வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 18.1

பதினெட்டாம் அத்தியாயம்

மோக்ஷ ஸந்யாஸ யோகம் 

[मोक्षसंन्यासयोग:]

முகவுரை:

இந்த கடைசி அத்தியாயம் எழுபத்தெட்டு சுலோகங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட அத்தியாயம் ஆகும். இங்கு புதிதான கருத்து எதுவும் சொல்லப்படவில்லை எனினும், ஏற்கனவே கீதையில் விளக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளின் கூடுதல் விரிவாக்கத்தை காணலாம். எனவே, ‘வேதங்களின் அர்த்தத்துடன் முழு கீதா-சாஸ்திரத்தின் அர்த்தத்தையும் சுருக்கமாக இந்த அத்தியாத்தில் சொல்ல வேண்டும். இதற்காக மட்டுமே இந்த அத்தியாயம் தொடங்கப்படுகிறது’, என பதினெட்டாம் அத்தியாயத்தை சங்கரர் அறிமுகப்படுத்துகிறார். வேதத்தின் கருப்பொருளும் கீதையின் கருப்பொருளும் ஒன்றே ஆகும்ப்ரம்ம வித்யா மற்றும் யோக-சாஸ்திரம். ப்ரம்ம வித்யா என்பது ஜீவன் மற்றும் ஈஷ்வரன் இடையேயான ஐக்கியத்தை வெளிப்படுத்தும்தத் த்வம் அஸிஎன்ற மஹாவாக்கியதைப் பற்றிய புரிதலைக் குறிக்கிறது. மேலும் யோக-சாஸ்திரம் என்பது ப்ரம்மவித்யாவிற்கு தனிநபரை தயார்படுத்துவதற்கான வழிமுறைகளைக் குறிக்கிறது. தர்மத்திற்கு இணங்க, சரியான மனப்பான்மையுடனும் பக்தியுடனும் செய்யப்படுகிற எந்தவொரு கர்மமும் யோகத்தில் அடங்கும். மேலும் இது துறவு வாழ்க்கையான சந்யாசத்தையும் உள்ளடக்கியது.

மோக்ஷத்தை தொடர்வதற்கான இரு வகை வாழ்க்கை முறைகளை மூன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம்சந்யாசம் மற்றும் கர்ம-வாழ்க்கை. இந்த கர்ம-வாழ்க்கையில், எந்தவொரு செயலும் சரியான அணுகுமுறையுடன் கர்மயோகமாக செய்யப்பட வேண்டும். இந்த மனப்பான்மையும், பக்தியும், மோக்ஷத்திற்கான அர்ப்பணிப்புடன் ஈஷ்வரனை அங்கீகரித்தல் என்பதும், கர்மயோகிக்கு மட்டுமல்ல, ஒரு சந்யாசிக்கும் இருக்க வேண்டிய பண்புகள் ஆகும்.

சந்யாச ஆஷ்ரமத்தை எடுத்துக் கொள்ளும் ஒருவன் வேதம் சொல்கிற நித்ய கர்மத்தை செய்வதிலிருந்து விடுபடுகிறான். மற்ற அனைத்தையும் தவிர்த்து ஞானத்தை மட்டுமே தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து கட்டாயக் கடமைகளிலிருந்தும் அவன் தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறான். மறுபுறம், கர்மயோகியானவன் தனது கட்டாயக் கடமைகளைத் தக்க வைத்துக் கொள்கிறான், ஆனால் புண்ணியங்களை உருவாக்க கூடிய அல்லது தனது பாதுகாப்பையும் சுகத்தையும் அதிகரிக்கக் கூடிய அனைத்து கர்மங்களையும் கைவிடுகிறான். ஞானத்தைப் பின்தொடர்வதற்கான சரியான அணுகுமுறையுடன் செய்ய வேண்டிய விஷயங்களை மட்டுமே செய்கிறான். சந்யாசிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவும் இல்லை; கர்மயோகிக்கு செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமே உள்ளன. மேலும் தியானம், உபாசனை, நற்பண்புகளை பெறுதல் போன்றவையும் கர்மயோகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன

கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் ஒருவன் பகுப்பாய்வு செய்வானாகில், அதில் கர்மயோகம் அல்லது சந்யாசம் இரண்டிலும் ஒன்றை விட மற்றொன்று முக்கியமானது என எங்கும் வலியுறுத்தப்படவில்லை என்பதைக் காணலாம். மோக்ஷத்திற்கான வழிமுறையாக இரண்டின் முக்கியத்துவத்தையும் கீதையின் ஆசிரியரான கிருஷ்ணர் சமமாக அங்கீகரிக்கிறார் என்பதையே இது குறிக்கிறது.


=> உபக்ரமம் மற்றும் உபஸம்ஹாரம்: 

கீதையின் உபதேசமானது சுலோகம் 2.11 - ல் ஆரம்பமானது. அதன் மையப்பொருள் துயரத்திலிருந்து விடுபடுதல்(சோக நிவ்ருத்தி) ஆகும். ஞானிகள் துயரப்படுவதில்லை எனக் கூறி பகவான் தனது உபதேசத்தை அங்கு ஆரம்பித்தார்பண்டி4தா: அநுசோ1சந்தி. அது உபக்ரமம் அல்லது ப்ரதிக்ஞா சுலோகம் எனப்படும். ‘ப்ரதிக்ஞாஎனில் வாக்குறுதி என்று பொருள். அதாவது சோகத்தை நீக்கும் உபாயத்திற்கான உறுதிமொழி அங்கு அளிக்கப்பட்டது

(1) இலக்கு(ஸாத்4யம்) - சோகத்தை நீக்குதல்(சோக நிவ்ருத்தி).

(2) நேரடி சாதனம் - ஆத்ம ஞானம். நம்மைப் பற்றிய சரியான அறிவானது சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கான அல்லது துயரத்தை நீக்குவதற்கான நேரடி உபாயமாக ஆகிறது

(3) துணை செய்யும் சாதனங்கள் - ஆத்ம சொரூபத்தை பற்றிய ஞானத்தை கேட்டு புரிய பண்பட்ட மனம் அவசியமாகிறது. கர்மயோகம், உபாசனை, தியானம் போன்றவை அதற்கான சாதனங்கள் ஆகின்றன.

எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயமானது இங்கு இந்த அத்தியாயத்தில் முடிவுரை செய்யப்படுகிறது. இது நிக3மநம் அல்லது உபஸம்ஹாரம் எனப்படும்

---------------------------------------------------------------------------------------------

||18.1|| அர்ஜுனனின் கேள்வி:

अर्जुन उवाच

संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम्

त्यागस्य हृषीकेश पृथक्केशिनिषूदन ।। ।।

அர்ஜுந உவாச

ஸம்ந்யாஸஸ்ய மஹாபா3ஹோ தத்த்வமிச்சா2மி வேதி3தும்

த்யாக3ஸ்ய ஹ்ருஷீகேச1 ப்ருதக்கேசி1நிஷூத3  ।। 1 ।।


अर्जुन उवाच  அர்ஜுன உவாச  அர்ஜுனன் சொன்னது

महाबाहो  மஹாபா3ஹோ  தோல்வலிவுடையோய்      हृषीकेश  ஹ்ருஷீகேச1  இந்திரியங்களுக்கு இறைவா     केशि निषूदन  கேசி1 நிஷூத3  கேசி என்ற அரக்கனை அழித்தவனே      

