||17.2|| பகவானின் பதில்:
श्रीभगवानुवाच
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ।। २ ।।
ஸ்ரீப4க3வாநுவாச
த்ரிவிதா4 ப4வதி ச்1ரத்3தா4 தே3ஹிநாம் ஸா ஸ்வபா4வஜா ।
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்1ருணு ।। 2 ।।
श्री भगवान् ஸ்ரீப4க3வான் ஶ்ரீ பகவான் उवाच உவாச சொன்னது
देहिनां தே3ஹிநாம் தேகமெடுத்தவர்களுக்கு स्वभावजा ஸ்வபா4வஜா இயல்பாக உண்டான सा श्रद्धा ஸா ச்1ரத்3தா4 அந்த சிரத்தையானது सात्त्विकी ஸாத்த்விகீ சாத்விகமென்றும்
राजसी च एव ராஜஸீ ச ஏவ ராஜஸமென்றும் तामसी च தாமஸீ ச தாமஸமென்றும்
इति இதி இங்ஙனம் त्रिविधा भवति த்ரிவிதா4 ப4வதி மூன்று விதமாக இருக்கிறது
तां शृणु தாம் ச்1ருணு அதைக் கேள்.
ஶ்ரீ பகவான் சொன்னது:
தேகமெடுத்தவர்களுக்கு இயல்பாயுண்டான சிரத்தையானது சாத்விகமென்றும், ராஜஸமென்றும் தாமஸமென்றும் மூவிதமாயிருக்கிறது; அதைக் கேள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்வீகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.
விளக்கம்:
சுலோகம் இரண்டு முதல் ஏழு வரை சிரத்தை குறித்த பொதுவான விசாரத்தை செய்கிறார் பகவான். சிரத்தை விசாரம் பின்வரும் ஆறு தலைப்புகளின் கீழ் செய்யப்படுகிறது:
(1) சிரத்தையின் இலக்கணம்(லக்ஷணம்)
(2) சிரத்தையின் வகைபாடு(பே4தம்)
(3) சிரத்தையின் தோற்றம்(ஹேது)
(4) சிரத்தையின் விளைவு(ப2லம்)
(5) சிரத்தையின் அடையாளம்(லிங்கம்)
(6) (சாத்விக) சிரத்தைக்கான உபாயம்
இந்த சுலோகத்தில் சிரத்தையின் இலக்கணத்தையும் அதன் வகைப்பாட்டையும் எடுத்துரைக்கிறார்.
=> சிரத்தை என்றால் என்ன?
சிரத்தை என்பதன் நேரடிப் பொருள் நம்பிக்கை ஆகும். ஒருவனின் அறிவின் அடிப்படையில்தான் அவனது வாழ்க்கை உள்ளது. இந்த அறிவு என்பது நம்பிக்கையின் வழியாகத்தான் வெளிப்படும். எனவே அறிவும் நம்பிக்கையும் பிரிக்க முடியாத ஒன்று. அறிவுக்கு துணை தேவைப்படுகிறது; அதுவே நம்பிக்கை. ஒருவரின் வார்த்தையில் நம்பிக்கையிருந்தால் அது அறிவாக மாறுகிறது. உதாரணமாக இன்று நீங்கள் செல்லவிருக்கும் ரயில் தாமதமாக வருகிறது என்று ஒருவர் கூறுகிறார். தகவல் தருகின்ற அந்த நபரைப் பொருத்து, அவரின் மீது நம்பிக்கையிருந்தால் அது அறிவு; ஆகையினால் தாமதமாக ரயில் நிலையத்திற்குச் செல்வீர்கள். ஒருகால் அவர் விளையாட்டான ஆளாக இருந்து பகடிக்காக அப்படி கூறியிருக்கலாம் என அவர்மீது நம்பிக்கை ஏற்படவில்லையெனில் அது வெறும் வாக்கியம் மட்டுமே. நீங்கள் சரியாக அச்சிடப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே புறப்படுவீர்கள். எனவே ஒரு வாக்கியத்திற்கு அறிவு எனும் அந்தஸ்தை தருவது நம்பிக்கை ஆகும். ஒரு எண்ணத்திற்கு ஞானம் எனும் அந்தஸ்தை தருவதும் நம்பிக்கையே ஆகும். ஞானத்தின் அடிப்படையில்தான் நமது செயல்கள் இருக்கும்.
