செவ்வாய், 12 டிசம்பர், 2023

ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் 9.33 - 9.34

||9.33|| அதிகாரித்துவம் மேலும் விளக்கப்படுகிறது:

किं पुनर्ब्राह्मणा: पुण्या भक्ता राजर्षयस्तथा

अनित्यमसुखं लोकमिमं प्रप्य भजस्व माम् ।। ३३ ।।

கிம் புநர்ப்3ராஹ்மணா: புண்யா 4க்தா ராஜர்ஷயஸ்ததா2

அநித்யமஸுக2ம் லோகமிமம் ப்ராப்ய 4ஜஸ்வ மாம் ।। 33 ।।


पुण्या:  புண்யா:  புண்ணியவான்களும்   भक्ता:  4க்தா:  பக்தர்களுமாகிய   

र्ब्राह्मणा:  ப்3ராஹ்மணா:  பிராம்மணர்களும்   तथा  ததா2  அப்படியே    राजर्षय:  ராஜர்ஷய:  ராஜரிஷிகளும்    किं पुन:  கிம் புந:  பற்றி என்ன சொல்வது?   अनित्यम्  அநித்யம்  நித்தியமில்லாததும்   

असुखं  அஸுக2ம் சுகமில்லாததும்   इमं  இமம்  இந்த    लोकं  லோகம்  லோகத்தை    

प्रप्य  ப்ராப்ய  பெற்ற நீ    माम् भजस्व   மாம் 4ஜஸ்வ  என்னை நாடுவாயாக.


புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராமணர்களையும் அவ்வாறே ராஜரிஷிகளையும் பற்றி என்ன சொல்வது? நிலையற்றதும் சுகமற்றதுமாகிய இவ்வுலகைப் பெற்ற நீ என்னை நாடுவாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய்.


விளக்கம்:

கடைத்தரமான பாபிகளும் ஈஷ்வர பக்தியினால் விரைவில் தர்மவான் ஆகிறார்கள், மோக்ஷத்திற்கானத் தகுதியை அடைகிறார்கள் என சுலோகம் முப்பது மற்றும் முப்பத்தியொன்றில் கிருஷ்ணபகவான் கூறினார். கீழான நடத்தைகொண்ட பெற்றோர்களை உடையவர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், பெண்கள் போன்ற இடைத்தரத்தில் இருப்பவர்களும் பக்தியின் மூலம் ஞானத்தை அடையலாம் என சென்ற சுலோகத்தில் கூறியிருந்தார். இனிப் பாரமார்த்திகத்துக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர்களின் நிலை யாது என பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்


=> அந்தணர்களும் ராஜரிஷிகளும்:

எனில், கிம் புந: ப்3ராஹ்மணா: புண்யா: 4க்தா:புண்ணியவான்களும் பக்தர்களுமாகிய பிராம்மணர்களைப் பற்றி என்ன சொல்வது? என்கிறார் பகவான். சில புண்ணியத்தின் காரணமாக, அவர்கள் பிறந்த சூழ்நிலை ஈஷ்வர அங்கீகாரத்தில் அவர்களுக்கு ஒரு எளிதான தொடக்கத்தை அளிக்கிறது. அவர்கள் ஆரம்பம் முதலே தர்ம வாழ்க்கைக்கும், ஈஷ்வர பக்தி மற்றும் ஞானத்திற்கும் வெளிப்படுத்தப்படுவதால் அவர்களின் சம்ஸ்காரங்களில் அது இயல்பான ஒன்றாகப் பதிகின்றது

திரவியத்தை மணலுக்கு ஒப்பாகத் தள்ளிவிட்டுத் தவத்தையே தனமாகத் தேடுபவர், ஈஷ்வர சேவையிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவர், ஈஷ்வர பக்திக்குப் புறம்பாகிய எதற்கும் சிந்தையில் இடங்கொடாதவர் அந்தணர்கள் ஆகின்றனர். அவர்களது நல்வாழ்க்கையினால் அறம் வளர்கிறது

