வியாழன், 4 பிப்ரவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.39 - 2.41

।।2.39।। கர்மயோகத்திற்கான முகவுரை:

एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु

बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ।। ३९

ஏஷா தேऽபி4ஹிதா ஸாங்க்2யே பு3த்3தி4ர்யோகே3 த்விமாம் ச்1ருணு

பு3த்3த்4யா யுக்தோ யயா பார்த2 கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி ।। 39


पार्थ  பார்த2  பார்த்தா   साङ्ख्ये   ஸாங்க்யே   ஆத்ம தத்துவ ஆராய்ச்சியில்   एषा   ஏஷா  இந்த   

बुद्धि:   பு3த்3தி4புத்தியானது  ते  தே  உனக்கு   अभिहिता   அபி4ஹிதா  சொல்லப்பட்டது  

योगे तु   யோகே3 து   இனி யோக விஷயத்தில்   इमाम्   இமாம்  இதை  शृणु   ச்1ருணு  கேள்  

यया बुद्ध्या  யயா பு3த்3த்4யா  அத்தகைய புத்தியோடு   युक्त:   யுக்த:    கூடியவனானால்   

कर्मबन्धं    கர்மப3ந்த4ம்  கர்ம பந்தத்திலிருந்து  प्रहास्यसि    ப்ரஹாஸ்யஸி   விடுபடுவாய்.


ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப்பட்டது. இனி பார்த்தா, யோகத்தைப் பற்றிக் கேள். யோகபுத்தியைப் பெறுவாயாகில் நீ கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இங்ஙனம் உனக்கு ஸாங்க்ய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்த புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறி விடுவான்.


விளக்கம்:


இந்த அத்யாயத்தின் தலைப்பு சாங்க்ய யோகமாக இருந்த போதிலும், இங்கு வேறு தலைப்புகளும் விவாதிக்கப்படுகின்றன.

ஸ்லோகம் 11 - 30 ஆத்ம தத்துவம் புகட்டப்பட்டது.

ஸ்லோகம் 40, 41, 45-53 யோக விஷயம் கூறப்படும்.


=> இருவகையான வாழ்க்கை முறை:

கீதை, வேதாந்தத்தை குறிக்கும் மோக்ஷ-சாஸ்திரம் மற்றும் கர்ம காண்டத்தை குறிக்கும் கர்ம-சாஸ்திரம் என இருவகையான சாஸ்திரங்களை உள்ளடக்கியது. மோக்ஷ-சாஸ்திரம் ஆத்ம ஞானத்தை மையமாக கொண்டதாகவும், கர்ம-சாஸ்திரம் பலவிதமான சடங்குகள், பல்வேறு சாத்யங்களுக்கான வழிமுறைகள்(சாதனைகள்) இவற்றை மையமாக கொண்டதாகவும் உள்ளது. இதில் மோக்ஷ சாஸ்திரம், கர்மயோகம் மற்றும் சாங்க்யம்(அல்லது சந்யாசம்) என்னும் இருவகையான வாழ்க்கை முறையை கொண்டது. க்ருஷ்ணர் கர்மத்திற்கும் கர்மயோகத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக புரிந்துகொள்ளும் பொருட்டு பேசுகிறார். விவேகத்துடன் கூடிய ஒருவன், மோக்ஷத்தை அடையும் பொருட்டு, சித்த சுத்திக்காக செய்யப்படும் கர்மம் கர்மயோகம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட பாவனையில் செய்யப்படும் செயல் கர்மத்தை கர்மயோகமாக மாற்றுகிறது. ப்ரார்தனை, பக்தி, சமாதி மற்றும் அஷ்டாங்க யோகம் போன்றவை கர்மயோகத்திற்குள் வருவதாக சங்கரர் தனது உரையில் குறிப்பிடுகிறார். உண்மையில் கர்ம-யோகம் நேரடியாக மோக்ஷத்தை கொடுக்காது. கர்ம-யோகத்தினால் அந்தக்கரண சுத்தி(अन्तःकरण शुद्धि) அடைந்த ஒருவன் ஈஷ்வரனின் கருணையினால் ஞானத்தை அடைந்து கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகின்றான். இங்கு கர்ம-யோகத்தை புகழும் விதமாக பகவான் அர்ஜுனனிடம், கர்மயோகத்தை பற்றிய அறிவு அவனை கர்ம பந்தத்திலிருந்து விடுவிக்கும்(கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி) என்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டகர்ம என்பது தர்ம-அதர்மமான, அதாவது புண்ணிய பாபத்தை கொடுத்து ஒருவனை பந்தப்படுத்தும் சரியான மற்றும் தவறான செயல்கள். ஒருவனது கர்மமே அவனை பந்தப்படுத்துவதால் கர்ம-பந்தம்(கர்மப3ந்த4ம்).