சிரத்தையை நம்பிக்கை என்று கூறினாலும், உண்மையில் சிரத்தை என்பது அதையும் விட அதிகமானது. அது ஒரு முழு மனிதனாகவே இருப்பது; அவனின் வாழ்க்கை மீதான அணுகுமுறையை அது குறிக்கிறது. உடல், செல்வம், மக்கள், வழிபாட்டுச் செயல்கள், உணவு, தானம் போன்றவற்றின் மீதான ஒருவனின் அணுகுமுறை என்பது சிரத்தையைச் சார்ந்து இருக்கிறது. இவற்றின் மீதான பார்வையானது இறைவனின் மீதான அவனது சிரத்தையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சிரத்தை என்பது வெளியே இல்லை; அது ஒருவனது மனதில், சிந்தனையில், புரிதலில், ஒழுக்க அமைப்பில், முன்னுரிமைகளில் உள்ளது. இந்த சாதாரண வார்த்தையில் இவையனைத்தும் மறைமுகமாக உள்ளது என்பதாலேயே சிரத்தையைப் புரிந்துகொள்வதற்காக இங்கு ஒரு முழு அத்தியாயமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
=> சிரத்தையின் வகைபாடு:
சாத்விகமான சிரத்தை, ராஜஸமான சிரத்தை மற்றும் தாமஸமான சிரத்தை என இந்த சிரத்தை மூன்று விதமாக உள்ளது — த்ரிவிதா4 ப4வதி. இப்படிப்பட்ட சிரத்தை என்பது யாருக்கு இருக்கிறது? தேகம் எடுத்தவர்களுக்கு — தே3ஹிநாம். அதாவது மனித உடல் உள்ளவர்களுக்கு, ஜீவர்களுக்கு. இம்மூன்றில் ஒருவன் எத்தகைய சிரத்தையைக் கொண்டிருக்கிறான் என்பதை எது தீர்மானிக்கிறது? சுபாவத்திலிருந்து உற்பத்தியாகிறது — ஸ்வபா4வஜா. அதாவது மனதிலுள்ள சம்ஸ்காரத்திலிருந்து, ஒருவனது இயல்பான குணத்திலிருந்து அது பிறக்கிறது. உதாரணமாக சத்வ குணத்துடன் இருப்பவர்கள் இயல்பாகவே சாத்விகமான சிரத்தையுடன் இருப்பார்கள்.
முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜென்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய பிறப்பில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தை கண்டுபிடிக்கலாம்.
ஒருவனின் மனதின் இயல்பு சிரத்தையை தீர்மானிக்கிறது என்றாலும், உண்மையில் சிரத்தையை அடைய முடியும். அதாவது ஒருவன் இயல்பிலேயே ராஜஸிகமானவன் அல்லது தாமஸிக சிரத்தை உடையவன் என்று கருதி அதற்கு தன்னை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. தனக்கு தேவையான சிரத்தையை ஒருவன் அடைய முடியும். இங்கு முழு போதனையும் உங்களிடம் சிரத்தையை உருவாக்குவதற்காகவே அன்றி, மக்களை வகைப்படுத்துவதற்காக அல்ல. எனவே, இங்கே ‘ஸ்வபா4வ’ என்பதன் பொருள் அந்தக்கரணத்தின் தன்மையைக் குறிக்கிறது. அந்தக்கரணத்தின் தன்மையைப் பொறுத்து மூவகை சிரத்தை உள்ளது. அந்த மனதில் ஒருவனால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
---------------------------------------------------------------------------------------------
||17.3|| சிரத்தையின் தோற்றமும் விளைவும்:
सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्ध: स एव स: ।। ३ ।।
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ச்1ரத்3தா4 ப4வதி பா4ரத ।
ச்1ரத்3தா4மயோऽயம் புருஷோ யோ யச்ச்2ரத்3த4: ஸ ஏவ ஸ: ।। 3 ।।
भारत பா4ரத பரதகுலத்துதித்தவனே सर्वस्य ஸர்வஸ்ய ஒவ்வொருவருடைய
श्रद्धा ச்1ரத்3தா4 சிரத்தையானது सत्त्व अनुरूपा ஸத்த்வ அநுரூபா அந்தக்கரணத்தில் ஏற்பட்ட சம்ஸ்காரத்தை அனுசரித்ததாக भवति ப4வதி இருக்கிறது
अयं पुरुष: அயம் புருஷ: இந்த ஜீவன் श्रद्धामय: ச்1ரத்3தா4மய: சிரத்தை மயமானவன்
य: ய: யார் यत् श्रद्ध: யத் ச்1ரத்3த4 என்ன சிரத்தையுடையவனோ
स: ஸ: அவன் एव स: ஏவ ஸ: அந்த சிரத்தைக்கேற்றவனே.