மேலும், 4க்தா: ராஜர்ஷய: ததா2  அப்படியே பக்தர்களான ராஜரிஷிகளும். அவர்களின் ஆரம்பமும் சாதகமான ஒன்றாகவே உள்ளது. பகவான் அவர்களை ராஜரிஷிகள் என்றழைக்கிறார், அரச குடும்பத்தில் பிறந்த ராஜாவாகவும் அதே சமயத்தில் ப்ரம்ம ஞானத்தை உடைய முனிவனாகவும் இருப்பவன் ராஜரிஷிராஜாந: தே ரிஷய:. உயிர்களை அல்லும் பகலும் அறநெறியில் ஓம்புதலே அரசர் செயல் ஆகும். அதுவும் சிறந்த ஈஷ்வர சேவையாகின்றது. ஆக, கடவுள் வழிபாட்டுக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் கடவுளை அடைதற்குச் சந்தேகம் யாதுளது? என்கிறார் பகவான்

இவ்விதம் பகவான் அனைத்து வகையினரைப் பற்றியும் விளக்கிவிட்டார். எனவே ஒருவன் எங்கே இருக்கிறான் என்பது முக்கியமல்ல, என்னவாக இருக்கிறான் என்பதே முக்கியம். அந்தணனாக இருந்தாலும் சரி, பாபியாக இருந்தாலும் சரி, பக்தியும் அர்ப்பணிப்பும் மட்டுமே முக்கியம். மேலும் எந்த வாழ்க்கை வாழ்பவனுக்கும் அடிப்படை நிலை என்பது ஒன்றுதான் என்பதை பகவான் இரண்டாவது வரியில் தெளிவாக விளக்குகிறார்


=> உலகத்தின் தன்மை:

அநித்யம் அஸுக2ம் லோகம் இமம் ப்ராப்ய நித்தியமில்லாததும் சுகமில்லாததுமான இந்த உலகத்தை நீ பெற்றுள்ளாய், என்கிறார். பிராமணனோ, வைசியனோ, சூத்திரனோ யாராக இருந்தாலும் இந்த உலகம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். நித்தியமற்றது, அநித்யம், மற்றும் மகிழ்ச்சியற்றது, அஸுக2ம். மனிதர்களின் இந்த உலகம் நிலையாக இல்லாததும் மற்றும் எப்போதும் சுகமானது எனக் கூற முடியாததுமான அனுபவங்களையே கொண்டுள்ளது. இங்குஸுகம்என்ற சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ளஎனும் முன்னொட்டு, நிராகரிப்பை குறிப்பது அல்ல, ஆனால் சிறிதளவு மட்டுமே உள்ளது என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. அதாவது முற்றிலுமாக சுகம் இல்லை என்பது பொருளல்ல, மிகச் சிறிய சுகத்தையே இன்னும் சொல்லப்போனால் சுக-ஆபாசத்தையே கொண்டுள்ளது எனப் பொருள்படும். சுக-ஆபாசம் எனில் சுகத்தைப் போலத் தோன்றுவது ஆகும். இந்த உலகத்தில் சுகம் உட்பட எதுவும் நிலையாக இருப்பது அல்ல. இயற்கையில் எவ்வுயிரை அல்லது எப்பொருளைப் பார்த்தாலும் அது அழியும் தன்மையுடையது என்ற உண்மையையே ஓயாது புகட்டிக் கொண்டிருக்கிறது. வளரும் வாலிபன் மரணத்தை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? நேற்றுப் பச்சிலையாயிருந்தது இன்று உதிர் சருகு ஆகின்றது. அணுமுதல் அண்டம் வரையில் எல்லாம் அடிபட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவைகளிடத்து அமையும் இந்த மாறுதலே இன்பத்தை துன்பமாக மாற்றுகிறது

இன்று பிள்ளை பிறந்தான் என்ற பூரிப்பானது நாளை அவன் இறந்தான் என்ற வட்டமாகிறது. வெற்றி என்ற மகிழ்ச்சி, தோல்வி என்ற துன்பமாக மாறுகிறது. தவளையின் பின்னங்காலைப் பாம்பு பிடித்துக் கொண்டது; அதை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கிடையில் தன்னெதிரே வந்த பூச்சியொன்றைத் தவளை பிடித்துத் தின்று திருப்தியடைகிறது. இதேபோல மனிதனை யமன் பற்றிக்கொண்டான்; காலத்தைக் கொண்டு அளந்து அவனை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பொருட்படுத்தாது உலகம் தருகிற இன்பத்தை நுகர்ந்து அவன் இறுமாந்திருக்கிறான். அறிவுடையோனுக்கு இது பொருந்தாது. நித்தியமற்றதும் சுகமற்றதுமான இவ்வுலகைப் பெற்றதனால் ஆகும் பயன் ஒன்று மட்டுமே உள்ளது. அது என்னவெனில், இவ்வுலகைப் பொருட்படுத்தாது பரமேஷ்வரனை நாடுதலே ஆகும். அதுவே செயற்கரிய செயலாகும்.

