சனி, 22 ஆகஸ்ட், 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.53 - 18.54

||18.53|| மேலும் சில தகுதிகள் பேசப்படுகிறது:

अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।

विमुच्य निर्मम: शान्तो ब्रह्मभूयाय कल्पते ।। ५३ ।।  

அஹங்காரம் ப3லம் த3ர்பம் காமம் க்ரோத4ம் பரிக்3ரஹம் ।

விமுச்ய நிர்மம: சா1ந்தோ ப்3ரஹ்மபூ4யாய கல்பதே ।। 53 ।।


अहङ्कारं  அஹங்காரம்  அஹங்காரத்தையும்      बलं  3லம்  ஆசையின் வலிவையும்      

दर्पं  3ர்பம்  செருக்கையும்      कामं  காமம்  காமத்தையும்      क्रोधं  க்ரோத4ம்  குரோதத்தையும்     परिग्रहम्  பரிக்3ரஹம்  உடைமையையும்        विमुच्य  விமுச்ய  விட்டுவிட்டு     निर्मम:  நிர்மம:  மமகாரமற்று(எனது எனும் பற்றை விட்டு)      शान्त:  சா1ந்த:  சாந்தமாயிருப்பவன்     ब्रह्मभूयाय  ப்3ரஹ்மபூ4யாய  ப்ரம்மமாவதற்கு       कल्पते  கல்பதே  தகுதியுடையவனாகிறான்.


அஹங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம், உடைமை ஆகியவைகளை விட்டுவிட்டு, மமகாரமற்று சாந்தமாயிருப்பவன் ப்ரம்மமாவதற்கு தகுந்தவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் -- இவற்றைவிட்டு, மமகாரம் நீங்கி, சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் சாதகன் ஒருவனால் விடப்பட வேண்டிய குணங்களை பகவான் பட்டியலிடுகிறார். முயற்சியில்லாமல் நம்மிடம் வந்து சேர்ந்த இந்த வகையான அசுர குணங்களை முயற்சியுடன் களைய வேண்டும். எனவே ஆத்ம-சிந்தனைக்கு இடையூறாக இருக்கின்ற இத்தகைய விஷயங்களிலிருந்து சாதகன் தன்னை விடுவித்துக் கொள்கிறான்:


=> அஹங்காரம்: 

நீக்கப்பட வேண்டிய குணங்களில் முதலாவதாக வருவது அஹங்காரம் ஆகும். உடல்-மனம்-புலன்களில் ‘நான்’ எனும் புத்தி அஹங்காரம் எனப்படும் — அநாத்மநி ஆத்ம புத்3தி4:. அதிலும் குறிப்பாக செயல் செய்பவனாக, கர்த்ருத்துவத்தில் ‘நான்’ என்ற உணர்வை வைப்பது அஹங்காரம் ஆகும். 

ஈஷ்வரனால் கட்டளையிடப்பட்ட கடமையைச் செய்வது என்ற மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம் இது களையப்படுகிறது. இறைவனின் விருப்பம் என்ற மனப்பான்மையுடன் செய்வது மட்டுமல்ல, தன்னால் இவைகள் செய்யப்பட்டாலும், அதற்கு தேவைப்படுகிற இந்த உடல், மனம் மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் ஈஷ்வரனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற புரிதலும் இருக்க வேண்டும். ‘இவையனைத்தும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன; அதனால் இந்த செயலைச் செய்வதும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு’ என்கிற மனப்பான்மை, ‘நான் செய்கிறேன்’ என்கிற உணர்விலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்கு அறியாமையினால்(விவேகமின்மை) பிறந்த ஒரு ஆணவம் உள்ளது. அதுவே அஹங்காரம் ஆகும். யோகியானவன் இந்த அஹங்காரத்தை முழுமையாகக் கைவிடுகிறான். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னால் சில காரியங்கள் செய்யப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன என்பதை அவன் தெளிவுற புரிந்துகொள்கிறான். 