संन्यासस्य  ஸம்ந்யாஸஸ்ய  சந்யாசத்தினுடைய     तत्त्वम्  தத்த்வம்  தத்துவத்தை     

त्यागस्य   த்யாக3ஸ்ய   தியாகத்தினுடையதையும்      पृथक्  ப்ருதக்  தனித்தனியாய்       

वेदितुम्  வேதி3தும்  அறிந்துகொள்ள      इच्छामि  இச்சா2மி  இச்சிக்கிறேன்


அர்ஜுனன் சொன்னது: ஹிருஷீகேசா, மஹாபாகுவே, கேசிநிஷூதனா, சந்யாசத்தினுடைய மற்றும் தியாகத்தினுடைய தத்துவத்தைத் தனித்தனியே தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய்! கண்ணா! கேசியைக் கொன்றாய், சந்நியாசத்தின் இயல்பையும், தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்


விளக்கம்:

சந்யாசம் மற்றும் தியாகம் இவைகளின் ஒற்றுமை, வேற்றுமை அல்லது சரியான பொருள் என்ன என்று அர்ஜுனன் பகவானிடம் இங்கு கேட்கிறான்.


=> கேள்விக்கான அடிப்படை:

துறவு என்கிற அர்த்தத்தைக் கொடுக்கின்ற சந்யாசம் மற்றும் தியாகம் ஆகிய இரு சொற்களையும் கிருஷ்ணர் கீதை முழுவதும் பயன்படுத்தியுள்ளார். இப்போது அர்ஜுனன் அந்த இரு சொற்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது என்பதை அறிய விரும்புகிறான். இனி, இந்த கேள்விக்கான அடிப்படையை சிறிது விசாரணை செய்யலாம்

பகவான் சுலோகம் 4.20-ல், ‘த்யக்த்வா கர்மப2 அஸங்க3ம் நித்யத்ருப்த: நிராச்1ரய:என்று கூறும்போது, கர்மபலனின் மீதான தனது பற்றுதலை விட்டுவிட்டு, வேறு எதையும் சார்ந்து இல்லாமல், தன்னில் மகிழ்ச்சியாக இருப்பவனைப் பற்றிப் பேசுகிறார். இந்த இடத்தில், தியாகம் என்பது கர்மபலனின் தியாகத்தைக் குறிக்கிறது. ஆனால் சுலோகம் 4.21-ல், ‘நிராசீ1ர் யத-சித்தாத்மா த்யக்த-ஸர்வ-பரிக்3ரஹ:என்று கூறும்போது, உலகில் உள்ள பொருட்களின் மீதான அனைத்து உரிமையையும் துறந்தவனைப் பற்றி அவர் பேசுகிறார். இங்கு, ‘த்யக்தஎன்ற சொல் ஸர்வ-கர்ம-சந்யாசம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்ததாக சுலோகம் 4.41-ல், ‘யோக3 ஸந்ந்யஸ்த கர்மாணம்யோகத்தால் அனைத்து கர்மங்களையும் துறந்தவன், என்று கிருஷ்ணர் கூறும்போது, சந்யாசம் என்ற சொல் கர்மத்தை துறத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சுலோகம் 5.3-ல், ‘ஜ்ஞேய: நித்ய-ஸந்ந்யாஸீ யோ த்3வேஷ்டி காங்க்ஷதி’, எதையும் வெறுக்காத, எதற்கும் விருப்பப்படாத ஒரு சந்யாசியை வரையறுக்கிறார். மேலும் சுலோகம் 5.12-ல், ‘யுக்த: கர்மப2லம் த்யக்த்வா சா1ந்திம் ஆப்நோதி நைஷ்டி2கீம்’, இங்கே ஒரு கர்மயோகியை சந்யாசி என்று குறிப்பிடப்படுகிறார். இதில்த்யக்த்வாஎன்ற சொல் கர்மயோகியின் துறவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கர்மயோகியானவன் பலன்களைத் துறந்து நீடித்த அமைதியைப் பெறுகிறான் என்பது பொருள்.