பாரதா, ஒவ்வொருவனுடைய மனப் பாங்குக்கேற்ப சிரத்தையமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன்; சிரத்தை எதுவோ அதுவே அவனுமாம்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பாரத! யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் சிரத்தையின் தோற்றம்(ஹேது) குறித்தும் அதனால் உண்டாகும் விளைவு(ப2லம்) குறித்தும் பேசப்படுகிறது.
=> சிரத்தையின் தோற்றம்:
எல்லா மனிதர்களுக்கும் சிரத்தை என்பது மனதில் ஏற்படுகிற சம்ஸ்காரத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது — ச்1ரத்3தா4 ஸத்த்வ அநுரூபா ப4வதி. இங்கு ‘ஸத்த்வ’ என்பது குணத்தைக் குறிக்கவில்லை; அந்தக்கரணத்தை, மனதைக் குறிக்கிறது. சிரத்தையானது, ஒருவனது மனதினுடைய நிலை, அதன் போக்குகள் மற்றும் ஒழுக்க மதிப்புகளுக்கு ஏற்ப, சுருக்கமாக சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப ஒரு வடிவத்தை எடுக்கிறது. நாம் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சம்ஸ்காரங்களுடன்தான் பிறந்துள்ளோம். மேலும் இப்போது நாம் செய்கிற செயல்களும் அதற்கேற்ற சம்ஸ்காரத்தை, அதாவது பதிவை நமக்கு கொடுக்கின்றன.
கர்மம் சம்ஸ்காரத்தை கொடுக்கிறது <=> சம்ஸ்காரம் கர்மம் செய்ய தூண்டுகிறது.
எனவேதான் நல்ல பதிவுகளை கொடுக்கின்ற செயலில் ஈடுபடுதல் மிக முக்கியமானது. தர்மத்தை கடைப்பிடித்தலும் தானமும் நல்ல சம்ஸ்காரங்களுக்கான சிறந்த உபாயம் ஆகும்.
=> சிரத்தையின் விளைவு:
இந்த மனிதன் சிரத்தை மயமானவன் — அயம் புருஷ: ச்1ரத்3தா4மய:, அதாவது ஜீவன் சிரத்தையினால் ஊடுருவப்பட்டவனாக சிரத்தையின் சொரூபமாகவே இருக்கிறான். இங்கு ‘ச்1ரத்3தா4மய’ என்பதிலுள்ள ‘மய’ எனும் பின்னொட்டு, செறிவைக் குறிக்கிறது. அதாவது அவன் அவனது சிரத்தையின் வெளிப்பாட்டைத் தவிர வேறில்லை. ‘புருஷ:’ எனும் சொல் ஆத்மாவைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும்; ஆனால் இங்கு அது ஆத்மாவைக் குறிக்கவில்லை, தனிநபரை ஜீவனைக் குறிக்கிறது என சங்கரர் தனது பாஷ்யத்தில் தெளிவுபடுத்துகிறார்.