ஆகையினால், மாம் 4ஜஸ்வ என்னை நாடுவாயாக, என்கிறார் பகவான். ஆத்ம ஞானத்திலிருந்து வேறாக இல்லாத பரமேஷ்வர ஞானத்திற்கென தன்னை அர்ப்பணித்தலை விட வேறு எதுவும் ஒருவனை திருப்திப்படுத்தாது. வேறு எதை அடைந்தபோதிலும் அதற்குமேல் என அடைய கண்டிப்பாக ஒன்று இருக்கும். பிறகு மனம் இயல்பாக அதை ஆசை கொள்ள ஆரம்பித்துவிடும். எனவே ஒவ்வொருவனும் உண்மையில் விரும்புவது மோக்ஷத்தை தான். வரையறைக்குட்பட்டவன் என்ற தன்மையிலிருந்து விடுதலை அடைய, தனியொருவனின் ஆத்மாவிலிருந்து வேறாக இல்லாத என்னிடம் வருதல் வேண்டும் என்கிறார் பகவான். இதன் பொருள், நீ என்னை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே என்னை நாடுவாயாக, என்னை வழிபடுவாயாக.

இறுதியாக, தன்னை எப்படி வழிபட வேண்டுமென அடுத்த சுலோகத்தில் பகவான் பேசுகிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

எந்த வழியாக நமக்கு ஈஷ்வர தரிசணம் கிடைக்கும்?

உருகிய உள்ளத்துடன் அவனுக்காக உன்னால் கதறியழ முடியுமா? மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை விளையாட்டுப் பொருள்களோடு ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் தன் சமையல் வேலைகளை கவனிக்கிறாள். விளையாட்டுக் கருவிகள் பசியை நீக்குவதில்லை. எனவே குழந்தை அவைகளை வீசி எறிந்துவிட்டுத் தாயை வேண்டிக் கோவென்று அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொள்கின்றாள். இறைவன் அங்ஙனம் பக்தனை ஓம்புகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||9.34|| இறைவனைப் போற்றும் விதம்

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु

मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायण: ।। ३४ ।। 

மந்மநா 4 மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு

மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: ।। 34 ।।


मन्मना:  மந்மநா:  மனதை என்னிடத்து வைத்தவனாய்    

मद्भक्त:    மத்34க்த:  என்னிடத்து பக்தியுடையவனாய்   

मद्याजी  மத்3யாஜீ  என் பொருட்டு யாகம் செய்பவனாய்    भव  4  ஆவாயாக    

मां नमस्कुरु   மாம் நமஸ்குரு  என்னை நமஸ்கரி    

मत्परायण:  மத்பராயண:  என்னை குறிக்கோளாகக் கொண்டு   त्मानं  ஆத்மாநம்  உள்ளத்தை    

एवं युक्त्वा  ஏவம் யுக்த்வா  இங்ஙனம் உறுதிப்படுத்தி    माम् एव   மாம் ஏவ  என்னையே   

एष्यसि   ஏஷ்யஸி  அடைவாய்.


மனதை என்னிடத்து வைத்து, என்பால் பக்தி செய்து, எனக்கு யாகம் செய்து, என்னை வணங்கு. என்னைக் குறியாகக்கொண்டு உள்ளத்தை உறுதிப்படுத்தி என்னையே அடைவாய்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.


விளக்கம்:

நிலையற்றதும் சுகமற்றதுமான இந்த உலகில் பற்றறுத்து என்னை நாடுவாயாக என பகவான் சென்ற சுலோகத்தில் கூறினார். அவ்விதம் பற்றை நீக்கிய நிஷ்காம பக்தனுக்கு இருக்கவேண்டிய ஐந்து லக்ஷணங்களை இங்கு உரைத்து, அதனால் அவன் அடையும் பலனையும் கூறுகிறார்.