மேலும் சுலோகம் 5.13-ல், ‘ஸர்வ-கர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய ஆஸ்தே ஸுக2ம் வசீ1’, அறிவினால் அனைத்து கர்மங்களையும் விட்டுவிட்டு, தன்னை வசப்படுத்தியவன் மகிழ்ச்சியுடன் ஓய்வெடுக்கிறான் என்று அவர் கூறும்போது, இந்த இடத்தில்ஸந்ந்யாசஎன்பதை அறிவினால் அனைத்து கர்மத்தையும் துறந்தவன் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஆனால் சுலோகம் 6.1-ல், ‘ ஸந்ந்யாஸீ யோகீ3 நிரக்3நி: சாக்ரிய:’, கர்மபலனைச் சாராது செய்ய வேண்டிய கர்மத்தை செய்பவனே சந்யாசி, அவனே யோகி. இந்த சுலோகம், அக்னி ஹோத்ரத்தை நிறுத்தியவனும் கர்மத்தை விட்டவனும் சந்யாசி ஆகமாட்டான், என்று நமக்குச் சொல்லுகிறது. இங்கே கர்மயோகி சந்யாசியுடன் சமப்படுத்தப்படுகிறான்.

மீண்டும் அதே கருத்தை சுலோகம் 6.2-ல், ‘யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக3ம் தம் வித்3தி4’, எதை சந்யாசம் என்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிக எனச் சொல்லப்பட்டது.  


=> மேலும் சில சுலோகங்கள்:

பின்வரும் சுலோகங்கள் ஒரு கர்மயோகியைக் குறிக்கின்றன:

* சுலோகம் 6.4: ‘ஸர்வ-ஸங்கல்ப-ஸந்ந்யாஸீ யோகா3ரூட4 ததோ3ச்யதே’, எல்லா எண்ணங்களையும் விட்டுவிடுகிறவன் யோகாரூடன் என்று சொல்லப்படுகிறான்

* சுலோகம் 6.24: ‘ஸங்கல்ப ப்ரப4வாந் காமாந் த்யக்த்வா ஸர்வாந் அசே1ஷத:’, சங்கல்பத்தால் பிறந்த அனைத்து கர்மங்களையும் முற்றிலுமாக கைவிடுதல்.

* சுலோகம் 9.28: ‘ஸந்ந்யாஸ யோக3 யுக்தாத்மா விமுக்த: மாம் உபைஷ்யஸி’, சந்யாச யோகத்தில் உள்ளத்தை உறுதியாக வைத்தவனாய், வினையிலிருந்து விடுபட்டு என்னை அடைவாய்.

* சுலோகம் 12.6: ‘யே ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:

யார் வினைகளனைத்தையும் எனக்கு அர்ப்பித்திருக்கிறார்களோ

* சுலோகம் 12.11: ‘ஸர்வ கர்ம 2 த்யாக3ம் தத: குரு யதாத்மவாந்’, எல்லாச் செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்தவன்.

பின்வரும் சுலோகங்கள் ஸர்வ-கர்ம-சந்யாசத்தைக் குறிக்கின்றன:

* சுலோகம் 3.30: ‘மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்ய அத்4யாத்ம-சேதஸா’, ஞானத்தினால் எல்லா செயல்களையும் என்னிடத்தில் அர்ப்பணம் செய்து, …

* சுலோகம் 12.16: ‘ஸர்வ-ஆரம்ப4 பரித்யாகீ3 யோ மத்34க்த: மே ப்ரிய:’, காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி செய்பவன் எனக்கினியவன் ஆகிறான்.

* சுலோகம் 14.25: ‘ஸர்வ-ஆரம்ப4 பரித்யாகீ3 கு3ணாதீத: உச்யதே’, தனக்கெனச் செயல் செய்யாதவன் யாரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்

