||12.10|| இரண்டாம் படிநிலை:
अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ।। १० ।।
அப்4யாஸேऽப்யஸமர்தோ2ऽஸி மத்கர்மபரமோ ப4வ ।
மத3ர்த2மபி கர்மாணி குர்வந்ஸித்3தி4மவாப்ஸ்யஸி ।। 10 ।।
अभ्यासे अपि அப்4யாஸே அபி அப்யாசத்திலும் असमर्थ: அஸமர்த2: வல்லமையில்லையெனில் असि मत्कर्मपरम: அஸி மத்கர்மபரம: என் பொருட்டுக் கர்மம் செய்பவனாய்
भव ப4வ இருப்பாயாக मदर्थम् மத3ர்த2ம் என் பொருட்டு कर्माणि கர்மாணி கர்மங்களை कुर्वन् अपि குர்வந் அபி செய்வதாலும் सिद्धिम् ஸித்3தி4ம் சித்தியை
अवाप्स्यसि அவாப்ஸ்யஸி அடைவாய்.
அப்யாசத்தில் உனக்கு வல்லமையில்லையாயின் என்பொருட்டுக் கர்மம் செய்வதைக் குறிக்கோளாகக் கொள். எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
விளக்கம்:
=> கர்மயோகம்:
மனமானது அப்யாசம் என்ற கட்டுக்கு அடங்குவது இல்லவே இல்லையெனில் அப்பொழுது என்ன செய்வது? என்ற கேள்விக்கு விடையாக இந்த சுலோகம் வருகிறது.
அர்ஜுனா, ஒருகால் அப்யாசம் செய்வதற்கும் உனக்கு வல்லமை இல்லையெனில் — அப்4யாஸே அபி அஸமர்த2:. அப்யாசம் செய்ய மனது ஒருமுகப்படாமல் அது நெடுநாளாக வழக்கமாகச் செய்துவந்த வினையில் ஈடுபடுகிறது. எனினும் நீ வருத்தப்படத் தேவையில்லை. என் பொருட்டு கர்மம் செய்பவனாய் இரு — மத்கர்மபரம: ப4வ, என்கிறார் பகவான். ஈஷ்வரனுக்காக கர்மம் செய்வது என்பது அவர் மீதான பக்தியின் வெளிப்பாடாகும்; ஈஷ்வரார்தம் கர்ம. ஈஷ்வரன் தர்ம-வடிவில் இருக்கிறார். தனது சொந்த விருப்பு-வெறுப்பு என்பது அகங்காரத்தில் வேரூன்றியுள்ளது, அதேசமயம் தர்மம் ஈஷ்வரனில் வேரூன்றியுள்ளது. எனவே ஒருவன் தனது ராக-த்வேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தர்மத்தின் படி செயல்படுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றும்போது அவன் ஈஷ்வரனின் நியதியுடன் ஒன்றாகிறான். இவ்விதமாக செயல்-வடிவில் செய்யும் வழிபாடே கர்ம-யோகமாகிறது.
ஒரு கோணத்தில், கர்மத்தை இரு வகையாகக் கூறலாம்:
(1) செய்யவேண்டிய கடமைகள்; ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவனால் செய்யப்பட வேண்டிய சொந்த கடமைகள். இதில் ஒவ்வொரு கர்மத்தையும் இறைவனுக்காகச் செய்யும் வழிபாடாகக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், பிரசாத புத்தியுடனும் செயலில் ஈடுபடுவது.
(2) சமூகச் சேவையாக செய்யும் கர்மங்கள். இதில் ஈஷ்வரனையே சமுதாயமாக எடுத்துக் கொண்டு, பலனை எதிர்பாராமல் நிஷ்காமமாக கர்மம் செய்வது. மரமானது தான் வெயிலில் நின்றுகொண்டு நிழலை மற்றவர்களுக்கு தருவதைப் போல, அகர்பத்தியானது தன்னை அழித்து மற்றவர்களுக்கு நறுமணத்தை தருவதைப் போல ஒருவன் தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கென வாழ்தல். இவ்விதம் பங்காற்றும் ஒருவனுக்குச் சரியான அணுகுமுறை இல்லையென்றால் அது அவனுக்கு ஆணவத்தையே உண்டாக்கும். எனவே சமுதாயத்தையே ஈஷ்வரனாகப் பார்த்து, மனிதனுக்குச் செய்யும் சேவையே நாராயணனுக்குச் செய்யும் சேவையாக மாற்றுதல் வேண்டும். இவ்விதமாக நிஷ்காம-கர்ம பிரதானமாக பற்றுதலின்றி, தன்னலமின்றி செயலில் ஈடுபடுவது இரண்டாவது படி.