=> வலிவு:

3லம்’ எனில் சக்தி, தகுதி, திறமைகள் போன்றவற்றின் வடிவில் உள்ள வலிமையைக் குறிக்கிறது. இவை பொதுவாக விருப்பு வெறுப்புகளால் தாங்கப்படுகிறது. இவைகள் கைவிடப்பட வேண்டியவைகள் என்று சொல்லமுடியாதுதான் எனினும் பெருமையையோ அல்லது அங்கீகாரத்திற்கான எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இவைகள் இருக்கின்றன. இதுவே கைவிடப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆத்ம சாதகன் தன்னிடம் சில திறமைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறான், ஆனால் அவற்றை வெளிப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வதில்லை அல்லது அவற்றை தவறாகப் பயன்படுத்துவதில்லை. தவறான கொள்கைகளில் அல்லது குணங்களில் இருக்கின்ற பிடிப்பும் ‘3லம்’ என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட பிடிவாதத்தைக் கண்டிப்பாகக் களைய வேண்டும்.

=> செருக்கு:

செல்வம், அறிவுத்திறன் அல்லது தவம் போன்ற ஏதாவதொன்றில் சாதிக்கும் ஒருவனுக்கு அந்த வெற்றியுணர்வு ஒரு உச்சக்கட்ட மகிழ்ச்சியை உருவாக்கலாம் — ஹர்ஷ. அந்த சாதனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கர்வம் எனச் சொல்லப்படும் — 3ர்பம். உதாரணமாக குழந்தையொன்று நாற்காலியிலிருந்து குதித்தவுடன் முதலில் தன் தாயை நோக்கிப் பார்க்கும். ‘ஆம், நீ செய்தது அருமை’ என அவள் கூறும் பாராட்டையும் அங்கீகாரத்தையும் அது எதிர்பார்க்கும். ஆரோக்கியமான சுய-பிம்பத்தை வளர்த்துக் கொள்ள ஒரு குழந்தைக்கு அது அவசியம். ஆரம்ப காலகட்டத்தில் இது சரிதான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னரும் அதே குணம் தொடரும்போது அது வீண்பெருமை என்று பார்க்கப்படுகிறது. அது மன ஆரோக்கியத்திற்கும் ஆன்மிக பயணத்திற்கும் உதவாது. அத்தகைய அங்கீகாரத்திற்கானத் தேவை தொடர்ந்தாலோ, அவன் அதைத் தொடர்ந்து சேகரித்துக் கொண்டே இருந்தாலோ, சுய-மதிப்பில் ஒரு வறுமை உண்டாகி, அதை ஈடுசெய்ய அவன் கர்வத்தை உருவாக்கிக் கொள்வான். இந்த கர்வம் பெருகும்போது, எதையும் மதிப்பது அவனுக்கு கடினமாக இருக்கும்; அப்போது தர்மத்தை மீறுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இதுவே ஹிரண்யகசிபுவின் பிரச்சினையாகவும் இருந்தது. ‘என் நாமம் மட்டுமே ஜபிக்கப்பட வேண்டும்’ என்று கூறி, தனது மகன் பிரஹ்லாதனை இறைவனின் நாமத்தை ஜபிக்க அனுமதிக்கவில்லை. அது அகந்தை அல்லது வீண்பெருமையின் காரணமாகவே பிறக்கிறது.

யோகிக்கு இந்த வகையான அங்கீகாரம் என்பது தேவையற்றது. தன்னியல்பை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதால், தனது சொந்த முழுமையில்(பூர்ணத்வ) அவன் நிறைவைக் காண்கிறான். இனியொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, எந்தவொரு சாதனையும் ஏராளமான காரணிகளைச் சார்ந்தது என்பதை அவன் நன்கு புரிந்துகொள்கிறான். அவைகளனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், அவன் எந்த நேரத்திலும் எதையும் செய்யவில்லை என்பதையும் அறிவான் — அகர்த்தா. எனவே எந்த சாதனையாக இருந்தாலும் வீண்பெருமைக்கு வழிவகுக்கும் உரிமைவுணர்வு அவனிடம் இல்லை.


=> காமம்-குரோதம்: 

இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்கு காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களிடத்து உண்டாகும் சினம், ‘க்ரோத4ம்’ ஆகும். ஆத்ம-சாதகன் இயல்பாகவே ஆசையை கைவிடுகிறான். அவனிடம் பந்தப்படுத்தும் ஆசை என எதுவும் இருப்பதில்லை. விருப்பம் நிறைவேறினாலும் மகிழ்ச்சி, நிறைவேறவில்லை எனினும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். தனது விருப்பு வெறுப்புகளில் பிணைக்கப்படாத காரணத்தினால், குரோதம் உண்டாக அங்கு வாய்ப்பில்லை. ஏனெனில் ஆசையில் பந்தப்பட்டிருக்கும் ஒருவனுக்கு அது நிறைவேறாத போது ஏற்படுகிற விரக்தியுணர்வே கோபத்தை உண்டாக்கும். 