=> ஐந்து லக்ஷணங்கள்

(1) மந்மநா: 4என்னிடத்தில் மனதை வைத்தவனாய் இருப்பாயாக. பரமேஷ்வரனாகிய என்னில் மனம் தொலைத்து, என்னிடம் அர்ப்பணிப்பு உடையவனாய் ஆவாயாக. இறைவனிடம் அர்ப்பணிப்பு என்பது அவரை நாடுவதில் ஈடுபாடு கொண்டவனாக மாறுவதைக் குறிக்கிறது. பொதுவாக மக்கள் உலகிலுள்ள பல்வேறு விஷயங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அர்த்தத்தையும் காமத்தையும் பெறுவதற்காக இறைவனைப் பயன்படுத்துகிறார்கள். அதில் தர்மப்படி எந்த தவறுமில்லை என்றபோதிலும், அதனால் நிரந்தர மனநிறைவு என எதுவும் உண்டாவதில்லை. எனவே, மனநிறைவு எனும் ஆதாயத்தை அடையும் பொருட்டு என்னை தேர்வு செய்வாயாக, என்கிறார் பகவான். இந்த ஆதாயம் ஞானத்தின் வடிவில் இருப்பதால், என்னிடத்தில் உறுதிகொண்ட மனதை உடையவனாக ஆவாயாக.


(2) மத்34க்த: 4என்னிடத்து பக்தியுடையவனாய் ஆவாயாக, என்கிறார். அதாவது முழு அன்பும் என்னிடம் இருக்கட்டும். மனம் இறைவனை நாடும்போது, அன்பு வேறெங்கும் இருக்கக் கூடாது. மோக்ஷத்தை பின்தொடரும் ஒருவன் அறிவில் மட்டும் உறுதியுடன் இருந்து, உள்ளத்தை நூற்றுக் கணக்கான மற்ற விஷயங்களில் பரவ விட்டிருந்தால் அர்ப்பணிப்பு முழுமையாகாது. அப்போது இறைவனை தேடும் மனம் ஒருவனுக்கு அமையாது. எனவே ஒருவனின் உணர்வு ரீதியான பிரியமும் என்னிடம் இருக்கட்டும் என்கிறார் பகவான். பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு ஆகும்ப்ரேம ஸ்வரூப. எனவே, வேதாந்தத்தின் முக்கியப் பொருளாகவுள்ள ஈஷ்வரனான நான் உனது அன்பின் விஷயமாக ஆவேனாக. அதாவது, ஈஷ்வர ஞானத்தின் மீது பக்தி செலுத்தும் ஜிக்ஞாசுவாக ஆவாயாக, என்கிறார் பகவான்.


(3) மத்3யாஜீஎன் பொருட்டு யாகம் செய்பவனாய் இரு. இதன் பொருள், ஒவ்வொரு பிரார்த்தனையும் செயலும் ஈஷ்வரனை அடைய உதவும் அந்த-கரண-சுத்திக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதாகும். இது கர்மயோகத்தைக் குறிக்கிறது


(4)  மாம் நமஸ்குரு என்னை நமஸ்கரிக்க வேண்டும்; என்னைச் சரணடைய வேண்டும். சமஸ்கிருதத்தில்குருஎன்ற சொல்லானது ஒரு செயலைக் குறிக்கிறது. எனவே, இங்கு சரணாகதி என்பது யோகமாகச் செய்யப்படுகின்றது. ‘நான் செய்கிறேன்எனும் கர்த்ருதுவத்தையும், ‘நான் அனுபவிக்கிறேன்எனும் போக்த்ருதுவத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, என்னை சரணாகதியாகக் கொள், என்கிறார் பகவான். அதாவது, ‘ஈஷ்வரனால் எனக்கு எது கொடுக்கப்பட்டுள்ளதோ, அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தர்மமே ஈஷ்வரன் என்பதால் நான் செய்யும் அனைத்தையும் தர்மத்திற்கு உட்பட்டுச் செய்கிறேன். அந்த ஈஷ்வரனிடமே எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒப்படைக்கிறேன்’. இந்த மனப்பான்மையே சரணாகதி எனப்படுகிறது