=> பலன்:
தியானத்தில் ஈடுபடுத்த முடியாத மனதை உடையவர்கள், கர்மத்தை நோக்கிச் செல்லும் மனதை உடையவர்கள், இதுகாரும் பற்றுதலால் ஆற்றிவந்த வினையை, இனி தனக்கென்று செய்யாது ஈஷ்வரனுக்காகவென்று செய்யும்போது சாதகன் இறைவன் கையில் கருவி போல ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது. சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகின்றான்.
‘எனக்காகக் கர்மம் செய்வதாலும் நீ சித்தியடைவாய்’, மத3ர்த2ம் கர்மாணி குர்வந் அபி ஸித்3தி4ம் அவாப்ஸ்யஸி, என்கிறார் பகவான். இங்கு சித்தி என்பது மோக்ஷத்தை குறிப்பதல்ல. அது ஞானத்தை அடைவதற்கானப் பக்குவத்தை, மனத்தூய்மையைக் குறிக்கிறது. அதாவது இவ்வகையான நிஷ்காம கர்மங்கள், ஒருவனது சத்வ குணத்தை வளர்த்து அவனை ஏக-ரூப உபாசனைக்குத் தகுதிப்படுத்தும்; பிறகு விஷ்வரூப-உபாசனை வழியாக மோக்ஷத்தை அளிக்கின்ற ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ எனும் ஞானத்திற்கானத் தகுதியை மனமானது அடைகிறது. ஆகவே அர்ஜுனா, தன்னலமற்ற செயல்பாடுடன் கூடிய நிஷ்காம-கர்ம வாழ்க்கையை எடுத்துக் கொள்; இதுவே இரண்டாவது படிநிலை.
=> அடுத்த மற்றும் கடைசி படி:
ஒருகால் பலனில் ஆசையில்லாதவனாக, இறைவனுக்காகவென நிஷ்காமமாக என்னால் கர்மத்தில் ஈடுபட முடியவில்லை. எனக்கு என் பொருட்டு நிறைய ஆசைகள் இருக்கின்றன என ஒருவன் நினைப்பானேயாகில் அவன் மீண்டும் ஒரு படிநிலை கீழிறங்கி, ஸகாமமாக கர்மத்தில் ஈடுபடலாம்; அதில் தவறொன்றுமில்லை என அடுத்த சுலோகத்தில் பக்தியின் இறுதிப் படிநிலையை பகவான் விளக்குகிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
எல்லாம் ஈஷ்வரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும், தான் ஈஷ்வரன் கையில் வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ அவன் ஜீவன் முக்தனாவான். ஈஷ்வரா, உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால் ‘நான் செய்கிறேன்’ என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------
||12.11|| பக்தியின் முதலாவது படிநிலை:
अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रित: ।
सर्वकर्मफलत्यागं तत: कुरु यतात्मवान् ।। ११ ।।
அதை2தத3ப்யச1க்தோऽஸி கர்தும் மத்3யோக3மாச்1ரித: ।
ஸர்வகர்மப2லத்யாக3ம் தத: குரு யதாத்மவாந் ।। 11 ।।
अथ एतत् अपि कर्तुं அத2 ஏதத் அபி கர்தும் பின்பு இதைச் செய்வதற்கும்
अशक्त: असि அச1க்த: அஸி சக்தியற்றிருப்பாயாகில் तत: தத: பிறகு
मद्योगम् மத்3யோக3ம் என்னிடத்து சரண்புகுதல் आश्रित: ஆச்1ரித: பொருந்தியவனாய்
यत आत्मवान् யத ஆத்மவாந் தன்னைத் தான் கட்டுப்படுத்தி
सर्व कर्म फल त्यागं कुरु ஸர்வ கர்ம ப2ல த்யாக3ம் குரு கர்மபலன் முழுதையும் எனக்கு அர்ப்பணம் செய்.
இனி, இதைச் செய்தற்கும் இயலாதெனின், என்னிடம் அடைக்கலம் புகுதலில் பொருந்தியவனாய், தன்னைத்தான் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
விளக்கம்:
=> பக்தியின் ஆரம்பநிலை:
இரண்டாவது படிநிலையில் கூறியதைப் போல, ராக-த்வேஷமில்லாமல் கர்மத்தை ஈஷ்வரனுக்காகவென செய்ய முடியவில்லையெனில் அவனுக்கு கர்மபந்தத்தை ஒழிக்க வழியில்லையா என்ற கேள்வி வரலாம். அவனுக்கு பகவான் இங்கு அடுத்த படிநிலையைப் பரிந்துரைக்கிறார்.