=> உடைமைகள்:

பொருள் படைத்தவன் எனும் உணர்வு அல்லது உடைமைகள் ‘பரிக்3ரஹம்’ எனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி உடைத்திருக்க வேண்டும். அவைகள் என்னுடையது என்கிற எண்ணமற்றவனாக, எதையும் பற்றிக் கொள்ளாத நிலையுடன் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். நம்மைச் சுற்றி எளிதில் சேரத் தொடங்கிவிடும் தன்மை கொண்டதாக உடைமைகள் இருப்பதால் அவைகளை விழிப்புணர்வுடன் அகற்றிக் கொண்டே இருக்கவேண்டும். உடைமைகள் அதிகமாக இருக்கும்போது கவனச்சிதறல்களும் அதிகமாக இருக்கும். எனவே ஆன்மிக சாதகன் எப்போதும் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும்.  


=> மமகாரம்: 

‘என்னுடையது எனும் எண்ணம்’ அல்லது உரிமையுணர்வு, மமகாரம் ஆகும். எளிய வாழ்க்கைக்கு தேவையான உடைமைகள்தான் எனினும் அதில் என்னுடையது எனும் உணர்வு இருக்கலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரம் ஆகும். சந்யாசியும்கூட சில உடைமைகள் வைத்திருப்பதை தவிர்க்க இயலாது. அந்த உடைமைகளிலும் உரிமையுணர்வு இல்லாத தன்மை இங்கு பேசப்படுகிறது. ‘இவைகளனைத்தும் பகவானுடையது, நான் அவற்றை தற்காலிகமாகப் பயன்படுத்தும் ஒரு அறங்காவலனாக மட்டுமே இருக்கிறேன்’ என்ற மனப்பாங்குடன் பொருள்களை கையாள வேண்டும். ஸ்தூல, சூக்ஷம தேகத்தில் ‘நான்’ எனும் தவறான அடையாளம் அஹங்காரம் ஆகும். ‘இது எனது’ எனும் பற்று மமகாரம் ஆகும். வேதாந்தம் எப்போதும் அஹங்காரம் மற்றும் மமகாரம் இரண்டையும் விடச் சொல்கிறது.    

இவ்விதம் அஹங்காரம், பிடிவாதம், கர்வம், காமம், குரோதம், உடைமைகள் ஆகியவைகளை விட்டவன் — விமுச்ய, மன அமைதியுடன் இருக்கிறான் — சா1ந்த. மனத் தெளிவுடன் தன்னில் திருப்தி அடைந்தவனாக இருப்பதால், இயல்பாகவே அவன் சாந்தமானவனாக இருக்கிறான். இத்தகைய ஒருவனே ‘நான் ப்ரம்மம்’ என்ற அறிவில் உறுதியைப் பெற முடியும். இது ப்ரம்மமாதல் ‘ப்3ரஹ்மபூ4’ என்று அழைக்கப்படுகிறது. ப்ரம்மமாக ஆவதற்கு(ப்3ரஹ்மபா4வந), அதாவது ப்ரம்ம சொரூபமாகவே இருப்பதற்கு அவன் தகுதியை அடைகிறான் — கல்பதே. மோக்ஷத்தை அல்லது ஞான நிஷ்டையை அடைகிறான்.

————————————————————————————————

||18.54|| மோக்ஷ சொரூபம்: 

ब्रह्मभूत: प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।

सम: सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ।। ५४ ।। 

ப்3ரஹ்மபூ4த: ப்ரஸந்நாத்மா ந சோ1சதி ந காங்க்ஷதி ।

ஸம: ஸர்வேஷு பூ4தேஷு மத்34க்திம் லப4தே பராம் ।। 54 ।।


ब्रह्मभूत:  ப்3ரஹ்மபூ4த:  ப்ரம்ம ஞானத்தில் உறுதி பெற்று      प्रसन्न आत्मा  ப்ரஸந்ந ஆத்மா  தெளிந்த மனமுடையவனாகி      न शोचति  ந சோ1சதி  துயரடைவதில்லை     न काङ्क्षति  ந காங்க்ஷதி  ஏக்கமடைவதில்லை     सर्वेषु भूतेषु  ஸர்வேஷு பூ4தேஷு  எல்லா உயிர்களிடத்தும்    

सम:  ஸம:  சமமாயிருப்பவன்       पराम् मद्भक्तिं  பராம் மத்34க்திம்  என்னிடத்து மேலான பக்தியை      लभते  லப4தே  அடைகிறான்.