இவைகளினால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். சந்யாசம் மற்றும் தியாகம் என்ற வார்த்தைகள் சில நேரங்களில் ஒரே மாதிரியாகவும், சில நேரங்களில் வித்தியாசமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தியாகம் என்பதை செயலை துறத்தல், அதாவது கர்ம-தியாகம் என்று எடுத்துக் கொண்டால் பின் அது யோகத்துடன் தொடர்பற்றுப் போகிறது, ஏனெனில் கர்மயோகத்தில் கர்மத்தை கைவிட முடியாது. செய்ய வேண்டிய செயலான அநுஷ்டே2-கர்மத்தை ஒரு குறிப்பிட்ட பாவனையுடன் செய்வதே யோகத்தின் ஒரு பகுதியாகும். கர்மத்தை முற்றிலுமாக விடும்பொழுது அது சந்யாசமாகிறது. எனவே அர்ஜுனனின் சந்தேகத்திற்கு காரணம் இருக்கிறது!

=> சந்யாசம் மற்றும் தியாகம்:

சந்யாசம், தியாகம் இரண்டும் துறவைக் குறிக்கின்றன. இருப்பினும், பகவான் கிருஷ்ணர், தியாகம் என்கிற சொல்லை யோகத்துடன் தொடர்புடையதாக அடிக்கடி பயன்படுத்துவதைக் காண்கிறோம். எனவேதான், சந்யாசம் என்ற வார்த்தை பொதுவாக செயலைத் துறத்தல், கர்ம-சந்யாசம் என்றும், மற்றும் தியாகம் என்பது கர்மத்தின் பலனைத் துறத்தல், கர்ம-பல-தியாகம் என்றும் பகவான் விளக்க இருக்கிறார்.

ஆத்ம-ஞானத்தைப் பெறுவதற்கு இரண்டு வாழ்க்கை முறைகள் உள்ளன, சந்யாசம் மற்றும் கர்மயோகம், என சுலோகம் 3.3 -ல் பார்த்தோம். இதில் சந்யாசம் என்பது கர்ம-சந்யாசத்தையும், அதாவது அனைத்து நியத கர்மங்களையும் துறத்தலை(விவிதி3ஷா ஸந்யாஸம்) குறிக்கிறது. மேலும் கர்மயோகம் என்பது தியாகம், செயலின் பலனைத் துறத்தல் ஆகும். அந்த-கரண-சுத்தியின் மூலம் ஞானத்தை அடைவதற்கு ஏதுவான ஒரு மறைமுக சாதனமாக இருப்பதால், செயல்களின் பலன்களைத் துறப்பது யோகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, தியாகமும் யோகமும் இங்கே ஒன்றாகச் செல்கின்றன. இந்த வித்தியாசத்தை உணராமல் போனதே அர்ஜுனனின் சந்தேகத்திற்கு காரணமாகிப் போகிறது


=> அர்ஜுனனின் சந்தேகத்தை கேட்டல்:

இங்கே அர்ஜுனன் கிருஷ்ணரை மூன்று வார்த்தைகளால் அழைக்கிறான்

(1) கேசி1 நிஷூத3 குதிரை வடிவத்தில் இருந்த அசுரனான கேசியை அழித்தவன். கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணரைக் விழுங்க வாயைத் திறந்து கொண்டு வந்தான். கண்ணனோ தனது கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டார். ஆதலால் அவருக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது.

(2) இதில் கைவலிவைக் காட்டியதால் அவரைமஹாபா3ஹோ, ! வல்லமைமிக்க கைகளை உடையவரே’, என்று அழைக்கிறான்

(3) ஹ்ருஷீகேச1அனைத்து புலன்களுக்கும் இறைவன். அனைத்தின் சுயசொரூபமாக இருப்பவரும் மற்றும் எவரால் புலன்கள் அனைத்தும் இருப்பதோடு அவைகள் தங்களது செயல்களை செய்துகொண்டும் இருக்கின்றனவோ அப்படிப்பட்ட இந்திரியங்களின் தலைவன்.

இவ்விதமாக அழைத்து, ‘சந்யாசத்தின் தத்துவத்தையும், மேலும் தியாகத்தின் உண்மையையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன்என்று அர்ஜுனன் கூறுகிறான்.

---------------------------------------------------------------------------------------------