பின்பு என்னிடத்து சரண்புகுதலெனும் இதைச் செய்வதற்கும் சக்தியற்றிருப்பாயாகில் — அத2 ஏதத் அபி அச1க்த: அஸி கர்தும் மத்3யோக3ம் ஆச்1ரித:, என்கிறார் பகவான். சென்ற சுலோகத்தில் கூறிய நிஷ்காம-கர்ம பிரதானமான கர்மயோகத்தை, அதாவது ஈஷ்வரார்ப்பண புத்தியுடன் தனக்காகவென அல்லாமல் மற்றவர்களுக்குகென சேவையாக கர்மத்தை செய்ய முடியவில்லையெனில் பரவாயில்லை, ஸகாம-கர்மத்தை எடுத்துக் கொள், என்கிறார் பகவான். ஸகாம-கர்மமெனில் தனக்காக, தனது விருப்பு-வெறுப்புக்காக செயல் செய்வதாகும். தாமஸ குணம் மிகுந்த ஒருவனால் தனக்காகவன்றி மற்றவர்களுக்காக செயல் செய்ய இயலாது. என்னிடம் நிறைவேறாத நிறைய ஆசைகள் உள்ளன; என் வாழ்வு, எனது குடும்பத்தின் வளர்ச்சி, எனது பிள்ளைகளின் எதிர்காலம் என ஏராளமான விருப்பங்கள் மனதில் நிறைந்துள்ளது. அப்படியிருக்கையில் என்னால் விருப்பு-வெறுப்பின்றி மற்றவர்களுக்காக செயல் செய்வதென்பது இயலாத காரியம் என ஒருவன் நினைக்கலாம். அந்நிலையில் கர்மத்தை தனது விருப்பத்திற்காகவென ஸகாமமாக செய்ய பகவான் இங்கு அனுமதி அளிக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட செயலில் ஒருவனது அணுகுமுறை என்னவாக இருக்கவேண்டும் என்பதையும் அவர் இங்கு கூறுகிறார் — ஸர்வ கர்ம ப2ல த்யாக3ம் குரு. எல்லா செயலினுடைய பலனையும் எனக்கு அர்ப்பணம் செய் என்கிறார். அதாவது விருப்பு வெறுப்புகளால் தூண்டப்பட்டு சுயநலத்திற்காக கர்மத்தை செய்தபோதிலும் அதில் கிடைக்கின்ற எந்தவொரு பலனையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து அவருடைய பிரசாதமாக அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதில் தர்மத்திற்குட்பட்டு எந்த இன்பத்தையும் அனுபவிக்கலாம்; ஆனால் போக-காலத்திலும் ஈஷ்வரனை நினைத்தல் வேண்டும். உதாரணமாக, தனக்காகவென வீடு கட்டி குடிப்புகும் போதும் அது ஈஷ்வரன் குடியிருக்கும் இல்லமாக, ஈஷ்வர பிரசாதமாக எண்ணி குடியேறுதல் வேண்டும். தன்னை செயல் செய்யும் கர்த்தாவாகவும், இறைவனை கர்மபலனை கொடுப்பவராகவும் ஆக்க வேண்டும்.
=> பலன்:
பொதுவாக சுயநலமாக செய்கிற செயல்கள் மனத்தூய்மையைக் கொடுப்பதில்லை. ஆனால் பலனை ஈஷ்வர பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும்போது காம்ய-கர்மமும் கூட மனதை தூய்மைப்படுத்தும் திறனைப் பெறுகிறது.