ப்ரம்ம மயமாகித் தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை; ஏக்கமடைவதில்லை. எல்லா உயிர்களிடத்தும் சமமாயிருப்பவன் என்மீதான மேலான பக்தியை பெறுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

பிரம்மநிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.


விளக்கம்:

மோக்ஷ சொரூபம் அல்லது ஆத்ம-ஞானத்தை அடைந்ததன் பலன் இங்கு பேசப்படுகிறது. அதாவது சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனத்தை நிறைவு செய்தவனது நிலை சொல்லப்படுகிறது.


=> நிஷ்டை அடைந்தவன்:

ப்3ரஹ்மபூ4’ எனில் ப்ரம்ம சொரூபமாக ஆனவன், அல்லது தன்னை ப்ரம்மமாக உணர்ந்தவன் என்று பொருள். சிரவணத்தின் மூலம் ஆத்மாவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற ப்ரம்மத்தை பற்றிய அறிவை அடைகிறான் சாதகன். அதில் உண்டாகிற அனைத்து வகையான சந்தேகங்களையும் மனனத்தின் மூலம் களைகிறான். இறுதியாக நிதித்யாசனம் எனும் தியானத்தின்மூலம், தான் புரிந்துகொண்ட ஞானத்தில் நிலைபெறுகிறான். அது ஆத்ம-நிஷ்டை, ப்ரம்ம-நிஷ்டை, ஞான-நிஷ்டை, ஸ்திர-ப்ரக்ஞை மற்றும் ஜீவன்-முக்தி எனப் பலவாறாக அழைக்கப்படுகிறது. அதுவே இங்கு ‘ப்3ரஹ்மபூ4’ எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்கின்ற நேரத்திலும் எந்த முயற்சியும் இல்லாமல், இந்த ஞானம் உடனே மனதில் எழுந்து வர வேண்டும். எந்தவொரு சவால், துன்பம் அல்லது அச்சம் உண்டாகும்போதும், ‘நான் ஆத்மா, நித்யமுக்தன், பூரணமானவன், அழியாதவன்’ என்ற ஞானம் இயல்பாக மனதில் வெளிப்பட வேண்டும். 


=> ஜீவன் முக்தியின் அறிகுறி:

தனது உயர்ந்த இயல்பில் தன்னிச்சையாக நிலைநின்றவன் எப்படி இருக்கிறான்? அமைதியான மனதுடன் கூடியவனாக இருக்கிறான் — ப்ரஸந்நாத்மா. ஜீவன் முக்தி எனும் நிலை தனக்குள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை எப்படி அறியலாம்? என ஒருவன் கேட்பானாகில் அதற்கான அறிகுறியாக பகவான் இதை கொடுக்கிறார்.  மனமானது பொதுவாக எப்போதும் அமைதி நிலையில் இருக்கும். இங்கு ‘ஆத்மா’ எனும் சொல் மனதைக் குறிக்கிறது. ‘ப்ரஸந்ந’ எனில் சாந்தி. இதற்கு எதிர்மறையான மனநிலை கொண்டது சம்சாரத்தின் அறிகுறியாகும். மனதில் ஒரு நிலையான அழுத்தமும், எப்போதும் ஓர் உள் பதட்டமும் இருக்கும். ஓய்வற்று மனமானது அங்கும் இங்குமென அலைந்து கொண்டே இருக்கும். மாறாக, ஞானத்தில் நிலைபெற்றவனது மனதில் பொதுவான ஒரு சாந்தம் இருக்கும். எளிதில் குலையாத மனநிலையுடன், வெளிப்புற சூழ்நிலைகள் மாறினாலும் உள்ளே அமைதி மாறாத நிலை மோக்ஷத்தின் அடையாளமாகும். 


=> துயரில்லை, ஏக்கமில்லை:

இத்தகையவன் துயரத்திற்கு ஆளாவதில்லை — ந சோ1சதி. அதாவது மானச தாபம் அல்லது சம்சார துக்கம் இல்லை. பணம், பாதுகாப்பு, வசதிகள் போன்ற எந்தவித வெளிப்புறத் தேவைகளின் பற்றாக்குறையும் அவனை கலக்கமடையச் செய்வதில்லை. உடல் பலவீனம், மூப்பு, நோய் போன்ற உடல்-மனம்-புலன்களின் வரம்புகளும் அவனை பாதிப்பதில்லை. சென்ற சுலோகத்தில் பார்த்ததைப் போல, அஹங்காரம் மற்றும் மமகாரமற்றவனாக இருப்பதால், தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென அவன் துயரப்படுவதில்லை.