ஒருவன் எப்படிப்பட்ட சிரத்தையுடன் கூடியவனாக இருக்கிறானோ அவன் அப்படிப்பட்டவனாகவே இருக்கிறான் — ய: யத் ச்1ரத்3த4 ஸ: ஏவ ஸ:. உதாரணமாக ஒருவனது நம்பிக்கை(சிரத்தை) சாத்விகமானதாக இருந்தால் அவன் சாத்விகமாக இருப்பான். அவனது அனைத்து செயல்பாடுகளும், அவனது முழு வாழ்க்கையும், அவனது அந்த சிரத்தையின் வெளிப்பாடாக இருக்கும்.
சரி, சிறிது நேரத்திற்கு சிரத்தை என்கிற வார்த்தையை விட்டுவிட்டு, ஒருவனின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக வெளிப்படுகிறது என்பதை எது தீர்மானிக்கிறது என சிந்தித்துப் பார்க்கலாம். நீங்கள் ஒருவரை ஒரு திரைப்படத்திற்கு வருமாறு அழைக்கிறீர்கள். அவர் கிரிக்கெட் விளையாட செல்ல வேண்டும் ஆகவே நான் வரவில்லை எனக் கூறுகிறார் எனில் அவரது முன்னுரிமைகள் எதில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இனியொருவர் நான் ஆஸ்ரமத்திற்கு வேதாந்த வகுப்பு கேட்க செல்ல வேண்டும் ஆகையால் நான் திரைப்படத்திற்கு வரவில்லை என்கிறார். இவ்விதம் ஒவ்வொருவரின் முன்னுரிமைகளும் அந்தந்த மனிதருக்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. சிலருக்கு இசை நிகழ்ச்சி, சிலருக்கு இரவுணவு, சிலருக்கு கோயில், சிலருக்கு விளையாட்டு என அவரவர்களின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. ஒரு நபர் அவருடைய முன்னுரிமைகளைத் தவிர வேறில்லை. முன்னுரிமைகள் மாறும்போதுதான் அங்கு முழு மாற்றமும் நிகழ்கிறது. எது அதிக முக்கியமானது, எது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்ற மறுசீரமைப்பு, உண்மையில் ஒரு நபரில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அது அவரை ஒரு புதிய திசையில் செலுத்துகிறது. எந்த மாதிரியான நெறிமுறைகள் மற்றும் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது ஒருவரின் சிந்தனை பாங்கு, மற்றும் அவருக்கு எந்த வகையான சிரத்தை உள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவேதான், பகவான் இங்கே ஒரு ஆழமான கருத்தை கூறுகிறார். இது எந்த நபருக்கும் எங்கும் பொருந்தும், ‘ஒரு நபரின் சிரத்தை எதுவாக இருந்தாலும், அவன் உண்மையில் அந்த சிரத்தை சொரூபமாவன்; அதாவது, அவனது சிரத்தை எதுவோ அதுவே அவனுமாகிறான் — யோ: யத் ச்1ரத்3த4 ஸ ஏவ ஸ:.’
=> சிரத்தையின் மேலும் சில பலன்கள்:
(1) பிரமாணத்தில் நம்மைச் சேர்த்தல் — ஒரு விஷயத்தில் சிரத்தை இருந்தால்தான் அதற்கான நேரத்தை கொடுத்து அதைக் கேட்போம். உதாரணமாக வேதாந்த வகுப்பை கேட்கலாம் அல்லது அதே நேரத்தில் பங்குச்சந்தை முதலீடு குறித்த அணுகுமுறையைக் கற்கலாம்.
(2) மனதிலுள்ள எண்ணத்தை அறிவாக்குவது சிரத்தை.
(3) இது நம்மை ஆறுதல்படுத்தும், குணப்படுத்தும் சக்தி உடையது. ஒரு பிரச்சினை குறித்த தீர்வை நோக்கிச் செல்லும்போது நம்பிக்கையே பலனைக் கொடுக்கிறது.
(4) தியாகத்திற்கும் சந்யாசத்திற்கும் சிரத்தையே மூலமாக இருக்கிறது.
(5) ஒரு கர்மம் கர்ம-பலனான அதிர்ஷ்டத்தை(புண்ணியத்தை) கொடுக்க காரணமாக சிரத்தை அமைகிறது.
(6) நம்மை தர்மத்தில் ஈடுபடுத்துவதும் சிரத்தையேயாம்.
---------------------------------------------------------------------------------------------