--------------------------------------------------------------------------------------------------------------

।।2.40।। கர்ம யோகத்தின் மஹிமை:

नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो विद्यते

स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ।। ४० 

நேஹாபி4க்ரமனாசோ1ऽஸ்தி ப்ரத்யவாயோ வித்3யதே

ஸ்வல்பமப்யஸ்ய 4ர்மஸ்ய த்ராயதே மஹதோ 4யாத் ।। 40


इह   இஹ  இந்த கர்மயோகத்தில்  अभिक्रम नाश:   அபி4க்ரம நாச1:  முயற்சி வீண்போதல்  

अस्ति   அஸ்தி  கிடையாது   प्रत्यवाय:     ப்ரத்யவாயவிபரீத பலன்(குற்றமாவது)  

विद्यते  வித்3யதே  இல்லை   अस्य धर्मस्य    அஸ்ய 4ர்மஸ்ய   (கர்மயோகம் என்கிற) இந்த தர்மத்தின்  

स्वल्पम् अपि    ஸ்வல்பம் அபி  சிறிது பழகினும்  महत: भयात्   மஹத: 4யாத்  பெரும் பயத்திலிருந்து   

त्रायते   த்ராயதே   காப்பாற்றுகிறது.


இந்த கர்மயோகத்தில் முயற்சி வீண்போதல் கிடையாது. குற்றமொன்றும் வராது. இதை சிறிது பழகினும் பெரும் பயத்திலிருந்து இது காப்பாற்றும்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இதில் முயற்சிக் கழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்த தர்மத்தில் சிறிதிருப்பினும், அது ஒருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.


விளக்கம்:

=> கர்ம யோகத்தின் மஹிமை:

பலனை எதிர்பார்த்து செய்யப்படும் எந்தவொரு கர்மமும் பல வகையான தடைகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் கர்ம-பலனிற்காக அல்லாமல் மோக்ஷத்திற்காக செய்யப்படும் இந்த கர்மயோகம் முற்றிலும் ப்ரார்த்தனை வடிவம்; இங்கு செய்யப்படும் அனைத்து கர்மமும் நம் மனதை சுத்திகரிக்கும் ப்ரார்த்தனை ஆகிறது


    இங்கு பகவான் கர்மத்திற்கும் கர்ம யோகத்திற்குமுள்ள மூன்று முக்கிய வேறுபாடுகளைக் கூறுகிறார்:

(1) எந்தவொரு கர்மமும் தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது. உதாரணமாக பயிர் செய்யப்பட்ட தானியங்கள், அறுவடை செய்யப்படுவதற்கு முன் நீர் பற்றாக்குறை, மழையின்மை, வெள்ளம், பூச்சிகள் என பல தடைகளினால் பயிர் நாசமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கடமையில் தோல்வி அடைந்த போதும், அது கர்மயோகமாக செய்யப்பட்டிருப்பின் அதன் பலனான மனத்தூய்மை, மனப்பக்குவத்தில் தோல்வி இல்லை(அபி4க்ரம நாச1: அஸ்தி).

(2) ப்ரத்யவாய: இருவகையான பொருளைக் குறிக்கும். (i) எடுத்த காரியத்தை முழுமையாக முடிக்காமல் பாதியில் கைவிடுவதினால் வரும் விபரீத விளைவு  (ii) செய்யவேண்டிய செயலை சரியான காலத்தில் செய்யாமல் விடுவதினால் வரும் கேடு. உதாரணமாக 6 நாட்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை 2 நாட்களுக்கு மட்டும் எடுத்துக் கொள்வதும், அல்லது சரியான காலத்தில் மருத்துவரை அணுகாமல் விடுவதும் இரண்டுமே விபரீதமான விளைவையே உருவாக்கும். ஆனால் கர்மயோகமாக செய்யும் செயலில் குற்றம், பாபம் போன்ற எதிர்மறையான விளைவுகள் இல்லை(ப்ரத்யவாய: வித்3யதே). 