மேலும் தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதும் இல்லை. எந்தவித ஆசையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு இல்லை. தன்னிடம் உள்ளவற்றில் திருப்தியுடன் இருப்பதால், தன்னிடம் இல்லாதவற்றின் மீது எந்த ஏக்கமும் இருப்பதில்லை — ந காங்க்ஷதி


=> சமானமானவன்:

எல்லா ஜீவராசிகளிடத்திலும் சமமாக இருக்கிறான் — ஸர்வேஷு பூ4தேஷு ஸம:. தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மற்ற உயிரினங்களையும் அவன் தன்னை போலவே பார்க்கிறான். தனக்கு மகிழ்வை அளிக்கிற ஒன்று, அவர்களுக்கும் மகிழ்வைத் தருகிறது. தனக்கு மகிழ்ச்சியற்றதான விஷயம் அவர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதில்லை என்பதை புரிந்துகொள்கிறான். தன்னையே அளவுகோலாகக் கொண்டு அவர்களிடத்தில் தன்னை பார்ப்பதால் சமத்துவம் அவனது இயல்பாக மாறிவிடுகிறது. சுயநலமற்றவனாகவும் உலகளாவிய தர்மத்தின் மீதான தெளிவான புரிதல் கொண்டவனாகவும் இருப்பதால் விருப்பு வெறுப்புகளற்று எல்லா உயிர்களிடத்தும் சமானமாக இருக்கிறான். இத்தகையவன் என்மீது மேலான பக்தியை அடைகிறான் — பராம் மத்34க்திம் லப4தே, என்கிறார் பகவான்.


=> மேலான பக்தன்:

வழிபடுகிற நோக்கத்தை பொறுத்து நான்கு விதமான பக்தர்கள்  பேசப்படுகிறார்கள் என ஏழாவது அத்தியாயம் பதினாறாவது சுலோகத்தில்(7.16) பார்த்துள்ளோம். துன்பம், கவலை, அசௌகரியம், தொல்லைகள் போன்ற கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது மட்டுமே, அவை நீங்குவதற்காகப் பிரார்த்தனை செய்பவன், ‘ஆர்த’ எனப்படுகிறான். மற்ற நேரங்களில் அவனுக்கு கடவுளைப் பற்றிய எந்த நினைப்பும் இருப்பதில்லை. அடுத்ததாக, துன்பத்தில் மட்டுமல்ல பணம், பதவி, செல்வாக்கு அல்லது சக்தி என ஏதாவது அடையப்பட வேண்டும் என விரும்பும்போதும் இறைவனை பிரார்த்திக்கிறான். இந்த பக்தன் ‘அர்தா2ர்தீ2’ எனப்படுகிறான். மூன்றாவதாக, தனது துயரம் நீங்கவோ பொருளின்பத்திற்காகவோ என அல்லாமல் ஈஷ்வரனை பற்றிய ஞானத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்பவன் ஜிக்ஞாஸு ஆவான். நான்காவது பக்தன் ஞாநீ, ஈஷ்வரனைப் பற்றிய முழு ஞானத்தை அடைந்தவன்; மோக்ஷத்தை அடைந்தவன். இந்த சுலோகத்தில் பகவானால் சுட்டிக்காட்டப்படும் பக்தன் இந்த ஞானியே ஆவான். அவனிடம் இருக்கும் பக்தி, பிளவுபடாத பக்தி ஆகும். அதாவது சாதகன், சாதனம், சாத்யம் என்பதற்காக அல்லாமல், தனக்கும் இறைவனுக்கும் இடையிலான ஐக்கியத்தை பற்றிய ஞானத்தில் ஏற்பட்ட உறுதியினால் உண்டான பக்தி. இதுவே ஞான-நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. ஜீவன், பக்தன் மற்றும் ஈஷ்வரன் இடையே எந்த பிரிவும் இல்லாததால் ஞானியின் பக்தி சிறந்தது — பராம். ஏழாம் அத்தியாயத்தில் பதினேழாவது சுலோகத்தில் சொல்லப்பட்ட மேலாம் பக்தி இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

————————————————————————————————