியங்களுக்கும், மனதிற்கும் மற்றும் மற்றவர்களுக்கும் துன்பத்தை விளைவிப்பதாகவே இருக்கிறது.
=> அஹங்காரமும் பேராசையும் உடையவர்கள்:
இவ்விதம் சாஸ்திரத்தில் சொல்லப்படாத தவங்களைச் செய்யும் இந்த மக்கள், பாசாங்கு மற்றும் அஹங்காரத்தினால் பீடிக்கப்பட்டுள்ளனர் — த3ம்ப4 அஹங்கார ஸம்யுக்தா. அவர்களின் இந்த வழிபாடுகளும் தவங்களும் தன்னை ஒரு மதவாதியாக உலகிற்கு காட்டிக் கொள்வதற்காகவே செய்யப்படுகிறது; இது தம்பம் ஆகும். மேலும் அவர்களிடம், ‘இது நான் செய்யும் வழிபாடு’ என்கிற பெருமிதமும் அஹங்காரமும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் காமமும் பற்றுதலும் வலுத்தவர்களாய் இருக்கின்றனர் — காம ராக3 ப3ல அந்விதா:. ஒரு பொதுவான ஆசை ‘காம’ எனப்படுகிறது; அது ஏக்கமாக மாறும்போது உருவாகும் பற்று ‘ராக3’ ஆகும். ஆசை மற்றும் ஏக்கத்தினுடைய பலத்தினால் வலிமையடைந்தவர்களாக அவர்கள் இந்த பல்வேறு வழிபாட்டுச் சடங்குகளைச் செய்கிறார்கள். எந்த தவமும் ஒரு குறிப்பிட்ட சுய-வலிமையையும், சுய-ஒழுக்கத்தையும் குறிக்கிறது. என்றாலும் அதன் நோக்கம் என்ன என்பதை பொருத்தே தவத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. ராவணனின் தவத்தில் நிச்சயமாக சுய-வலிமையும், சுய-ஒழுக்கமும் இருந்தது; ஆனால் அது மன தூய்மைக்காகவோ, அல்லது மன உறுதிக்காகவோ, மோக்ஷத்திற்காகவோ செய்யப்படவில்லை. அழிக்கும் சக்தியை ராவணன் விரும்பினான்.
அதேபோல், ஹிரண்யகசிபு தனது மஹா-தவத்தின் மூலம் பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டிற்குள்ளோ அல்லது வெளியேயோ, பூமியிலோ அல்லது ஆகாசத்திலோ யாரும் தன்னை அழிக்க முடியாது என்கிற ஒரு வரத்தை பெற்றான். மேலும் அதில் ஒரு மிருகத்தாலோ, மனிதனாலோ, அல்லது எந்த ஆயுதத்தாலோ தன்னை கொல்ல முடியாது என்பதாகவும் கோரினான். இவ்விதம் எல்லாவற்றையும் உட்படுத்திவிட்டதாக அவன் நினைத்தான். ஆனால் மரணத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதால், இறைவன் ஒரு சிங்கத்தின் தலை மற்றும் மனித உடலுடன் வந்தார் — மிருகமோ மனிதனோ அல்ல; அந்தி நேரத்தில் - பகலோ இரவோ அல்ல; அவனை தனது மடியில் வைத்தார் - பூமியோ ஆகாசமோ அல்ல; வீட்டின் வாசலில் - உள்ளேயோ வெளியேயோ அல்ல, தனது நகங்களால் அவனைக் கொன்றார் - ஆயுதம் அல்ல. எனவே எந்தவொரு விதியிலும், ஒரு விதிவிலக்கு இருக்கும். ராவணன் மற்றும் ஹிரண்யகசிபு போன்றோர் பேராசை மற்றும் ஏக்கத்தினால் உந்தப்பட்டு பயங்கரமான தவங்களைப் புரிந்தனர்.
=> அறிவிலிகள்:
அவர்களின் தவங்கள் மிக கடினமானதாகவும், அதன் விளைவுகள் இறுதியில் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்போது, அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் ‘அசேதஸ:’, அறிவிலிகள், சரியாக சிந்திக்க இயலாதவர்கள். பகுத்தறியும் திறனற்று தங்களது காம-ராகத்தினால் தூண்டப்பட்டவர்களாக புலனின்பங்களைத் துறந்து அவர்கள் கொடுந்தவம் புரிகிறார்கள். சாத்விகமானவர்களும் உணவு உள்ளிட்ட புலனின்பங்களைக் கட்டுப்படுத்தி தியானம் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள் எனினும், வித்தியாசம் என்னவெனில் இவர்கள் மோக்ஷத்தை விரும்பி அதைச் செய்கிறார்கள். ஆனால் இந்த சுலோகத்தில் கூறப்படுபவர்கள் அசுர குணத்துடன் அஹங்காரம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டவர்களாக, விதிகளைப் புறக்கணித்து, தங்களது இலக்குகளை அடைய கொடூரமான விதத்தில் தங்களது உடலையும் புலன்களையும் துன்பப்படுத்திக் கொள்கிறார்கள்.
மேலும், என்னையும் துன்புறுத்துகின்றனர் — மாம் ச கர்ச1யந்த:, என்கிறார் பகவான். அதாவது அவர்கள் தங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் உள்ளத்தில் சாக்ஷியாய் வீற்றிருக்கும்(அந்த: ச1ரீரஸ்த2ம்) ஆத்மாவாகிய என்னையும் கஷ்டப்படுத்துகின்றனர் என்கிறார். உடல் அழிக்கப்பட்டாலும் ஆத்மா அழிக்கப்படுவதில்லை என்பதை நாம் பார்த்தோம் — ந ஹந்யதே ஹந்யமாநே ச1ரீரே. ஆத்மாவை யாராலும் எதுவும் செய்ய முடியாது, எனில் அதை எப்படி துன்பப்படுத்த முடியும்! இங்கு அது வெறும் ஒரு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் பகவனை எப்படி துன்புறுத்துகிறார்கள்? பகவானின் கட்டளைப்படி நடக்காமல், அனுஷ்டானத்தின்படி செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதை, தர்மத்தை பின்பற்றாமல் இருப்பதை பகவான் அவ்விதம் கூறுவதாக சங்கரர் விளக்கமளிக்கிறார்.
இந்த மக்கள் அசுர வழியில் துணிந்தவர்களாக, அசுர குணத்தில் நிச்சயத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என அறிந்து கொள் — ஆஸுர நிச்1சயாந் வித்3தி4, என்கிறார். சரியாக சிந்திக்கும் திறன் இல்லாது இருந்தும் தீங்கற்றவர்களாக நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இங்கு ‘அசுர’ என்பது தவறான சிந்தனையைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பேராசையினால் உந்தப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதை குறிக்கிறது. மேலும் இங்கு ‘அறிந்து கொள் — வித்3தி4’ என பகவான் கூறக் காரணமென்ன? இதை நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? ஏனென்றால் அந்த வகையான சிந்தனை மற்றும் நடத்தையின் எந்த தடயமும்கூட நம்மில் இருந்தால் அதை நாம் களைய வேண்டும். அதற்காகவே அசுர-நிச்சயத்தைப் புரிந்துகொள் என்று இங்கே சொல்லப்படுவதாக சங்கரர் கூறுகிறார்.
---------------------------------------------------------------------------------------------