(3) கர்மம் முழுமையாக செய்யப்படும் போது தான் பலன். ஆனால் கர்மயோகத்தை சிறிது பழகினும் அது ஸம்ஸார பயம், மரண பயம், ஜென்ம பயம் போன்ற பெரிய பயத்தினின்று காப்பாற்றுகிறது(மஹத: 4யாத் த்ராயதே).

--------------------------------------------------------------------------------------

।।2.41।। கர்ம யோகியின் மஹிமை:

व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन

बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ।। ४१

வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4ரேகேஹ குருநந்தன

3ஹுசா1கா2 ஹ்யனந்தாச்1 பு3த்34யோऽவ்யவஸாயினாம் ।। 41


कुरुनन्दन   குருநந்தன  குருவம்சத்தில் பிறந்தவனே  इह  இஹ   இந்த யோகத்தில்    

व्यवसायात्मिका   வ்யவஸாயாத்மிகா   நிச்சயமான(உறுதிகொண்ட)    बुद्धि: பு3த்3தி4:  புத்தியானது   

एका    ஏகா   ஒன்றே   अव्यवसायिनाम्   அவ்யவஸாயினாம்   நிச்சயமில்லாதவர்களுடைய   

बुद्धय:   பு3த்34:  புத்திகள்  हि   ஹி   உண்மையில்   बहुशाखा    3ஹுசா1கா2    பல கிளைகளுடையன    

अनन्ता:   அனந்தா: பலவகைப்பட்டவைகளாயும் இருக்கின்றன.


குருவம்சத்தில் தோன்றியவனே, இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்கு புத்தியானது ஒன்றே. உறுதிகொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளையுடையனவாயும் முடிவற்றவைகளாகவும் உள்ளன.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

குருகுலத்தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமை யுடையது. உறுதியில்லா தோரின் மதி பலகிளைப்பட்டது, முடிவற்றது.


விளக்கம்:

=> ஒற்றை நோக்குடைய புத்தி:

இந்த ஸ்லோகத்தில் வ்யவஸாயாத்மிகா என்பது நிச்சயத்தைக் குறிக்கிறது. அதாவது ஒருவனது வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் அதை அடைய அவன் தேர்ந்தெடுக்கும் பாதை இவையிரண்டில் உள்ள தெளிவைக் குறிக்கிறது. ஆகவே ஒற்றை நோக்குடைய புத்தி ஏகா. மோக்ஷத்தை இறுதி இலக்காக கொண்ட முமுக்ஷு(சாதகன்), பரப்ரம்ம ஞானத்திற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கர்ம-யோக சாதனையை மேற்கொள்கிறான். விருப்பு வெறுப்புகளின் வீர்யத்தை மட்டுப்படுத்த உதவும் இச்சாதனை, எது நிலையானது? எது நிலையற்றது? என பிரித்தறியும் நித்ய-அநித்ய-வஸ்து-விவேகத்திற்கு தேவையான மனதை கொடுக்கிறது. இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்கு புத்தி ஒன்றேயாகும்(வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4: ஏகா). வாழ்க்கையில் சாதன சாத்ய விஷயத்தில் நிச்சயம் செய்துவிட்டான். அதில் மாற்றமே கிடையாது. ஒருமை புத்தியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல் உலக கார்யத்திற்கும் பயன்படும், கர்மயோகத்தின் மூலம் மனத்தூய்மை அடைந்து மோக்ஷம் அடைவதற்கும் பயன்படும்

ஆனால் உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளைக் கொண்டவைகளாகவும் முடிவற்றவைகளாகவும் உள்ளன (அவ்யவஸாயினாம் பு3த்34: 3ஹுசா1கா2 அனந்தா: ). பணம், பதவி, அந்தஸ்து போன்ற விதவிதமான, முடிவற்ற சாதனைகளைக் கொண்டவர்களாகவும், அதில் திருப்தியற்றவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில், ஒருகால் பணத்தை சாத்யமாகக் கொண்டவன் அதை அடையக்கூடிய எண்ணற்ற வழிகளாலும், எவ்வளவு அடைந்தாலும்இன்னும் அதிகம் வேண்டும்என்ற எண்ணத்தினாலும் பல சிந்தனைகளுடன் கூடியவனாக, நிலையற்ற புத்தியுடன இருப்பான்.

----------------------------------------------------------------------------------------------------------------