ஸர்வ-கர்ம-பல-தியாகத்தில் ஒருவன் ஈஷ்வரனை கர்ம-பலத்தை கொடுப்பவராக ஏற்றுக் கொள்கிறான். இதனால் ஈஷ்வரனைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாகிறது. விருப்பு-வெறுப்பிற்காகச் செய்யப்பட்ட செயலெனினும் அதன் பலன் ஈஷ்வர நியதிப்படி வருகிறது என்று அதை அவன் எதிர்க்காமல் ஏற்றுக்கொள்கிறான். இதனால் கர்ம-பலன் மட்டுமல்ல, கர்மமும் மறைமுகமாக ஈஷ்வரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகிறது. மேலும் ஈஷ்வர பிரசாதமாக கர்மபலன் எடுத்துக் கொள்ளப்படும்போது, அது ஒருவனது விருப்பு-வெறுப்பை படிப்படியாக நடுநிலையாக்குகிறது. எப்படி? பொதுவாக ஒன்றின் பலன் நாம் விரும்பியவாறு இருந்தால், அது உற்சாகத்தைக் கொடுக்கும். அது விரும்பத்தக்கதாக இல்லாதபட்சத்தில் மனச்சோர்வைக் கொடுக்கும். இது மனதின் இயல்பு. இது அசுத்த-அந்தகரணம் அல்லது ராக-த்வேஷத்தின் வெளிப்பாடாக உருவாகிறது. பொதுவாக உணர்வு ரீதியான அனைத்து கடினங்களும் ராக-த்வேஷத்தினாலேயே உண்டாகின்றன. இனி, கர்மபலன் எதுவாயினும் அதை ஈஷ்வர பிரசாதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது உற்சாகம் அல்லது மனச்சோர்வை உண்டாக்கும் திறனை இழக்கிறது. இதன் காரணமாக மனது நடுநிலையடைந்து, ஒரு குறிப்பிடவளவு சமநிலைக்குப் பழக ஆரம்பிக்கிறது. உதாரணமாக, உணவு உண்பதற்குமுன், பதார்த்தங்களை இறைவனுக்குப் படைத்து அதை பிரசாதமாக உட்கொள்ளும் பழக்கம் இந்தியாவில் இன்றளவும்கூட இருக்கிறது. இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும்போது அதில் சுவை முக்கியத்துவம் பெறுவதில்லை.
செய்யக்கூடாத கர்மங்கள் என சாஸ்திரத்தில் கூறப்படும் நிஷித்த கர்மங்களைச் செய்யவேண்டி வரினும் பலனை ஈஷ்வர பிரசாதமாக கொள்ளும்போது அது ஒருவனை பாதிப்பதில்லை. உதாரணமாக வீட்டை தூய்மைப்படுத்துதல் எனும்போது அதில் பூச்சிகளும் புழுக்களும் அழிகிறது. உயிரைக் கொல்வது ஹிம்சை என்பதால் சாஸ்திரத்தில் அது நிஷித்த கர்மமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை இறைவனுக்காகவென செய்யும்போது அது ஒருவனை பாதிப்பதில்லை; அது மனத் தூய்மையையே கொடுப்பதாகிறது.
தன்னைத் தான் கட்டுப்படுத்தி, அர்ப்பணிப்புடன் இதை செய்வாயாக — தத: குரு யதாத்மவாந், என்கிறார் பகவான். போக-காலத்திலும் இறைவனை நினைத்து பலனைத் துறக்க ஒரு குறிப்பிட்டவளவு தன்னடக்கம், மனக்கட்டுப்பாடு பயின்றிருக்க வேண்டும். இவ்விதம் முதலாவதான படிநிலையைக் கடைபிடிக்கும் ஒருவன் படிப்படியாக இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான். இதனால் அவனது வாழ்க்கை நிஷ்காம-கர்ம-பிரதான கர்மயோகமாக மாறும். அதாவது தனிப்பட்ட ஆசைகள் குறைந்து ஆன்மீக ஆசை வளரும். இது முமுக்ஷுத்வமாக மாற்றப்படும்; இதனால் உலகின் எந்த கவர்ச்சிகளும் அவனை ஈர்க்காது; அற்பமான ஆசைகளைக் கடந்து செல்கிறான். உதாரணமாக, ஒருவன் குழந்தையாக இருக்கும்போது பலூனை ஆர்வத்துடன் விளையாடுகிறான். பின் அது கோலி மற்றும் பம்பரமாக மாறி, இன்னும் வயது கூட கூட அது கிரிக்கெட் மட்டையாக மாறுகிறது. இருபத்தி ஐந்து வயதில் அவனது ஆர்வம் மோட்டார் பைக்கிற்கு மாறுகிறது. அப்போது அவனுக்கு பலூன் அற்ப விஷயமாக மாறி இருக்கும். இவ்விதம் அற்ப விஷயங்களிலிருந்து வளர்வதே முதிர்ச்சி என்றழைக்கப்படுகிறது. ஆன்மீகத்தில் சொர்க்கமும்கூட பலூனைப் போல அற்ப விஷயமாக மாற வேண்டும். சுயநல ஆசைகள் அகன்று, சித்த-சுத்திக்காகவென நிஷ்காமமாக கர்மத்தை செய்யும் ஒருவன் ஏக-ரூப உபாசனைக்கும் அதன் பின்னர் அநேக-ரூப உபாசனைக்கும் சென்று அங்கிருந்து அவன் ஞானயோகத்திற்குச் செல்கிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
உன்னால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம் ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது. ஆகையால் கர்மங்கள் முறையாக செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாப புண்ணியங்களில் வெறுப்பு விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம் கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.
---------------------------------------------------------------------------------------------