(5) மத்பராயண: 4பரமேஷ்வரனான என்னையே வாழ்க்கை லக்ஷியமாக, இறுதி இலக்காகக் கொள்வாயாக. என்னிடத்தில் மனதை வைத்தவனாய்(மந்மநா:), அன்பு செலுத்தியவனாய் (மத்34க்த:), எனக்காக அனைத்துச் செயலையும் செய்தவனாய்(மத்3யாஜீ), என்னைச் சரணடைந்து(நமஸ்குரு), உனது மேலான குறிக்கோளாகக் என்னையே கொண்டிருப்பாயாக, என்கிறார்


=> நிஷ்காம பக்தியின் பலன்:

ஏவம் யுக்த்வாஇவ்விதமாக தன்னை தயார்படுத்திக் கொண்டவன்; உள்ளத்தை உறுதிப்படுத்தியவன்; பகவானிடம் தன்னை பொருத்திக் கொண்டவன், என்பது பொருள். மேற்கூறிய வழிமுறைகளை ஒருவன் பின்பற்றும்போது சித்த-சுத்தி ஏற்பட்டு, அவனது மனமானது அமைதியையும் ஒருமுகப்பாட்டையும் அடைகிறது.

இத்தகையவனாக நீ, உன் ஆத்ம சொரூபமாகவுள்ள என்னையே அடைவாய்ஆத்மாநம் மாம் ஏவ ஏஷ்யஸி, என்கிறார் பகவான். எல்லா உயிர்களின் ஆத்மாவாக, ஒவ்வொரு ஜீவனின் உண்மையான சொரூபமாக நானே இருக்கின்றேன். ஆகவே ஞானத்தின் மூலம் ஒருவன் தனது சுய சொரூபத்தை அடையும்போது, அவன் ஈஷ்வரனான என்னையே அடைகிறான். இதுவே ஒருவன் அடையக் கூடிய மேலான கதி ஆகும். இதிலிருந்து இறைவனை அடைவதென்பது, ஈஷ்வரனிடமிருந்து வேறாக இல்லாத, தனது ஆத்ம சொரூபத்தை அடைதலைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.

இவையனைத்தும், ‘கௌந்தேய ப்ரதிஜாநீஹி மே 4க்த: ப்ரணச்1யதி — அர்ஜுனா, என்னுடைய பக்தன் வீழ்ச்சியடைவதில்லை என்பதை உறுதியாக அறிவாயாகஎன்ற வாக்கியத்துடன் சேர்க்கப்படுகிறது. இவ்வாறாக ஈஷ்வரனை அறியும் அல்லது அறிய விரும்பும் ஒரு பக்தன், ஒருபோதும் அழிவதில்லை என்ற உறுதிமொழியுடன் ஒன்பதாம் அத்தியாயம் முடிவடைகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------


ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे राजविद्याराजगुह्ययोगो नाम नवमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத்।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 ராஜவித்யா ராஜகுஹ்யயோகோ3 நாம நவமோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.

---------------------------------------------------------------------------------------------------------------------


ராஜவித்யா ராஜகுஹ்யயோகம் - சாரம்:

(1) கருத்தின் அறிமுகம் [1 - 3]

(2) ஈஷ்வர சொரூபம் [4 -10]

(3) சம்சார காரணம் மற்றும் சம்சாரியின் வர்ணனை [11 - 12]

(4) பல்வேறு வகையான பக்தி மற்றும் பக்தர்கள் [13 - 15]

(5) ஈஷ்வர மஹிமை [16 - 19]

(6) ஷகாம பக்தர்களின் பலனும் கதியும் [20 - 21]

(7) நிஷ்காம பக்தர்களுக்கு பகவானின் உறுதிமொழி [22]

(8) அக்ஞானியின் பக்தியும் அதன் பலனும் [23 - 25]

(9) நிஷ்காம பக்தி செய்யும் முறை [26 - 27]

(10) நிஷ்காம பக்தியின் பலன் [28]

(11) பக்தர்களிடத்தில் பகவானின் பாவனை [29]

(12) பக்தியின் மஹிமை மற்றும் பலன் [30 - 34]

---------------------------------------------------------------------------------------------------------------------